என் மலர்
நாகப்பட்டினம்
- மருத்துவ குணமுடைய வெற்றிலை, ஓமவள்ளி, கருந்துளசி, சிற்றரத்தை, இன்சுலின் உள்ளிட்ட செடிகள்.
- மூலிகை வனத்தில் பல்வேறு செடிகள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்குகின்றன.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூலிகை தோட்டம் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அமைக்கபட்டது. இந்த மூலிகை வனம் அமைக்கும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த மூலிகை தோட்டத்தில் மருத்துவ குணமுடைய வெற்றிலை, ஓமவள்ளி, கருந்துளசி, சிற்றரத்தை, இன்சுலின் செடிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட செடிகள் நடப்பட்டு செடிகள் முன்பு பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மூலிகை வனத்தில் தற்போது பல்வேறு செடிகள் செழித்து வளர்ந்து பூத்து குலுங்குகின்றன. இந்நிலையில், நேற்று வேதாரண்யம் வருகை தந்த கலெக்டர் அருண் தம்புராஜ் மூலிகை தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மூலிகை செடிகள் செழித்து வளர்ந்திருப்பதை கண்டு அதிகாரிகளை பாராட்டினார்.
இது போல் மூலிகை வனம் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, தாசில்தார் ஜெயசீலன், துணை வட்டாட்சியர் வேதையன் மற்றும் வருவாய் துறையினர் உள்ளனர்.
- நள்ளிரவு 12 மணி அளவில் அவசரமாக அறுவை சிகிச்சை.
- மருத்துவர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பன்னால் கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரசேகரன். இவரது மனைவி திருமுகப்பிரியா.
இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் தலை பிரசவத்திற்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குழந்தைக்கு தொப்புள் கொடி சுத்தி இருப்பதால் மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு திருமுகப்பிரியாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு பணிக்குடம் உடைந்துள்ளது. நள்ளிரவு 12 மணி அளவில் திருமுகப்பிரியாவிற்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதில் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவ ர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக கூறி நாகை அரசு மருத்துவகல்லூரி மருத்து வமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இது குறித்து குழந்தையின் தந்தை வீரசேகரன் வெளிப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பிரசவத்தின் போது குழந்தை இறந்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் 130 மது பாட்டில்கள் இருந்தது.
- மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார் சைக்கிள்கள் வந்தது.
அந்த மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 மூட்டையில் 130 மது பாட்டில்கள் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில் கொட்டாரக்குடி ஊராட்சி சின்னகண்ணமங்கலம் காலாணித்தெருவை சேர்ந்த நீதிதேவன் மகன் சாய்குமார் (வயது 22), திருநள்ளார் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மதிவாணன் (வயது 38) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து மது பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 130 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- புதுமண தம்பதிகள் பங்கேற்று ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
- பெண் சிசு கொலையை தடுப்பது குறித்தும் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.
நாகப்பட்டினம்:
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சமூக நலத் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடை பெற்று வருகிறது.
இந்நிலையில் நாகப்–பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் சுகாதாரத் துறையினர், மாணவ மாணவிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கலந்து கொண்ட மனித சங்கிலியும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வண்ண பலூன்களை காற்றில் பறக்க விடும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகள் பங்கேற்ற ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பெண் சிசுக்கொலைகளை தடுப்பது குறித்து விழிப்–புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண கோலம் போட்டிகளும் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ் வழங்கினார். கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பெண் சிசு கொலையை தடுப்பது குறித்தும் அதிகாரிகள் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவிகள் பங்கேற்ற கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
- நாகை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள், 3ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.
- ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற நாகை மீனவர்கள் தென்கிழக்கு வங்கக் கடலில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடந்த ௪-ம்தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 25 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் மாண்டஸ் புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று இறக்க ப்பட்டது. மேலும் கடல் சீற்றம் குறைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க மீன்வளத்துறையினர் அனுமதித்துள்ளனர்.
மேலும் மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3 ஆயரம் பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.
ஒரு வாரத்திற்கு பிறகு மீன்பிடிக்கச் செல்லும் அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, நம்பியார் நகர், செருதூர், காமேஷ்வரம் விழுந்தமாவடி, ஆறுக்காட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.
- 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
வேதாரண்யம்:
காரைக்கால் பகுதியில் இருந்து ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சிவா (வயது 28) என்பவரும் கடந்த 4-ந்தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்று ள்ளனர்.
