என் மலர்
நாகப்பட்டினம்
3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கக் கோரி நாகையில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய நிலையில் இன்று வரை தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காமல் தமிழக அரசு வஞ்சித்து வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து அலுவலர்கள் முன்பாக ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாநில மைய முடிவு அறிவித்துள்ளது.
அதன்படி நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அன்பழகன் நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் சௌந்தரராஜன் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சேரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 1.1.2019 முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்ட பொருளாளர் மேகநாதன் நன்றி கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், நாகூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது நாகூர் வெட்டாறு பாலம் அருகில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்யும்போது பாண்டி சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் பனங்குடி சன்னமங்கலம் ஓடை மேடு தெருவை சேர்ந்த ராஜு (வயது 30) அதே பகுதி செவ்வந்தி வீதி தெருவை சேர்ந்த ரஞ்சித் (22) என்பதும் தெரியவந்தது இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்
தொடர்ந்து வாழ ஒக்கூர் பகுதியில் நடத்திய சோதனையில் பாண்டி சாராயம் கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு தெரு ஆனந்தகுமார் (25) அதே பகுதி பெருக்கு தெருவைச் சேர்ந்த சுமன் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்து 110 லிட்டர் பாக்கெட் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம் 23 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்கு புள்ளிமான், வெளிமான், நரி, குரங்கு, குதிரை, உடும்பு, மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. 2,000-க்கும் மேற்பட்ட புள்ளிமான் மற்றும் வெளிமான்களும், 150 குதிரைகளும், 1000-க்கும் மேற்பட்ட குரங்குகளும், 100 நரிகளும், 500 காட்டுப்பன்றிகளும், 100-க்கும் மேற்பட்ட முயல் மற்றும் உடும்புகளும், பழந்தின்னி வவ்வால்களும் உள்ளன.
இந்த சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். சரணாலயத்தில் 56 குளங்களும், 17 இடங்களில் தொட்டிகளும் உள்ளன.
வழக்கமாக இந்த பகுதியில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 120 செ.மீ பெய்யும். ஆனால் சென்ற ஆண்டு மிகக்குறைந்த அளவே பெய்துள்ளது. தற்போது கடும் வறட்சியால் வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியிலுள்ள நண்டுபள்ளம், அருவங்கன்னி, சவுக்குபிளாட், இரட்டைவாய்க்கால், நல்லதண்ணீர்குளம், புதுக்குளம், ஓனான்குளம் உள்ளிட்ட 56-க்கும் மேற்பட்ட குளங்களிலும் தண்ணீர் இன்றி காணப்படுகிறது.
குளங்கள் வறண்டதால் வனத்துறையினர் டேங்கர் லாரி மூலம் நாள்தோறும் விலங்குகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்து வருகின்றனர். இருந்த போதிலும் தண்ணீர் பற்றாக்குறையால் விலங்குகள் தண்ணீரை தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன. இதுபோல வெளியேறும் மான் உள்ளிட்ட விலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் கடும் வெயில் சுட்டெரிப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளன. சரணாலயத்தில் வனத்துறையினர் கூடுதலாக தொட்டி அமைத்து வன விலங்குகள் குடிக்க தண்ணீர் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா நாலுவேதபதி, கோவில்பத்து வெள்ளம்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, மணக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பனை மற்றும் தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் இருந்தன. இவை அணைத்தும் கஜா புயலில் விழுந்து விட்டது.
இதனால் கோடையின் வெப்பத்தை தணிக்க பனைநுங்குகளையும் இளநீரையும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் வேளையில் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் விலைகொடுத்து பனை நுங்கையும், இளநீரும் வாங்கி சாப்பிடுகின்றனர்.
கஜா புயலின் கோரதாண்டவத்தால் பனை, தென்னை போன்ற மரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த கோடை வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள அதிக அளவில் இயற்கையாக இப்பகுதியில் கிடைக்கும் பனைநுங்கு மற்றும் இளநீரை விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது பனைநுங்கு மற்றும் இளநீர் போதிய அளவு கிடைக்கவில்லை. இதனால் வெளியூரிலிருந்து வியாபாரிகள் இளநீர் மற்றும் பனைநுங்கை கொண்டு வந்து இளநீர் ரூ.40க்கும், பனைநுங்கு ரூ.10-க்கு மூன்றும் என விற்பனை செய்கிறார்கள்.
இயற்கையாக இப்பகுதியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலவசமாக சாப்பிட்ட பனைநுங்கை தற்போது காசு கொடுத்து வாங்கி சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காசு கொடுத்தாலும் அதிக அளவில் இளநீர் மற்றும் நுங்கு கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே வேட்டங்குடி ஊராட்சி கேவரோடை கிராமத்தில் தபல ஏக்கரில் முந்திரி தோப்புகள் உள்ளன.இந்த முந்திரி காட்டில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியது. கடும் வெயிலால் தீ மளமளவென பரவியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சீர்காழி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று சுமார் 3மணிநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.இந்த தீவிபத்தில் சுமார் 7ஏக்கரில் முந்திரி தோட்டமும், 160பனை மரங்களும் எரிந்து சாம்பலாயின. புதுப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 48). இவர் ஊர்காவல்படை கமாண்டராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மணிமாறன், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் நேற்று நள்ளிரவில் அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் நகை திருட்டு போய் இருந்ததை கண்டு அவர் திடுக்கிட்டார். இதன் மதிப்பு ரூ.7 லட்சம் அகும்.
