search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம்
    X

    நாகையில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது.

    மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம்

    • நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இணைந்து மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
    • மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 நபர்களும் நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் 3 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், எம்.பி.,க்கள் செல்வராஜ், ராமலிங்கம் , தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் , தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    திட்டக்குழு அமைப்பு ஊரக வளர்ச்சித் துறையின் படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் இணைந்து மாவட்ட திட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்ட குழுவிற்கு நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 9 நபர்களும் நகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் 3 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    ஊராட்சிகள் சட்டம் 1994 மற்றும் துணை விதிகள் பிரிவு 241 படி மாவட்ட திட்ட குழுவிற்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், நகர மன்ற தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் ஆகியோர் குழுவின் நிரந்தர சிறப்பு அழைப்பாளராக இருப்பார்கள்.

    மாவட்ட திட்டக் குழுவின் பணியானது, மாவட்ட வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்காக மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் மனித வளம் சம்பந்தமான அனைத்து விவரங்களைச் சேகரித்து தொகுத்து தகவல் தளம் அமைத்தல், வரைபடம் ஒன்றை தயாரித்து மாவட்டத்தின் வள ஆதார வாய்ப்புகளை மதிப்பிடுதல், ஊரக மற்றும் நகர்பகுதி உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சார்புத் துறைகள் தயாரித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை தொகுத்தல், மாநில அரசு வழங்கிய வழிகாட்டி நெறிமுறைகளை கருத்தில் கொண்டு மாவட்ட திட்டக்குழு விவாதித்த மாவட்ட முழுமைக்குமான வரைவு வளர்ச்சி திட்டம் ஒன்றை தயாரித்தல் மற்றும் ஊரக மற்றும் நகர் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையில் பணிகள் மேற்கொள்ளப்படும் இடம் சார்ந்த திட்டமிடுதல் நீர் மற்றும் ஏனைய இயற்கை வளங்களை பகிர்ந்து கொள்ளுதல் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உட்பட பொதுவான நலன் பற்றி விவாதித்து ஒருங்கிணைத்து அடிப்படை வசதி, வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழலை பேணிபாதுகாக்க உதவுதல், மாவட்டத்தின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும் கூறுகளை கண்டறிதல் மற்றும் மாவட்டத்திற்கான குறிப்பிட்ட வளர்ச்சி உத்திகள், திட்டங்கள், செயல் திட்டங்கள் ஆகியவற்றை உருவாக்குதல், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்கள் உட்பட செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பணிகளை செயலாக்கத்தை கண்காணித்து ஆய்வு செய்தல் ஆகும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் (ஊரகப்பகுதி, நகர்பகுதி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×