search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாக்கு மரங்கள் வெட்டப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சேலம் சிறையில் அடைப்பு
    X

    பாக்கு மரங்கள் வெட்டப்பட்ட வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 10 பேர் சேலம் சிறையில் அடைப்பு

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    • கைது செய்யப்பட்ட 10 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மார்ச் 11-ந்தேதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அருகே உள்ள வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 19 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், குடிசைகள், டிராக்டர்களுக்கு தீ வைப்பது, குளத்தில் விஷம் கலப்பது போன்ற அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்களும் நடந்தது.

    இதையடுத்து இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை மர்மநபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    இதேபோல் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (55) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 3,200 பாக்கு மரங்கள் மற்றும் மரவள்ளிக்கிழங்கு செடிகள் வெட்டிச் சாய்க்கப்பட்டன.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் வடக்கு தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(42) என்பவரது தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.

    மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி(70) என்பவரது தோட்டத்தில் பயிர் செய்திருந்த மரவள்ளி கிழங்கு செடிகளையும், வீரமணி(42) என்பவரது தோட்டத்தில் வாழை மரங்களையும் மர்மநபர்கள் வெட்டி சென்றனர்.

    இந்த சம்பவங்கள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் ஏற்கனவே 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் சவுந்தர்ராஜன் என்பவரது நிலத்தில் பாக்கு மரங்களை சேதப்படுத்திய வழக்கில் தனிப்படை போலீசார் ஜேடர்பாளையம், பாகம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிவராஜ் (44), பாலசுப்ரமணி (50), பழனிச்சாமி என்கிற மணி (55), விஜய் (25), பூபதி (46), பிரகாஷ் (25), மெய்யழகன் (21), தனுஷ் (20) மற்றும் 18, 19 வயது சிறுவர்கள் ஆகிய 10 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 9 கத்திகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர்.

    இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×