என் மலர்tooltip icon

    நீலகிரி

    குன்னூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் மேரக்காய் பயிரை சேதப்படுத்தியது.
    குன்னூர்:

    குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த வாரத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் செடிகள் வளர்ந்து பச்சை பசேலென காட்சியளிக்கிறது. இதனால் உணவு தேடி காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள கோடேரி பகுதியில் 5 காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தன. அவற்றை வனத்துறையினர் துரத்தினர்.

    பின்னர் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த காட்டு யானைகள் குன்னூர் அருகேயுள்ள கிளிஞ்சடா பகுதியில் முகாமிட்டன. இந்த பகுதியில் வசித்து வரும் விவசாயிகள் மேரக்காய் உள்பட பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்து உள்ளனர்.

    மேலும் இந்த பயிருக்கு பந்தல் அமைக்க வேண்டும் என்பதால் விவசாயி கள் அதிகளவில் செலவு செய்து பந்தலும் அமைத்து இருந்தனர். இந்த நிலையில் கிளிஞ்சடா பகுதியில் புகுந்த 5 காட்டுயானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த மேரக்காய்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுட்டது. அத்துடன் அங்குள்ள பந்தல்களையும் நாசம் செய்தன.

    இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அதில் 3 விவசாயிகளின் தோட்டத்தில் மேரக்காய்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த சில நாட்களாக குன்னூர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் 5 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இந்த யானைகளால் உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    குன்னூர் அருகே பராமரிப்பின்றி செயல்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைத்து சப்-கலெக்டர் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.
    குன்னூர்:

    குன்னூரில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் கிரைக்மோர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலை நிர்வாகத்திற்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தேயிலை தூள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. இந்த அறிவுரைகளை தனியார் தேயிலை தொழிற்சாலை பின்பற்றவில்லை என்று குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங்கிற்கு புகார் வந்தது.

    இதனை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரையின் பேரில் சப்-கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் வருவாய் துறையினர் அந்த தொழிற்சாலையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் போதிய பராமரிப்பு இல்லாததால் அந்த தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது. அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுதேயிலை தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.

    இதுகுறித்து குன்னூர் சப்- கலெக்டர் ரஞ்சித்சிங் கூறியதாவது:-

    கிரைக்மோர் பகுதியில உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. தொழிற்சாலை சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை.

    தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் அறையிலிருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பு அறிவுரைகள் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. மேற்கண்ட காரணங்களால் தேயிலை தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சுற்றுலா தலங்கள் திறந்தும் குதிரை சவாரிக்கு அனுமதி இல்லாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    ஊட்டி:

    ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் ஊட்டி படகு இல்லம், தேனிலவு படகு இல்லம், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் குதிரை சவாரிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

    இதனால் குதிரை சவாரி தொழிலை நம்பி இருந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுற்றுலா தலங்கள் திறந்தும் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இதற்கு குதிரை பந்தயத்துக்கு பயன்படுத்தப்பட்ட குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்தக்கூடாது எனவும், அதனை முறையாக பராமரிக்காமல் வீதிகளில் சுற்றித்திரிய விட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

    அதன் காரணமாக ஊட்டி படகு இல்லத்தில் குதிரை சவாரி மேற்கொள்ளப்படும் இடம் பூட்டப்பட்டு, குதிரைகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். அதுபோன்று பைன்பாரஸ்ட் சுற்றுலா மையத்தில் காமராஜ் சாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், அணையையொட்டி குதிரை சவாரி செய்ய முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த குதிரை சவாரி தொழிலாளர்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து குதிரை தொழிலாளர்கள் கூறும்போது, கொரோனா காரணமாக 8 மாதங்களை கடந்தும் அரசின் உதவி கிடைக்கவில்லை இதை நம்பியே இருந்த நாங்கள் குதிரைகளை பராமரிக்க முடியாமல் திணறி வருகிறோம். குழந்தைகளின் படிப்புக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. வருமானம் இல்லாததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. குதிரை சவாரிக்கு அனுமதிக்க வேண்டும் என்றனர்.
    படகு இல்லங்களில் சுற்றுலா பயணிகளை கவர புதிதாக 26 படகுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் ஆகிய சுற்றுலா தலங்கள் ஊரடங்கு தளர்வுக்கு பின் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்த படியும், அணை மற்றும் ஏரியில் இதமான காலநிலையை அனுபவித்த படியும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கிறார்கள்.

