என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இணைந்து மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 நபர்களும் நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் 3 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், எம்.பி.,க்கள் செல்வராஜ், ராமலிங்கம் , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் , தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    திட்டக்குழு அமைப்பு ஊரக வளர்ச்சித் துறையின் படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இணைந்து மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்ட குழுவிற்கு நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 நபர்களும் நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் 3 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் துணை விதிகள் பிரிவு 241 படி மாவட்ட திட்ட குழுவிற்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் குழுவின் நிரந்தர சிறப்பு அழைப்பாளராக இருப்பார்கள்.

    மாவட்ட திட்டக் குழுவின் பணியானது, மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் மனித வளம் சம்பந்தமான அனைத்து விவரங்களைச் சேகரித்து தொகுத்து தகவல் தளம் அமைத்தல், வரைபடம் ஒன்றை தயாரித்து மாவட்டத்தின் வள ஆதார வாய்ப்புகளை மதிப்பிடுதல், ஊரக மற்றும் நகர்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சார்புத் துறைகள் தயாரித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொகுத்தல், மாநில அரசு வழங்கிய வழிகாட்டி நெறிமுறைகளை கருத்தில் கொண்டு மாவட்ட திட்டக்குழு விவாதித்த மாவட்ட முழுமைக்குமான வரைவு வளர்ச்சி திட்டம் ஒன்றை தயாரித்தல் மற்றும் ஊரக மற்றும் நகர் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையில் பணிகள் மேற்கொள்ளப்படும் இடம் சார்ந்த திட்டமிடுதல் நீர் மற்றும் ஏனைய இயற்கை வளங்களை பகிர்ந்து கொள்ளுதல் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உட்பட பொதுவான நலன் பற்றி விவாதித்து ஒருங்கிணைத்து அடிப்படை வசதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை பேணிபாதுகாக்க உதவுதல், மாவட்டத்தின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும் கூறுகளை கண்டறிதல் மற்றும் மாவட்டத்திற்கான குறிப்பிட்ட வளர்ச்சி உத்திகள், திட்டங்கள், செயல் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குதல், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகளை செயலாக்கத்தை கண்காணித்து ஆய்வு செய்தல் ஆகும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் (ஊரகப்பகுதி, நகர்பகுதி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.
    • நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    இறைவனின் தூதரான இப்ராஹிம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

    நாகூர் தர்காவில் நடைபெற்ற தொழுகைக்கு பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

    இதேபோல நாகை மாவட்டத்தில் நாகூர், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 66 பள்ளி வாசல்களிலும் இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    • சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் உலக அன்னாசி பழ தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவ -மாணவிகள் அண்ணாசி பழம் படம் வரைந்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப் பள்ளியில் உலக அன்னாசி பழ தினம் கொண்டாடப்பட்டது.

    பள்ளி ஆசிரியை வசந்தா தலைமை வகித்தார்.

    பள்ளி செயலாளர் ஆறுமுகம், பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்

    சந்திரசேகரன், சரண்யா, இலக்கியா, விஜயலட்சுமி, ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்பு மாணவ -மாணவிகள் அண்ணாசி பழம் படம் வரைந்தனர்.

    இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர் வசந்தா அன்னாசி பழங்களை பரிசாக வழங்கினார்.

    பின்னர் அன்னாசி பழத்தின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து எடுத்து கூறப்பட்டன.

    • சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.
    • விழாவில் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பினை போலீஸ் சூப்பிரண்ட் நேரில் ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே சிக்கலில் உள்ள சிங்காரவேலன் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு

    மகா கும்பாபிஷேகம் நடை பெற உள்ளது.

    இதை முன்னிட்டு கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடை பெற்றது வருகிறது.

    விழாவில் வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து நாகப்பட்டினம் மாவட்டபோலீஸ் சூப்பிரண்ட்ஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார்.

    போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வருகின்ற 5-ந்தேதி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்கள், தமிழ்நாடு ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் ஆகியோர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படயுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.

    • நாகையில் புகையிலை இல்லா வளாகம் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மாணவர்கள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் விஜயகுமார் உத்தரவின் பேரில், தலைஞாயிறு வட்டார மருத்துவ அலுவலர் தேவிஶ்ரீ வழிகாட்டுதலின் அடிப்படையில், தலைஞாயிறு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில் புகையிலை இல்லா வளாகம் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியைப் தலைஞாயிறு அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் வடுகநாதன் (பொறுப்பு) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இதில் கலந்து கொண்ட மாணவர்கள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தப்படி கோஷங்களை எழுப்பிச் சென்றனர்.

