என் மலர்
நாகப்பட்டினம்
- நாகையில் தூக்குப்போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
- சவரப்ராம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.
நாகப்பட்டினம்:
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் சுதார் (வயது 30). இவர் நாகை வெளிப்பாளையம் சிவன் குளம் மேல்கரையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து தச்சு வேலை செய்து வருகிறார்.
இவருடன் ராஜஸ்தான் மாநிலம் கீன்வசார் பகுதியை சேர்ந்த மாங்கிலால் என்பவரது மகன் சவரப்ராம் (20) உள்பட 11 பேர், வீட்டில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தனர். சம்பவத்தன்று சவரப்ராம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளார்.
தினேஷ் சுதார் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, சவரப்ராம் மின்விசிறியில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சவரப்ராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சவரப்ராம் உறவினர்கள் நாகைக்கு வந்து, உடலை விமான மூலம் ராஜஸ்தானுக்கு கொண்டு சென்றனர்.
நாகையில் வட மாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நான் யார் தெரியுமா? என்று கேட்டதற்கு சி.எம். என்று அந்த மாணவி கூறினாள்.
- ஸ்கூல் எப்போது முடியும் என்று கேட்டதற்கு 4 மணிக்கு முடியும் என்று பதில் அளித்தாள்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்குவளையில் கருணாநிதி படித்த பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறினார். அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.
அப்போது அருகே அமர்ந்திருந்த மாணவரிடம் உன் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் ஹரி என்று பதில் அளித்தான். கையில் வாட்ச் கட்டி இருக்கிறாய். டயம் பார்க்க தெரியுமா? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன் வாட்ச் தப்பா போகுது என்றான்.
இடது புறம் இருந்த மாணவியிடம் உன் பெயர் என்ன? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு அந்த மாணவி சுதர்சனா என்று கூறினாள். என்ன படிக்கிறாய் என்றதற்கு 3-ம் வகுப்பு என்றாள்.
தினமும் வீட்டில் காலையில் சாப்பிடுவாயா? பள்ளிக்கு வரும்போது சாப்பிடுவியா? என்று கேட்டதற்கு அந்த மாணவி ஆமாம் என்றார்.
உங்க அப்பா அம்மா பெயர் என்ன? என்ன செய்கிறார்கள்? தம்பி எங்கே என்றார். அதற்கு அவள் பதில் அளித்ததும் சரி சாப்பிடு என்றார்.
முதலில் சுவீட் சாப்பிடு என்றார். தினமும் பள்ளிக்கு வருவியா? என்றும் பேசினார்.
நான் யார் தெரியுமா? என்று கேட்டதற்கு சி.எம். என்று அந்த மாணவி கூறினாள். சி.எம். என்பது பதவி. என் பெயர் தெரியுமா? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவி, பதில் சொல்ல தயங்கினாள். உடனே மாணவனிடம் அதே கேள்வியை கேட்டார். அவனும் முதலில் சி.எம். என்று பதில் அளித்தான். அதன் பிறகு ஸ்டாலின் என்று கூறினான்.
பள்ளிக்கு தினமும் வந்து விடுவாயா? சாப்பாடு நன்றாக உள்ளதா? என்றும் கேட்டறிந்தார். உடனே அந்த மாணவன் மற்றொரு மாணவனிடம் 'ஐயா சாப்பிடுவதை பார்' என்று கூறினான்.
உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவியிடம், நீ எந்த ஊரில் இருக்கிறாய். இந்த ஊர் யாருடைய ஊர் தெரியுமா? எங்க அப்பா பெயர் தெரியுமா? கலைஞர் தெரியுமா? என்று கேட்டார்.
அந்த மாணவி யோசித்தபோது "கலைஞர்தான் என் அப்பா" என்றும் எடுத்துச் சொன்னார்.
ஸ்கூல் எப்போது முடியும் என்று கேட்டதற்கு 4 மணிக்கு முடியும் என்று பதில் அளித்தாள்.
மதியம் லஞ்ச் எங்கே சாப்பிடுவாய் என்றும் கேட்டு தெரிந்து கொண்டார். உடனே மாணவன் அணிந்திருந்த வாட்சை பார்த்து வாட்ச் ஓடவில்லை படம் பார்ப்பியா? என்றார். அதற்கு அவன் சிரித்துக் கொண்டே பேசினான். உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அணிந்திருந்த வாட்சை காண்பித்து இதில் என்ன டயம் என்று சொல் என்றார்.
தம்பி என் வாட்சை பார் டயம் என்ன என்று மீண்டும் கேட்டார். இப்போது சொல் டயம் பார்க்க தெரிகிறதா? என்றார். அதற்கு அந்த மாணவன் சொன்ன பதிலை கேட்டு சிரித்தார்.
- சத்துணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.
- படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து.
நாகை:
நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறினார். தனது அருகே அமர்ந்திருந்த மாணவர்களின் குடும்ப விவரங்களை கேட்டறிந்தார்.
