என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வள்ளுவர்காலனி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் மோகன் பாபு (வயது 21). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. கோத்தகிரி அருகே குமரன்காலனியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவருடைய மகள் கவுசல்யா (வயது 21). இவர்கள், கடந்த 1½ ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கவுசல்யா திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை வந்தார். இந்த நிலையில் கவுசல்யாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இது பற்றி கவுசல்யா தனது காதலன் மோகன் பாபுவிடம், தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்ப்பதால் தன்னைஅழைத்து சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி உள்ளார். இதையடுத்து மோகன்பாபு, 19-ந் தேதி திருப்பூருக்கு சென்று கவுசல்யாவை அழைத்துக் கொண்டு மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். அங்குள்ள ஒரு கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள், கோத்தகிரியில் உள்ள மோகன்பாபுவின் வீட்டிற்கு வந்தனர். மோகன்பாபு திருமண கோலத்தில் வந்து நிற்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களுக்கு தெரியாமல் திருமணம் செய்ததால் கவுசல்யா மற்றும் மோகன்பாபுவிடம் அவருடைய பெற்றோர் பேசாமல் இருந்துள்ளனர். அதோடு தனிக்குடித்தனம் செல்லுமாறு மோகன்பாபுவிடம் அவர்கள் கூறியுள்ளனர். திருமணத்தை ஏற்றுக்கொள்ளாததோடு பெற்றோர் பேசாததால் மோகன்பாபு மனமுடைந்தார். இதனால் 20-ந் தேதி காலை மோகன்பாபு தனது மனைவி கவுசல்யாவை அழைத்துக்கொண்டு, மேட்டுப்பாளையத்துக்கு சென்று பஸ் நிலையத்தில் கவுசல்யாவை உட்கார வைத்து விட்டு கோத்தகிரிக்கு சென்று விட்டு உடைகளை எடுத்து விட்டு வருகிறேன். அதுவரை காத்திருந்து என்று கூறி விட்டு கோத்தகிரி சென்றார்.
அன்று மாலை 4 மணி ஆகியும் மோகன்பாபு வராததால் கவுசல்யா அவருடைய செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது, அவர் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவதாக கூறியுள்ளார். அதன்பிறகு அவரது செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்ட போதும் செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. இதனால் சந்தேகமடைந்த கவுசல்யா, மோகன்பாபுவின் அண்ணன் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே அவர், வீட்டிற்கு சென்று பார்த்தபோது உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. உடனே அவர் ஜன்னலை உடைத்து பார்த்தபோது, மோகன் பாபு அங்குள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகன்பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் கவுசல்யா நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்பாபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மாலை மோகன்பாபுவின் உடல் அவரது உறவினர்களிடம் வழங்கப்பட்டது. திருமணமான மறுநாளே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் அந்த வழக்கை நீலகிரி போலீசார் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 5 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முக்கிய குற்றவாளியான சயான், சாட்சிகள் மற்றும் கொடநாடு மேலாளர் என 40-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் மறுவிசாரணை நடத்தி அவற்றை வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

அதன்படி கோத்தகிரி தாசில்தாரை சந்தித்த தனிப்படை போலீசார் தினேஷ்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை மேற்கொள்வது தொடர்பாக மனு ஒன்றை அளித்தனர். அதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தினேஷ்குமார் வழக்கை நேற்றே போலீசார் விசாரிக்க தொடங்கினர். தினேஷ்குமாரின் சொந்த ஊரான கோத்தகிரி அருகே கெங்கரைக்கு நேற்று மாலை டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படை போலீசார் 5 பேர் சென்றனர். அவர்கள் கெங்கரையில் வசிக்கும் தினேஷ்குமாரின் தந்தை போஜனை தனியாக அழைத்து விசாரித்தனர்.
தினேஷ்குமார் எப்படி இறந்தார், அவரது மரணத்தில் என்னென்ன சந்தேகங்கள் உள்ளன, நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல முக்கிய தகவல்களை போஜன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.
