என் மலர்
மயிலாடுதுறை
- ஆகாய தாமரைகள் படர்ந்தும் நீரோட்டம் தடைப்பட்டு கழுமலை ஆறு தூய்மையை இழந்து வருகிறது.
- குப்பைகள் மற்றும் தண்ணீர் வேகமாக ஓடுவதற்கு தடையாக உள்ள பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிரதான கழுமலை பாசன ஆறு உள்ளது. கொண்டல் பகுதியில் உருவாகும் கழுமலையாறு கொண்டல், வள்ளுவக் குடி, அகனி, சீர்காழி, திட்டை, தில்லைவிடங்கன், திருத்தோணிபுரம், செம்மங்குடி உள்ளிட்ட சுமார் 15க்கு மேற்பட்ட கிராமங்களில் சுமார் 6000 ஏக்கரில் பாசன வசதி நடைபெறுகிறது.
சீர்காழி நகர் பகுதியில் கழுமலை பாசன ஆறு நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் மற்றும் நகர் பகுதியில் இருந்து குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் உடைந்த பாட்டில்கள் ஆகியவை கொட்டப்பட்டும், ஆகாயத் தாமரைகள் படர்ந்தும் நீரோட்டம் தடைப்பட்டு கழுமலை ஆறு தூய்மையை இழந்து வருகிறது.
இதனிடையே நகர் பகுதியில் கழுமலை ஆற்றில் தேங்கி இருந்த குப்பைகள், மண்டி கிடந்த ஆகாயத் தாமரை செடிகள், மழைக்காலம் வர உள்ளதால் நகர் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் தண்ணீர் வேகமாக ஓடுவதற்கு தடையாக உள்ள பொருட்களை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.
இதனை நகர் மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், ஆணையர் (பொ) ராஜகோபால், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், எழுததர் ராஜகணேஷ், திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று விசாரணைக்கு ஆஜராகாமல் மணிஷ் தலைமறைவாக ராஜஸ்தானில் இருந்தார்.
- மணிஷ் குறித்த தகவல்களை அம்மாநில போலீசாரின் உதவியுடன் திரட்டி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வருபவர் தன்ராஜ் சவுத்ரி (51). ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர் கடந்த 15 ஆண்டுகளாக சீர்காழியில் சொந்த வீடு கட்டி வசித்து வருகிறார். மேலும் இவர் பூம்புகார் தருமக்குளம் பகுதியில் நகை அடகுகடை மற்றும் தங்க நகைகள் மொத்த விற்பனை செய்து வருகிறார்.
இந் நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அதிகாலை இவரது வீட்டிற்குள் புகுந்த 3 வட மாநிலத்தவர்கள் தன்ராஜ் சவுத்ரியின் மனைவி ஆஷா மற்றும் அவரது மகன் அகில் ஆகிய இருவரையும் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு, தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் நேஹல் ஆகிய இருவரையும் கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் இருந்த 12.5 கிலோ தங்க நகை மற்றும் ரூ.6.75 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தன்ராஜ் சவுத்ரி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரினை திருடி தப்பி சென்றனர்.
இதனிடையே சீர்காழி அருகே எருக்கூர் சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்த வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளை, கொலையில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த மனீஷ், ரமேஷ் பட்டேல், மஹிபால் சிங் ஆகிய மூவரையும் மயிலாடுதுறை மாவட்ட அப்போதைய எஸ்.பி. ஸ்ரீநாதா தலைமையில் கொண்ட போலீசார் பிடிக்க சென்றனர். அப்பொழுது அதிரடிப்படை வீரர் சாலிம் என்பவரை கொள்ளையர்கள் தாக்கினர். அப்போது ராஜஸ்தான் மாநிலம் அஹோலி கிராமத்தைச் சேர்ந்த மகிபால் சிங் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
அங்கு மறைந்திருந்த ராஜஸ்தான் ஜோத்பூரை சேர்ந்த மணிஷ், ராஜஸ்தான் மாநிலம் கங்காவாஸ் பகுதியை சேர்ந்த ரமேஷ் பட்டேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மணிஷ், ரமேஷ் பட்டேல் மற்றும் இதில் தொடர்புடைய கும்பகோணம் கருணாராம் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் மணிஷ் தலைமறைவாக ராஜஸ்தானில் இருந்தார். அவரை பிடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் 'தீரன் அதிகாரம் இரண்டு' பட பாணியில் ராஜஸ்தான் மாநிலம் விரைந்து சென்றனர்.
