என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
    • மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 15 ஆயிரத்து 960 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.01க்கும், குறைந்தபட்சமாக 51.99 க்கும்,சராசரியாக ரூ.76.89 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 17ஆயிரத்து 263- க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 10 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 78.99 க்கும் குறைந்தபட்சமாக ரூ 51.48 க்கும், சராசரியாக ரூ 77.49 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    • திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.
    • இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.

    குமாரபாளையம்;

    திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மவுனிகா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம், 400 மீட்டரில் இரண்டாமிடம், 200 மீட்டரில் முதலிடம் வந்து, 13 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவியரை தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.சி. நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினர்.

    • மரத்தில் இருந்த விஷவண்டுகள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகர் உள்பட 12 பேரை கடித்துள்ளது.
    • சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (42).

    இவர் புதன் சந்தையில் கால்நடை மருந்து கடை வைத்துள்ளார். இவர் தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சேந்தமங்கலம் அடுத்த முத்துக்காப்பட்டி பெரியசாமி கோவிலில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த விருந்தில் கலந்துகொள்வதற்காக நேற்று சுதாகரின் உறவினர்கள், நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    மாலை கிடா வெட்டு விருந்து நடைபெற்றது. அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்த விஷவண்டுகள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகர் உள்பட 12 பேரை கடித்துள்ளது. இதனால் அவர்களுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் சுதாகர் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீட்டும் கிடா விருந்துக்கு திரும்பினார். இந்நிலையில் அவரை அதிகளவு விஷ வண்டுகள் கடித்ததாக தெரிகிறது.

    இதனால் உடலில் வேகமாக விஷம் பரவியதில் கிடா விருந்து பந்தலில் மீண்டும் சுதாகர் மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர் கதறி அழுதனர்.

    இதனிடையே மற்ற 11 பேரும் நாமக்கல், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிடா விருந்து நிகழ்ச்சியில் விஷவண்டு கடித்து மருந்து கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர்.
    • கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி போலீசார் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 30 வருடங்களாக பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.

    இந்நிலையில் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் திருவிழா நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர். இதனால் இருதரப்பினரையும் அழைத்து ஆர்.டி.ஓ.மற்றும் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பினரும் சமாதானம் அடையவில்லை.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி போலீசார் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை பட்டியலின மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பெரிய மாரியம்மனை தரிசிப்பதற்காக கோவிலுக்குள் தாம்பூல தட்டு மற்றும் நீதிமன்ற உத்தரவு நகலுடன் நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அவர்கள் அம்மனை வழிபட விடுங்கள் என கூறி கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவர்களிடம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது, அதனால் யாரையும் அனுமதிக்க முடியாது என கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜி மற்றும் ஆர்.டி.ஓ. சரவணன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • வாகன சேவையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
    • பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அரசு ரத்த மையங்களுக்கான ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனம் சேவை தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் வாகன சேவையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வாகனத்திற்குள் பிரதமர் மோடி இடம் பெற்ற திட்டம் குறித்த பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. வாகனத்திற்கு பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டாம் என்ற அடிப்படையில் கலெக்டர் உமா அதை அகற்ற சொன்னதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மருத்துவ கல்லூரி முதல்வர் டீன் சாந்தா அருள்மொழி, டாக்டர், ஊழியர்களிடம் அகற்றுமாறு கூறியுள்ளார். இதையடுத்து பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது. பிரதமர் உருவப்படத்துடன் கூடிய பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தியாகராஜன் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
    • நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விரக்தியில் இருந்த தியாகராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கவுண்டிபாளையம் அருகே காளியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன்( 44). லாரி டிரைவர்.

    இந்நிலையில் தியாகராஜன் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சரியாகவில்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விரக்தியில் இருந்த தியாகராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த அவரது மகன் தந்தை தூக்கு போட்டு இருப்பதை பார்த்து சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து தியாகராஜன் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தியாகராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் தியாகராஜனின் மனைவி ஜெயமணி( 39) நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக வெல்ல ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்ல ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய உண்மை யான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரை வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்ட கைகளுக்கு தீ வைப்பது, குளத்தில் விஷம் கலப்பது, மரங்கள் வெட்டி சாய்ப்பது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வந்தது.

