என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    குத்தாலம் அருகே ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    குத்தாலம்:

    தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் இருந்து காரைக்கால் நோக்கி டிராக்டரில் செங்கல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனத்தை காரைக்கால் சொரக்குடி வடக்குத்தெரு செல்வராஜ் மகன் கோவிந்தராஜ் (வயது 48) என்பவர் ஓட்டி வந்துள்ளார். அவருடன் கல்யாணசுந்தரம், விக்னேஷ் மற்றும் அன்பரசன் ஆகியோர் சென்றுள்ளனர்.

    நச்சினார்குடி என்ற இடத்தில் சென்றபோது நிலைதடுமாறி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீரசோழன் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் டிப்பர் மேல் பயணம் செய்த அன்பரசனுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனே அவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதைத்தொடர்ந்து, அவர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யத்தில் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் பாப்புரெட்டி குத்தகையைச் சேர்ந்தவர் வைரப்பன் மகன் அண்ணாத்துரை (வயது 50). இவரது வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தியதில் உரிமம் இல்லாத துப்பாக்கி ஒன்றை பறிமுதல் செய்தனர்.

    வாய்மேடு காவல் நிலையத்தில் துப்பாக்கி உரிமம் பதிவேட்டை சோதனை செய்ததில் இவர் வைத்திருந்த எஸ்.பி.எம்.எல். உரிமம் யாருக்கும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் அண்ணாத்துரையை காவல்நிலையத்தில் வைத்து துப்பாக்கி எப்படி கிடைத்தது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    சீர்காழிக்கு சென்னையில் இருந்து திரும்பிய கேமராமேனுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி, இரணியன் நகர் தாடாளன் வடக்கு வீதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் சென்னையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் கேமரா மேனாக பணியாற்றி வந்துள்ளார்.

    இவர் கடந்த 25ம் தேதி ஊர் திரும்பிய போது சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டுள்ளார். அதன் முடிவு நேற்று இரவு தெரியவந்தது. அதில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் மயிலாடுதுறையில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து அவர் வசித்த பகுதியில் நகராட்சி ஊழியர்கள் சுகாதாரப்பணிகளை மேற்கொண்டுள்ளதுடன், அப்பகுதியில் வசிப்பவர்கள் வெளியே வராதபடி தடுப்புகள் அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீண்டும் சீர்காழி மக்களிடையே கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.
    நாகை மாவட்டத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கைவிட வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கைவிட வலியுறுத்தி நாகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு நாகை நகர தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரநாட்டார், மாவட்ட பொதுச் செயலாளர் ராமலிங்கம், நாகூர் நகர தலைவர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் புதிய சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நெசவாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதேபோல் நாகூர் மின்சார வாரியம் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் நவ்சாத் தலைமை தாங்கினார். இதில் மாநில விவசாய பிரிவு செயற்குழு உறுப்பினர் நிக்கோலஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் காங்கிரஸ் கட்சி சார்பில் கீழ்வேளூரில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி கீழ்வேளூர் தாலுகா அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், மின்சார வாரியம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜ், ராமதாஸ், கல்யாணம், அமிர்தராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் கனிவண்ணன் தலைமை தாங்கினார். சீர்காழி காங்கிரஸ் கட்சி நகர தலைவர் லட்சுமணன், முன்னாள் வட்டார தலைவர் அறிவுடைநம்பி, எஸ்.சி.எஸ்.டி. பிரிவு நகர தலைவர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி தலைவர் சரவணன் வரவேற்றார்.

    மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜகுமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சரத்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் மூங்கில் ராமலிங்கம், நகர தலைவர் ராமானுஜம், நகர செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றிய வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கொள்ளிடம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றியக்குழு துணை தலைவர் பானுசேகர், காங்கிரஸ் மேற்கு வட்டார தலைவர் ஞானசம்பந்தம், மாநில பொதுக்குழு உறுப்பினர் படேல், நகர தலைவர் பிரகாசம், மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணையன் ஆகியோர் உள்பட 15 பேர் மீது கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர்.
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 14 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் தனது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் தெருவில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.கேக் வெட்டும் போது அங்கு கூடியிருந்தவர்கள் சத்தம் போட்டுள்ளனர். இதை அதே தெருவை சேர்ந்த சிவராஜ் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார்.