இதுபற்றி வைத்தீஸ்வரன் கோவிலில் போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து கொள்ளை கும்பலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
ஊர்காவல்படை கமாண்டர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை:
நாகைமாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வடமட்டம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 34). இவருக்கு சுருதி (23) என்ற மனைவியும் பாலசுதர்ஷன் (4) என்ற மகனும் சுதர்ஷினி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 21-ம் தேதி சுதாகர் தனது வீட்டிற்கு சென்றபோது பாலசுதர்ஷன் மட்டும் அழுதுகொண்டே இருந்துள்ளான். சுருதி மற்றும் சுதர்ஷினி ஆகிய இருவரையும் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுதாகர் பாலையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலையூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள தத்தங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 28). இவருக்கு அகல்யாதேவி (23) என்ற மனைவியும் ஹர்சன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். பிரவீன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த மாதம் 8-ம் தேதி மகன் ஹர்சனுடன் தாய் வீட்டிற்குச் செல்வதாகக்கூறி சென்ற அகல்யா தேவி மாயமாகி விட்டார். இதுபற்றி பிரவீனின் தாய் லலிதா பெரம்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது56).
இவருடைய மகன் பிரதீப் (29). ராமமூர்த்தி தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். பாராளுமன்ற தேர்தலையொட்டி தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கடந்த சில நாட்களாக ராமமூர்த்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று விடுமுறையில் வீட்டுக்கு வந்த அவர் மாலை 6 மணி அளவில் மகன் பிரதீப்புடன், தனது வீட்டின் பின் பகுதியில் உள்ள கொடியில் துணிகளை காய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது கொடிக்கு மேலே சென்ற மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக ஈரத்துணி ஒன்று உரசியது. இதன் காரணமாக ராமமூர்த்தியை மின்சாரம் தாக்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை பிரதீப் காப்பாற்ற முயன்றார். இதனால் பிரதீப்பையும் மின்சாரம் தாக்கியது. தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயங்களுடன் இருந்த அவருடைய மகன் பிரதீப்பை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடற்பகுதியில் இருந்து மிக அருகாமையில் இலங்கை அமைந்துள்ளது. இதனால் அடிக்கடி கடல்வழியாக தங்கம் மற்றும் கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கையில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதைதொடர்ந்து வேதாரண்யம் கடல்வழியாக பயங்கரவாதிகள் வரக்கூடும் என தகவல் வெளியானதால் அங்கு போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதராண்யம் கடலோர காவல்குழும டி.எஸ்.பி கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் ஆகியோருக்கு வேதாரண்யம் பகுதியில் இருந்து இலங்கைக்கு படகில் கஞ்சா கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் இன்று காலை வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறை உள்ளிட்ட மீனவ கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் கஞ்சாவுடன் பதுங்கியிருந்த வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டம் தம்பிக்கோட்டை சுந்தரம் காலனியை சேர்ந்த செல்லதுரை மகன் பாலமுருகன் (வயது 32) என்பது தெரியவந்தது.
அவர் இலங்கைக்கு படகில் கடத்தி செல்ல வைத்திருந்த 17 கஞ்சா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் 34 கிலோ கஞ்சா இருந்தது.
இதுதொடர்பாக பாலமுருகனை போலீசார் கைது செய்து அவருடன் இந்த கடத்தலில் ஈடுபட இருந்த நபர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அருண் (வயது 35) இவருக்கு திருமணமாகி அமராவதி என்ற மனைவியும் 4 வயதில் ஒரு ஆண்குழந்தையும் உள்ளனர். சம்பவத்தன்று அருணுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மனமுடைந்த அருண் தனது வீட்டை விட்டு வெளியே வந்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடல்கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருண் இறந்தார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மீன் பிடி தடை காலம் கடந்த 15-ந் தேதி தொடங்கிய நிலையில் நாகை மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பைபர் படகு மீனவர்கள் கரையோரங்களில் மீன்பிடித்து வந்தனர்.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான பானி புயல் எச்சரிக்கை காரணமாக பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாவட்ட மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் இன்றும் 8-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக நாகையில் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
புயல் காரணமாக பைபர் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தஞ்சை, கும்பகோணம் பகுதியில் உள்ள ஆறு, ஏரி குளங்கள் மற்றும் பண்ணைகளிலிருந்து பிடித்து வரப்படும் மீன்கள் நாகை அண்ணா சிலை அருகே உள்ள பாரதி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
கெண்டை, வளர்ப்பு இறால், உள்ளிட்ட மீன்கள் கும்பகோணத்தில் இருந்தும், கிழங்கா, உள்ளிட்ட மீன் வகைகள் கேரளாவில் இருந்தும் விற்பனைக்கு வருவதால், மீன் விலையும் அதிகரித்துள்ளது.
130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கெண்டைமீன் தற்போது 180 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட விரால் மீன் 650ரூபாய்க்கும், 180 ரூபாய்க்கு விற்ற இறால் 250-க்கும் விற்பனையாகிறது. இந்த மீன்களும் விரைவாக விற்று விடுவதால் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
விதவிதமான மீன்களை வாங்கிச் செல்லும் நாகை மீன் பிரியர்கள் தற்போது அதிக விலையில் குறைவான வகை மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுவதால் ஏமாற்றத்தில் உள்ளனர். மீன்களின் விலை உயர்வு காரணமாக எப்பொழுதும் கூட்ட நெரிசலாக இருக்கும் நாகை பாரதி மார்க்கெட் மக்கள் கூட்டமின்றி பொலிவிழந்து காணப்படுகிறது.
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறு காட்டுத் துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் இன்று 8-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் ஆயிரக்கணக்காண பைபர் படகுகள் பாதுகாப்பாக கடற்கரையோரமும் ஆற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறைந்த தூரம் சென்று மீன்பிடித்து வந்த பைபர் படகுகளும் புயல் காரணமாக மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் தங்கள் வீடுகளில் வலைகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.