    பள்ளியிலிருந்து புறப்பட்ட பேரணி தலைஞாயிறின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பள்ளியில் நிறைவுற்றது.

    நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் இளையராஜா, நாகராஜன், வினோத், வீரன், விக்னேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் , மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி வளாகத்தில் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர். பின்பு புகையிலை தீமை குறித்து சுகாதார ஆய்வாளர் நாகை செல்வம் எடுத்து கூறினார்.

    • குடமுழுக்கன்று சிவன், முருகன், பெருமாள் ஆகியோருக்கு ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது.

    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழ் கடவுளான முருக பெருமானின் கோவில்களில் மிக முக்கியமானது. சிக்கல் நவநீதேஸ்வரர் கோவில் என்பது இதன் மூல பெயர்.

    அதில் சிங்காரவேலவர் தனி சன்னதி அமைந்துள்ளது. கோவிலில் உள்ள சிங்காரவேலவர் அன்னை வேல்நெடுங்கண்ணி அம்மனிடம் இருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராணம் கூறுகிறது.

    அம்மனிடம் இருந்து வேல் வாங்கியவுடன் சிங்காரவேலவர் மேனி எங்கும் வியர்வை சிந்தும் கண்கொள்ளா காட்சி இங்கே நிகழ்கிறது.

    இந்த அற்புத காட்சியை காண தமிழகத்திலிருந்து திரளான பக்தர்கள் கந்த சஷ்டி விழாவின்போது நடைபெறும் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முருகனை மனமுருகி தரிசித்து செல்வார்கள்.

    தேவலோகத்தில் உள்ள காமதேனு பசு, தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிட இத்தலத்தில் தவம் செய்து சாபம் நீங்கி அருள் பெற்றதாகவும், பின்னர் தனது பாலினால் திருக்குளம் அமைத்து வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

    வசிஷ்ட முனிவர் அந்த பாலில் வெண்ணையை எடுத்து சிவலிங்கம் ஆக்கி பூஜை செய்ததாகவும், பூஜை முடிந்து அதை எடுக்க முயன்ற போது பூமியிலேயே சிக்கி சிவலிங்கமாக உருபெற்றதால் இவ்வூருக்கு சிக்கல் என்றும், சாமிக்கு வெண்ணை பிரான் நவநீதேஸ்வரர் என்றும் பெயர் வரக் காரணமாகியது என்பது நம்பிக்கை ஆகும்.

    சிவன் மற்றும் பெருமாள் இருவரும் அருகருகே ஒரே ஆலயத்தில் அமைந்து அருள்பாலிப்பது இந்த கோவிலின் சிறப்பாகும். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

    நவநீதேஸ்வரர், சிங்காரவேலவர், வேல் நெடுங்கண்ணி அம்மன், கோலவாமன பெருமாள் உள்ளிட்ட தனி சன்னதி, ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம் ஆகியவை புனரமைக்கப்பட்டது. ராஜகோபுரம் கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு கோபுரங்கள், விமானங்கள், உள்பிரகார மண்டபங்கள், மகா திருமண்டபம் ஆகியவை திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு செய்ய தயார் நிலையில் உள்ளது.

    கோவிலின் வடபுறத்தில் யாகசாலை பூஜைகள் நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாளை (வியாழக்கிழமை) அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 5- ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு நடக்கிறது.

    குடமுழுக்கன்று சிவன், முருகன், பெருமாள் ஆகியோருக்கு ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கோவில் செயல் அலுவலர் முருகன் உள்பட இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    • ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
    • 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே படைப்பர்றறலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் மாவட்ட நிலையில் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி பரிசுத்தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி காலை 9.15 மணிக்கு நாகை சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியிலும், கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு நாகை அருகே பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் கல்லூரியிலும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.

    கவிதை, கட்டுரை (ம) பேச்சு போட்டிக்கு 3 பிரிவுகளில் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளன.

    நாகை மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு நாகப்பட்டினம் முதன்மை கல்வி அலுவலகம் வழியாகவும், கல்லூரிகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கல்லூரி மண்டல இணை இயக்குநர் வழியாகவும் சுற்றறிக்கை அனுப்ப பெற்றுள்ளது.

