என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை (வயது45) கார் டிரைவர். இவரது மனைவி ஜெயக்கொடி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம்(40).இவரது மனைவி ராஜேஸ்வரி(36). இருதரப்பினருக்கும் இடையே குடிநீர் குழாய் அமைத்தது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், சாமிதுரையிடம் கோபித்துக் கொண்டு, தனது தங்கை வீட்டுக்க ஜெயக்கொடி சென்று விட்டார். இதனால் வீட்டில் 2 குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப் பட்ட சாமிதுரை, நேற்று தன்மனைவியை திட்டிக் கொண்டிருந்தார்.
இதைக் கேட்ட ராஜேஸ்வரி, தன்னைத் தான் சாமிதுரை திட்டுவதாக நினைத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, சாமிதுரை தன் வயலுக்குச் சென்றுவிட்டார். பின்னர், அவர் வயலில் இருந்து திரும்பிய போது சண்முகமும், ராஜேஸ்வரியும் அவரை வழிறித்து தாக்கினர். இதில், சண்முகம் கத்தியால் குத்தியதில் சாமிதுரை படுகாய மடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சாமிதுரை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பாகசாலை போலீசார் வழக்குபதிவு செய்து சண்முகம், ராஜேஸ்வரி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டச்சேரி அருகே நரிமணம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் 2012-13-ம் ஆண்டில் ரூ.21 ஆயிரத்து 900 மதிப்பீட்டில் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த நீர்த்தேக்க தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் சுல்லாங்கால், நாரயணமங்கலம், வடக்குத்தெரு, தெற்குதெரு, கீழத்தெரு, மேலத்தெரு, நடுத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் இந்த நீர்த்தேக்க தொட்டி எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உயிர்சேதம் ஏற்படுமோ? என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இந்த தொட்டியின் அருகே ஊராட்சி சேவை மையம், மாரியம்மன் கோவில் உள்ளிட்டவை அமைத்துள்ளதால் சிறுவர், சிறுமிகள் இதன் அருகே ஆபத்தை உணராமல் விளையாடி கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயிர்சேதம் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்துவிட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை காடம்பாடி சவேரியார் கோவில் தெருவில் உள்ள ராணி என்பவரின் குடிசை வீட்டில் பகுருதீன் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் பகுருதீன் நேற்று வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
நேற்று மதியம் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
அதில் வீட்டில் இருந்து கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சிகளான ஆணைக் காரசத்திரம், எடமணல், அரசூர், புத்தூர், எருக்கூர், ஆச்சாள்புரம், நல்லூர், புதுப்பட்டினம் உள்ளிட்ட 42 ஊராட்சிகளில் முதல் கட்டமாக கடந்த 27-ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
அப்போது எடமணல் ஊராட்சி வாக்குச்சாவடியில் ஸ்டாம்பு இல்லாததால் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஸ்டாம்பு மை வாங்க அலுவலர்கள் சென்றனர். இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்படுவதாக கூறி அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்களிலும் தி.மு.க.வினர் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த வாக்குச் சீட்டுகளை சூறையாடினர். இதனால் அங்கு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு ஸ்டாம்பு மை வந்தவுடன் அந்த வாக்குச்சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து சீர்காழி போலீசில் ஊரக வளர்ச்சிதுறை உதவி செயற்பொறியாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்ரீகணேஷ் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன், சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் ,அல்லிவிளாகம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார், நாங்கூர்திருமேனிகூடத்தை சேர்ந்த ஆனந்தம் உள்ளிட்ட 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
இவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அரசுபணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொதுசொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட சாமியார் குட்டையில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் மிதந்தது. இதுபற்றி கிடைத்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குட்டையில் மிதந்த முதியவர் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து, முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கல்லூரி மாணவிகள் 4 பேர் வாலிபர் ஒருவருடன் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் வாலிபர் ஒருவருடன் சீருடையில் 3 கல்லூரி மாணவிகள் மற்றும் சீருடை இல்லாமல் ஒரு பெண் மது அருந்தும் காட்சிகளும், மேலும் இரண்டு பெண்கள் வந்து செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இது சமூக வலைதளங்களில் வைரலாகியது.
அந்த மாணவிகள் மயிலாடுதுறையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் என்று தெரிய வந்ததையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி துறைத்தலைவர்கள் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் கல்லூரி நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட 4 மாணவிகளை நிரந்தரமாக நீக்கம் செய்வதாக முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மது அருந்திய வீடியோ வெளியாகியதாலும், கல்லூரி நிர்வாகம் நீக்கம் செய்ததாலும் மனமுடைந்த அதில் ஒரு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர்கள் மீதான நடவடிக்கை தளர்த்தப்பட்டு அந்த மாணவிகளுக்கு எச்சரிக்கை மட்டும் கல்லூரி நிர்வாகம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சிகளான ஆணைக்காரசத்திரம், எடமணல், அரசூர், புத்தூர், எருக்கூர், ஆச்சாள்புரம், நல்லூர், புதுப்பட்டினம் உள்ளிட்ட 42 ஊராட்சிகளில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் வாக்களிப்பதாற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொள்ளிடம் ஊராட்சிக்குட்பட்ட எடமணல் ஊராட்சியில் மட்டும் நீண்ட நேரமாக வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையத்திற்குள் வாக்களிக்க அனுப்பபடாமல் இருந்தனர்.
