search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலத்த மழை காரணமாக ஊட்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் புகுந்துள்ளதை படத்தில் காணலாம்
    X
    பலத்த மழை காரணமாக ஊட்டியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் புகுந்துள்ளதை படத்தில் காணலாம்

    ஊட்டியில் பலத்த மழை - பெட்ரோல் பங்க்கில் புகுந்த மழை வெள்ளம்

    தொடர் மழையால் ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க, விற்க வந்த பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே காலை நேரங்களில் மிதமான வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. அவ்வப்போது காற்று, இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழையும் பெய்கிறது.

    ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காந்தல், சேரிங்கிராஸ், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது.

    அவ்வப்போது லேசாக தூறி கொண்டே இருந்தது. சனி, ஞாயிறு விடுமுறையால் ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்னர். அவர்கள் நேற்று காலை முதல் தூறலில் நனைந்தபடியே சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வந்தனர்.

    இந்த நிலையில் மதியத்திற்கு பிறகு ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.

    சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழை காரணமாக ஊட்டியில் உள்ள சேரிங்கிராஸ் சாலை, கமர்சியல் சாலை, கூட்செட் சாலை கலெக்டர் அலுவலக சாலை, குன்னூர் ரோடு, மத்திய பஸ் நிலையம், எட்டின்ஸ் சாலை, படகு இல்ல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதேபோல் பலத்த மழைக்கு ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் மழை நீர் புகுந்தது. தொடர்ந்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் சேரிங்கிராஸ் பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது.

    தொடர் மழையால் ஊட்டி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க, விற்க வந்த பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமம் அடைந்தனர். மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள பஸ் நிறுத்தம், ஒதுக்குப்புறமான இடங்களில் ஒதுங்கி நின்றனர்.

    பலத்த மழை பெய்து கொண்டிருந்த போதும் ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை குடைகளை பிடித்தபடி கண்டு ரசித்தனர்.

    இதேபோல் கூடலூர் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தேயிலை மகசூல் பாதிப்படைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 


    Next Story
    ×