    இதனிடையே இளம்பெண் படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் பேரில் வழக்கு நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் சுப்பிரமணி(42)என்பவருக்கு சொந்தமான டிராக்டருக்கு மர்மநபர்கள் தீ வைத்தனர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (70) என்பவரது தோட்டத்தில் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்கு செடிகள், வீரமணி(42) என்பவருக்கு சொந்தமான வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் மீண்டும் இந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் ஜேடர்பாளையம் பகுதிகளை சேர்ந்த 5 வாலிபர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 79.72 குவிண்டால் எடை கொண்ட 278-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.65.45-க்கும், சராசரி விலையாக ரூ.80.50-க்கும் என ரூ.5 லட்சத்து 56ஆயிரத்து 737-க்கு விற்பனையானது.

    • நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
    • இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியில் 80 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் உணவு வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மூதாட்டியை பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்து விட்டார். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

    • தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு, மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • நாமக்கல் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குநர், சித்ரா, முன்னிலை வகித்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு, மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் வட்டார தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குநர், சித்ரா, முன்னிலை வகித்தார். விவசாயிகள் ஆலோசனைக் குழுத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்து வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)., திட்டத்தின் செயல்பாடுகள் திட்டநோக்கம், திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு சென்றடையும் தொழில் நுட்பங்கள் குறித்தும். பயிற்சி, கண்டுணர்வு பயணம், செயல்விளக்கம், பண்ணைப்பள்ளி, போன்ற திட்டப்பணிகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. நாமக்கல் வட்டார வேளாண்மை அலுவலர் மோகன், கால்நடை உதவி மருத்துவர், வெள்ளைசாமி, பட்டு உதவி ஆய்வாளர் ஜெயலட்சுமி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் மலர்கொடி. ஆகியோர் பங்கேற்று துறை சார்ந்த மானியத்திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். மேலும் அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர் அட்மா திட்ட பணியின் முன்னேற்றம் குறித்தும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும், உழவன் செயலி செயல்பாடுகள், பயன்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.

    • பாலமுருகனுக்கு ஆவணிமாத கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள பாலமுருகனுக்கு ஆவணிமாத கிருத்திகையை முன்னிட்டு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல் நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவில், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசுவாமி கோவில், பரமத்தி அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர்கோவில்,பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோயிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சுவாமி கோவில் உள்ள ராஜா சுவாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகன், மற்றும் சுள்ளிப்பாளையம் அருகே உள்ள அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வான சமேத சுப்பிரமணியர் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் உள்ள முருகப்பெருமானுக்கு கிருத்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • கோப்பணம்பாளையம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • இந்த பயிற்சிக்கு கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையேற்று நடத்தினார்.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டாரம் கோப்பணம்பாளையம் கிராமத்தில் பாரம்பரிய வேளாண் சாகுபடி முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு கபிலர்மலை வேளாண்மை உதவி இயக்குநர் ராதாமணி தலைமையேற்று நடத்தினார். கோப்பணம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (விதைச்சான்று) சித்திரைச்செல்வி அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், அங்கக சான்று பெறுவதற்கான முறைகள், உழவர் தொகுப்பு உருவாக்குதல், இணைய தளம் மூலம் பதிவு செய்யும் முறைகள், ஆகியவற்றை குறித்து விளக்கினார். திருச்சி சிறுகமணி பூச்சியியல் துறை உதவிப்பேராசிரியர் ஷீபா ஜாஸ்மின் தென்னையில் ஏற்படும் நோய்கள், பூச்சிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகள், உயிரி உரத்தின் பயன்பாடுகள் மற்றும் இயற்கை இடுபொருட்கள் குறித்து விளக்கம் அளித்தார். கபிலர்மலை வேளாண் உதவி இயக்குநர் ராதாமணி அங்கக வேளாண்மை முறையில் பயிர் சாகுபடி செய்வதன் பயன்கள் பற்றி விரிவாக விவரித்தார். இதற்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் சக்திவேல் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் நிஷா ஆகியோர் செய்திருந்தனர். 

    ×