என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் குவிந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்
ஒரே நாளில் ஊட்டி தாவரவியல் பூங்காவை 16 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்
- ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
- ஊட்டி மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். கோடை சீசனை முன்னிட்டு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
நேற்றுமுன்தினம் மற்றும் நேற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் தலையாகவே தெரிந்தது.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள பெரிய புல்வெளி மைதானம், கண்ணாடி மாளிகை, ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, இலை பூங்கா போன்ற இடங்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
மேலும் புல்வெளியில் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து ஓய்வெடுத்தனர். தொடர்ந்து பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்கள் முன்பு நின்று புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இதேபோல் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அங்கு மோட்டார் படகுகளில் சவாரி செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்து, படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மிதி படகு, துடுப்பு படகுகளில் ஏரியின் அழகை ரசித்த படி படகு சவாரி செய்தனர்.
தொட்டபெட்டா மலைசிகரம், பைக்காரா படகு இல்லம், ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது. ஊட்டி மலை ரெயிலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஊட்டி நகரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. லவ்டேல் சந்திப்பு, லோயர் பஜார், கமர்சியல் சாலை உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது.
தாவிரவியல் பூங்காவிற்கு 16,178 பேரும், சிம்ஸ் பூங்காவிற்கு 3431 பேர், ரோஜா பூங்காவிற்கு 7,393 பேரும், காட்ரேி பூங்காவிற்கு 1013 பேர், தேயிலை பூங்காவிற்கு 864 பேரும், மரவியல் பூங்காவிற்கு 230 பேரும், கல்லார் பூங்காவிற்கு 429 என மொத்தம் 29,538 பேர் கண்டுகளித்தனர்.






