search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்தேக்க தொட்டி"

    • வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் குமார் தலைமையில் நீதிபதியால் அமைக்கப்பட்ட ஆணையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில் குமார், சங்கீதா உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கினர்.
    • மூன்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறியதோடு, சுமூகமாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு கடந்த 27-ந்தேதி அந்த கிராமத்தில் ஆய்வு செய்தார். அப்போது பட்டியலினத்தை சேர்ந்த மக்களை அங்குள்ள அய்யனார் கோவிலில் வழிபட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. பின்னர் அவர்களை கலெக்டர் கவிதா ராமு கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தார்.

    அப்போது அதனை விமர்சித்து சாமியாடியவாறு சிங்கம்மாள் என்ற பெண் அவதூறாக பேசினார். இதே போல் அங்குள்ள டீக்கடையில் இரட்டைக்குவளை முறை பயன்பாட்டில் இருந்தை பார்த்து அந்த கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை இருப்பதை கலெக்டர் உறுதி செய்தார்.

    இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கம்மாள் மற்றும் டீக்கடை உரிமையாளர் மூக்கையா ஆகியோர் சாதிய பாகுபாடு காட்டியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினர். அதனை நீதிபதி சத்தியா தள்ளுபடி செய்தார்.

    மேலும் சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ள 2 வக்கீல்களை கொண்ட ஆணையத்தை அமைத்து அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை இன்றைக்குள் (6-ந் தேதி) சமர்ப்பிக்க நீதிபரி உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் குமார் தலைமையில் நீதிபதியால் அமைக்கப்பட்ட ஆணையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில் குமார், சங்கீதா உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கினர்.

    அவர்கள் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் முதலில் விசாரணை மேற்கொண்டு அந்த கிராமத்தில் சாதிய பாகுபாடு உள்ளதா என்பதை கேட்டனர். பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு சென்று பிற இரண்டு சமூக மக்களையும் வரவழைத்து மூன்று சமூக மக்களையும் ஒரே நேரத்தில் வழிபாடு செய்ய வைத்தனர். கோவில் பூசாரி மூலம் பட்டியல் இன மக்களுக்கு விபூதியும் பூச வைத்தனர்.

    அப்போது மூன்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறியதோடு, சுமூகமாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர். இன்று இரண்டாவது நாளாக சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஆணையத்தை சேர்ந்த வக்கீல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு அதன் பின்பு நாளை மாலை அதன் அறிக்கையை புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை நீதிமன்ற நீதிபதியிடம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×