    ஊட்டி படகு இல்லத்தில் 40 மிதி படகுகள், 9 துடுப்பு படகுகள், 31 மோட்டார் படகுகள் உள்ளன. 8 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இங்கு 2 இருக்கைகள் கொண்ட மிதி படகில் சவாரி செய்ய ரூ.190, 4 இருக்கைகளுக்கு ரூ.290, 4 இருக்கைகள் கொண்ட துடுப்பு படகில் சவாரி செய்ய ரூ.660, 8 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் சவாரி செய்ய ரூ.670, 10 இருக்கைகளுக்கு ரூ.810, 15 இருக்கைகளுக்கு ரூ.1,150 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    படகு இல்லம் திறக்கப்பட்ட பின்னர் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். படகு இல்லத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரவும், படகு சவாரி செய்வதை ஊக்குவிக்கவும் பல வடிவங்களில் புதிதாக 24 படகுகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக மயில், வாத்து, டிராகன் போன்ற உருவங்களில் வடிவமைக்கப்பட்ட மிதி படகுகள் வந்து உள்ளன.

    அதேபோல் ஊட்டி அருகே பைக்காரா படகு இல்லத்தில் 20 மோட்டார் படகுகள், 4 அதிவேக மோட்டார் படகுகள் சுற்றுலா பயணி களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. அங்கு 8 இருக்கைகள் கொண்ட 2 மோட்டார் படகுகள் புதிதாக வரவழைக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, புதிதாக 50 படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதில் 26 படகுகள் வந்து உள்ளன. மீதமுள்ள 24 படகுகள் ஓரிரு நாட்களில் வந்துவிடும் என்றார்.
    கோத்தகிரி அருகே பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய மகன் சஞ்ஜித்குமார் (வயது 17). இவர் கேர்க்கம்பை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பத்குமார் பல வருடங்களுக்கு முன்பு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.

    இதனால் சஞ்ஜித்குமார், அவரது தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் தனியாக வசித்து வந்தனர். தனது தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து தனியாக வசித்து வருவதால், சஞ்ஜித்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் வீட்டிற்கு சென்ற அவர், வீட்டில் இருந்த ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். அறைக்குள் சென்ற மகன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தாயார் லீலாவதி, அந்த அறையின் கதவை தட்டினார். ஆனால் திறக்கவில்லை.

    பலமுறையும் கதவை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது சஞ்ஜித்குமார் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சஞ்ஜித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    முதுமலையில் யானை சவாரி தொடங்குவது எப்போது என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
    கூடலூர்:

    கொரோனா பரவலை தடுக்க நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக வளர்ப்பு யானைகள் மீதான சவாரி மற்றும் வாகன சவாரிகள் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர்.

    ஆனால் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலாப்பயணிகள் வர தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன மற்றும் வளர்ப்பு யானை சவாரி செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    மேலும் நேரடி மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்று வந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் முதுமலை புலிகள் காப்பகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் முதுமலை தெப்பக்காடு பகுதி தொடர்ந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும் பயணிகளை வனத்துக்குள் சவாரிக்கு அழைத்துச்செல்லும் வாகனங்களும் பல மாதங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அவை பழுதடைய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் யானை சவாரியும் தொடங்காததால் அவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு செல்ல விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்கி யானை சவாரியை தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஊரடங்கு காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே தடைவிதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்றாடம் நடைபெறக்கூடிய அலுவலகப் பணிகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சுற்றுலா தளங்கள் திறக்க அனுமதி வழங்கி இருந்தாலும் உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வரவில்லை.