    இதில் ஆத்திரமடைந்த இருதரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் ஏற்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து இரு தரப்பைச் சேர்ந்த 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து 14 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் 14 பேரையும் நீதிபதி தரணிதரன் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்
    நாகை அருகே சமையல் செய்த பெண் தீ விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நக்கம்பாடி பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28). விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று புவனேஸ்வரி வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்த போது புடவையில் தீப்பற்றி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து பாலையூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வேலுதேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சீர்காழியில் ஓசியில சிக்கன் பிரியாணி தரமறுத்த கடை உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் கருணாகரன்(வயது 40). இவர் அசைவ ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு சென்ற விளந்திட சமுத்திரம் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் கட்ட ராஜா என்கிற பூரணச்சந்திரன் (25) ஓசியில் சிக்கன் பிரியாணி கேட்டாராம்.

    அதற்கு கருணாகரன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கட்ட ராஜா, கருணாகரனை டியூப் லைட்டால் தாக்கி, கடையில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இச்சம்பவம் வணிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கருணாகரன் அளித்த புகாரின்பேரில் சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து கட்டை ராஜாவை கைது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    கீழ்வேளூர் அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கல்:

    கீழ்வேளூர் அருகே கூத்தூர் வண்ணான் குளத்தை சேர்ந்தவர் சக்திவேல்(வயது40). சம்பவத்தன்று, இவர் அதே ஊரை சேர்ந்த திருஞானம் என்பவர் வீட்டில் உள்ள புளியமரத்தில் ஏறினார். அப்போது திடீரென மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் படுகாயமடைந்த அவரை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழியில் போலீஸ் நிலையம் முன்பு டிக்டாக் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்த காவல் நண்பர்கள் குழுவில் பணியாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியை சேர்ந்தவர் கமலகண்ணன் (வயது 30). எலக்ட்ரீசியன். நீண்ட காலமாக டிக்டாக் செயலியில் பல்வேறு வீடியோ பதிவுகளை பதிவேற்றியுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக காவல்துறையினருக்கு உதவியாக அமைக்கப்பட்ட பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் தேர்வாகி சீர்காழி போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு உதவி செய்து வந்தார்.

    இந்நிலையில் போலீசாருக்கு தெரியாமல் காவல் நிலையம் முன்பும், காவலர்களுடனும் இருக்கும் வீடியோக்களை சில திரைப்பட வசனங்களுடன் இணைத்து டிக்டாக்கில் பதிவேற்றியுள்ளார். இதனை அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் சீர்காழி போலீசார், இளைஞர் கமலகண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி அருகே விவசாயியிடம் 5 பவுன் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சீர்காழி:

    சீர்காழி அருகே தொழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 70). விவசாயி. சம்பவத்தன்று பிச்சைமுத்து, அந்த பகுதியில் தனக்கு சொந்தமான வயலில் உள்ள பம்புசெட் அருகே தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு தண்ணீர் குடிப்பதுபோல் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென பிச்சைமுத்துவை கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக தொழுதூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் முத்தழகன் (24), குத்தாலம் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் வாசுதேவன் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வசித்து வந்த கிராமத்தை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருக்கு ஏற்கனவே சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மார்ச் 23-ம் தேதி சென்னையிலிருந்து சொந்த ஊரான வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்திற்கு வந்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் சுகாதாரத்துறையினர் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையொட்டி எந்த இடத்தில் அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து அவர் வசித்து வந்த கிராமத்தை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி உள்ளனர்.

    சீர்காழியில் 10,800 பேருக்கு நிவாரண உதவிகளை பாரதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    சீர்காழி:

    நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்த நிலையில் சீர்காழி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாரதி எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள 800 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ.1,000 மற்றும் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதேபோல் நாடக கலைஞர்கள், இசை கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள் உள்பட 10 ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் சீர்காழியில் உள்ள அம்மா உணவகத்தில் ஏழை-எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் வகையில் ரூ.1½ லட்சத்துக்கான காசோலையை நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வியிடம் வழங்கினார்.

    அப்போது நகராட்சி பொறியாளர் வசந்தன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஜெயராஜமாணிக்கம், நற்குணன், சுந்தரராஜன், நகர செயலாளர் பக்கிரிசாமி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூர் செயலாளர் போகர்ரவி, முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் செல்லையன், சீர்காழி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஏ.வி.மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 
    ×