என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்டு 29-ந்தேதி தொடங்குகிறது.
    • 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

    வெளிப்பாளையம் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    இதை தொடர்ந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கடந்த 2010-ம் ஆண்டு வேளாங்கண்ணிக்கு அகல பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    கொரோனா தொற்று காரணமாக வேளாங்கண்ணி-நாகை இடையே ரெயில் சேவை கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 24-ந் தேதி நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 2½ ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் வேளாங்கண்ணிக்கு ரெயில் இயக்கப்படவில்லை. இந்த வழித்தடத்தில் உள்ள தண்டவாளத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருந்ததால் ரெயில் சேவை தொடங்கப்படவில்லை.

    இதை தொடர்ந்து மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில் தண்டவாளத்தின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வந்தது. இதற்கிடையில் இந்த வழித்தடத்தை மின் பாதையாக மாற்றும் பணியும் நடந்து வந்தது.

    சீரமைப்பு பணிகள் மற்றும் மின்பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததையொட்டி ரெயில்வே தொழில்நுட்ப பிரிவினர் இரண்டு முறை சோதனை செய்தனர். மேலும் 110 கிலோ மீட்டர் வேகத்தில் மின்பாதையில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது.

    இதையடுத்து நாகை-வேளாங்கண்ணி மின் பாதையில் 29-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படும் என திருச்சி ரெயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 2½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு புதிதாக அமைக்கப்பட்ட மின் பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ரெயில் என்ஜின் டிரைவர்கள், நாகை ரெயில் நிலைய மேலாளர் பிரபாகரன் ஆகியோருக்கு நாகை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலாளர் அரவிந்குமார் மற்றும் சங்கர் ஆகியோர் சால்வை அணிவித்தனர்.

    வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா அடுத்த மாதம்(ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் வேளாங்கண்ணிக்கு மின்பாதையில் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது பயணிகள் இடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • புனித நீராட வரும் பக்தர்கள் மூதாதயர்களுக்கு திதி கொடுப்பதற்கு வசதியாக அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளிட்ட தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டது.
    • தர்ப்பண மண்டபத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் நகராட்சியின் சார்பில் 2020-22 ஆண்டு ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சத்தில் தை அமாவாசை, ஆடி அமாவாசை காலங்களில் புனித நீராட வரும் பக்தர்கள் மூதாதயர்களுக்கு திதி கொடுப்பதற்கு வசதியாக அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளிட்ட தர்ப்பண மண்டபம் கட்டப்பட்டது.

    தர்ப்பண மண்டபத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின், நகர மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் இப்ராஹிம், ஒப்பந்தக்காரர் அன்பழகன், தாசில்தார் ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராமலிங்கம், பாஸ்கரன், நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • கஞ்சா குற்றவாளிகள் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டதன்படி 35 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
    • கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டால் அவர்களது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த ஒரு வருடத்தில் பல்வேறு கஞ்சா மற்றும் கஞ்சா குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் கஞ்சா குற்றவாளிகள் வங்கி கணக்குகளை முடக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன்படி (2021 - 2022) ஆண்டுகளில் 35 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    மீதமுள்ள கஞ்சா 9 குற்றவாளிகளின் வங்கி கணக்கினை விரைவில் முடக்கம் செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். மேலும் இதுபோன்று கஞ்சா மற்றும் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டால் அவர்களது சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • சக்தி காற்றலை மின் உற்பத்தி குறித்த குறும் பாடம் காண்பிக்கபட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
    • மின்துறையில் 8 ஆண்டுகள் சாதனை குறித்து ஒலி, ஒளி காட்சி நடைபெற்றது.

    வேதாரண்யம் :

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் மின்சார பெருவிழா நடைபெற்றது. விழாவிற்கு வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் தலைமை வகித்தார். மாவட்ட மேற்பார்வை பொறியளார் சதீஷ்குமார் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவர் புகழேந்தி ,ஆத்மா குழு உறுப்பினர் சதாசிவம், மாவட்ட கவுன்சிலர் சோழன், உதவி செயற்பொறியாளர்கள் ரவிகுமார், மலர்வண்ணன், இளம் மின்பொறியாளர் அன்பரசன், உதவி மின்பொறியாளர்கள் மனோகரன், சுப்பிர–மணியன், பாரதிதாசன் கல்லூரி முதல்வர் முருகன், கல்லூரி நாட்டு நலதிட்ட அலுவலர் மாரிமுத்து உள்ளிட்ட மின்துறை அலுவலர்கள் பாரதிதாசன் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் மின்துறையில் 8ஆண்டுகள் சாதனை குறித்து ஒலி ஒளி காட்சி மின்சார விழிப்புணர்வு மின்சார சிக்கனம், குறித்தும் வருங்காலத்தில் மின் சேவையை நிவர்த்தி செய்யசூரிய சக்தி காற்றலை மின் உற்பத்தி குறித்த குறும் பாடம் காண்பிக்கபட்டு கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு வேதா–ரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின் பரிசுகள் வழங்கினார். முடிவில் நாகை கோட்டபொறியார் சேகர் நன்றி கூறினார்.

    • 1 ஏக்கருக்கு சுமார் 45 கிலோ பயன்படும் இடத்தில் 500 எம்.எல் நானோ யூரியாவை எளிதில் ஏக்கர் முழுவதும் தெளித்துவிடலாம்.
    • நானோ யூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மேலப்பூதனூரில் குறுவை நெல் பயிறில் டிரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் செயல் விளக்கம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    அப்போது அவர் கூறியதாவது:-மேலப்பூதனூர் கிராமத்தில் ஒரு முன்னோடி விவசாயி அவரின் நிலத்தில் குறுவை சாகுபடி செய்து அவற்றிற்கு ட்ரோன் மூலமாக நானோ யூரியா என்ற உரத்தை தெளித்துள்ளார்.