போஜனை தொடர்ந்து அவரது உறவினர்கள் சிலரிடமும், அவருடன் பணியாற்றிய எஸ்டேட் ஊழியர்களிடமும் போலீசார் விசாரிக்க உள்ளனர். விசாரணைக்கு பின் தினேஷ்குமாரின் தற்கொலை வழக்கு சந்தேக மரண வழக்காக மாற்றப்படும் என தெரிகிறது. தேவைப்பட்டால் தினேஷ்குமாரின் உடலை மீண்டும் மறுபிரேத பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் கெத்தை, குந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, மாயார், கிளன்மார்கன், முக்கூருத்தி, பார்சன்ஸ்வேலி, மரவகண்டி, காமராஜ் சாகர் அணை ஆகிய 12 அணைகள் உள்ளன. இங்கு குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ் 12 மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் ராட்சத குழாய்கள் மூலம் மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
கொரோனா பாதிப்பால் பல மாவட்டங்களில் தனியார் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மின் பயன்பாடு குறைவாக இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக அனைத்து நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இதனால் மின்தேவை அதிகரித்து உள்ளது. இதை கருத்தில் கொண்டு நீலகிரியில் மின்வாரியம் மூலம் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பைக்காரா அணையில் இருந்து 3 மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 80 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 85 அடிக்கு தண்ணீர் உள்ளது. கடந்த 3 மாதங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. இதனால் அணை கடல் போல் காட்சி அளிக்கிறது. இதேபோல் மற்ற மின் நிலையங்களிலும் மின் உற்பத்தி அதிகரித்து உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, நீலகிரியில் தினமும் 833 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. தற்போது தினமும் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் மின் பயன்பாடு அதிகரித்ததை தொடர்ந்து மின்சார உற்பத்தி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பாதித்த நபர்களுக்கு 3 மாதங்களுக்கு பின்னர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல் டோஸ் போல் 2-வது டோசும் 100 சதவீதம் செலுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 3 ஆயிரத்து 963 பேருக்கு 2-வது டோஸ் செலுத்தப்பட்டது.
நீலகிரியில் இதுவரை 6 லட்சத்து 54 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த தடுப்பூசி நிபா வைரசுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தொற்றில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தாமாக முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
கொடநாட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக போலீசார் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்ட சயான், ஜம்சீர் அலி மற்றும் எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்டோரிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டர் தினேஷ் குமார் சம்பவம் நடந்த சில தினங்களில் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. ஆனால் அவரது குடும்பத்தினர் அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்து வந்தனர்.
இதன் காரணமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மரணம் பற்றி மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... தஞ்சம் புகுந்த ஹைத்தி அகதிகளை விமானங்களில் ஏற்றி திருப்பி அனுப்பும் அமெரிக்கா
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே காலை நேரங்களில் மிதமான வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. அவ்வப்போது காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்கிறது.
ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காந்தல், சேரிங்கிராஸ், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது.
அவ்வப்போது லேசாக தூறி கொண்டே இருந்தது. சனி, ஞாயிறு விடுமுறையால் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்னர். அவர்கள் நேற்று காலை முதல் தூறலில் நனைந்தபடியே சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வந்தனர்.
இந்த நிலையில் மதியத்திற்கு பிறகு ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ் சாலை, கமர்சியல் சாலை, கூட்செட் சாலை கலெக்டர் அலுவலக சாலை, குன்னூர் ரோடு, மத்திய பஸ் நிலையம், எட்டின்ஸ் சாலை, படகு இல்ல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் பலத்த மழைக்கு ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மழை நீர் புகுந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சேரிங்கிராஸ் பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது.
தொடர் மழையால் ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க, விற்க வந்த பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமம் அடைந்தனர். மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள பஸ் நிறுத்தம், ஒதுக்குப்புறமான இடங்களில் ஒதுங்கி நின்றனர்.
பலத்த மழை பெய்து கொண்டிருந்த போதும் ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை குடைகளை பிடித்தபடி கண்டு ரசித்தனர்.
இதேபோல் கூடலூர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை மகசூல் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கால் முடங்கி கிடந்த நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் தற்போது களை கட்டி உள்ளது. தினந்தோறும் ஊட்டிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலாபயணிகள் வருகை தருகிறார்கள்.
சனிக்கிழமையான நேற்று ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா மற்றும் குன்னூர் சுற்றுலா பூங்காவில் சுற்றுலாபயணிகள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 8 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்திருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் இந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரித்தது.
