என் மலர்
மயிலாடுதுறை
- ஆதரவற்ற மற்றும் தொற்றினாள் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.
- நகரப்பகுதிக்கு ரூ.30,000-லிருந்து ரூ.96,000 மாகவும் உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக தாய், தந்தை அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு மிஷன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாதந்தோறும் ரூ.4000 வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதி ஆதரவு உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானச்சான்று உச்ச வரம்பு கிராம பகுதிக்கு ரூ.24000-த்தில் இருந்து ரூ.72000-மாகவும், நகரப்பகுதிக்கு ரூ.30000-லிருந்து ரூ.96000-மாகவும் உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எனவே நிதி ஆதரவு திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வருமானச்சான்று ரூ.72000-(கிராமப்பகுதி), ரூ.96000-(நகரப்பகுதி)-க்குள் பெறப்பட்டு, அதனுடன் குழந்தையின் கல்விச்சான்று, வங்கி கணக்கு எண், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பெற்றோரின் இறப்பு சான்று மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36/2 திருமஞ்சன வீதி, திருஇந்தலூர், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பேரணி மேம்பாலத்தில் தொடங்கி சாய் விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.
- உடல் ஆரோக்கியம், இதயத்தை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தரங்கம்பாடி:
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து உலக இருதய தினத்தை முன்னிட்டு இதயம் காக்க விழிப்புணர்வு நடைபயண பேரணி மேம்பாலத்திலிருந்து சாய் விளையாட்டு மைதானம் வரை நடைபெற்றது.
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை தலைவர் மருத்துவர் பாரதிதாசன் கொடியசைத்து நடைபயண பேரணியை தொடங்கி வைத்தார்.
இதில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், இதயத்தை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நடை பயண பேரணியில் மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு அமைப்பு தலைவர்கள், மருத்துவர்கள், தன்னார்வர்கள், யுவா ஜெயின் சங்கத் தலைவர் மகாவீர்சந்த், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை செயலாளர் மருத்துவர் சௌமித்யா பானு நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை தனியார் மருத்துவமனை, முதுநிலை வணிக குழுவினரும், மருத்துவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.
- பஞ்சபூத மகாயாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மங்கள பொருட்களுடன், பிரசாதம் வழங்கப்பட்டது.
சீர்காழி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு கிராமத்தில் மறைந்த நாடி.ராஜேந்திரா சுவாமிகள் நிர்மானித்த ஒளிலாயம் அமைந்துள்ளது.
இங்கு 18 சித்தர்கள் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களும், பசுக்களை பாதுகாக்க கோசாலைகளும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இங்கு அமைந்துள்ள சத்குரு ஒளிலாயம் பீடத்தில் நிறுவனர் சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 5-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு ஒளிலாயம் பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
உலக நன்மை வேண்டி நிலத்திற்கு அதிபதியான தியாகேசர், நீருக்கு அதிபதியான ஜம்பு கேஸ்வரர், அக்னிக்கு அதிபதியான அருணாச்சலேஸ்வரர், வாய்வுக்கு அதிபதியான காளகஸ்தீஸ்வரர், ஆகாயத்திற்கு அதிபதியான சிதம்பரேஸ்வரர் சுவாமிகள் அம்பாளுடன் எழுந்தருள செய்து, அவர்களுக்கு முன்பாக ஐந்து யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு பஞ்சபூத மகா யாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி திபாராதனை நடைபெற்றது.
பின்னர் மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து சுமார் 1500பெண்களுக்கு சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று சேலைகளை வழங்கினார்.
அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ ம.சக்தி, பேரூர் செயலாளர் போகர்.ரவி, முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மங்களப் பொருட்களுடன், நெய்வேத்திய பிரசாதம் வழங்கப்பட்டது.
குருபூஜை விழாவிற்கான ஏற்பாடுகளை ஒளிலாயம் பீடத்தின் நிர்வாகிகள் நாடி.செல்வமுத்துகுமரன், நாடி.செந்தமிழன், நாடி.மாமல்லன், நாடி.பரதன் மற்றும் கிராமமக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.
