என் மலர்
மதுரை
- அவனியாபுரத்தில் 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- மாணவி தற்கொலை குறித்து வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனி ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வழி விட்டான். இவரது மனைவி மீனாம்பாள். இவரது மகள் மீனாட்சி (வயது 14). இவர் அங்கு உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
மீனாட்சிக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும் அவரை பெற்றோர் படிக்கச் சொல்லி கட்டாயப்படு த்தியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த மீனாட்சி தனது உட லில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி மாணவி மீனாட்சி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி தற்கொலை குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அவனியாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சோழவந்தானில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
- இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழ வந்தான் அரசர் சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளி விளை யாட்டு மைதானத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி நடந்தது.
சோழவந்தான் தி.மு.க. சார்பில் நடந்த இந்த போட்டியில் மதுரை, கோவை, ஏற்காடு, ஸ்ரீவில்லிபுத்தூர், ெநல்லை, தூத்துக்குடி, வத்தலகுண்டு, திண்டுக்கல், சோழவந்தான் உள்பட 18 அணிகள் கலந்து கொண்டன. இதில் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும், 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் 3 நாட்கள் நடந்தன.
நேற்று இரவு இறுதிப் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர்கள் (சோழவந்தான்) ஜெயராமன், (வாடிப்பட்டி) பால்பாண்டி, துணைத்தலைவர்கள் லதா கண்ணன், கார்த்தி, ஆனையூர் பகுதி செயலாளர் மருது பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, கவுன்சிலர்கள் டாக்டர் மருது பாண்டியன், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரச் செயலாளர் கவுன்சிலர் வக்கீல் சத்ய பிரகாஷ் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த ஆட்டக்காரர்களுக்கும் பரிசுகள் மற்றும் கேட யங்களை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை ஜெ.ஜெ.கூடைப்பந்து போட்டி கிளப் தலைவர் முரளி சோழகர் செய்திருந்தார்.
- பரவையில் வாலிபர் கொலையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள பரவை கம்பர் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லாலு, சங்கர்லால் ஆகிய 2 பேருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற் பட்டது.
லாலுவின் தாத்தா நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். எனவே அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்த னர். இந்த நிலையில் துக்க நிகழ்ச்சியின் போது வெங்கடேசன் மற்றும் அவரது நண்பர்கள், லாலு வீடு வழியாக சென்றுள்ளனர். இதனை பார்த்த லாலு, சங்கர்லால் ஆகியோர் வெங்கடேசனை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்களும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பிரச்சினை முற்றவே, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வெங்கடேசன் கத்தியால் குத்தப்பட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கொலை செய்ததாக லாலு, சங்கர்லாலை கைது செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கண்டெய்னர் லாரி மோதி வாலிபர் பலியானார்.
- கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பலமாக மோதியது.
திருமங்கலம்
திருவள்ளூர் மாவட்டம் புத்தாகரம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் ஈஸ்வரன் (வயது24). இவர் நெல்லையில் உள்ள தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் குதிரைசாரிகுளம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து பற்றி அறிந்த போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து ஈஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக ஈஸ்வரனின் தாய் மாரியம்மாள் திருமங்கலம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோலம் போடுவதில் தகராறில் பெண்ணை தாக்கியுள்ளனர்.
- இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது.
மதுரை
அண்ணாநகர் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ரவீந்திரநாத் மனைவி பாக்கியலட்சுமி (54). சம்பவத்தன்று இவர் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் ராஜா மனைவி ருத்ரவல்லி (40) எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்புக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. இதில் பாக்கியலட்சுமி தாக்கப்பட்டார். இது குறித்து அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்ரவள்ளி, அவரது சகோதரர் வன்னிமுத்து சேகர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே வழக்கில் ருத்ரவள்ளி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்கியலட்சுமி, அவரது சகோதரி சத்யா, வேலைக்காரர், கார் டிரைவர் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போக்குவரத்து போலீசாரின் வித்தியாச விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
- 5 நிமிடத்தில் 5 ஆயிரம் வாகனங்களுக்கு கருப்பு போக்குவரத்து ஒட்டப்பட்டது.
