என் மலர்
நாகப்பட்டினம்
- வேளாங்கண்ணி ஆர்ச்சில் உள்ள சுனாமி ஸ்தூபியில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
- பகவத்கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுனாமி பேரலை தாக்கியது. இதனால் கடலோர கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. கடலோர மாவட்டங்களில் வசித்த ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 19-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வேளாங்கண்ணி பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து, வேளாங்கண்ணி ஆர்ச்சில் உள்ள சுனாமி ஸ்தூபியில் மும்மத பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்று மெழுகுவர்த்தியை கைகளில் ஏந்தியவாறு கடற்கரையில் இருந்து அமைதி பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பகவத்கீதை, குரான், விவிலியம் உள்ளிட்டவைகளில் இருந்து வாசகங்கள் வாசிக்கப்பட்டது.
சுனாமி ஏற்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வேளாங்கண்ணி நினைவு ஸ்தூபிக்கு வந்து கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர்.
- கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நாகப்பட்டினம்:
இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (திங்கட்கிழமை) உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது.
அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பிரமாண்டமான முறையில் கிறிஸ்துமஸ் கூட்டு திருப்பலி நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் பங்கு தந்தைகள் இரவு 11.30 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் தமிழில் சிறப்பு திருப்பலி நடத்தினர்.
சரியாக 12 மணிக்கு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர், தத்ரூபமாக இயேசு பிறப்பு அரங்கேற்றப்பட்டதை பக்தர்கள் வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து மன்றாட்டு, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் வகையிலான நாடகம், விவிலிய வாசகங்கள் அறிவிப்பு, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருப்பலி முடிவில் அனைவரும் ஒருவருக்–கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கேக், இனிப்பு வழங்கப்பட்டது. தமிழில் திருப்பலி முடிந்த பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் திருப்பலி நடத்தப்பட்டது.

கிறிஸ்துமசை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் தத்ரூபமான முறையில் அமைக்கப்பட்ட குடில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவற்றை பேராலய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து செய்துள்ளது.
இன்றும் ஏராளமானோர் வேளாங்கண்ணிக்கு வந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் கூட்டமாக காணப்பட்டது. இதனால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பர்ண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
- சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வருவதால் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து தொடங்கியது.
தொடர்ந்து, சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்ன ரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனக்கூடு ஊர்வலம் சென்று இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைந்தது.
கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு, சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுள் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார்.
நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சந்தனக்கூடு ஊர்வலத்தை யொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நாகை நகரமே விழாக்கோலம் பூண்டது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
- மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தர்காவில் 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- கவர்னருக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூரில் ஆண்டவர் தர்கா உள்ளது. மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கும் இந்த தர்காவில் 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு ஊர்வலம் இன்று மாலை நாகையில் இருந்து புறப்படுகிறது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சந்தனகூடு ஊர்வலம் சென்று நாளை (ஞாயிற்றுகிழமை) அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில் கந்தூரி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக நாகூர் தர்காவுக்கு சென்றார். அங்கு அவருக்கு மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் மற்றும் தர்கா நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தர்காவுக்குள் சென்று பிரார்த்தனை செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி சென்றார்.
இந்த நிலையில் நீட் தேர்வில் விலக்கு உள்ளிட்ட தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய பல்வேறு தீர்மானங்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கையெழுத்து போடாமல் கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்தும், அவரது வருகையை கண்டித்தும் நாகூர் அருகே கீழ்வேளூர் பகுதியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜா தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, இந்திய கம்யூனிஸ்ட், திராவிட கழகம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கருப்பு கொடிகளுடன் திரண்டனர். அவர்களை போலீசார் பேரிகார்டு கொண்டு தடுத்தனர்.
இருந்தாலும் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடிகளை காட்டி கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்டவர்களை கவர்னர் வருகைக்கு முன்பாகவே போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தி மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கடல் நீர் உள்வாங்கிய 100 அடி தூரம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
- பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை முதல் மழை ஓய்ந்த நிலையில் பனிப்பொழிவு தொடங்கியது. இந்த நிலையில் வேதாரண்யம் சன்னதி கடல் காலை முதல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியது.