இதில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு 4,983 பேர், அரசினர் ரோஜா பூங்காவுக்கு 2,328 பேர், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 384 பேர், மரவியல் பூங்காவுக்கு 38 பேர் வந்திருந்தனர். அதேபோல, குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு 1,576 பேர், காட்டேரி பூங்காவுக்கு 439 பேர், கல்லாறு பழப்பண்ணைக்கு 192 பேர் வந்திருந்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு சுமார் 3 ஆயிரம் பேர் பைக்காரா படகு இல்லத்துக்கு 1,800 பேர் வந்திருந்தனர். அவர்கள் படகில் சவாரி செய்து உற்சாகமாக பொழுதை கழித்தனர்.
ஞாயிற்றுக்கிழமையான இன்றும் ஊட்டியில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் ஓட்டல்கள், லாட்ஜ்கள் நிரம்பி காணப்பட்டன. பொதுமக்கள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையே பல மாதங்களுக்கு பிறகு ஊட்டியில் படப்பிடிப்பும் தொடங்கி உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரிக்ஸ் பள்ளியில் தெலுங்கு சினிமா படப்பிடிப்பு நடந்தது. புதுமுக நடிகர் சந்தோஷ் சோபன், குக்கூ படத்தில் நடித்த நடிகை மாளவிகா ஆகியோர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
நாயகி சைக்கிளில் செல்வது, பள்ளியில் குழந்தைகளுடன் பேசுவது போன்ற காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன. நீண்டநாட்களுக்கு பிறகு நடந்ததால் படப்பிடிப்பை சுற்றுலாபயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
இதுபற்றி தெலுங்கு படத்தின் டைரக்டர் நந்தினி கூறுகையில், இந்த படத்தை நீலகிரி மாவட்டத்தில் 35 நாட்கள் படமாக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் காட்சிகள் 85 சதவீதம் ஊட்டியில் எடுக்கப்படுகிறது. தேயிலை, காபி தோட்டங்கள் மலை முகடுகள் போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கரோலினா பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியையொட்டி ஏராளமான தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் உள்ளது. இதனால் அடிக்கடி காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்க கூடிய நாய், கோழி, ஆடு உள்ளிட்ட விலங்குகள் இரவு நேரத்தில் திடீர் திடீரென காணமால்போவது வாடிக்கையாக இருந்தது. இதனால் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில், இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் வருவதும், நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி திரியும் சிறுத்தை, பின்னர் வீட்டில் வளர்க்க கூடிய செல்லப்பிராணிகளை வாயால் கவ்வி செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.
காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் மட்டுமே இருப்பதாக நினைத்த மக்களுக்கு சிறுத்தை இரவில் சுற்றி திரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே தங்கள் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி தேயிலை தோட்ட பகுதிகளில் சுற்றி திரிகின்றன. சில நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள்ளும் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஊட்டியில் இருந்து மாயாறு பகுதிக்கு தினந்தோறும் அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8.30 மணியளவில் ஊட்டியில் இருந்து மாயாறுக்கு அரசு பஸ் ஒன்று 10-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது.
இந்த பஸ் மசினகுடி அடுத்த அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்ற போது 3 காட்டு யானைகள் அந்த சாலையை மறித்து கொண்டு நின்றிருந்தன.
இதனை பார்த்ததும் பஸ் டிரைவர் சிறிது தூரத்திலேயே பஸ்சை நிறுத்தி விட்டார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. யானை நிற்பது தெரியாமல் வந்த வாகனத்தை யானை லேசாக தட்டி விட்டது. அதிர்ஷ்டவசமாக அவர் அங்கிருந்து தப்பியோடி உயிர் பிழைத்தார்.
சிறிது நேரத்தில் 3 யானைகளில் 2 யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விட்டது. ஒரு யானை மட்டும் செல்லாமல் சாலையிலேயே நின்று பயணிகளை அச்சுறுத்தி வந்தது.
திடீரென அந்த யானை ஆக்ரோஷத்துடன் அரசு பஸ்சை நோக்கி வேகமாக வந்தது.