- நகராட்சி தொடங்கப்பட்டு 50-வது ஆண்டு தொடங்குவதன் தொடக்கவிழா நடைபெற்றது.
- எடமணல் கிராமத்தில் உள்ள நகராட்சிக்கு உரிய திடலில் மரக்கன்றுகள் நடும் விழா.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் தொடங்குவதின் தொடக்கவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள நகராட்சிக்கு உரிய திடலில் மரக்கன்றுகள் நடும் விழா நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
பணிதள மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், நகராட்சி எழுத்தர் ராஜகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராஜசேகரன், வேல்முருகன், ஜெயந்திபாபு, ரமாமணி, முபாரக், சாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
- ஆஞ்சநேயருக்கு பல்வேறு திரவிய ெபாடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பாலவட ரங்கநாதர் கோயில் உள்ளது.
நேற்று இரண்டாவது புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பாலவடரங்கநாதர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் மற்றும் மருத்துவப் பொடிகளால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் ஆலய அர்ச்சகர் ரமேஷ்ஐயர் செய்திருந்தார்.
- உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
- 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, கருவாழக்கரை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). இவரது எதிர் வீட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் என்கிற ராஜசேகர் (34).
இவர்கள் இருவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 2016-ம் ஆண்டு கணேசன் மற்றும் அவரது உறவினர்கள் அமிர்தம், லட்சுமி ஆகியோர் அங்கு நின்று கொண்டிருந்தபோது் ராஜசேகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெங்கடேசன் (33), வெங்கடேஷ் (33), மணி (38), முனி என்கிற மணிகண்டன் (27), விஜி என்கிற விஜய் (27), விக்னேஷ் (28) ஆகிய 7 பேரும் சேர்ந்து கணேசன், அமிர்தம், லட்சுமி ஆகிய 3 பேரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
மேலும் கணேசன் வீட்டில் இருந்த நாற்காலிகள், ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று மாவட்ட கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி இளங்கோ தீர்ப்பு வழங்கினார்.
ராஜசேகர், வெங்கடேசன், வெங்கடேஷ், மணி, விஜய், விக்னேஷ் ஆகிய 6 பேருக்கும் 4 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், மணிகண்டனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார்.
அபராத தொகையை கட்டத்தவறினால் தலா 2 மாதம் கடுங்காவல் தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
- இருவரும் புதுக்குப்பத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தருமகுளம் நோக்கி சென்றுள்ளனர்.
- படுகாயமடைந்த கணபதி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுகுப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் மகன் நவீன் (வயது17), ஏழுமலை மகன் கணபதி. (24).
இருவரும் புதுக்குப்பத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தருமகுளம் நோக்கி சென்றுள்ளனர்.
இதே போல் சாவடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் தருமகுளத்தில் இருந்து ஊர் திரும்பி உள்ளார்.
அப்போது நெய்தவாசல் சீரா வெட்டி அய்யனார் கோவில் அருகே இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மூவரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவெண்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி சத்யராஜ் உயிரிழந்தார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது நவீன் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த கணபதி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த பூம்புகார் போலீசார் விரைந்து வந்து விபத்தில் உயிரிழந்த சத்யராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- வேளாண் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மாணவிகள் மரக்கன்றுகள் மற்றும் நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
சீர்காழி:
சீர்காழி அருகே சோதியக்குடி கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் தொடக்கவிழா நடைபெற்றது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் வேளாண் பட்டப்படிப்பு இறுதிஆண்டு பயின்று வரும், மாணவ-மாணவிகள் வேளாண் தொழிலில் நேரடி அனுபவம் பெரும் பொருட்டு கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி புத்தூர் அருகேயுள்ள சோதியக்குடி கிராமத்தில் தங்கிபயிற்சிபெறும் திட்டம் தொடக்கவிழா ஊராட்சி மன்ற தலைவர் கே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் டி.ஜெயசீலன் மற்றும் மணிவண்ணன் சிறப்புறையாற்றினர். தொடர்ந்து மாணவிகள் மரக்கன்றுகள், நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினர்.