கடல் நீர் உள்வாங்கிய 100 அடி தூரம் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மீனவர்களும், பொதுமக்களும் கடலில் இறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அலைகள் எதுவும் இன்றி கடல் அமைதியாக காணப்பட்டது. கடல் நீர் உள்வாங்கியுள்ளதால் மீனவர்களும், பொதுமக்களும் அச்சம் அடைந்தனர். பருவநிலை மாற்றம் காரணமாக கடல் உள்வாங்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
கடல் உள்வாங்கி சேறும், சகதியுமாக காணப்படும் நிலையில் இன்னும் ஓரிரு நாளில் காற்று அதிகமாக வீசினால் அலைகள் எழுந்தவுடன் கடல் ஓரத்தில் உள்ள சேறு கரைந்து சீராகும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
- நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.
- மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
வேதாரண்யம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் நிலையில் கடலோர பகுதிகளில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும், கடலில் அடுக்கடுக்கான அலைகள் எழுந்து சீற்றமாக காணப்படுகிறது.
இதனால் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் இன்று 2-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இதனால் 1500-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
- நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது.
- ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு 467-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவையொட்டி முன்னதாக கடந்த 10-ந் தேதி தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
கந்தூரி விழாவையொட்டி நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலமானது யாகூசன் பள்ளி தெரு, நூல்கடை சந்து, சாலப்பள்ளி தெரு, வெங்காய கடைத்தெரு, பெரிய கடைவீதி, வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு பால்பண்ணைச்சேரி வழியாக நாகூர் சென்றது.
ஊர்வலத்தில் மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் என ஏராளமான அலங்கார வாகனங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கொடி ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.
நாகையில் இருந்து நாகூர் வரை சாலைகளின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கொடி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து நாகூர் தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பின்னர் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது கண்கவர் வான வேடிக்கையுடன் நாகூர் தர்கா, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் வருகிற 23-ந்தேதி இரவு நடக்கிறது. மறுநாள் 24-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.
- சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன.
- பள்ளி-கல்லூரி கட்டிட சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாத அளவுக்கு தடுப்புகளை அமைக்க வேண்டும்.
சென்னை:
மழை வெள்ள பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் கடந்த 4-ந் தேதி முதல் மூடப்பட்டிருந்தன.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி நின்ற மழை வெள்ளம் வடிந்துள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து ஒரு வார விடுமுறைக்கு பிறகு நாளை (11-ந் தேதி) பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.
இதையொட்டி கடந்த 2 நாட்கள் 4 மாவட்டங்களிலும் பள்ளி-கல்லூரிகளை சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளில் ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் துப்புரவு பணியாளர்களை வரவழைத்து பள்ளி வளாகத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. லாரிகள் மூலமாக இந்த குப்பைகள் அகற்றப்பட்டன.
பள்ளி தலைமை ஆசிரி யர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் அமரும் இருக்கைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.
இப்படி சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. மின்சாதன பெட்டிகளும் சரிபார்க்கப்பட்டு மின்கசிவு ஏதும் ஏற்படுகிறதா? என்பதையும் பள்ளி கல்லூரி ஊழியர்கள் சரிபார்த்துள்ளனர். இது தொடர்பாக தேவையான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனது பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி-கல்லூரிகளை திறப்பதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக பள்ளி கல்வி துறை சார்பில் சுற்றறிக்கையும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பள்ளி-கல்லூரி கட்டிட சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாத அளவுக்கு தடுப்புகளை அமைக்க வேண்டும். கதவு, ஜன்னல், பெஞ்ச் போன்றவற்றை கிருமி நாசினிகள் மூலமாக சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி மேற்கண்ட பணிகளில் பெரும்பாலானவற்றை பள்ளி-கல்லூரி நிர்வாகத்தினர் முடித்துள்ளனர். இதை தொடர்ந்து ஒருவார விடுமுறை முடிந்து பள்ளி-கல்லூரிகள் நாளை வழக்கம் போல் செயல்பட உள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து கீழ் தளத்தில் வெள்ளம் புகுந்ததால் பாட புத்தகங்கள், சீருடைகள் சேதமடைந்துவிட்டன.