பள்ளி மாணவர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
இதைத்தொடர்ந்து சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை நான் சாப்பிட்டு விட்டேன்.
திருக்குவளையில் உதித்த சூரியன் தமிழகம் முழுவதும் ஒளி வீசியது. கருணாநிதி படித்த தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்ட விரிவாக்கம் செய்வதில் பெருமை. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எனக்கு மன நிறைவை அளித்துள்ளது.
சத்துணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். குழந்தைகளுக்கு பேபி ரொட்டி திட்டத்தை முதன்முதலில் வழங்கியவர் கருணாநிதி.
அண்ணா பிறந்தநாளாக செப்.15ல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கினால் எனது மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும். பலரின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
காலை உணவு சாப்பிடாத பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்துவது கஷ்டம். குழந்தைகளின் வளர்ச்சியில்தான் அரசாங்கத்தின் வளர்ச்சி அடங்கி உள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டம் செயல்படுத்தி வருகிறோம். காலை உணவுத்திட்டத்தால் எதிர்கால தமிழ் சமுதாயம் ஏராளமான பயன்களை பெறும்.
மதிய உணவு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தியது தி.மு.க. அரசு. பெரியார், அண்ணா, கருணாநிதி வளர்த்த சமூக நீதி பாதையில் தி.மு.க. அரசு ஆட்சி நடத்தும்.
இது துரோணாச்சாரியார்களின் காலம் இல்லை... ஏகலைவன்களின் காலம்... படிப்பு மட்டும்தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து.
இவ்வாறு அவர் கூறினார்.
+2
- பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு பரிமாறினார்.
- காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
நாகை:
நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறினார். தனது அருகே அமர்ந்திருந்த மாணவர்களின் குடும்ப விவரங்களை கேட்டறிந்தார்.
பள்ளி மாணவர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்துள்ளனர்.
- காலை உணவு திட்டம் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது.
- திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
எனது கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என பெருமிதம் கொண்டார்.
இந்த காலை உணவு திட்டத்திற்கு மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதன்படி அவர் நாளை நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி படித்த ஊராட்சி ஒன்றிய பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
நாளை திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பதை முன்னிட்டு பள்ளியில் பொலிவுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
வர்ணம் பூசும் பணிகள், கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்டவைகள் அமைப்பது, நிகழ்ச்சி மேடை கட்டுமானப்பணிகள் உள்பட பல்வேறு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
இதேப்போல் கருணாநிதி வீட்டின் முன்பு விழா மேடை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளன.
இந்த பணிகளை தி.மு.க மாவட்ட செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் மற்றும் நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருக்குவளை விழாக்கோலம் பூண்டுள்ளது.
- வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.
- சுடுகாட்டுக்கு ெசல்லும் சாலையை தார்சாலையாக மாற்றி தரவேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா வாய்மேடு ஊராட்சி சேனாதிகாட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் சுடுகாடு உள்ளது. வாய்மேடு கடைத்தெருவில் இருந்து சுடுகாடு வரை உள்ள சாலை ஒற்றையடி பாதையாக உள்ளது.
இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், கிராம சபை கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேனாதிகாட்டில் உள்ளசுடுகாட்டுக்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சந்திராயன் 3விண்கலம் வெற்றி கரமாக ஏவப்பட்டது.
- மாணவர்கள் தேசியக் கொடியினை அசைத்து வெற்றியை கொண்டாடினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவி தொடக்கப்பள்ளியில் சந்திரனுக்கு சந்திராயன் 3விண்கலம் வெற்றி காரமாக ஏவப்பட்டது கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெற்றோர்களுக்கும் பள்ளியின் சார்பாகபட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது பள்ளியில் பயிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசியக் கொடியினை அசைத்து சந்திராயன்-3 வெற்றியை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர் வசந்தா செயலாளர் ஆறுமுகம்,பொறுப்பு தலைமையாசிரியர் ரவீந்திரன், பள்ளி ஆசிரியர்கள்மே லாண்மை குழுவினர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்கின்றனர்.
- பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் இருந்து பல்வேறு விசை படகுகள், பைபர் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று தங்களது வாழ்வை நடத்தி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீனவர்கள் மற்றொரு பெரும் பிரச்சினையை சந்தித்து வருகின்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது அங்கு பல படகுகளில் வரும் கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் அவர்கள் படகுகளில் வைத்துள்ள மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு சென்று விடுகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த ஆற்காடுதுறை, வெள்ளபள்ளம் மீனவர்கள் 15 பேர் நாகை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக மீனவர்கள் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மீன்வர்கள் வெள்ளையாற்றின் வழியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
- வெள்ளையாற்றின் நடுவே உள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்து செருதூர் மீனவ கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் சுமார் 1100 மீனவ குடும்பங்கள், வசித்து வருகின்றனர்.
மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள இப்பகுதி மீன்வர்கள் வெள்ளையாற்றின் வழியாக மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் வெள்ளையாற்றின் நடுவே உள்ள மணல் திட்டுகளால் கடலுக்கு செல்வதில் சிக்கல் நிலவி வருகிறது.
படகுகள் செல்ல முடியாதபடி மணல் திட்டுகள் தேங்கி உள்ளதோடு படகு ஒன்றுடன் ஒன்று மோதியும் படகின் அடிப்பகுதி மணலில், தரைத்தட்டி விபத்து ஏற்படுகிறது பல லட்ச ரூபாய் மதிப்பிலான படகு சேதம் அடைவதுடன் சில சமயங்களில் மீனவர்கள் உயிரிழக்க நேரிடுவதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே செருதூர் கிராம வெள்ளையாற்றின் குறுக்கே தேங்கி நிற்கும் மணல் திட்டுகளை நேரில் ஆய்வு செய்து வெள்ளையாற்றின் குறுக்கே தேங்கி நிற்கும் மணல் திட்டுகளை அகற்றியும் தூண்டில் வளைவு அமைத்து செருதூர் மற்றும் வேளாங்கண்ணி மீனவகிராம மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கோவில் குடமுழுக்கு விழா கடந்த 20-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
- இந்திராணி அம்மன், கவுமாரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையை அடுத்துள்ள கொத்தங்குடியில் உத்தண்டி அய்யனார், தூண்டிகாரன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் குடமுழுக்கு விழா கடந்த 20-ந் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து வாஸ்து சாந்தியுடன் முதல்கால யாக சாலை பூஜையுடன் பூர்ணாஹூதி நடைபெற்றது.
பின்னர் 2-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று மகா பூர்ணாஹூதி நடந்தது.
தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைப்பெற்றது.
பின்னர் சிவாச்சாரியர்கள் கடத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது.
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சித்தி விநாயகர், வாராகி அம்மன், இந்திராணி அம்மன், கவுமாரி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- வருடாந்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
- சுற்றுலா பயண திட்டங்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், வருடாந்திர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ந்தேதி முதல் செப்டம்பர் 8-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் 2 நாட்கள் வேளாங்கண்ணி சுற்றுலாவை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு–ஒகேனக்கல், மைசூரு-பெங்களுரு, குற்றாலம் மற்றும் மூணார் என மூன்று நாட்கள் செல்லும் சுற்றுலா பயண திட்டங்களும், சென்னை-மாமல்லபுரம், காஞ்சிபுரம்- மாமல்லபுரம், திருப்பதி, திருவண்ணாமலை, ஶ்ரீபுரம் தங்க கோவில், புதுச்சேரி, ஆடி அம்மன் சுற்றுலா என ஒரு நாள் சுற்றுலா பயண திட்டங்களும். யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பழமையான பண்பாட்டு சின்னங்களை பார்வையிடும் சுற்றுலா பயண திட்டம் என பல்வேறு வகையான சுற்றுலா பயண திட்டங்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த பயண திட்டங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இயங்கி வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் தங்குவதற்கான அறை வசதியும், உணவு வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த சுற்றுலா பயணத்திட்டத்தில் முதல் நாள் இரவு 10.00 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் இரவு 10.00 மணிக்கு பேருந்து சென்னை வந்தடைகிறது.
- மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று முன்தினம் 50-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 15-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்கொள்ளையர்கள் 5 பைபர் படகுகளில் அங்கு வந்தனர். பின்னர் அந்த கடல் கொள்ளையர்கள் ஆறுகாட்டுதுறை மீனவர்களின் 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு பைபர் படகை அடுத்தடுத்து வழிமறித்து படகில் அத்துமீறி ஏறினர். தொடர்ந்து கத்தி, கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தமிழக மீனவர்களை தாக்கி படகில் இருந்த மீன்பிடி வலைகள் , திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்தனர்.
இந்த கொடூர தாக்குதலில் மீனவர்கள் பாஸ்கர், அருள்ராஜ், சுப்பிரமணியன், வெற்றிவேல், செந்தில்அரசன், மருது, வினோத் உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நாகை மாவட்ட கலெக்டர் ஜானிவாம் டர்கீஸ் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் அந்தப் பதற்றம் தணிவதற்குள் இன்று அதிகாலை மீண்டும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி உள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதசுவாமி (வயது 45) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ராமராஜன், செல்வராஜ் ஆகியோர் கடந்த 21-ந் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 மீனவர்களையும் கொடூரமாக தாக்கினர். பின்னர் படகில் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி, பேட்டரி, செல்போன், 20 லிட்டர் டீசல், விலை உயர்ந்த மீன்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சமாகும். இன்று காலை மீனவர்கள் கரை திரும்பினர். இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களில் 3 முறை நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு முற்றுபுள்ளி வைத்து கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து தாக்குதலில் நிலை குலைந்து போன மீனவர்கள் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து அச்சமின்றி மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






