என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட 10 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மார்ச் 11-ந்தேதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அருகே உள்ள வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், குடிசைகள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது, குளத்தில் விஷம் கலப்பது போன்ற அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்களும் நடந்தது.

    இதையடுத்து இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    இதேபோல் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (55) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 3,200 பாக்கு மரங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு செடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(42) என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(70) என்பவரது தோட்டத்தில் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்கு செடிகளையும், வீரமணி(42) என்பவரது தோட்டத்தில் வாழை மரங்களையும் மர்மநபர்கள் வெட்டி சென்றனர்.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் ஏற்கனவே 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சவுந்தர்ராஜன் என்பவரது நிலத்தில் பாக்கு மரங்களை சேதப்படுத்திய வழக்கில் தனிப்படை போலீசார் ஜேடர்பாளையம், பாகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிவராஜ் (44), பாலசுப்ரமணி (50), பழனிச்சாமி என்கிற மணி (55), விஜய் (25), பூபதி (46), பிரகாஷ் (25), மெய்யழகன் (21), தனுஷ் (20) மற்றும் 18, 19 வயது சிறுவர்கள் ஆகிய 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 9 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.

    இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    • பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
    • அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் நன்செய் இடையாரில் உள்ள திருவேலீஸ்வரர் கோவில், பரமத்திவேலூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரில் உள்ள விஜயகிரி பழனி ஆண்டவர் கோவில்,ஜேடர்பாளையம் ஈஸ்வரன் கோவில், வடகரையாத்தூர் ஈஸ்வரன் கோவில், பாண்டமங்கலம் ஈஸ்வரன் கோவில்,மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர்,பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், வேலூர் எல்லையம்மன் மற்றும் வல்லப விநாயகர் கோயில் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா வெங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான விஷக்கதண்டுகள் கூடுகட்டி இருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷக்கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா வெங்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தென்னை மரத்தில் ஆயிரக்கணக்கான விஷக்கதண்டுகள் கூடுகட்டி இருந்தது. இந்நிலையில் அந்த வழியாக செல்பவர்களை விஷக்கதண்டுகள் தீண்டி அச்சுறுத்தி வந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினரிடம் புகார் மனு கொடுத்து விஷக் கதண்டுகளை அகற்றிதருமாறு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷக்கதண்டுகளை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்

    • நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள அம்பாயிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் தீபக் இவரது மகன் தினேஷ் முன்விரோதம் இருந்து வந்தது.
    • தீபக் மற்றும் அவரது நண்பரான பவித்திரத்தைச் சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் தினேஷை தாக்கியதாக தெரிகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள அம்பாயிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் தினேஷ் (33). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் தீபக் (21) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தினேஷ் அம்பாயிபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தீபக் மற்றும் அவரது நண்பரான பவித்திரத்தைச் சேர்ந்த அஜித் ஆகிய இருவரும் தினேஷை தாக்கியதாக தெரிகிறது.இதுகுறித்து எருமப்பட்டி போலீசில் தினேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீபக்கை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(42). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் ரெட்டிபட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆனந்தன் வந்த மோட்டார் சைக்கிள், பழனிவேல் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தடுமாறி விழுந்து காயமடைந்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன்(42). விவசாயியான இவர் சம்பவத்தன்று இரவு 8 மணியளவில் ரெட்டிபட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சம்பாமேடு அருகே வந்த போது ஈச்சவாரியை சேர்ந்த பழனிவேல் (50) அலங்காநத்தம் பிரிவு ரோட்டில் இருந்து சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆனந்தன் வந்த மோட்டார் சைக்கிள், பழனிவேல் வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தடுமாறி விழுந்து காயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். இதில் ஆனந்தன் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். பழனிவேல் லேசான காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் வேளாண் இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
    • 50 சதவீதம் மானியத்திலும் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    பரமத்தி வேலூர்Namakkal District News,

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் வேளாண் இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

    பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும், பயிர்களில் மகசூல் அதிகரிக்கவும் தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு இடுபொருட்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில், சிறுதானிய சாகுபடிக்கான நுண்ணூட்டங்கள் 50 சத மானியத்திலும், நிலக்கடலை பயிருக்கான நுண்ணூட்டங்கள் மற்றும் இதர பயிர்களுக்கான நுண்ணூட்டங்கள் 50 சதவீதம் மானியத்திலும் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

    இது தவிர கரும்பு, நெல் மற்றும் தென்னைக்கான நுண்ணூட்டங்களும் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. பயிர்களை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கும் இயற்கையான பயிர் பாதுகாப்பு மருந்துகளான சூடோமோனாஸ் மற்றும் விரிடி ஆகியவையும் 50 சத மானியத்தில் இருப்பில் உள்ளது.