இப்படி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள், சீருடைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சிறப்பு முகாம்கள் நாளை நடைபெற உள்ளது. தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள் திறக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
- பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாகப்பட்டினம்:
தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்த சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், படகின் உரிமையாளர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர், நாகையன், திவ்யநாதன், மாயவன், பாக்கியராஜ், சக்திவேல், மணிகண்டன், ராமச்சந்திரன், கோதண்டபானி, ராமச்சந்திரன், செல்வமணி ஆகிய 12 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 35 கடல்மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி 12 பேரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதைப்போல் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆச்சியம்மாள் என்ற விசைப்படகும் அதில் இருந்த 13 மீனவர்களும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது படகும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 25 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனவர்களை தாக்கி விரட்டி அடித்து விட்டு சென்று விட்டனர்.
- மீனவர்கள் வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
வேதாரண்யம்:
கடந்த பல நாட்களாக புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். இதனால் அவர்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
பின்னர் மின்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்ட தடை நீக்கியதால் அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ள பள்ளத்தைச் சேர்ந்தவர் பக்கிரி சாமி (வயது 40). இவருக்கு சொந்தமான பைபர் படகில் படகு உரிமையாளர் பக்கிரிசாமி மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (33) சக்திவேல் ( 46) ஆகிய 3 பேரும் கோடியக்கரையில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.
நேற்று மதியம் 3 பேரும் கோடியக்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கோடியக்கரைக்கும் தென்கிழக்கு 10 கடல் மைல தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையில் நள்ளிரவில் வந்து15 கிலோ வலையை வெட்டி உள்ளனர். பின்பு மீனவர்களை தாக்கி விரட்டி அடித்து விட்டு சென்று விட்டனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று காலை 11 மணிக்கு கோடியக்கரைக்கு வந்து சேர்தனர்.
இது குறித்து மீனவர்கள் வேதாரண்யம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கி கொண்டனர்.
- புயல் காரணமாக கடலில் நீரோட்டம் மாறி தங்கள் வலையில் அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 27-ம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத் துறையினர் தடை விதித்தனர்.
இதனால் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், வேதாரணியம், கோடியக்கரை, ஆற்காடு துறை உள்ளிட்ட 25 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்களது 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும் 5000 மேற்பட்ட நாட்டுப் படகுகளையும் துறைமுகங்களில் 8 நாட்களாக பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர்.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதிக்கட்டது.
இந்நிலையில் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து மீன்வளத்துறை தடையை விலக்கி கொண்டனர். இதனால் மகிழ்ச்சியடைந்த மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
முன்னதாக மீன்வளத்துறையினர் தடையை நீக்குவார்கள் என்ற நம்பிக்கையில் நேற்று காலையில் இருந்து சில மீனவர்கள் கடலுக்குச் செல்ல தேவையான டீசல், ஐஸ் கட்டிகள் தண்ணீர், உணவு பொருட்களை சேகரித்து வந்த நிலையில் நேற்று இரவு கடலுக்குச் செல்ல விதித்த தடையை நீக்கியதால் இன்று அதிகாலை முதல் குறைந்த அளவிலான விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். புயல் காரணமாக கடலில் நீரோட்டம் மாறி தங்கள் வலையில் அதிக மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மீனவர்கள் சென்றுள்ளனர்.
- வேதாரண்யம் பகுதி மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- 100 மீட்டர் தூரம் உள்வாங்கி உள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் கடலோர பகுதியாகும். இங்கிருந்து ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள்.
இந்நிலையில் வங்க கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் 5-ந் தேதி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்த சூழ்நிலையில் இன்று வேதாரண்யத்தில் கடல் திடீரென 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் கரையானது சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
வழக்கமாக சில மீட்டர் தூரம் கடல் உள்வாங்கும். பின்பு சகஜ நிலைமைக்கு வரும்.
இது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது 100 மீட்டர் தூரம் உள்வாங்கி உள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மிக்ஜம் புயல் வரும் 5-ந் தேதி கரைையை கடக்க உள்ளதால் இன்று கடல் உள்வாங்கி இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.






