என் மலர்tooltip icon

    நீலகிரி

    • பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்று கொண்டார்.
    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்க கூடாது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்று கொண்டார்.

    தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

    மேலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனிகவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்க கூடாது. பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷ்னி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கேத்ரின் நீர்வீழ்ச்சி.
    • மனிதர்கள் பார்ப்பதை அறிந்த கரடி, குட்டிகளுடன், தோட்டத்திற்குள் பதுங்கியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது கேத்ரின் நீர்வீழ்ச்சி. தேயிலை தோட்டங்கள் அதிகமுள்ள இந்த பகுதியில் கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் கரடி ஒன்று 2 குட்டிகளை தனது முதுகில் சுமந்தவாறு தேயிலை தோட்டத்தில் உலாவந்தது இதனை அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

    மனிதர்கள் பார்ப்பதை அறிந்த கரடி, குட்டிகளுடன், தோட்டத்திற்குள் பதுங்கியது. சிறிது நேரத்திற்கு பின்பு தாய் கரடி தனது 2 குட்டிகளையும் முதுகில் சுமந்தவாறு, அங்குள்ள சாலையை கடந்து சென்றது. இந்த காட்சிகளை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். மேலும் இதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    • சுமார் 2 மணி நேரம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
    • தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், சாலையில் அதிகளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடப்பு மாத தொடக்கத்தில் இருந்தே தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

    நேற்று காலை முதல் மதியம் வரை வெயிலான காலநிலை நிலவிய நிலையில், மதியத்துக்கு பிறகு வானிலை மேகமூட்டமாக மாறியது.

    அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், சாலையில் அதிகளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தன.

    ஆங்காங்கே தாழ்வான பகுதிகளிலும் மழைநீருடன், கழிவு நீரும் கலந்து சாலையில் தேங்கியது. பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் மழை காரணமாக வெள்ளம் தேங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    மேலும் பாலத்தின் அருகே இருந்த போலீஸ் நிலையத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு பணியாற்றிய போலீசார் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி அருகே உள்ள கீழ் கோடப்பமந்து பகுதியிலும் மழை காரணமாக குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தன. வீட்டில் தேங்கிய தண்ணீரை மக்கள் வாளிகள் மூலம் வெளியேற்றினர்.

    இதேபோல் ஊட்டி மத்திய பஸ் நிலைய பணிமனை வளாகம், ரெயில் நிலையம் சந்திப்பு, லவ்டேல் சந்திப்பு, மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது. மார்க்கெட்டில் தேங்கிய தண்ணீரால் வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வந்த மக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    • 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன.
    • 18 நாட்கள் பந்தயங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நடப்பாண்டில் ஊட்டியில் குதிரை பந்தயம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கியது. போட்டியில் கலந்துகொள்ள பெங்களூரு, மும்பை, ஐதராபாத், சென்னை, புனே போன்ற இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன.

    தினமும் காலை, மாலையில் குதிரைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. 7 வெளியூர் பயிற்சியாளர்கள் உள்பட 30 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 30 ஜாக்கிகள் பங்கேற்றனர். முக்கிய பந்தயங்களான கடந்த 7-ந் தேதி தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ், தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ் போட்டி மே 1-ந் தேதி, தி நீல்கிரிஸ் டர்பி ஸ்டேக்ஸ் போட்டி மே 26-ந் தேதி நடந்தது.

    மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதான ஓடுதளம் சேதமடைந்தது.

    இதனால் நீலகிரி தங்க கோப்பை போட்டி உள்பட மீதமிருந்த பந்தயங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.



     


    பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சக்தி மலை முருகன் கோவிலுக்கு சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

    கோத்தகிரி அருகே சக்தி மலை முருகன் கோவில் நேற்று வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு டானிங்டன் மகா சக்தி கணபதி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சக்தி மலை முருகன் கோவிலுக்கு சென்றனர். ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இவ்விழாவில் இட்டக்கல் போஜராஜ், கோவில் கமிட்டி கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கோவில் பூசாரிகள் கலந்து கொண்டனர்

    பாலவாடி, காந்திநகா், பாரதி நகா், ஆரூட்டுப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் தூய்மை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், ஓவேலி பேரூராட்சியில் உள்ள பாலவாடி, காந்திநகா், பாரதி நகா், ஆரூட்டுப்பாறை, எல்லமலை ஆகிய பகுதிகளில் தூய்மை குறித்த விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்து பொதுமக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா் சித்ரா தேவி தலைமை வகித்தாா்.துணைத் தலைவா் க.சகாதேவன், செயல் அலுவலா் சி.ஹரிதாஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்

    • தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • தடுப்பூசி சிறப்பு முகாமில் சுமாா் 11,000 பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகளுடன், பூஸ்டா் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஊட்டியில் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ெகாரோனா நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில், தற்போது நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 14 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

    இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட ெகாரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் சுமாா் 11,000 பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகளுடன், பூஸ்டா் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

    இதில், ஊட்டியில் ரோஸ்மவுண்ட் பகுதியில் வீடு,வீடாகச் சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டன. இப்பணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தாா்.இதேபோல் கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, சோலூர் மட்டம், அரவேணு, ஜக்கனாரை, தவிட்டு மேடு, கெனவுக்கரை, குஞ்சப்பனை, கட்டபெட்டு போன்ற முக்கியமான பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    அதுமட்டுமின்றி அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    • நீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்பதால் மரமே பூக்கள் நிறைந்து காட்சியளிக்கும்.
    • ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூடப் பூக்கலாம்.

    ஊட்டி:

    இளஞ்சிவப்பு வண்ணமும், சிவப்பு வண்ணமும் கலந்து மாறுபட்ட தோற்றத்துடன் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது நாகலிங்க மலர்கள்.

    மிதமான தட்பவெப்ப நிலையில் வளரும் தன்மை கொண்ட இந்த மரங்கள், நீலகிரி மாவட்டம் பர்லியாறு, பொக்காபுரம் பகுதியில் அதிகம் காணப்படுகின்றது.

    குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோரம் பர்லியாறு பகுதியில் நாகலிங்க மலர்கள் தற்போது பூத்து குலுங்கி வருகிறது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுத்து வருகிறது. இதனால் இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் அதனை பார்த்து பார்த்து ரசிப்பதுடன் புகைப்படமும் எடுத்து செல்கின்றனர்.

    இதன் காய்கள் பீரங்கி குண்டுகள் போல் இருப்பதால் ஆங்கிலத்தில் பீரங்கி குண்டு மரம் எனவும் அழைக்கப்படும். மேலும் நாகபாம்பு வடிவிலும், சிவலிங்கம் போலும் இருப்பதால் நாகலிங்க மலர்கள் என அழைக்கப்படுகிறது. இம்மரத்தில் ஆண்டுதோறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் மலர்கள் பூத்து குலுங்கும்.

    நீண்ட கிளைகள் போன்ற காம்புகளில் பூக்கள் பூப்பதால் மரமே பூக்கள் நிறைந்து காட்சியளிக்கும். ஒரு மரத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக ஆயிரம் மலர்கள்கூடப் பூக்கலாம். நம் நாட்டைத் தவிர்த்த பல நாடுகளில் அலங்காரத்துக்காக இம்மரம் வளர்க்கப்படுகிறது.

    பாம்பு படமெடுப்பது போன்ற மலரின் தோற்றத்தால் இந்த மலர் புனிதமாகக் கருதப்படுகிறது. நாகலிங்கப் பழம் மகாவிசேஷம் ஒவ்வொரு பழமும் ஒரு கால்பந்து அளவுக்கு இருக்கும். அதில் 65 முதல் 550 விதைகள் வரை இருக்கும். இவைகள் முதிர்ச்சி அடைய சுமார் 12 லிருந்து 18 மாதங்கள் வரை ஆகுமாம்.

    • ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
    • ஊட்டி மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கோடை சீசனை முன்னிட்டு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

    நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் தலையாகவே தெரிந்தது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள பெரிய புல்வெளி மைதானம், கண்ணாடி மாளிகை, ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, இலை பூங்கா போன்ற இடங்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் புல்வெளியில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். தொடர்ந்து பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்கள் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

    இதேபோல் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அங்கு மோட்டார் படகுகளில் சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து, படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மிதி படகு, துடுப்பு படகுகளில் ஏரியின் அழகை ரசித்த படி படகு சவாரி செய்தனர்.

    தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா படகு இல்லம், ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது. ஊட்டி மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஊட்டி நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லவ்டேல் சந்திப்பு, லோயர் பஜார், கமர்சியல் சாலை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது.

    தாவிரவியல் பூங்காவிற்கு 16,178 பேரும், சிம்ஸ் பூங்காவிற்கு 3431 பேர், ரோஜா பூங்காவிற்கு 7,393 பேரும், காட்ரேி பூங்காவிற்கு 1013 பேர், தேயிலை பூங்காவிற்கு 864 பேரும், மரவியல் பூங்காவிற்கு 230 பேரும், கல்லார் பூங்காவிற்கு 429 என மொத்தம் 29,538 பேர் கண்டுகளித்தனர்.