இவர்கள் மீன்களை பிடித்து கொண்டு 5-ந்தேதி அதிகாலையில் கரை திரும்பிக்கொண்டிருந்த போது மீனவர் சிவா படகில் இருந்து தவறி கடலில் விழுந்து மூழ்கி மாயமானார்.
இதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளில் காரைக்கால் மீனவர்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றமாக இருந்ததால் தேடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
புயல் கரையை கடந்ததால் நேற்று காரைக்கால் மீனவர்கள் 10 படகுகளில் கோடியக்கரை கடற்பகுதிக்கு வந்து மாயமான மீனவர் சிவாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இன்னும் தேடும் பணி நடந்து வருகிறது.
- வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்கள் உள்ளது.
- கோடியக்கரை சரணாலயம் உள்பட பல்வேறு சுற்றுலா தலம் நிறைந்த மாவட்டமாக நாகை விளங்குகிறது.
வேதாரண்யம்:
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் விமான நிலையம் உள்ளது. தமிழகத்தின் கிழக்கு எல்லையான நாகையில் புவியியல் அடிப்படையில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என நாகை மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது :-
நாகை மாவட்டம், ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் தர்கா உள்பட பல்வேறு முக்கிய வழிபாட்டு தலங்களும், கோடியக்கரை சரணாலயம், உள்பட பல்வேறு சுற்றுலா தலமும் நிறைந்த மாவட்டமாக நாகை மாவட்டம் விளங்குகிறது.
இதுதவிர நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன. மேலும் மீனவர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. மீன் ஏற்றுமதி, உப்பு ஏற்றுமதியில் சிறந்து விளங்குகிறது.
கடற்கரை நகரங்களின் மத்திய பகுதியில் நாகப்–பட்டினம் அமைந்துள்ளது. எனவே எல்லை பாது–காப்பை கணக்கில் கொண்டு விமான நிலையம் அமைத்தால் அது நாட்டிற்கே அரணாக விளங்கும் விமானப்படைக்கு ஏதுவாக இருக்கும்.
நாகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதி என்பதால் மீட்பு பணிகளுக்கு ராணுவம் மற்றும் மீட்பு படையினர் விரைந்துவர வழி வகுக்கும்.
கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகள், அறந்தாங்கி வரை உள்ள மக்கள் திருச்சி விமான நிலையம் செல்வதைவிட நாகையில் விமான நிலையம் அமைந்தால் வந்து செல்வது எளிது.
எனவே "நாகையில் விமான நிலையம் அமைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.
- நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே பூ கிடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
- சீசன் காலத்தில் கிலோ ரூ.50 முதல் 70 வரை கொள்முதல் செய்யப்–படுகிறது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிகுளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் வரை இந்த முல்லைப்பூ சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூ விளைவிக்கப்படுகிறது .
தற்போது வேதாரண்யம் பகுதியில் கடும் பனிப்–பொழிவால் பூச்செடிகள் இலைகள் உதிர்ந்து பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே பூ கிடைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சீசன் காலத்தில் கிலோ ரூ.50 முதல் 70 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.600 முதல் 1000 வரை விற்பனை ஆகிறது.
பனிப்பொழிவால் முல்லைப்பூ அதிகம் விளையாததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
விலை ஏற்றம் இருந்தாலும் விளைச்சல் குறைவால் விவசாயிகள் அவதியடைந்து உள்ளனர்.எனவே முல்லைப்பூ விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவியும், நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
- கீழ பட்டினச்சேரிக்கும் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
மாண்டஸ் புயலின் தாக்கத்தால் நாகப்பட்டினம், நாகூர், பட்டினச்சேரியில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கடல் நீர் ஊருக்குள் புகுந்ததால் குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. தென்னை மரங்கள் விழுந்தன. ஆடுகள் பலியாயின.
இதையடுத்து அங்குள்ள மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கடல் அரிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளை நாகை எம்.எல்.ஏ ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
பட்டினச்சேரியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசினேன்.
அப்போது பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாகப்பட்டினத்தில் கடல் அரிப்பால் ஏற்படும் பிரச்சனைகளின் தீவிரத்தை அரசு உணர்ந்துள்ளதாகவும் எனவே விரைவில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அதன்படி விரைந்து அதை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கெனவே நம்பியார் நகர் பகுதியில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தேன்.
அதன் அடிப்படையில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதுபோல் கீழப் பட்டினச்சேரிக்கும் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.7 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையும் விரைவில் நிறைவேறும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, நாகை நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர் அஞ்சலைதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.
- 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.
