search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுமலை தெப்பக்காடு வரவேற்பு மையம்
    X
    முதுமலை தெப்பக்காடு வரவேற்பு மையம்

    முதுமலையில் யானை சவாரி தொடங்குவது எப்போது?- சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

    முதுமலையில் யானை சவாரி தொடங்குவது எப்போது என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
    கூடலூர்:

    கொரோனா பரவலை தடுக்க நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டன. இதனால் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக வளர்ப்பு யானைகள் மீதான சவாரி மற்றும் வாகன சவாரிகள் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர்.

    ஆனால் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு சுற்றுலாப்பயணிகள் வர தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வாகன மற்றும் வளர்ப்பு யானை சவாரி செய்ய முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

    மேலும் நேரடி மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்று வந்த தொழிலாளர்கள், வியாபாரிகள் முதுமலை புலிகள் காப்பகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்லும் முதுமலை தெப்பக்காடு பகுதி தொடர்ந்து வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும் பயணிகளை வனத்துக்குள் சவாரிக்கு அழைத்துச்செல்லும் வாகனங்களும் பல மாதங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அவை பழுதடைய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அத்துடன் யானை சவாரியும் தொடங்காததால் அவை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு செல்ல விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்கி யானை சவாரியை தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    ஊரடங்கு காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே தடைவிதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அன்றாடம் நடைபெறக்கூடிய அலுவலகப் பணிகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சுற்றுலா தளங்கள் திறக்க அனுமதி வழங்கி இருந்தாலும் உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வரவில்லை.

    அவ்வாறு உத்தரவு வந்தால் மட்டுமே புலிகள் காப்பகத்துக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். உரிய அனுமதி வராததால் வளர்ப்பு யானை மற்றும் வாகன சவாரி தொடங்கப்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×