இதையடுத்து வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் தேர்தல் பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தேர்தல் அதிகாரி வாக்காளர்களுக்கு விரலில் வைக்கப்படும் அடையாள மை பாட்டில் இல்லை. மைபாட்டில் எடுத்துவரும்வரை காத்திருக்கும்படி கூறியுள்ளார்.
இதனை கேட்டு ஆத்திரம் அடைந்த வாக்காளர்கள் தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பின்னர் அருகே உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று அங்கு கூடுதலாக வைக்கப்பட்டிருந்த மை பாட்டிலை கொண்டுவந்தனர். அதனை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த சம்பவத்தால் எடமணல் ஊராட்சியில் 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு தொடங்கியது.
நாகப்பட்டினம்:
15 ஆண்டு ஆகியும் சுனாமி சோகம் மாறவில்லை. சுனாமி 15-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலை நாகை மாவட்டத்தில் ஆறாத வடுவை உண்டாக்கியது. இதில் 6 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்தனர். நீங்காத சோகத்தின் நினைவு நாள் 15-வது ஆண்டாக நேற்று நாகை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
சுனாமி எனும் ஆழிப்பேரலையால் நாகை மாவட்டத்தின் 64 மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடலையே கடவுளாக வழிபட்டு, நண்பனாக நினைத்து விளையாடி மகிழ்ந்த கடலோர மக்கள், அந்த கடலிலேயே தங்கள் உறவுகளை பறிகொடுத்த சோகத்தை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரும் வகையில் நாகை மாவட்ட கடலோர பகுதிகளில் தர்ப்பணம் செய்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடலோர பகுதிகளில் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் கிராமம் சார்பில் அங்குள்ள நினைவு சின்னத்தில் பொதுமக்கள் சார்பில் ஆத்மசாந்தி யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து கீச்சாங்குப்பம் பொதுமக்கள் நினைவு தூணில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவ- மாணவிகளின் மவுன ஊர்வலம் நடந்தது.
பின்னர் பள்ளியில், சுனாமியில் உயிரிழந்த மாணவ, மாணவிகளின் உருவப்படத்திற்கு மலர்தூவி குத்துவிளக்கு ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் டாடா நகர் சுனாமி குடியிருப்பில் இருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அக்கரைப்பேட்டை கடற்கரையில் நிறைவடைந்தது. பின்னர் அங்குள்ள நினைவு தூணுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிறிஸ்துமஸ் கொண்டாட வேளாங்கண்ணி வந்த சுற்றுலா பயணிகளில் ஏராளமானவர்கள் சுனாமியில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக ஆண்டுதோறும் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் இருந்து பேராலய அதிபர் பிராபகர் தலைமையில் பொதுமக்கள் மவுன ஊர்வலமாக சென்று நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
சுனாமி நினைவு நாளான நேற்று மீனவ பெண்கள் கடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாகவே இருந்தது. சுனாமி பேரலை தாக்கி 15 ஆண்டுகள் கடந்து இருந்தாலும், மீனவர்கள் தங்களது உறவினர்களை இழந்த தாக்கதில் இருந்து இன்னும் மீளவில்லை என்றே சொல்லலாம்.
நாகை மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் வகையிலும், உள்ளாட்சி தேர்தலையொட்டியும் போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் உத்தரவின்படி மதுவிலக்கு போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து சென்று மதுபானம் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாகை அருகே திட்டச்சேரியில் தலைமை காவலர் வரதராஜன், மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் வீரசக்திவேல், சுரேந்திரமோகன், பொன்னியின் செல்வன், அன்பழகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லாரியை வழிமறித்தனர். ஆனால் டிரைவர் லாரியை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதையடுத்து போலீசார் அந்த லாரியை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர்.
ஏனங்குடி கடை தெருவில் சென்றபோது லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து போலீசார் அந்த லாரியை சோதனை செய்ததில் 31 ஆயிரத்து 200 மதுபாட்டில்கள் மற்றும் 5616 லிட்டர் சாராய பாட்டில்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மதுபாட்டில்கள் அனைத்தும் புதுவை மாநிலம் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இந்த மதுபாட்டில்கள் அப்பகுதி வாக்காளர்களுக்கு வழங்க கடத்தி வரப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதைதொடர்ந்து லாரி மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நாகை மதுவிலக்கு அமலாக்க பிரிவு அலுவலகத்துக்கு போலீசார் கொண்டு வந்தனர். தப்பி ஓடிய டிரைவர் யார்? லாரி யாருடையது? என விசாரணை நடத்தி டிரைவரை தேடி வருகின்றனர்.
மேலும் மதுபாட்டில்கள் கடத்துவது பற்றி பொதுமக்களுக்கு தெரிந்தால் உடனடியாக போலீசாருக்கு நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் தெரிவித்துள்ளார்.
சீர்காழி:
சீர்காழி ஊராட்சியில் உள்ள 21 ஒன்றிய கவுன்சிலர்கள், 37 ஊராட்சி தலைவர்கள், 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், 309 ஊராட்சி உறுப்பினர்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக 192 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையொட்டி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரவீன் பி.நாயர் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அனைத்து வாக்குசாவடிகளுக்கும் கொண்டு செல்லப்படும் வாக்கு சீட்டுக்கள், மை ஆகியவை தயார் நிலையில் உள்ளதா எனவும் மற்ற ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
அப்போது சீர்காழி ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி,வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன்,மேலாளர் கலிராஜ், பொறியாளர்கள் முத்துக்குமார், தாரா ஆகியோர் உடனிருந்தனர்.
இதே போல் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மாவட்ட கலெக்டர் பிரவீன்.பி.நாயர் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.