    அவ்வாறு உத்தரவு வந்தால் மட்டுமே புலிகள் காப்பகத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். உரிய அனுமதி வராததால் வளர்ப்பு யானை மற்றும் வாகன சவாரி தொடங்கப்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    கூடலூர் பகுதியில் எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை தொடங்கி உள்ளது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என கூடலூர் அழைக்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் பல நூறு ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அடுக்கை, மர நெல், கந்தசால், பாரதி, சீரகபாலை, வெளும் பாலை உள்பட பாரம்பரிய நெல் ரகங்களை பல தலைமுறைகளாக இப்பகுதியில் வாழும் மக்கள் பயிரிட்டு வருகின்றனர்.

    நெற்கதிர்கள் விளைய தொடங்கியதும், பூ பூத்தரி என நெல் அறுவடை பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக மேளதாளங்கள் முழங்க வயலில் சிறப்பு பூஜை செய்த பின்னர், குறிப்பிட்ட அளவில் நெற்கதிர்களை அறுவடை செய்து குல தெய்வ கோவில்களில் படையலிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக இந்த பண்டிகையை விவசாயிகள் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கூடலூர், தேவர்சோலை, அம்பலமூலா மற்றும் ஸ்ரீ மதுரை, முதுமலை ஊராட்சிகளில் பயிரிட்டுள்ள நெற்கதிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாரானது. தற்போது கூடலூர் பகுதியில் இரவில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், நெற்கதிர்களை அறுவடை செய்யும் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    தற்போது நெற்கதிர்களை அறுவடை செய்ய ஆட்கள் கிடைப்பது இல்லை. இதனால் நவீன எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அதன் மூலம் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    ஒரு ஏக்கர் பரப்பளவில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய 15 தொழிலாளர்கள் தேவைப்படும். ஒரு தொழிலாளருக்கு ரூ.300 வரை கூலி கொடுக்க வேண்டும். பின்னர் அறுவடை செய்த கதிர்களை களத்தில் போட்டு அடிப்பதற்கு ஒருவருக்கு ரூ.1000 வரை கூலி கொடுக்க வேண்டும். இதனால் கட்டுப்படி ஆவது இல்லை. தற்போது தொழிலாளர் பற்றாக்குறையும் நிலவுகிறது.

    இதனால் நவீன எந்திரங்களை வரவழைத்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்படுகிறது. எந்திரம் மூலம் ஒரு ஏக்கரில் 2 மணி நேரத்தில் அறுவடை செய்யலாம். வைக்கோல், நெல் என தனித்தனியாக எந்திரம் பிரித்து விடுகிறது. இதனால் அறுவடை பணியும் விரைவாக நடைபெறுகிறது. மேலும் எந்திர பயன்பாட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.3 ஆயிரம் வரை மட்டுமே செலவாகிறது. இதனால் நெல் அறுவடைக்கு எந்திரங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகி விட்டது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    தந்தை- மகனை அடித்துக்கொன்ற ஆட்கொல்லி யானையை பிடிக்க கும்கி யானைகளை பயன்படுத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி வனச்சரகம் கொளப்பள்ளி சரகம் 5 ஆனைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணா என்ற ஆனந்தராஜ் (வயது 40). கூடலூர் யூனியன் தி.மு.க. கவுன்சிலர்.

    இவரது மகன் பிரசாந்த் (20). இவர் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்பியபோது காட்டு யானை தாக்கி பலியானார். மகன் பலியான தகவல் கேட்டு கதறி துடித்து அவரது உடலை பார்க்க கண்ணா ஓடிச்சென்றார். இரவு நேரத்தில் ஆக்ரோ‌ஷமாக திரிந்த அதே காட்டுயானை கண்ணாவையும் அடித்துக் கொன்றது.