    நானோ யூரியா பயன்படுத்துவதன் மூலம் 1 ஏக்கருக்கு சுமார் 45 கிலோ பயன்படும் இடத்தில் 500 எம்.எல் நானோ யூரியாவை எளிதில் ஏக்கர் முழுவதும் தெளித்துவிடலாம்.ட்ரோன் மூலம் நானோ யூரியா மற்றும் பயிர்பாதுகாப்பு மருந்து தெளிப்பதால் ஒரு குறைவான நேரத்தில் அதிக பரப்பினை தெளிக்க முடியும். தற்சமயம் ஆள் பற்றாக்குறையை போக்க ட்ரோன் முறை பயன்படுத்தலாம். நானோ யூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்முறை விளக்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • வேத மந்திரங்களை ஓதி யாக குண்டத்தில் மிளகாய் மற்றும் 108 மூலிகை பொருட்கள், காய்கள், பழங்கள் கொண்டு ஹோமம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூர் தேவதுர்க்கை அம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மிளகாய் கொண்டு பிரத்தியங்கராதேவி மகா சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் தோஷங்கள் நீங்கவும் வேதவிற்பனர்கள் வேத மந்திரங்களை ஓதி யாக குண்டத்தில் மிளகாய் மற்றும் 108 மூலிகை பொருட்கள் காய்கள், பழங்கள், கொண்டு ஹோமம் நடைபெற்றது.நிறைவாக யாகம் பூர்ணாஹூதியுடன் முடிவடைந்தது.

    பின்னர் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை ஏந்திய சிவாச்சாரியார் கோவிலை வலம் வந்து அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    • கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த ஒரு வார ஆன்லைன் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடத்தியது.
    • டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி மையம் இணைந்து கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த ஒரு வார ஆன்லைன் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமை இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரியில் நடத்தியது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 60 ஆசிரியர்கள் பங்கேற்றனர். 9 நிபுணர்கள் பயிற்சி வழங்கினர். கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள், செயலர் செந்தில் குமார், இணை செயலர் சங்கர் கணேஷ் மற்றும் ஆலோசகர் பரமேஸ்வரன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். கல்வி நிறுவனத்தின் கல்வி சார் இயக்குனர் முனைவர் மோகன், கல்லூரி முதல்வர் முனைவர் ராமபாலன், தகவல் தொழில்நுட்பத்துறை தலைவர் முனைவர் மணிகண்டன் ஆகியோர் முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை பேராசிரியர்கள் நாகலட்சுமி, முனைவர் லாவண்யா, முனைவர் ராஜூ மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆசிரியர்கள் நடத்தினர்.

    • பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்,:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை இந்த பேராலயம் பெற்று விளங்குகிறது.

    இந்த பேராலயம் வங்க கடலோரம் அமைந்திருப்பதால் மேலும் சிறப்பு பெற்றுள்ளது. இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு பெருவிழா பல்வேறு சிறப்பு பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி செப்டம்பர் 7-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த விழாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆண்டு பெருவிழாவை முன்னிட்ட பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி நடைபெறுகிறது. இதற்காக பேராலயத்தில் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது.

    • குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
    • துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி பேரூராட்சி சார்பில் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஆயிஷா சித்திக்கா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்களுக்கு ஸ்வச்சதா செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது, குப்பைகளை தரம் பிரித்து கொடுப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    அதை தொடர்ந்து அனைத்து தெருக்களிலும் ஒட்டுமொத்த தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சப்பை மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகளுக்கு திடக்கழிவை உரமாக்குதல் குறித்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அழைத்து சென்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், வரி தண்டலர் ஜெகவீரபாண்டியன், அலுவலக உதவியாளர் மாதவன், அமானுல்லா, அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 160 காவலர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.
    • வெற்றிச்செல்வன் என்பவர் சிறந்த மீட்பாளருக்கான பதக்கத்தையும், சான்றிதழையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் 20 நாட்கள் ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 160 காவலர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் நாகை மாவட்டம், நகர போலீஸ் நிலையத்தை சேர்ந்த காவலர் வெற்றிச்செல்வன் என்பவர் சிறந்த மீட்பாளருக்கான பதக்கத்தையும் மற்றும் சான்றிதழையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார். அவரை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் காவலர் வெற்றிச்செல்வனை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    • விடுதியில் இன்று காலை வழக்கம் போல் மாணவிகள் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றனர்.
    • விடுதியில் தயார் செய்யப்பட்ட காலை உணவின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. 1500-க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள விடுதியில் 190 மாணவிகள் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் விடுதியில் இன்று காலை வழக்கம் போல் மாணவிகள் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு சென்றனர். சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து 50 மாணவிகள் திடீரென வாந்தி எடுத்து வகுப்பறையிலேயே மயக்கம் அடைந்தனர்.

    அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அதில் மாணவிகளை ஏற்றி சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும் மாணவிகளிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

    இதையடுத்து விடுதியில் தயார் செய்யப்பட்ட காலை உணவின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விடுதியில் சாப்பிட்ட மற்ற மாணவிகளின் உடல்நிலையையும் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
    • 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துக்கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் ராணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நாகை மாலி எம்.எல்.ஏ. கலந்துக்கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் அன்பழகன், தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்துக்கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

    ×