    விவசாயிகளுக்கு உரச்செலவினை குறைத்து, மண்ணிலுள்ள சத்துக்களை பயிர்கள் எளிதில் எடுத்துக்கொள்ளும் வகையில் செயல்படக்கூடிய உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் ஆகியன 50 சதவீதம் மானியத்திலும், பயிர்களுக்கு தெளிப்பான்கள் மூலம் எளிதாக தெளிக்கும் வடிவிலான திரவ அசோஸ்பைரில்லம் ஆகியனவும் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்க இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நெல், பாசிப்பயறு, உளுந்து, சோளம், சாமை, நிலக்கடலை மற்றும் எள் விதைகளும் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    மேற்கண்ட வேளாண் இடுபொருட்கள் தேவைப்படும் விவசாயிகள் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையத்திற்கு நேரில் வந்து இடுபொருட்களை பெற்று பயனடையுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
    • மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 15 ஆயிரத்து 960 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.01க்கும், குறைந்தபட்சமாக 51.99 க்கும்,சராசரியாக ரூ.76.89 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 17ஆயிரத்து 263- க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 10 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 78.99 க்கும் குறைந்தபட்சமாக ரூ 51.48 க்கும், சராசரியாக ரூ 77.49 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    • திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது.
    • இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.

    குமாரபாளையம்;

    திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் வட்டார அளவிலான தடகள போட்டி நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 174 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர். 14 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் மவுனிகா என்ற மாணவி 600 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம், 400 மீட்டரில் இரண்டாமிடம், 200 மீட்டரில் முதலிடம் வந்து, 13 புள்ளிகள் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் வென்றார். சாதனை படைத்த மாணவியரை தலைமை ஆசிரியை கலைச்செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் எஸ்.எம்.சி. நிர்வாகிகள் வாழ்த்தி பாராட்டினர்.

    • மரத்தில் இருந்த விஷவண்டுகள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகர் உள்பட 12 பேரை கடித்துள்ளது.
    • சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்த மின்னாம்பள்ளியை சேர்ந்தவர் சுதாகர் (42).

    இவர் புதன் சந்தையில் கால்நடை மருந்து கடை வைத்துள்ளார். இவர் தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சேந்தமங்கலம் அடுத்த முத்துக்காப்பட்டி பெரியசாமி கோவிலில் கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த விருந்தில் கலந்துகொள்வதற்காக நேற்று சுதாகரின் உறவினர்கள், நண்பர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.

    மாலை கிடா வெட்டு விருந்து நடைபெற்றது. அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்த விஷவண்டுகள் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதாகர் உள்பட 12 பேரை கடித்துள்ளது. இதனால் அவர்களுக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் சுதாகர் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மீட்டும் கிடா விருந்துக்கு திரும்பினார். இந்நிலையில் அவரை அதிகளவு விஷ வண்டுகள் கடித்ததாக தெரிகிறது.

    இதனால் உடலில் வேகமாக விஷம் பரவியதில் கிடா விருந்து பந்தலில் மீண்டும் சுதாகர் மயங்கி விழுந்தார்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து உறவினர் கதறி அழுதனர்.

    இதனிடையே மற்ற 11 பேரும் நாமக்கல், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிடா விருந்து நிகழ்ச்சியில் விஷவண்டு கடித்து மருந்து கடைக்காரர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர்.
    • கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி போலீசார் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 30 வருடங்களாக பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருதரப்பினர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது.

    இந்நிலையில் ஒரு தரப்பினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் கோவிலில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் திருவிழா நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே அம்மனை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என கூறி ஒரு தரப்பினர் போஸ்டர் அடித்து ஒட்டி இருந்தனர். இதனால் இருதரப்பினரையும் அழைத்து ஆர்.டி.ஓ.மற்றும் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு தரப்பினரும் சமாதானம் அடையவில்லை.

    இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன் எச்சரிக்கையாக கடந்த 3 மாதத்திற்கும் மேலாக பேளுக்குறிச்சி போலீசார் பெரிய மாரியம்மன் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை பட்டியலின மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பெரிய மாரியம்மனை தரிசிப்பதற்காக கோவிலுக்குள் தாம்பூல தட்டு மற்றும் நீதிமன்ற உத்தரவு நகலுடன் நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் அவர்கள் அம்மனை வழிபட விடுங்கள் என கூறி கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் அவர்களிடம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது, அதனால் யாரையும் அனுமதிக்க முடியாது என கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜி மற்றும் ஆர்.டி.ஓ. சரவணன் உள்ளிட்டோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • வாகன சேவையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
    • பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அரசு ரத்த மையங்களுக்கான ரூ.40 லட்சம் மதிப்பில் புதிய நடமாடும் ரத்த சேகரிப்பு வாகனம் சேவை தொடக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் வாகன சேவையை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வாகனத்திற்குள் பிரதமர் மோடி இடம் பெற்ற திட்டம் குறித்த பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. வாகனத்திற்கு பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டாம் என்ற அடிப்படையில் கலெக்டர் உமா அதை அகற்ற சொன்னதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மருத்துவ கல்லூரி முதல்வர் டீன் சாந்தா அருள்மொழி, டாக்டர், ஊழியர்களிடம் அகற்றுமாறு கூறியுள்ளார். இதையடுத்து பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது. பிரதமர் உருவப்படத்துடன் கூடிய பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தியாகராஜன் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
    • நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விரக்தியில் இருந்த தியாகராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கவுண்டிபாளையம் அருகே காளியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன்( 44). லாரி டிரைவர்.

    இந்நிலையில் தியாகராஜன் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சரியாகவில்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விரக்தியில் இருந்த தியாகராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த அவரது மகன் தந்தை தூக்கு போட்டு இருப்பதை பார்த்து சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து தியாகராஜன் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தியாகராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் தியாகராஜனின் மனைவி ஜெயமணி( 39) நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    ×