என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரியில் பார்த்து மகிழ பல இடங்கள் உள்ளன. அதிலும் இங்குள்ள தொட்டபெட்டா மலை சிகரம் சிறந்த சுற்றுலா மையமாக திகழ்கிறது. இதனால் இங்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

    இங்குள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து மேல் பகுதிக்கு செல்லும் நடைபாதையின் வலது புறத்தில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கொரோனா காரணமாக சுற்றுலா மையங்கள் மூடப்பட்டதால், இந்த கடைகளும் மூடப்பட்டன.

    ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன. அதுபோன்று நடைபாதை கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தொட்ட பெட்டா மலை சிகரத்தில் உள்ள நடைபாதை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் கடைகளை திறப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    அதில், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் கடைகளை திறந்து உள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு தொட்டபெட்டாவில் நடைபாதையில் உள்ள கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் கண்டிப்பாக கடைகளை போடக்கூடாது. நகர்வு கடைகள் மட்டுமே செயல்பட வேண்டும். ஒரே இடத்தில் நிற்காமல் வியாபாரம் செய்ய வேண்டும்.

    ஒரே இடத்தில் கடைகளை போடும் பட்சத்தில் அங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் குவிந்து விடும். இதைதடுக்கதான் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் கடைகளை போட்டு இருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் உள்ள தொலைநோக்கி இல்லத்தில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க நவீன தொலைநோக்கிகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் அதனை அடிக்கடி தொடுவதால் கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது.

    இதை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் தொலைநோக்கி வழியாக பார்க்க அனுமதி இல்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.
    தமிழக-கேரள மாநில எல்லையில், போலீசார் நடத்திய வாகன சோதனையில் கம்பம் தொழில் அதிபரிடம் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லையையொட்டி குமுளி சோதனைசாவடி அமைந்துள்ளது. இங்கு கேரள போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கம்பத்தில் இருந்து கேரள மாநிலம் குமுளி நோக்கி ஒரு சொகுசு கார் சென்றது. இந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    காருக்குள் சூட்கேஸ் ஒன்று இருந்தது. அதனை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அதற்குள் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அதில் 500 ரூபாய் கட்டுகளாக ரூ.50 லட்சம் இருந்தது. இதையடுத்து காரில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், கம்பம் என்.கே.பி. தெருவை சேர்ந்த தொழிலதிபர் ராஜீவ் (வயது 33) என்று தெரியவந்தது. அவர், ஏலக்காய் தோட்டம் வாங்குவதற்காக பணத்தை எடுத்து சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனையடுத்து பணத்துக்கான ஆவணங்களை போலீசார் கேட்டனர். ஆனால் அவர் ஆவணங்களை காட்டவில்லை. இதனால் ரூ.50 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவை கைது செய்தனர்.

    பின்னர் பீர்மேடு கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட பணம், பீர்மேடு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து கேரள போலீசார், வருமானவரித்துறையினருக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கம்பம், குமுளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நீலகிரி மாவட்டத்தில் கடும் உறைபனி பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில், புல்வெளிகள் மற்றும் செடி கொடிகள் கருகி வருகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே கடுமையான குளிர் நிலவி வருகிறது. இந்த குளிருடன் பனிப்பொழிவும் சேர்ந்து கொட்டியதால் மக்கள் வெகுவாக சிரமம் அடைந்தனர். இருப்பினும், நிவர் மற்றும் புரெவி புயல்கள் காரணமாக பனி பொழிவு முற்றிலும் குறைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கம் முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் லேசான மழை பெய்தது. மழை நின்றும் மீண்டும் உறைபனி கொட்ட தொடங்கியுள்ளது.

    கடந்த சில நாட்கள் லேசான நீர்பனிப்பொழிவு கொட்டி வந்த நிலையில் தற்போது மீண்டும் உறை பனி பொழிவின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆங்காங்கே சாலையோரங்களில் உள்ள புல் வெளிகளில் உறைபனி படர்ந்து கிடக்கிறது.

    மேலும் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காக்களில் உள்ள புல் தரைகள், செடிகள் மீதும் உறைபனி படர்ந்துள்ளது. தொடர் உறைபனி காரணமாக பூங்காக்களில் உள்ள செடிகள் கருகவும் வாய்ப்புள்ளது.