அங்கு சில தினங்கள் தங்கியிருந்து மணிஷ் குறித்த தகவல்களை அம்மாநில போலீசாரின் உதவியுடன் திரட்டி, பின்னர் மணிஷ்சை கைது செய்து விமானம் மூலம் இன்று அதிகாலை சென்னை வந்து, பின்னர் சீர்காழி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரத்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
- சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி, கொசுக்களை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாங்கனாம்பட்டு கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்து வந்தது. தொடர்ந்து ஒரு வாரமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் காய்ச்சல் குறையவில்லை.அதனைத் தொடர்ந்து பாண்டிச்சேரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு செய்யப்பட்ட ரத்த பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் அவர் பன்றி காய்ச்சலில் இருந்து குணமடைந்து வருகிறார்.
இன்னும் மூன்று தினங்களில் வீடு திரும்புவார் என்று கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தெரிவித்தார்.
பன்றிக்கா ய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து மாங்கனாம்பட்டு கிராமத்துக்கு கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் வட்டார சுகாதார ஆய்வாளர் கொளஞ்சியன், சுகாதார ஆய்வாளர்கள் கருணாகரன், சுந்தரம், வெங்கட்பிரசாத், பவித்திரன், இளஞ்செழியன், ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ்,
துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் சுகாதார ஊழியர்கள் சென்று ஆய்வு செய்து அப்பகுதியில் முன் எச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி அப்பகுதியில் சுகாதார ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியிலும், கொசுக்களை அழிக்கும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.
- நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் பணிகள் செய்யப்படஉள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியில் அமைந்துள்ள குமரன் பூங்காவில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.39.20 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் செய்ய திட்டமிடப்பட்டது.
அதன்படி, நடைபாதை அமைத்தல், சுற்றுச்சுவர் சீர்செய்தல், மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல், குழந்தைகள் விளையாட்டுகளுக்கான ஏற்பாடுகள் ஆகியன செய்யப்படவுள்ளது.
அடுத்து பூங்கா மேம்பாட்டுப் பணிகளுக்காக நடைபெற்ற பூமி பூஜையில் ராஜகுமார் எம்.எல்.ஏ. பங்கேற்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
நகராட்சித் மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி உறுப்பினர்கள் ராஜலெட்சுமி ராஜேந்திரன், சர்வோதயன், ரமேஷ், மணிமேகலை மணிவண்ணன் மற்றும் நகராட்சி பணி ஆய்வர்கள் ரம்யா, ராஜாராமன், ஒப்பந்தகாரர் ரிஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 120 வீடுகளில் 400 பேர் வசித்து கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.
- கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளும் சேதமடைந்துவிட்டது.
தரங்கம்பாடி:
சீர்காழி தாலுக்கா வெள்ள மணல் மீனவ மக்கள் சார்பில் கிராமத் தலைவர் வீரபாண்டியன், துணைத்தலைவர் புகழேந்தி ஆகியோர் கலெக்டர் லலிதாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கழிமுகத்தின் படுகையில் அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 120 வீடுகளில் 400 பேர் வசித்து கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.
இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தின் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளும் சேதமடைந்து விட்டது.
தொடர் வெள்ள நீரினால் மண் அரிப்பு ஏற்பட்டு படுகை பகுதி பாதிப்புக்குள்ளாகியது. எனவே எங்களுக்கு ஆற்றின் கரையோரம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, அதில் வீடு கட்டிதர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைவரும் வேறு இடத்துக்கு வருவார்களேயானால் இடம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார்.
- ரேவதி கடந்த ஒரு வருடமாக கணவனை பிரிந்து தனது தாய் மல்லிகா வீட்டில் வசித்து வருகிறார்.
- ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை டவுன், காமராஜர் சாலை அக்பர் காலனியை சேர்ந்தவர் அருள் (எ) ராயப்பன் (வயது 49), ரேவதி (45) தம்பதியினர். காதல் திருமணம் செய்து 26 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
பஸ் நிலைய பகுதியில் சில்லரை வியாபாரம் செய்யும் ராயப்பன் குடிபோதைக்கு அடிமையானவர்.