விழாவில் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், விவசாயிகள் சக்திவேல், பிரதாமசந்திரன், மகாலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
வேளாண் புல இறுதியாண்டு பயிலும் 16 மாணவிகள் 75 நாட்கள் அக்கிராமத்தில் தங்கி வேளாண் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என நேரடி அனுபவங்களை தெரிந்து கொள்ள உள்ளனர்.
- 27 நட்சத்திரங்களுக்குரிய மரங்களும், பசுக்களை பாதுகாக்க கோசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
- இறை அன்பர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகிழ்ச்சி நடைபெறுகிறது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேடு சித்தர் புரத்தில் மறைந்த ராஜேந்திரா சுவாமிகள் நிர்மாணித்த ரீ சத்குரு ஒளிலாயம் அமைந்துள்ளது. இங்கு 18 சித்தர்கள் தனி சன்னதியில் அருள் புரிகின்றனர்.
இந்த ஓளிலாயத்தில் 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களும், பசுக்களைப் பாதுகாக்க கோசாலைகளும் அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ரீ சத்குரு ராஜேந்திரா சுவாமிகளின் 5ம் வருட மகா குருபூஜை விழா பஞ்சபூத ஸ்தல சிவசக்தி மகாயாக வைபவம் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. காலை குருபூஜை பஞ்சமுக தல சிவசக்தி மகாயாகம் நடைபெறுகிறது.
மதியம் 12 மணியளவில் இறை அன்பர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகிழ்ச்சி நடைபெறுகிறது.
நலத்திட்ட உதவிகளை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் பி.வி.பாரதி, முன்னால் எம்.எல்.ஏ சக்தி ஆகியோர் வழங்கி துவக்கி வைக்கின்றனர்.
ஏற்பாடுகளை நாடி.செல்வ முத்துக்குமரன், நாடி. செந்தமிழன், நாடி.மாமல்லன், நாடி பரதன் மற்றும் ராஜேந்திரா சுவாமிகள் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
- மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது.
- பஞ்சு மூட்டைகளை விற்பனைக்காக வெளியே எடுத்து செல்ல முடியாமல் சிரமமடைந்துள்ளனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எருக்கூர் மெயின் ரோட்டிலிருந்து அக்ரஹாரம் மற்றும் மேலத்தெருவு ஆகிய இடங்களுக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர மண் சாலை மேம்படுத்தப்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது.
மழை பெய்யும் போது சாலையில் மழைநீர் தேங்கி சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் மழைக்காலங்களில் அச்சாலையை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்த தெருக்களில் சுமார் 150குடும்பத்தினர்கள் வசித்துவருகின்றனர். ஆனால் அங்கு செல்லும் சாலை இதுவரை மன்சாலையாகவே இருந்து வருகிறது.
இதனால் விவசாயிகள் எருக்கூர் கிராமத்திலிருந்து நெல் மூட்டைகள், பஞ்சு மூட்டைகள் மற்றும் வைக்கோல் உள்ளிட்டவைகளை விற்பனைக்காக வெளியே எடுத்துச் செல்லும் போது சிரமம் அடைந்து வருகின்றனர்.
மழை பெய்து விட்டால் இந்த சாலையில் நடந்து செல்ல கூட முடியாத நிலை ஏற்படுகிறது. அவசர காலத்தில் ஆட்டோ மற்றும் 108 ஆம்புலன்ஸ் கூட வந்து செல்வதில் சிரமம் உள்ளது.
எனவே இப்பகுதியில் உள்ள கிராம மக்கள் நலன் கருதி மண் சாலையை தார் சாலையாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சாலையோரம் இருந்த கலைச்செல்வி என்பவர் வீட்டின் முன்புறம் அரசு பஸ் மோதியது.
- மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே மணிவண்ணன் கீழே விழுந்து உயிரிழந்தார்.