    இதுதவிர ஊட்டியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே செல்கின்றன. தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சுவட்டர் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    உறைபனி பொழிவு தீவிரமடைந்துள்ள நிலையில், புல்வெளிகள் மற்றும் செடி கொடிகள் கருகி வருகின்றன. இதனால் காட்டு தீ ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஊட்டி தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 24 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    ஊட்டி ஆம்ஸ் அவுஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு ஊட்டி நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய 24 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.46 ஆயிரத்து 300 மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    மசினகுடியில் ஊருக்குள் புகுந்து காட்டு யானை அட்டகாசம் செய்தது. அதை விரட்ட முயன்ற வனத்துறையினரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி வனப்பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஒரு காட்டு யானை வெளியே வந்தது. பின்னர் அந்த யானை ஆச்சக்கரை பகுதி வழியாக மசினகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகுந்தது.

    இது குறித்து தகவலறிந்த சிங்காரா வனச்சரகர் காந்தன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு நுழைந்து மா மரக்கிளையை முறித்து தின்றது.

    அப்போது அங்கு நின்ற நாய்கள் காட்டு யானையை பார்த்து குரைத்தது. இதனால் கோபம் அடைந்த காட்டு யானை ஒரு வீட்டில் வைத்திருந்த வளர்ப்பு நாய் கூண்டை துதிக்கையால் தட்டி விட்டது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சம் அடைந்தனர். தொடர்ந்து வனத்துறையினரும் காட்டு யானையை துரத்தினார்கள்.

    அப்போது சாலையில் சென்ற காட்டு யானை, ஓரத்தில் நிறுத்தி இருந்த ஒரு ஜீப்பை தாக்க முயன்றது. உடனே வனத்துறையினர் சத்தம் போட்டபடி அந்த யானையை துரத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த காட்டு யானை திரும்பி வந்து வனத்துறையினரை தாக்க முயன்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    உடனே சுதாரித்துக்கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பித்ததால், அந்த இடத்தில் இருந்து சென்ற காட்டு யானை மசினகுடி வனத்துறை சோதனை சாவடி வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

    குன்னூர் அருகே உள்ள முத்தநாடு என்ற பகுதியில் 5 காட்டு யானைகள் நுழைந்தன. அவைகள் அங்கு இருந்த ரேசன் கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமையை எடுத்து சாப்பிட்டதுடன் கீழே போட்டு சேதப்படுத்தியது. அத்துடன் அந்த பகுதிஉள்ள வீட்டின் கதவுகளையும் உடைக்க முயற்சி செய்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது. எனவே இந்த காட்டு யானைகளை கண்காணித்து துரத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊட்டி பைன் பாரஸ்ட்டில் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே வனத்துறையின் சூழல் மேம்பாட்டு குழுவின் மூலம் பைன்பாரஸ்ட் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உயரமாக வளர்ந்து காணப்படும் பைன் மரங்கள் மற்றும் கீழ்ப்பகுதியில் காமராஜ் சாகர் அணையின் எழில் மிகுந்த அழகை கண்டு ரசிக்கலாம்.

    கடந்த ஆண்டு மழையால் சேறும், சகதியுமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் அபாயம் இருந்தது. தொடர்ந்து கற்களை கொண்டு நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு 8 மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

    ஊரடங்கு நேரத்தில் சூழல் மேம்பாட்டு குழுவினர் கடந்த பருவமழை காலங்களில் கீழே விழுந்த மரங்களை அப்படியே விடாமல், துண்டு, துண்டாக வெட்டி இருக்கைகளாக வடிவமைத்து உள்ளனர். இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதில் அமர்ந்து ஓய்வெடுக்க வசதியாக உள்ளது.

    மேலும் மரத்தால் ஆன இருக்கைகள் சாயும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதில் சுற்றுலா பயணிகள் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். அத்துடன் அங்கு சுற்றுலா பயணிகள் நீண்ட நாட்களுக்கு பின்னர் குதிரை சவாரி செய்து வருகின்றனர்.