    தந்தை- மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள், பலியான தந்தை- மகன் உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பந்தலூர் மெயின் ரோட்டில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அந்த பகுதி முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டன.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 பேரை காட்டுயானை தாக்கி கொன்றுள்ளது. இதற்கு நிரந்தர முடிவு காணவேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கவேண்டும். உயிர் பலிவாங்கும் காட்டுயானையை பிடிக்க கும்கிகளை வரவழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் மற்றும் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்குவது, தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்குவது, மின்வேலி அமைக்க ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், காட்டு யானைகளின் நடமாட்டம் தனிக்குழு கொண்டு கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    அதனை ஏற்று பொதுமக்கள் 8½ மணி நேரமாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கவுன்சிலர் மற்றும் அவரது மகனை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி யானையை பிடிக்க கும்கி யானைகளை பயன்படுத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி முதுமலை புலிகள் காப்பக வளர்ப்பு யானை முகாமில் இருந்து கும்கிகள் வசிம், பொம்மன் ஆகியவைகள் லாரி மூலம் வரவழைக்கப்பட்டது. மேலும் டாப்சிலிப் யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து கும்கி கலீம் யானையும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    அட்டகாசம் செய்த காட்டுயானையை வனத்துறை டாக்டர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பின்னர் மயங்கும் யானையை 3 கும்கிகளை கொண்டு வாகனத்தில் ஏற்றி முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10 ஆயிரத்து 396 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
    ஊட்டி:

    இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைப்படி 1.1.2021-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் நடந்து வருகிறது. பொதுமக்கள் வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிடவும், திருத்தங்கள் இருந்தால் சரிசெய்துகொள்ளவும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க நாளை (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது. ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிங்கர்போஸ்ட்டில் உள்ள தெரசா பள்ளி மற்றும் மேரிஸ்ஹில் பகுதியில் உள்ள ஜோசப் பி.எட். கல்லூரி ஆகிய வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடந்த சிறப்பு முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டு உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பது உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் நேரடியாக பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். கடந்த மாதம் 2 நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் பலர் தாமாக முன்வந்து படிவங்களை சமர்ப்பித்தனர்.

    இதுவரை நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 10 ஆயிரத்து 396 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்து உள்ளனர். ஏற்கனவே சுருக்கமுறை திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் முகவரி மாற்றம் மற்றும் இறந்துவிட்ட காரணத்தால் பல்வேறு வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    தற்போது பெயர் நீக்கம் செய்வதற்காக 1,068 பேர், முகவரி மாற்றம் 1,838 பேர் உள்பட இதுவரை 14 ஆயிரத்து 142 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் இன்னும் 2 நாட்கள் விண்ணப்பங்கள் வழங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, ஊட்டி நகராட்சி கமிஷனர் சரஸ்வதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி திமுக கவுன்சிலர் மற்றும் அவருடைய மகன் பரிதாபமாக இறந்தனர்.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன. அதனருகில் தொழிலாளர்களின் குடியிருப்புகளும் அமைந்து இருக்கின்றன. இங்கு வனவிலங்குகள் தொந்தரவு அதிகமாக உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உள்ளனர். சேரம்பாடி அருகே உள்ள அரசு தேயிலை தோட்ட (ரேஞ்ச்-1) பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 49). இவர் கூடலூர் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலராக இருந்தார். இவருடைய மகன் பிரசாந்த் (21). இவர் கூலி வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு பிரசாந்த் வேலைக்கு சென்றுவிட்டு தனது நண்பர்களுடன் வீட்டிற்கு நடந்து வந்தார். பத்து லைன்ஸ் பகுதி அருகே திடீரென்று புதருக்குள் இருந்து ஒரு காட்டு யானை வெளியே ஓடி வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் தப்பி ஓடினார்கள்.

    அப்போது எதிர்பாராதவிதமாக பிரசாந்த் காட்டு யானையிடம் சிக்கிக்கொண்டார். தொடர்ந்து காட்டுயானை அவரை தாக்கியது. இதில் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து பிரசாந்தின் நண்பர்கள் அவரது தந்தையான ஆனந்தராஜிக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அவர் தனது நண்பரான மருதை என்பவருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். பத்து லைன்ஸ் பகுதிக்கு அருகே சென்றபோது, புதருக்குள் மறைந்து இருந்த காட்டு யானை திடீரென வெளியே வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இருந்தபோதிலும் அந்த காட்டு யானை அவர்களை துரத்தி சென்றது. இதில் ஆனந்தராஜை காட்டுயானை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி தந்தை-மகன் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    இது குறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரக அதிகாரி சின்னதம்பி, தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு அமீர் மற்றும் சேரம்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு காட்டு யானை முகாமிட்டு உள்ளதா? என்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்கள்.