சீர்காழி,:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தற்காஸ் கிராமம் செல்லத்தம்பாள் நகரைச் சேர்ந்த மணிவண்ணன் (45). கூலி தொழிலாளி.
இவர் சிதம்பரத்திலிருந்து பழையாறு துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்ஸில் செல்லத்தம்பாள் பஸ் நிறுத்தத்தில் ஏறி அடுத்துள்ள தற்காஸ் பஸ் நிறுத்தத்தில் இறங்க முயன்றபோது, பஸ் நிறுத்தம் அருகே, எதிரே வந்த ஒரு தனியார் பஸ்ஸுக்கு வழி விட முயன்ற போது சாலையோரம் இருந்த கலைச்செல்வி என்பவர் வீட்டின் முன்புறம் அரசு பஸ் மோதியது.
இதில் அந்த வீட்டிலிருந்து வந்த மின் வயர் பேருந்தின் முன் பகுதியில் தொங்கிக்கொண்டு பஸ்ஸிலும் சிக்கியது.
இதில் பஸ்ஸின் முன் பகுதியிலிருந்த கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்ஸிலிருந்து இறங்க முயன்ற மணிவண்ணன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மணிவண்ணன் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிவண்ணன் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த மணிவண்ணனுக்கு செல்வி (40) என்ற மனைவியும், கனிவண்ணன் (25) என்ற மகன், கௌசல்யா (15) என்ற மகளும் உள்ளனர்.
- இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது.
- 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிருபர்களை சந்தித்த ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கூறியதாவது,
இந்திய தேசம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் சென்று கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
இந்திரா காந்தி அவசரகால சட்டம் கொண்டு வந்த போது கூட சில அடக்குமுறைகளை செய்தாலும் பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெற்றது.
ஆனால் இன்று அது போன்ற அவசர கால சட்டம் இல்லாமல் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வருகிறோம்.
இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இஸ்லாமிய வெகுஜன அமைப்பை பா.ஜனதா அரசு தடை செய்துள்ளது.
தொடர்ந்து இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் அந்த மக்களுக்கு இருந்த தனி அந்தஸ்து என்கிற சட்டத்தை நீக்கியது.
பிஎப்ஐ பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்துள்ளது.
குறிப்பாக கொரோனா காலங்களிலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சேவைகளை செய்துள்ளனர்.
இவர்களைத்தான் தேச விரோத சக்திகள் என ஒன்றிய அரசு கூறி தடை செய்துள்ளது அதேபோல் இஸ்லாமியர்களை பழிவாங்கும் விதமாக சி.ஏ.ஏ என்.சி.ஆர் உள்ளிட்ட கருப்பு சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியது.
அதனை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளும் வெற்றிகரமாக செய்து முடித்தது என்பதை கருத்தில் கொண்டு 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.
பாசிச ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்கு திரும்பிவிடும் என்பதாலேயே பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இந்த அமைப்பை வீண்பழி சுமத்தி தேச விரோதிகள் எனக்கூறி தடை செய்துள்ளனர்.
இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
காந்தி ஜெயந்திக்கும் ஆர்எஸ்எஸுக்கும் என்ன தொடர்பு உள்ளது? காந்தியையும் காந்தி கொள்கையையும் விமர்சித்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை ஆதரித்தவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இவர்கள் காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்திலே பேரணி நடத்த உள்ளார்கள்.
இதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு இதில் என்ன செய்யப் போகிறது.
ஆகவே உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்து இந்த பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும்.
இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்.
எடப்பாடி ஆட்சியில் கூட அனுமதி கிடைக்கவில்லை.
ஆனால் தற்போது அனுமதி கிடைக்கும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
அப்போது மாநிலத் துணைத் தலைவர் முசாஹூதீன், மாவட்டத் தலைவர் முதியுதீன், மாவட்ட செயலாளர் ஹாஜா மொய்தீன், மாவட்ட துணை செயலாளர் முகமது மசாயிக், மாநில ஊடக அணி துணை செயலாளர் ப ஷிர் அகமது, நகர தலைவர் ரபீர் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