    • கலெக்டர் நேரில் ஆய்வு
    • மழை நீர் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

     ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை, முதுமலை, சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட புத்தூர் வயல் பகுதியில் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர்அம்ரித் நேரில் பார்வையிட்டார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க, மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் ஊட்டி, நீலகிரி குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம், ஆகிய 4 நகராட்சிப் பகுதிகளில் பொது மக்களின் தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து கண்காணித்து, அதனை விரைவாகவும், தரமாகவும், முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட புத்தூர்வயல் பகுதியில், பழங்குடியினருக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.3 லட்சம் வீதம், ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் 32 பழங்குடியினர் மக்களுக்காக வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், ஸ்ரீமதுரை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், பயனாளி ஒருவரது வீட்டின் அருகில், ரூ.281 லட்சம் மதிப்பில், 10 ஆடுகள் கொண்டு, ஆட்டுகொட்டாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டேன்.

    அதே ஊராட்சியில், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வீடுகளையும், முதுமலை ஊராட்சியில், 15-வது நிதிமானிய குழு திட்டத்தின் கீழ், குனில் பகுதியில் ரூ.5.14 லட்சம் மதிப்பீட்டில், மழைநீர் செல்லும் (வடிகால்) கால்வாய் முடிக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டேன்.

    அதனைத் தொடர்ந்து, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சேரங்கோடு ஊராட்சி அய்யன்கொல்லி பகுதியில் ரூ.48.65 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் கிராம ஊராட்சி சந்தை அமைக்கும் பணியினையும், நெலாக்கோட்டை ஊராட்சி, அம்பலமூலாவில் பிரதான் மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ.7 கோடி மதிப்பில் அம்பலமூலா முதல் கொட்டாடு வரை மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணியினையும், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அம்பலமூலா பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும்,

    நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வட்டக்கொல்லி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் ரூ.2.09 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பண்ணைக் குட்டையினையும் என மொத்தம் ரூ.8.57 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அவ்வாறு கட்டப்படும் வீடுகளில், மழை நீர் தொட்டிகள் அமைக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இதுபோல மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறையின் மூலம் பல்வேறு வளர்ச்சிதிட்டப் பணிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையின் மூலம் நடைபெற்று வருகிறது. பொது மக்களின் தேவைக்கு ஏற்ப 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 4 நகராட்சி பகுதிகளில் இது போன்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை பெய்தபோது கொட்டிய தண்ணீர்
    • புதிய பஸ்களை இயக்க வலியுறுத்தல்

     ஊட்டி:

    நீலகிரிமாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், பல பஸ்கள் பழுதாகியும், சேதமடைந்தும் இருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை தாளூரில் இருந்து கூடலூர் சென்ற அரசு பஸ்சில் சென்ற பயணிகள் பஸ்சுக்குள் குடை பிடித்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. பஸ்சின் மேற்கூரையில் உள்ள ஓட்டை வழியாக மழைநீர் உள்ளே ஒழுகியதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் குடை வைத்திருந்த சிலர் மழையில் நனையாமல் இருக்க பஸ்சக்டை பிடித்தவாறு அமர்ந்து பயணித்தனர்.

    இதற்கு பஸ்சில் ஏறாமல் மழையில் நனைந்தபடி கட்டணமில்லாமல் வீடு போய் சேர்ந்து இருக்கலாம் என பெரும் அதிருப்தியை பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே நீலகிரி மாவட்டத்தில் இதுபோன்று சேதம் அடைந்த பஸ்களை சீரமைக்க வேண்டும், அல்லது புதிய பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

    • வன அதிகாரியிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
    • விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

     ஊட்டி:

    முதுமலை- ஸ்ரீமதுரை எல்லையோரம் ஏற்கனவே உள்ள அகழிகள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.இதனால் காட்டு யானைகள் ஊருக்குள் வருகிறது.

    எனவே அகழியை முறையாக தூர்வார வேண்டும். இதுகுறித்து புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

    இந்தநிலையில் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முதுமலை-ஸ்ரீமதுரை எல்லையோரம் உள்ள அகழியை தூர்வார வேண்டும் என ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் பொதுமக்கள் கூடலூர் வனச்சரகர் ராஜேந்திரனை சந்தித்து முறையிட்டனர்.

    தொடர்ந்து முதுமலை கார்குடி வனச்சரகர் விஜயனை சந்தித்து இதே கோரிக்கையை வைத்தனர். அதற்கு அவர் அரசு நிதி ஒதுக்கியவுடன் அகழியை தூர்வாரும் பணி நடைபெறும் என உறுதி அளித்தார்.

    அதுவரை காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு பொதுமக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்ல வேண்டாம். தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

    ×