search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் மட்டுமே விநாயகர்சிலைகளை கரைக்க வேண்டும்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் 4 இடங்களில் மட்டுமே விநாயகர்சிலைகளை கரைக்க வேண்டும்

    • கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார்.
    • சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:-

    விநாயகர் சிலை

    விநாயகர் சிலை வைப்பதற்கு சம்பந்தப்பட்ட சிலை அமைப்பாளர்கள் ஆர்.டி.ஓ.விடம் முன்கூட்டியே தடையில்லா சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரீஸ் போன்ற மாசு விளைவிக்கும் ரசாயணங்களை பயன்படுத்துதலை தவிர்க்க வேண்டும்.

    சிலை அமைப்பவர்கள் தற்காலிக கட்டுமானங்களை தீப்பற்றாத உபகரணங்கள் கொண்டு அமைத்திட வேண்டும். சிலை வழிபாடு மேற்கொள்வதற்கான பகுதிகளில் எவ்வித இடையூறும் இல்லாதவாறு போதிய அளவில் அகலமான பந்தல்கள் அமைத்திட வேண்டும். விநாயகர் சிலையின் உயரத்தினை 10 அடிக்கு மேல் உயர்த்தி அமைக்க கூடாது.

    மதம் தொடர்பான இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை அமைப்பதினை தவிர்க்க வேண்டும். ஒலிபெருக்கிகள் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் வழிபாட்டு நேரங்களில் மட்டும் பயன்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை தவிர்க்க வேண்டும்.

    விநாயகர் சிலைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அடையாளமிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய 4 இடங்களில் உள்ள காவிரி ஆற்று பகுதிகளில் படித்துறைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களில் வழிபாடுகள் முடிவுற்று சிலையினை அனுமதிக்கப்பட்ட இடங்களில் கரைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×