என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    உம்பன் புயல் எதிரொலியாக நாகையில் கடல் நீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘உம்பன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக இந்த புயல் மையம் கொண்டுள்ளது.

    புயல் உருவானதை தொடர்ந்து கடந்த 18-ந் தேதி நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்த நிலையில் உம்பன் புயல் எதிரொலியாக நாகையில் நேற்று காலை முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது.

    கடல் சீற்றம் படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருந்தது. மாலையில் கடல் கடுமையான சீற்றத்துடன் காட்சி அளித்தது. கடும் சீற்றம் காரணமாக நாகை ஆரிய நாட்டு தெரு கடற்கரை பகுதியில் கடல் நீர் வெளியேறி குளம்போல் தேங்கி நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    குறைந்த தூரம் சென்று மீன்பிடி தொழில் செய்யும் பைபர் படகு மீனவர்கள் மட்டுமே கடலுக்கு சென்று வருகிறார்கள். உம்பன் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் அவர்களது பைபர் படகுகளை கடற்கரை பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 
    நாகை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர்.
    நாகப்பட்டினம்: 

    கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் சில தளர்வுகளை வெளியிட்டு வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. முன்னதாக கடந்த 15-ந் தேதி அரசு வெளியிட்ட ஆணையில் 18-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று நாகை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றினர்.

    ஏ,பி என்ற இரு பிரிவுகளாக சுழற்சி முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஊழியர்கள் பணியாற்றினர். நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிந்தபடி பணியாற்றினர்.
    நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கு மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதையடுத்து கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை ஐகோர்ட்டு உத்தரவினால் கடை திறக்கப்பட்ட மறுநாளான 8-ந் தேதியே மூடப்பட்டது.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் டாஸ்மாக் கடைகள் மீண்டும் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. காலை முதலே படுஜோராக மது விற்பனை நடைபெற்றது. மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    நாகை மாவட்டம் முழுவதும் செயல்பட்ட 99 டாஸ்மாக் கடைகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4 கோடியே 5 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மதுபானம் விற்பனை நடந்தது. தொடர்ந்து நேற்றும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

    பெரும்பாலான கடைகளில் குறைந்த விலை கொண்ட மதுபாட்டில்கள் அனைத்தும் விற்பனையானது. இதனால் அதிக விலை கொண்ட மதுபாட்டில்களே இருப்பு இருந்ததால் அதனை வேறு வழியில்லாமல் மதுப்பிரியர்கள் வாங்கி சென்றனர். 
    தலைஞாயிறு கடைத்தெரு பகுதிகளில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபாரதம் விதிக்கப்பட்டது.
    வாய்மேடு:

    தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள மளிகை கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் முத்துக்கண்ணு ஆய்வு செய்தார்.

    அப்போது தலைஞாயிறு கடைத்தெரு பகுதிகளில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபாரதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது எழுத்தர் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    சீர்காழி அருகே மகனை தாக்கியவர்களை தட்டிகேட்ட தந்தையை குத்தி கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழதேனூர் காலனி தெருவை சேர்ந்தவர் ராஜூ (வயது 30). இவர் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (32) என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார்.

    அப்போது அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த ராஜூவின் மைத்துனர் கலையரசன் ஆத்திரம் அடைந்து ஸ்ரீராமை தாக்கினாராம். தடுக்க வந்த அவரின் நண்பர் அலெக்சையும் தாக்கி உள்ளார்.

    இது குறித்து நேற்று மாலை சீர்காழி காவல் நிலையத்தில் அலெக்ஸ் புகார் அளித்தார். இந்நிலையில் அலெக்ஸ் தாக்கபட்டது குறித்து தகவல் அறிந்த அவரது தந்தை ஜீவானந்தம் (45) நேரில் சென்று ராஜூ தரப்பை தட்டிக்கேட்டார்.

    ஆத்திரம் அடைந்த ராஜூ, ராஜேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் ஜீவானந்தத்தை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்த ஜீவானந்தத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜீவானந்தம் இறந்தார்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜூவை கைது செய்தனர். தலைமறைவாகிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வேதாரண்யம் அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல் விவசாயி. இவரது மகன் பிரபு (வயது 24). கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டவர் மனமுடைந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். அவரை பெற்றோர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திரவேல் விவசாயி. இவரது மகன் பிரபு (வயது 24). கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்டவர் மனமுடைந்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார். அவரை பெற்றோர் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் செல்வராசு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் நாகை கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர்.
    நாகப்பட்டினம்:

    முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் காளிமுத்து, நாகை நகர செயலாளர் வீரமணி ஆகியோர் தலைமையில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாகை கலெக்டர் அலுவலகம் வந்தனர். சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் பிரவீன்நாயரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைபிடித்து வருகிறோம். இதனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக நாகை மாவட்டத்தில் உள்ள முடிதிருத்தும் கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது. இந்த தொழிலை நம்பியுள்ள எங்களின் வாழ்வாதாரம் முடங்கி போய் உள்ளது.

