என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை- ஊட்டி மார்க்கெட், போலீஸ் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது
    X

    ஊட்டியில் பெய்த பலத்த மழைக்கு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்திருப்பதை காணலாம்.

    2 மணி நேரம் கொட்டி தீர்த்த மழை- ஊட்டி மார்க்கெட், போலீஸ் நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்தது

    • சுமார் 2 மணி நேரம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.
    • தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், சாலையில் அதிகளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடப்பு மாத தொடக்கத்தில் இருந்தே தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

    நேற்று காலை முதல் மதியம் வரை வெயிலான காலநிலை நிலவிய நிலையில், மதியத்துக்கு பிறகு வானிலை மேகமூட்டமாக மாறியது.

    அதை தொடர்ந்து சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால், சாலையில் அதிகளவு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தன.

    ஆங்காங்கே தாழ்வான பகுதிகளிலும் மழைநீருடன், கழிவு நீரும் கலந்து சாலையில் தேங்கியது. பஸ் நிலையத்தில் இருந்து ஊட்டி படகு இல்லம் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ் மழை காரணமாக வெள்ளம் தேங்கியது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    மேலும் பாலத்தின் அருகே இருந்த போலீஸ் நிலையத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு பணியாற்றிய போலீசார் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி அருகே உள்ள கீழ் கோடப்பமந்து பகுதியிலும் மழை காரணமாக குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதந்தன. வீட்டில் தேங்கிய தண்ணீரை மக்கள் வாளிகள் மூலம் வெளியேற்றினர்.

    இதேபோல் ஊட்டி மத்திய பஸ் நிலைய பணிமனை வளாகம், ரெயில் நிலையம் சந்திப்பு, லவ்டேல் சந்திப்பு, மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது. மார்க்கெட்டில் தேங்கிய தண்ணீரால் வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வந்த மக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர்.

    Next Story
    ×