இதனால் கணவன்-மனைவிக்கி டையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனைவி ரேவதி மயிலாடுதுறை பட்டங்கலத்தெருவில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்து பிள்ளைகளை படிக்க வைத்துள்ளார்.
மகன் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
மகள் பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். ராயப்பன்தினமும் குடித்துவிட்டு தகராறு செய்வதால் ரேவதி கடந்த ஒரு வருடமாக கணவனை பிரிந்து கூறைநாடு விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தாய் மல்லிகா வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ராயப்பன்-ரேவதி தம்பதியரின் திருமண நாளான நேற்று வேலையை முடித்துவிட்டு ரேவதி வீட்டிற்கு சென்று தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்துள்ளார்.
அப்போது, அதனை ஏற்க மறுத்த ரேவதி தன்னுடைய உடைமைகளை தரும்படி கேட்டுள்ளார்.
சரி எனக்கூறி ரேவதியை ராயப்பன் அழைத்து சென்றபோது காமராஜர் சாலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ராயப்பன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
அக்கம்ப க்கத்தினர் ரேவதியை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் செல்வம், ராயப்பனை கைது செய்து கொலைவழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
- ரூ. 1000 பணத்தை வைத்து பல நல்ல புத்தகங்கள் வாங்கி என்னுடைய லட்சியப்படி நான் ஆட்சியராவேன்.
தரங்கம்பாடி:
உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் "புதுமைப்பெண்" திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் ஆணைகளை சுற்றுச் சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்சிவ.வீ.மெ ய்யநாதன் வழங்கினார்.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்று பயன் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.
இது குறித்து மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி கயல்விழி கூறும்போது:-
என் உடன் பிறந்தோர் மூன்று பெண்கள், நான் மூத்தப்பெண். என் போன்ற ஏழை மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் வரபிரசாதமாகும்.
வறுமைக்கோட்டிற்கு கீழே வாழுகின்ற பெண்கள் வாட்டமின்றி, வருத்தமின்றி பட்டப்படிப்பு வரை மகிழ்வோடு பயில இயலும் உரிய – உயரிய அரசுப்பணிக்கு செல்லமுடியும். நான் ரூ. 1000-ம் பணத்தை வைத்து பல நல்ல புத்தகங்கள் வாங்கி என்னுடைய லட்சியப்படி நான் ஆட்சியராக ஆவேன் என்றார்.
ஏ.வி.சி. கல்லூரி மாணவி ஹரினி கூறும்போது:-முதலமைச்சர் அவர்கள் வழங்கிய ரூ.1000-ம் பணத்தை நான் கல்விக்காக பயன்படுத்துவேன். மீண்டும் ஒருமுறை முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.கலைமகள் கல்லூரி மாணவி ராஜஸ்ரீ கூறு ம்போது
புதுமைப்பெண் திட்ட த்தின் கீழ் ரூ.1000-ம் பெற்றுக்கொண்டேன். என்னை போன்ற ஏழை மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
- யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பவித்திர மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு 8 கால யாகபூஜைகள் நடைபெற்றன.
- தங்க கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
சீர்காழி:
சீர்காழியில் தாடாளன் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசத்தலங்களில் 28-வது தலமாக அமைந்துள்ள இந்த கோவிலில் பவித்திர உற்சவம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பவித்திர மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு 8 கால யாக பூஜைகள் நடைபெற்றன.
5-ம் நாள் காலை உதய தங்க கருட சேவையும், சக்கர த்தாழ் வார் தீர்த்தவாரியும் நடை பெற்றது.
தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, தங்க கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மகா பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஆதீனம்.ஸ்ரீனிவாசா ச்சாரியார் பட்டாச்சாரியார், பத்ரி நாராயணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
- விழாவில் 224 மாணவர்களுக்கும், 59 மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
- சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் உயர்பதவிக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்.
சீர்காழி:
சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலை ப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் 224 மாணவர்களுக்கும், 59 மாணவிகளுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
தலைமை யாசிரியர் அறிவுடைநம்பி வரவேற்றார். சீர்காழி மாவட்டக் கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.
பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை வழங்கி பேசுகையில், சிறப்பாக படிக்கும் மாணவர்கள் இந்திய அளவில் நடத்தப்படும் உயர் பதவிக்கான தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும்" என்றார்.