    கடைகளுக்கு வாடகை கொடுக்க வேண்டும். குடியிருக்கும் வீடுகளுக்கு வாடகை கொடுக்க வேண்டும். இதுவரை எந்த ஒரு நிவாரணமும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறோம். எனவே உரிய விதிமுறைகளுடன் முடிதிருத்தும் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கொரோனா ஊரடங்கு காரணமாக நாகையில் 50 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நாகை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட யாகூசைன் பள்ளி தெரு, நூல் கடைத்தெரு, பண்டகசாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனால் கடைவீதியில் உள்ள எல்லா கடைகளும் அடைக்கப்பட்டன.

    இந்தநிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 44 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையொட்டி நேற்றுமுன்தினம் இரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து கடைவீதியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று திறக்கப்பட்டது. கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் அதிகமானது. கடந்த 50 நாட்களுக்கு பின்னர் நாகை கடைத்தெரு நேற்று திறக்கப்பட்டதால் நாகை பகுதி மக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    குத்தாலம்: 

    மயிலாடுதுறை பகுதிகளில் கத்திரி வெயிலின் தாக்கம் வாட்டி வதைத்து வந்தது. இந்தநிலையில் நேற்று மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், மங்கைநல்லூர், தரங்கம்பாடி, பொறையாறு, சங்கரன்பந்தல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை 10.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை 11 மணி வரை நீடித்தது. பின்னர் தொடர்ந்து 2 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் மயிலாடுதுறை நகரில் ரெயில் நிலையம், பஸ் நிலையம், முக்கிய கடை வீதிகளில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து, இதமான சூழல் நிலவியுள்ளது. இந்த மழை குறுவை சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

    இதேபோல் செம்பனார்கோவில், மேலப்பாதி, பரசலூர், கீழையூர், கிடாரங்கொண்டான், திருச்சம்பள்ளி, முடிகண்டநல்லூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, பூந்தாழை, தலைச்சங்காடு, கருவாழக்கரை, மேலையூர், கொண்டத்தூர், புதுப்பேட்டை, கஞ்சாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை 9.30 மணிக்கு குளிர்ந்த காற்று வீசியது. அப்போது வானம் கருமேகமூட்டத் துடன் காணப்பட்டது. இதையடுத்து 9.45 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை 12.15 மணி வரை நீடித்தது. இதனால் மழை நீர் சாலைகளில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

    மா, பலா, வாழை, தென்னை, மரவள்ளிக்கிழங்கு, பருத்தி, கம்பு, சோளம், எள், வெண்டை, கொத்தவரை, புடலங்காய், பீர்க்கன்காய் மற்றும் கோடை கால சாகுபடியான நெல் பயிர்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர். மழை பெய்தபோது பலத்த காற்று வீசியதால் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

    திருக்கடையூர் சுற்றியுள்ள பகுதிகளான டி.மணல்மேடு, பிள்ளைபெருமாநல்லூர், கிள்ளியூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று காலை மழை பெய்தது. இந்த மழையால் அக்னிநட்சத்திர வெயிலின் தாக்கம் தணிந்து, இதமான சூழல் நிலவியது.

    இதேபோல் குத்தாலம் தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலையூர், பெரம்பூர், மங்கைநல்லூர், கோமல், எஸ்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரத்தினால் கடுமையான வெயில் வாட்டி வதக்கியது.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில், தற்போது பல இடங்களில் மழை பெய்ததால் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வேதாரண்யம் அருகே கன்னிவலை வைத்து முயல் பிடிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் அகஸ்தியன்பள்ளியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அகஸ்தியன்பள்ளியிலிருந்து உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபி செல்லும் சாலையில் அடர்ந்த புதர் பகுதியில் கன்னி வலை வைத்து முயல்கள் பிடிக்க முயற்சி செய்த அகஸ்தியன் பள்ளியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 43), ராசன்(20), கலைச்செல்வம் (20) ஆகிய மூன்று பேரையும் பிடித்து அவர்கள் முயல் பிடிக்க வைத்திருந்த கன்னி வலையையும் கைப்பற்றி அவர்களை கைது செய்து மாவட்ட வன உயிரின காப்பாளர் கலாநிதி அறிவுரையின் படி 3 பேருக்கும் தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    சீர்காழி வட்டம் கொள்ளிடம் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நாகை கூடுதல் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து வாகனங்களில் வருவோர்களை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி அவர்களை உரிய இடங்களில் தனிமைப்படுத்தும் பணியில் மருத்துவக்குழுவினர், வருவாய்துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் வருவோர்களை மடக்கி அவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை கொள்ளிடம் அருகே உள்ள சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்து பரிசோதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர்களின் விபரங்களையும் பார்வையிட்டார்.

    சீர்காழி வட்டாசியர் சாந்தி, ஒன்றிய ஆணையர் இளங்கோவன், பி.டி.ஓ ஜான்சன், ஒன்றிய பொறியாளர் உமாமகேஸ்வரி, பணி மேற்பார்வையாளர் திருச்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
    ×