    பைன் பாரஸ்ட் சுற்றுலா மையத்தில் நுழைவு கட்டணம் ரூ.10 ஆக இருந்தது. தற்போது அது ரூ.20 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேபோல் சூட்டிங்மட்டம் பகுதிக்கு செல்ல நுழைவு கட்டணம் ரூ.20 ஆகவும், வீடியோ கேமரா பயன்படுத்த ரூ.1000 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு பின்னர் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பந்தலூர் அருகே தந்தை-மகனை கொன்ற மாயாவி யானையை பிடிக்க புதுவியூகம் வகுத்து தேடி வருகின்றனர்.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அரசுதேயிலைதோட்டம் பகுதியை சேர்ந்த கூடலூர்ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்ஆனந்தராஜ் (வயது49), அவருடையமகன் பிரசாந்த் (21) ஆகியோரை கடந்த 13-ந்தேதிகாட்டு யானை தாக்கி கொன்றது. இதனால் அந்தகாட்டு யானையை பிடிக்க தோட்டதொழிலாளர்கள், அனைத்துகட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து அந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் மயக்க ஊசியுடன் அந்த யானை அங்கிருந்து தப்பி மாயமானது.. இந்த நிலையில் தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஆனால் அந்த யானை மாயாவி போல் வனத்துறையினர் கண்ணில் சிக்காமல் மறைந்து கொண்டு தப்பி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக தேடுதல் வேட்டை நடந்தது. கூடலூர் உதவிவனபாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் சின்னதம்பி, மனோகரன், கணேசன் மற்றும்வனத்துறையினரும் தேடுதல்பணியில் ஈடுப்பட்டனர். ஆளில்லாத குட்டி விமானங்கள் மூலமும் தேடினர். பொது மக்களிடமும் தகவல் சேகரித்தனர். இருப்பினும் அந்த யானை வனத்துறையினர் கண்ணில்சிக்க வில்லை. இந்த நிலையில் அந்த யானை கேரளாவிற்கு தப்பி செல்ல வாய்ப்புள்ளதால் வனத்துறையினர் கோட்டமலை கண்ணம்பள்ளி உள்பட யானை சென்று வரும் வழிதடங்களில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் கால்நடை டாக்டர்கள் மனோகரன், ராஜேஷ்குமார், சுகுமார் பிரகாஷ் ஆகியோரும் யானையை தேடி தேடிவருகின்றனர். இதேபோல் சேரம்பாடிவனத்துறையினர்மலப்புரம்மாவட்டம் நிலம்பூர் உயர்அதிகாரிகளை சந்தித்து யானை குறித்துவிசாரணை நடத்தினர். அப்போது இந்த யானை கடந்த நவம்பர் மாதம் கும்பல பாறை ஆற்றுப்பகுதியில் முகாமிட்டது தெரியவந்தது. இதுபந்தலூர் அருகில் உள்ளதால் தொடர்ந்து பந்தலூர் வந்து தாக்கி செல்கிறதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, மாயாவிபோல் சுற்றிவரும் இந்த யானை சங்கர் என்றும் அழைக்கப்படுகிறது. தற்போது யானை கேரளாவில் இருக்கலாம் என்கிற சந்தேகம் உள்ளதால், அதனை பிடிக்க புது வியூகம் அமைக்கப்பட்டுள்ளது என்றனர். இதற்கிடையே கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர் தீ்ன் மற்றும் வனத்துறையினர், யானைதாக்கி உயிரிழந்த தந்தை, மகன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
    நீலகிரியில் குளிர் அதிகமாக காணப்படுவதால், சுற்றுலா தலங்களில் குறைந்தளவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.

    ஊட்டி:

    வடகிழக்கு பருவமழை நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இரவில் நீர் பனியுடன் கடுங்குளிர் வாட்டியது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கடந்த 2 நாட்களாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காணப்படுகிறது.

    ஊட்டியில் இருந்து கோத்தகிரி, மஞ்சூர், குன்னூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மேக மூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    இதேபோன்று கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளிலும் கடும் மேக மூட்டம் காணப்படுகிறது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் திணறினர். குறிப்பாக, சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றன.

    குளிர் அதிகமாக காணப்படுவதால், சுற்றுலா தலங்களில் குறைந்தளவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். இதனால், ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களில் மிக குறைந்த சுற்றுலா பயணிகளே காணப்பட்டனர். கடுங்குளிரால் வேலைக்கு செல்லும் மக்கள் அவதிப்பட்டனர்.

    கொடநாடு கொலை வழக்கை விசாரித்த நீலகிரி மாவட்ட ம் முதன்மை நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்த ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் தாபா காயம் அடைந்தார். மேலும் அங்கிருந்த சில ஆவணங்கள் திருடு போனதாகவும் கூறப்படுகிறது.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் சேலம் அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தார். வழக்கில் தொடர்புடைய சயான், சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், வாளையார் மனோஜ், மனோஜ்சாமி, ஜித்தீன் ஜாய், சம்சீர்அலி, பிஜின் குட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை ஊட்டி நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை விசாரித்து வந்தார்.

    இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொடநாடு வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஊட்டி நீதிமன்றத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நீதிபதி வடமலை வழக்கை வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் தொடர்ந்து விசாரித்து வந்தார். இதுவரை 103 சாட்சிகளில் 41 பேரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.

    இந்த நிலையில் கொடநாடு வழக்கை விசாரித்து வந்த முதன்மை நீதிபதி வடமலை நேற்று திடீரென மதுரை நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டி நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார்.