இதில் சீர்காழி நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர், தி.மு.க ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகரமன்ற துணைத்தலைவர் சுப்பராயன், சீர்காழி நகரமன்ற உறுப்பினர்கள் நித்யாதேவிபாலமுருகன், ரமாமணி, வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினர்.
உதவி தலைமை ஆசிரியர்கள் துளசிரெங்கன், வரதராஜன், தி.மு.க நிர்வாகி செந்தில், இருபால் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளியின் உதவித்தமையாசிரியரும் உடற்கல்வி இயக்குநருமான முரளிதரன் நன்றி கூறினார்.
- வேண்டுவோருக்கு அருள்புரியும் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடை பெற்றது.
- புனித நீரை கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருகோலக்காவில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது.
வேண்டுவோருக்கு வேண்டிய மாத்திரத்திலேயே அருள்புரியும் இந்த கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 9ம் தேதி பூர்வாங்க பூஜை, 10ம் தேதி யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜையும் தொடங்கியது.
இன்று காலை 4ம் கால யாக சாலை பூஜைகள் முடிவடைந்து, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மல்லாரி வாத்தியம் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது.
காலை 7:10 மணிக்கு சிவாச்சாரியார்கள், வேத மந்திரம் ஓத கடத்தில் இருந்து புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை கார்த்திகேய சிவாச்சாரியார் தலைமையிலானோர் செய்து வைத்தனர்.
கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்யப்பட்டது.
ஏற்பாடுகளை நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் சிவசுப்பி ரமணியன் தலைமையில செய்திருந்தனர்.
- சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து விழுந்த தீப்பொறியில் இருந்து உருவான முக்குளங்கள் அமைந்துள்ளது.
- ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை இக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய சுவேதாரண்யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது.
காசிக்கு அடுத்தபடியாக விளங்கும் இக்கோவிலில் சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து விழுந்த தீப்பொறியில் இருந்து உருவான முக்குளங்கள் அமைந்துள்ளது.
இங்கு அகோரமூர்த்தி சுவாமி, புதன் பகவான் தனி சன்னதிகளில் அருள் புரிகின்றனர்.
கரிகால் சோழன் மன்னராக ஆட்சி பொறுப்பேற்ற போது அவருக்கு முடிசூட்டும் உரிமம் பெற்ற காணியாளர் நாயனார் மரபினர் வழிவழியாக முடி சூட்டி வந்தனர்.
காணியாளர் நாயனார் தங்களை கரிகால் சோழனிடம் நிரூபிக்கும் வகையில் இக்கோவிலில் உள்ள முக்குளங்களில் தலையில் அகல் விளக்கு வைத்து மூழ்கி விளக்கு அணையாமல் எழுந்திரித்து தங்களை காணியாளர் நாயனார் என நிருபித்தனர்.
அதனை நினைவுபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை காணியாள நாயனார் மரபினர் இக்கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
அதன்படி நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் சண்டி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணா ஹூதி, மகா தீபாராதனை செய்விக்கப்பட்டது.
பின்னர் அகோர மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்து வழிபாடு செய்யப்பட்டது.
இதில் காணியாளர் நாயனார் மரபினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் செல்லும் போது தண்ணீர் எளிதில் சென்று சேர்வதில் தடை ஏற்படுத்துகிறது.
- ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டு பகுதியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சீர்காழி:
கொள்ளிடம் ஆற்றில் 4வது முறையாக 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகை, நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, அளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
கொள்ளிடம் ஆற்றின் கரை அளக்குடியில்தண்ணீர் மோதி திரும்பும் இடத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சரி செய்ய ப்பட்ட பகுதியை ஆய்வு செய்தார்.
பின்னர் கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் கூறுகையில், அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடு பகுதியில் மணல்மேடு உருவாகியுள்ளது.
இதனால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் செல்லும் போது தண்ணீர் எளிதில் சென்று சேர்வதில் தடை ஏற்படுத்துகிறது.
எனவே எளிதில் ஆற்றில் தண்ணீர் செல்லும் வகையில் ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டு பகுதியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அளக்குடி, நாதல்படுகை, முதலைமேடுதிட்டு ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையை தற்போது தற்காலிகமாக சரி செய்யப்பட்டு தொடர்ந்து கரையை வலுவானதாகவும், உயர்த்தியும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு சமர்ப்பித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகு மார், உதவி பொறியாளர்கள் சிவசங்கர், வெங்கடேசன், கனகசரவணன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.