நாகப்பட்டினம்:
சமூகசேவகர் பாரதிமோகன் அறக்கட்டளை சார்பில் சுமார் 11 வருடங்களாக சாலையோரம் ஆதரவின்றி வாழும் ஆதரவற்ற முதியவர்களுக்கு தினந்தோறும் 250-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு வழங்கி மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களை முடி திருத்தம் செய்து குளிக்க வைத்து புத்தாடை அணிவித்து சக மனிதனாக மாற்றி காப்பகத்தில் சேர்த்து வருகின்றனர்.
அதன்படி நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் அருகே 70 வயது முதியவரான கண்ணன் என்பவருக்கு உணவு வழங்கினர்.
அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், வழங்கினார்.
இதில் பாரதிமோகன் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- மாண்டஸ் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது.
- சிர்காழி, கொள்ளிடத்தில் 10 அடி உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகளால் கிராமங்களுக்குள் கடல்நீர் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது.
சீர்காழி:
'மாண்டஸ்' புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, பூம்புகார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.
பழையார், மடவாமேடு, ஓலக்கொட்டாயமேடு, கூழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், கீழமூவர்க்கரை, பூம்புகார், வானகிரி, சாவடி குப்பம், நாயக்கர் குப்பம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.
கடல் அலைகள் 10 அடி உயரத்திற்கு மேல் எழுந்தது. கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல் தடுப்புச்சுவரை ராட்சத அலைகள் எழுந்து கிராமங்களுக்கு தண்ணீர் புகுந்தது.
தொடுவாய், மடவாமேடு ஆகிய கிராமங்களுக்குள் கடல் நீர் புகுந்து 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்தது. இதனைத்தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி கட்டிடம் உள்ளிட்ட இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் தங்களுடைய விசைப்படகு, பைபர் படகு, கட்டுமரம் ஆகியவற்றை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
இதேபோல் கொள்ளிடம் அருகே மடவாமேடு கிராமத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக 10 அடி உயரத்திற்கு ராட்சத அலைகள் எழுந்தது. இதன் காரணமாக மடவாமேடு கிராமத்திற்குள் கடல்நீர் புகுந்து குடியிருப்புகளை சூழ்ந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் பவளச்சந்திரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்றனர்.
அவர்கள் கடற்கரையில் நின்று பார்வையிட்டபோது ராட்சத அலையில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்கியது. இதில் காயம் அடைந்த அவர்கள் புதுப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
புயலின் காரணமாக மீனவர்கள் நேற்று 4-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
புயல் காரணமாக சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம் உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், வள்ளுவக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முன்னதாக நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா நெற்பயிர்கள் மழையால் சாய்ந்துள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் வாழ்வாதாரம் மீண்டும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கவலை அடைந்துள்ளனர். இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
- பவுர்ணமி தினத்தன்று சிறப்பாக வேள்வியும், அபிஷேகமும் நடைபெற்றது.
- மார்கழி மாதம் முழுவதும் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகள்.
நாகப்பட்டினம்:
நாகூர் குயவர் மேட்டு தெருவில் உள்ள காங்கேய சித்தர் ஜீவப்பீடத்தில் மாதம் தோறும் பௌர்ணமி யாகமானது தமிழ் முறைப்படி சித்தர் பீடத்தை நிர்வகித்து வரும் நாகூர் ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
இந்த பௌர்ணமி தினத்தன்று மிகச் சிறப்பாக வேள்வியும், அபிஷேக ஆராதனை களும் நடைபெற்றது.நாகூர், காரைக்கால் திருத்துறைப்பூண்டியை சார்ந்த பக்தர்கள் இந்த வேள்வியில் கலந்து கொண்டார்கள் அதனை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் அன்னதான பிரசாதமும் வழங்கப்பட்டது
இந்த வேள்வியினை ஸ்ரீ காங்கேய சித்தர் அறக்கட்டளையைச் சேர்ந்த ராஜசரவணன், கோகுல கிருஷ்ணன், டாக்டர் அனிதா, குமார், பழனிவேல் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்
இந்த பூஜையினை கும்பகோணத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் மற்றும் காங்கேய சித்தர் பீடத்தின் அர்ச்சகர் வெங்கட்ராமன் ஆகியோர் பூஜையை செய்தார்கள். வருகின்ற மார்கழி மாதம் முழுவதும் காங்கேய சித்தர் ஜீவபீடத்தில் அதிகாலையில் பிரம்ம மூர்த்தத்தில் சிறப்பு பூஜைகளும் நடைபெற இருக்கின்றது.