    இவருக்கு பதிலாக கோவை மாவட்ட கூடுதல் நீதிபதி சஞ்சய் பாபா, நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 21-ந் தேதி பதவியேற்க உள்ளார்.

    பந்தலூர் அருகே தந்தை-மகனை கொன்ற காட்டு யானை கேரளாவுக்கு சென்றது. எனவே அதை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்டம் ரேஞ்ச் எண் 1 பகுதியில் தந்தை-மகனை கொன்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்த பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த யானையை வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அது சேரம்பாடி அருகே சப்பந்தோடு வனப்பகுதியில் நேற்று முன்தினம் நின்றது. உடனே அந்த காட்டு யானைக்கு வனத்துறை கால்நடை டாக்டர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தினார். உடனே அங்கு நின்ற காட்டு யானை சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த நிலையில் அங்கிருந்து சென்றது.

    இதையடுத்து வனத்துறையினர் கும்கி யானைகளான கலீம், வீசீம், விஜய், பொம்மன் ஆகியவற்றின் உதவியுடனும், ஆளில்லா குட்டி விமானம் மூலமும் அந்த யானையை தேடினார்கள். அப்போது அது யானைகளின் கூட்டத்துடன் சேர்ந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கண்காணித்தபோது அந்த யானை திடீரென்று புதருக்குள் நுழைந்தது. இரவு ஆகிவிட்டதால் அதை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ள வில்லை.

    இந்த நிலையில் நேற்று காலையில் கூடலூர் உதவி வனபாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் வனச்சரகர்கள் சின்னதம்பி, மனோகரன், கணேசன் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த யானை சப்பத்தோடு பகுதியில் காட்டு யானைகளின் கூட்டத்துடன் நின்றது.

    உடனே வனத்துறையினர் அந்த காட்டு யானையை தனியாக பிரிப்பதற்காக பட்டாசுகளை வெடித்தும், கும்கி யானைகளை வைத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்றிருந்த காட்டு யானைகளின் கூட்டம் வனப்பகுதிக்குள் பிரிந்து ஓடியது. தொடர்ந்து வனத்துறையினர் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணித்தனர். ஆனால் அந்த காட்டு யானையை கண்டுபிடிக்க முடியவில்லை.

    தொடர்ந்து கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் தலைமையில் கூடலூர் மாவட்ட வன அதிகாரி குருசாமி மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அத்துடன் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் அந்த காட்டு யானை கோரஞ்சால் புஞ்சை கொல்லி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் மறைந்து நிற்கிறதா என்பதையும் கண்காணிக்க வனத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.

    இதையடுத்து வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் யானை பாதுகாப்பு படையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று அந்த யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் கும்கி யானைகள் மூலமும் அந்த காட்டு யானை இருக்கும் இடம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தந்தை-மகனை கொன்ற காட்டு யானை கோத்தமலை, சாமியார் மலை பகுதி வழியாக கேரளாவுக்கு தப்பி சென்று இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். யானையை கண்டுபிடித்ததும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என்றனர்.
    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் 2½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.
    ஊட்டி:

    ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா மையங்களும் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இருக்கிறது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதாலும், பண்டிகைகள் நெருங்குவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா பரவாமல் இருக்க பூங்கா பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுபோன்று வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டம் சுற்றுலா மையம் என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டும், உள்ளூர் மக்களுக்கு தொற்று பரவாமல் இருக்கவும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு சளி மாதிரி சேகரித்து ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 53 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. சுற்றுலா தலங்களில் தெர்மல் ஸ்கேனர் சோதனையின்போது காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கறி விருந்தில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே கிளிப்பி கிராமத்தை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது 41). கூலி தொழிலாளியான இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி தனது நண்பர்களுக்கு கறி விருந்து வைத்தார்.

    அதற்கு மர லோடு ஏற்றி கூலி வேலை செய்து வரும் நண்பரான சாமி என்பவரை அழைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சாமி மது போதையில் விருந்து நடைபெற்ற இடத்திற்கு சென்று உன்னிகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அவர் உன்னிகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார். அப்போது எதிரே நடந்து வந்தபோது உன்னிகிருஷ்ணனிடம் சாமி தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் உன்னிகிருஷ்ணனை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

    இதுகுறித்து சோலூர்மட்டம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட சாமிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி அருணாசலம் தீர்ப்பு அளித்தார்.

    இதையடுத்து போலீசார் சாமியை கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர். இதில் அரசு தரப்பில் வக்கீல் மாலினி ஆஜராகி வாதாடினார்.
    ×