    தமிழ் ஆர்வமுள்ள மாணவர்கள் மேற்கூறியுள்ள போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.
    • தூய்மையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டுமென்று பள்ளி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை செய்து தர வேண்டுமென்று பள்ளி சார்பில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்பட்டது.

    அதை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி செயற்பொறியாளர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கோவில் வளாகத்தில் பக்தர்கள் விட்டு சென்ற குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
    • அங்கு கிடந்த குப்பைகளை தூய்மை கருவிகளை கொண்டு சுத்தம் செய்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் வனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பக்தர்கள் விட்டு சென்ற தண்ணீர் பாட்டில்கள், காகித தட்டுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

    இதனை கண்ட மூத்த குடிமக்கள் பேரவை உறுப்பினரும், சமூக ஆர்வலருமான ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சித்திரவேலு (வயது 61) என்பவர் அங்கு கிடந்த குப்பைகளை தூய்மை கருவிகளை கொண்டு சுத்தம் செய்தார்.

    தொடர்ந்து, அப்ப குதி பக்தர்களான ஆறுகா ட்டுத்துறை உமா, கோயிலடி சாரதம், சின்னச்சாலை சாரதம் சோமு, காமாட்சி, முருகன், சிவகாமி உள்பட பலருடன் சேர்ந்து குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்தனர்.

    பின்னர், இந்த தூய்மை பணி குறித்து அறிந்த நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, சுகாதார கண்காணிப்பாளர் ராஜா, முருகேசன் மற்றும் தூய்மை பணியாளர்கள் டிராக்டர், லாரியுடன் வந்து குவித்து வைத்துள்ள குப்பைகளை அகற்றினர்.

    கோவில் வளாகத்தை சுத்தம் செய்த ஆசிரியர் சித்திரவேலு மற்றும் குழுவினரை அப்பகுதி மக்களும், பக்தர்களும் வெகுவாய் பாராட்டினர்.

    • விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.
    • பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியில் முடிந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் புகையிலை இல்லா வளாகம் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கலாராணி தலைமை தாங்கினார்.

    மாவட்ட நலக்கல்வியாளர் மணவாளன்,புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூக பணியாளர் மதுமிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    இதில் கலந்துகொண்ட மாணவர்கள் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி சென்றனர்.

    பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக திட்டச்சேரி பஸ் நிலையம் வழியாக பள்ளியில் முடிந்தது.

    பேரணியில் சுகாதார ஆய்வாளர் பரமநாதன்,சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோசப் டென்னிசன், நற்குணம், உடற்கல்வி ஆசிரியர்கள் கண்ணன், செந்தில், ஓவிய ஆசிரியர் குமரவேல் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    முன்னதாக பள்ளி வளாகத்தில் புகையிலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    • 6-வது கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழையூர் கிராமத்தில் 400 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமை க்கப்பட்ட இந்த கோவிலில் கும்பாபிஷேகவிழா பந்தகால்முகூர்த்தம் பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை கணபதி ஹோமம், கோ பூஜையுன் பூர்ணாஹூதி தீபாராதனைகளுடன் ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைப்பெற்றது.

    6-வது கால யாக பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்கள் மல்லாரி இசை முழங்க கடம்புறப்பாடு நடைப்பெற்றது.

    சிவாச்சாரியர்கள் கடங்களை சுமந்துவந்து வேதமந்திரங்கள் முழங்க மூலஸ்தான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து காத்தாயி அம்மன் பச்சையம்மன், மாரியம்மன், வீரன் பெரியாச்சி, உள்ளிட்ட பரிவார தெய்வங்குளுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபராதனை நடைப்பெற்றது.

    • பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. வரை எந்தவித பொது சுகாதார கழிவறையும் இல்லை.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்கு திருமருகல் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது.

    இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,வட்டார வேளாண்மை அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், தீயணைப்பு நிலையம், தபால் நிலையம், வங்கி, கடைத்தெரு, இரத்தினகிரீஸ்வரர் கோவில் என நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் திருமருகல் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் சுற்றளவில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக எந்த வித பொது சுகாதார கழிவறையும் இல்லை.

    இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

    மேலும் சாலை மற்றும் பொது இடங்களில் சிறுநீர் உள்ளிட்ட இயற்கை உபாதைகளை கழிப்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்த ஏதுவாக பொது சுகாதார கழிவறை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×