    கடந்த 11-ந் தேதி சேரம்பாடி அருகே உள்ள கண்ணம்பள்ளியில் நாகமுத்து என்பவர் காட்டு யானை தாக்கியதில் பலியானார். தற்போது காட்டு யானை தாக்கி தந்தை-மகன் பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பீதியை மேலும் அதிகரித்து உள்ளது. அத்துடன் யானை-மனித மோதலை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டியில் உறைபனி தாக்கம் மீண்டும் தொடங்கியது. இதனால் தாவரவியல் பூங்காவில் அலங்கார செடிகள் பிளாஸ்டிக் போர்வை மூலம் பாதுகாக்கப்படுகிறது.
    ஊட்டி:

    மலைப்பிரதேசமான ஊட்டியில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து உறை பனி காலம் நிலவும். நடப்பாண்டில் காலநிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறைபனி தாக்கம் காணப்பட்டது. பின்னர் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதற்கிடையே மழை ஓய்ந்ததால் தற்போது பகலில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல்வெளி மைதானத்தில் வெள்ளை நிறத்தில் உறைபனி படர்ந்து இருந்தது. பச்சை புற்கள் மீது உறைபனி போர்வை போர்த்தியது போல் காட்சி அளித்தது.

    அதேபோல் குதிரை பந்தய மைதானம், எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி தாக்கம் மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் அதிகாலையில் வழக்கத்துக்கு மாறாக குளிர் அதிகமாக இருந்தது. தாவரவியல் பூங்காவில் பனி தாக்கம் காரணமாக புல்வெளிகள் கருகாமல் இருக்க அதிகாலையில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. முகப்பில் உள்ளஅலங்கார செடிகள் பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடப்படுகிறது.

    ஊட்டியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 17.8 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 10.3 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. வருகிற நாட்களில் உறைபனி தாக்கம் அதிகரித்தால் தேயிலை செடிகள் கருகும் அபாய நிலை ஏற்படும்.

    ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இந்த உறைபனி காலத்தை அனுபவித்து வருகின்றனர். உறைபனி தாக்கத்தால் வீடுகளில் தண்ணீர் சூடாவதற்கு அதிக நேரம் பிடிக்கிறது. கடுங்குளிர் காரணமாக மக்கள் வெது, வெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள்.
    கூடலூரில் வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் வராத ரூ.34,700 பறிமுதல் செய்யப்பட்டது.
    கூடலூர்:

    தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா என 3 மாநில எல்லைகள் சந்திக்கும் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உள்ளது. இங்குள்ள தொரப்பள்ளி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடி உள்ளது. இந்த சோதனைச்சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு தொரப்பள்ளி சோதனைச்சாவடியில் வழக்கம்போல் வெளிமாநில வாகனங்களை தணிக்கை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷினி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் மற்றும் போலீசார் சோதனைச்சாவடி அலுவலகத்துக்குள் திடீரென நுழைந்தனர்.

    பின்னர் அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் அறைகளை சோதனை செய்தனர். அப்போது ரூ.34,700 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சோதனைச்சாவடி அலுவலகத்தில் பணியில் இருந்த வட்டார போக்குவரத்து பெண் ஆய்வாளர் ராஜசுலோசனா, அலுவலக உதவியாளர் சிபி ஜேக்கப் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அது கணக்கில் வராத பணம் என உறுதி செய்யப்பட்டது. காலை 11.30 மணி வரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஊட்டி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி கூறியதாவது:-

    கூடலூர் அருகே தொரப்பள்ளி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச்சாவடியில் வாகன ஓட்டுனர்களிடம் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார் வந்தது. அதனடிப்படையில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கணக்கில் வராத ரூ.34,700 பணம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும். கைப்பற்றப்பட்ட பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
    ×