search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளியில் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன
    X
    பள்ளியில் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளித்து சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன

    கோவை, நீலகிரியில் பள்ளி மாணவ-மாணவிகள் 5 பேருக்கு கொரோனா

    நீலகிரியில் பள்ளி மாணவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் பயின்ற சக மாணவிகள், ஆசிரியர்கள் என 56 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
    மஞ்சூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த 1-ந் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

    கோவை ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அந்த பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர் மற்றும் 10-ம் வகுப்பு மாணவர் என 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த மாணவர்கள் படித்த வகுப்பறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. மற்ற வகுப்புகள் வழக்கம்போல் நடந்தன.

    இதற்கிடையே மாணவர்களின் பெற்றோருக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் அவர்களை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். நேற்று 2 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து கோவை மாவட்டத்தில் பள்ளி திறக்கப்பட்ட 1-ந் தேதியில் இருந்து இதுவரை 21 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் படிக்கும் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வயிற்று வலிக்கு சிகிச்சை பெற மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். சிகிச்சை முடிந்தவுடன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

    அதன்பின்னர் நேற்று மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். இந்த நிலையில் பரிசோதனையில் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதையடுத்து பிக்கட்டி சுகாதாரத்துறையினர் பள்ளிக்கு சென்று மாணவியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மூலம் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்படடது.

    மாணவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து அவருடன் பயின்ற சக மாணவிகள், ஆசிரியர்கள் என 56 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் 2 தினங்களில் வெளியாக உள்ளது. பள்ளிக்கு நேற்றும், இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் எடக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர், பந்தலூர் அருகே உப்பட்டியில் உள்ள பள்ளி மாணவர் என 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாளி உள்ளது. நீலகிரியில் நேற்று ஒரே நாளில் 3 மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதியாகி உள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.




    Next Story
    ×