என் மலர்
நாகப்பட்டினம்
வேளாங்கண்ணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே 16 வயது சிறுமியை காணவில்லை என அந்த சிறுமியின் தந்தை கடந்த 5-ந்தேதி வேளாங்கண்ணி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நாகை பஸ் நிறுத்தத்தில் சிறுமியுடன், 17 வயது சிறுவன் ஒருவன் பேசி கொண்டு இருப்பதை வேளாங்கண்ணி போலீசார் பார்த்தனர்.
பின்னர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுவனும், சிறுமியும் பழகி வந்ததும், சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறையில் வாலிபரை கத்தியால் குத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழுந்தூர் தட்டாரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). திருவிழந்தூர் ஆழ்வார்குள தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (25). இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். நேற்றுமுன்தினம் விக்னேஷ், மணிகண்டனிடம் ஒரு மணிநேரம் மோட்டார்சைக்கிளை தருமாறு கேட்டுள்ளார். மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளை தர மறுத்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை அவர் விளையாட்டாக உதைத்து விட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து விக்னேசை செல்போனில் அழைத்து உள்ளார். வீட்டில் இருந்த விக்னேஷ் திருவிழந்தூர் மெயின் ரோட்டிற்கு வந்துள்ளார். அப்போது மணிகண்டன் தான் வைத்திருந்த கத்தியால் விக்னேசை குத்தினார். மேலும் மணிகண்டனின் நண்பர்களும், விக்னேசை தாக்கினர்.
இதில் காயமடைந்த அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மணிகண்டன், திருவிழந்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த மணிபாரதி (19), சேந்தங்குடி ராசி நகரை சேர்ந்த ரூபன் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக பல்லவராயன் பேட்டை மெயின் ரோட்டை சேர்ந்த அபாயம் என்கிற சுதாகர், அதே பகுதியை சேர்ந்த வீராசாமி மகன் மற்றொரு விக்னேஷ், அம்பேத்கர் நகரை சேர்ந்த சூர்யா ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வேளாங்கண்ணி அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே கிராமத்துமேடு ஈ.வெ.ரா. நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது30). இவர் பரவையில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், வடக்கு பொய்கை நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த மகாகுமார் (29) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இது குறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மகாகுமார், முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்று, நீ கொடுத்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். அவ்வாறு வாபஸ் பெறவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டச்சேரியில் விவசாயியிடம் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமம் கீழத்தெரு சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 52). விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது விவசாய பணிகளை மேற்கொள்ள திட்டச்சேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 3 பவுன் நகையை அடமானம் வைத்தார். அதற்காக வங்கியில் இருந்து ரூ.50 ஆயிரத்தை பெற்று ஒரு பையில் தனது சைக்கிளின் கூடையில் வைத்தார்.
இதைபார்த்த மர்ம நபர்கள் ராதாகிருஷ்ணனை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் வந்தனர். ராதாகிருஷ்ணன் திட்டச்சேரியில் உள்ள ஒரு பழக்கடையில் பழங்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது மர்மநபர்கள் சைக்கிளில் இருந்த பணத்தை திருடி கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திட்டச்சேரி போலீசில் ராதாகிருஷ்ணன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ராதாகிருஷ்ணனை பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் பண பையை திருடி செல்லும் காட்சிகள் அங்குள்ள ஒரு சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. இதையடுத்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை ரெயில்வே கிட்டப்பா பாலம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மயிலாடுதுறை தீப்பாய்ந்த அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து ¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கீழ்வேளூர் ஒன்றியம், வடகரை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சிக்கல்:
கீழ்வேளூர் ஒன்றியம், வடகரை ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்பிரபு தலைமையில் டாக்டர் சந்திரமவுலி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அந்த பகுதியில் வசித்து வரும் 97 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஊராட்சி துணை தலைவர் சிவசக்தி, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் மாதவன், அங்கன்வாடி, சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் வலிவலம் ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்பிரபு தலைமையில் டாக்டர் சந்திரமவுலி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அந்த பகுதியில் வசித்து வரும் 210 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஊராட்சி துணை தலைவர் இலக்கியா, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் அருண்குமார் மற்றும் அங்கன்வாடி, சுகாதார பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகை அருகே கோவில் காவலாளி வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை அருகே அந்தணபேட்டை சிவன் வடக்கு வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது37). இவர் கோவில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் புத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவில் இருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கீழ்வேளூர் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே குருக்கத்தி பள்ளிசத்தம் பகுதியை சேர்ந்த ரெங்கசாமி மகன் ராஜசேகர் (வயது 23). இவர், நாகை ரெயில் நிலைய குட்ஷெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ராஜசேகர், கூத்தூர் ரெயில் நிலையத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி மின்சார ரெயிலுக்கு செல்லும் மின் கம்பியை பிடித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திட்டச்சேரி அருகே மாசுபட்ட நீரை பூமிக்கு அடியில் விடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் கோபுராஜபுரம் ஊராட்சியில் உள்ள என்.ஆர்.எம்.36 ஓ.என்.ஜி.சி., ஆழ்குழாய் கிணற்றில் டேங்கர் லாரி மூலம் கடல் நீரை விட 100 மடங்கு உப்புத்தன்மை அதிகம் கொண்ட மாசு கலந்த நீரை விடுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சிறை பிடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் முன்னிலையில் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் மாசு கலந்த நீரை விடுவதால் இந்த பகுதியில் குடிநீர் ஆதாரம் கெட்டு உப்பு நீராக மாறி விடும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதில் கோபுராஜபுரம் ஊராட்சியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் மாசு கலந்த நீரை இறக்குவதில்லை என்றும், அந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு வார காலத்திற்குள் 1,000 அடியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்குவதாகவும், திட்டச்சேரி- கோபுராஜபுரம் சாலையில் உள்ள பிராவடையான் ஆற்றின் குறுக்கே பழுதடைந்துள்ள பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் கட்டி தருவதாக உறுதியளித்தனர்.
அதன்பேரில் அந்த பகுதி பொதுமக்கள் அந்த டேங்கர் லாரியை வெளியே செல்ல அனுமதித்தனர். இதில் ஓ.என்.ஜி.சி. (ஜி.ஜி.எஸ்.) தலைமை பொறுப்பாளர் ராமசாமி, ரிக் பொறுப்பாளர் காரல்மார்க்ஸ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சீர்காழி அருகே குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் உத்தரவின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வைத்தீஸ்வரன்கோவில் பகுதியை சேர்ந்த தம்பிதுரை(வயது37) என்பவர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தரணிதரன் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய தம்பிதுரைக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
வாய்மேடு அருகே ஸ்கூட்டர் வாங்கி கொடுக்காததால் விஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி பெருமைக்கோன்காடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகள் சபிதா (வயது15). இவர் ஆயக்காரன்புலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு தனது அப்பாவிடம் அடகு வைத்திருந்த தனது நகையை திருப்பி தரவேண்டும் என்றும், தான் பள்ளிக்கு செல்வதற்கு ஸ்கூட்டர் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் அடகு வைத்த நகையை அடுத்த மாதம் திருப்பி தருகிறேன், ஸ்கூட்டர் பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறினார். இதனால் மனமுடைந்த சபீதா விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பெற்றோர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சபிதா இறந்தார். இதுகுறித்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தான மேரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குத்தாலம்:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த சோழம்பேட்டை வடபாதி தெருவை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் துஷ்யந்திரன் (வயது 50). தச்சுதொழிலாளி. இவர் மூவலூர் தெற்குத்தெரு சித்தார்த்தன் என்பவரது வீட்டில் கடந்த 5 நாட்களாக சோபா செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல் கடந்த 6-ந் தேதி வேலை செய்யும் போது மரம் அறுக்கும் எந்திரத்தில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்த துஷ்யந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து அவரது மனைவி ராணி (45) கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