இதனால் பஸ்சில் டிரைவர், கண்டக்டர் பயணிகள் உள்பட பயணிகள் அனைவரும் அச்சம் அடைந்து கூச்சலிட்டனர். சிறிது நேரம் அந்த பகுதியிலேயே சுற்றி திரிந்த யானை பின்னர் அங்கிருந்து அடர்ந்த வனத்திற்குள் சென்று விட்டது. அதன்பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அரசு பஸ்சை காட்டு யானை வழிமறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு சீகூர் வனத்தில் 20 வயதான பெண் காட்டு யானை இறந்து கிடந்தது இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் குடலில் ஒட்டுண்ணி புழுக்களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி வனப்பகுதியில் வனச்சரகர் விஜயன் தலைமையிலான வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது உடல் அழுகிய நிலையில் பெண் காட்டு யானை இறந்து கிடப்பதை கண்டனர். இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது உடல் மிகவும் அழுகியதால் இறப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மேலும் பிற வனவிலங்குகள் கடித்த காயங்கள் காட்டு யானையின் உடலில் இருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு காட்டு யானைகள் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
இதனால் யானையின் உடற்பாகங்களை மாதிரி பரிசோதனைக்காக சேகரித்தனர். இதன் அறிக்கை வந்த பின்னரே காட்டு யானையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து காட்டு யானை இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அந்த பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர் மற்றும் 10-ம் வகுப்பு மாணவர் என 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த மாணவர்கள் படித்த வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மற்ற வகுப்புகள் வழக்கம்போல் நடந்தன.
இதற்கிடையே மாணவர்களின் பெற்றோருக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். நேற்று 2 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து கோவை மாவட்டத்தில் பள்ளி திறக்கப்பட்ட 1-ந் தேதியில் இருந்து இதுவரை 21 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் படிக்கும் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வயிற்று வலிக்கு சிகிச்சை பெற மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். சிகிச்சை முடிந்தவுடன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அதன்பின்னர் நேற்று மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். இந்த நிலையில் பரிசோதனையில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து பிக்கட்டி சுகாதாரத்துறையினர் பள்ளிக்கு சென்று மாணவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மூலம் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்படடது.
மாணவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் பயின்ற சக மாணவிகள், ஆசிரியர்கள் என 56 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் 2 தினங்களில் வெளியாக உள்ளது. பள்ளிக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர், பந்தலூர் அருகே உப்பட்டியில் உள்ள பள்ளி மாணவர் என 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாளி உள்ளது. நீலகிரியில் நேற்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதியாகி உள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் குருசடி காலனி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை சவுமியா சாசு.
இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை திருச்சியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு படித்து முடித்துள்ளார்.
படிப்பை முடித்துள்ள சவுமியா சாசு தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து வக்கீலாக பயிற்சி பெற உள்ளார்.
இந்த நிலையில் தான் வக்கீலாக பார்கவுன்சிலில் பதிவு செய்ததை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது சமூக நல அலுவலர்(பொறுப்பு) தேவகுமாரி உடன் இருந்தார்.
கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்ற திருநங்கை சவுமியாசாசு கூறியதாவது:-
தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை ஒருவர் கர்நாடகாவில் சட்டப்படிப்பு முடித்து தமிழகத்தில் பதிவு செய்தார்.
ஆனால் நான் முதல் முறையாக தமிழகத்திலேயே சட்டப்படிப்பு படித்து பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன். நான் வக்கீலாக எனது சொந்த ஊரிலேயே பணியாற்ற உள்ளது பெருமையாக உள்ளது. மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணியாற்றுவேன்.
இதன் மூலம் திருநங்கைகளை வழிநடத்துவதோடு, 5 ஆண்டுகள் பயிற்சி பெற்று அனைத்து மக்களுக்கும் சமூக சேவை புரிவேன். நீதிபதி ஆவதே எனது லட்சியம். மேலும் வருகிற 24-ந் தேதி நடைபெறும் அகில இந்திய பார் கவுன்சில் தேர்வில் கலந்து கொள்ள உள்ளேன். இதில் தேர்ச்சி பெற்றால் நிரந்தர உறுப்பினராக வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரியில் முதல் முறையாக திருநங்கை ஒருவர் வக்கீல் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.