மதுரை
மதுரை மாநகர சாலைகளில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செல்கின்றனர்.
வாகனங்களின் முன் பக்கத்தில் நவீன ஒளி விளக்குகள் பொருத் தப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றைகள், கண்களை கூச வைக்கும் தன்மை உடையவை. குறிப்பாக வாகனங்களில் இருந்து வெளியாகும் ஒளிக்கற்றைகள் எதிரே வரும் வாகன ஓட்டிகளை நிலைகுலைய செய்யும் தன்மை உடையவை. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
மதுரை மாநகரில் ஓடும் இருசக்கர- 3 சக்கர- 4 சக்கர வாகனங்களில், கண்கூச வைக்கும் விளக்குகளின் அளவை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாநகர போலீசார் முடிவு செய்தனர். இது பயணிகளிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகசாமி முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரை மாநகரில் நேற்று மாலை 5.30 முதல் 5.35 மணி வரை சாலைகளில் வாகனங்களை தணிக்கை செய்து, கண் கூச வைக்கும் விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்தும் வகையில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று போலீசார் உத்தரவு பிறப்பித்தனர். இன்ஸ்பெக்டர்கள் தங்க மணி (தெப்பக்குளம்), கணேஷ்ராம் (தெற்கு வாசல்), நந்தகுமார் (பெரியார் பஸ் நிலையம்), பூர்ணகிருஷ்ணன் (திருப்ப ரங்குன்றம்), தங்கப்பாண்டி (அவனியாபுரம்), ரமேஷ்குமார் (மீனாட்சி அம்மன் கோவில்), சுரேஷ் (தல்லாகுளம்), ஷோபனா (மதிச்சியம்), பஞ்சவர்ணம் (மாட்டுத்தாவணி) ஆகியோர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் உடனடியாக களத்தில் இறங்கினர்.
மதுரை மாநகரில் நேற்று மாலை போலீசார் ஆங்காங்கே உள்ள சந்திப்புகளில் வாக னங்களை தடுத்து நிறுத்தி தணிக்கை செய்தனர். அப்போது பெரும்பாலான வாகனங்களில் கண் கூசும் தன்மை உடைய விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. அந்த வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு ஒளிவீச்சின் தன்மை குறைக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 5 நிமி டங்களில் 5 ஆயிரம் வாகனங்களுக்கு கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. தெப்பக்குளத்தில் மட்டும் 500 வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இதன் மூலம் வாகன ஓட்டிகளிடம் கண் கூச வைக்கும் விளக்குகளின் உபயோகம் குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி உசிலம்பட்டியை அடுத்த சீமானூத்து கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி, சென்னை இ.பி.எம்.சி.ஆர். நிர்வாக இயக்குநர் கவின்குமார், பொறி யாளர்கள் வினோத்குமார், சவுமியா சிரபன் மற்றும் குழுவினர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு 7 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மைதானம் மற்றும் அரங்கம் அமைய உள்ளது.
இந்த ஆய்வின்போது கீரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னச்சாமி, கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா, அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி நகரச் செயலாளர் சசிகுமார், ஒன்றிய செயலாளர் ஜான்சன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அணி சிவன் ஆகியோர் உடனிருந் தனர்.
- மின்வாரிய தொழிலாளர்கள் கூட்டம் நடந்தது.
- கேங்மேன் பணியாளர்களை கள பணி உதவியாளராக நியமிக்க வேண்டும்.
சோழவந்தான்
சோழவந்தானில் தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் மண்டல பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் சசாங்கன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ரவி, வரதராஜன், ஜேம்ஸ் கென்னடி முன்னிலை வகித்தனர்.
மண்டல தலைவர் கண்ணன் வரவேற்றார். மாநில துணை பொதுசெயலாளர் பாரி சிறப்புரையாற்றினார். ஒப்பந்ததொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கேங்மேன் பணியாளர்களை கள பணி உதவியாளராக நியமிக்க வேண்டும். தரம் உயர்ந்த மற்றும் புதிய துணை மின்நிலையங்களில் பணியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட நிர்வாகி வசந்த்குமார், அய்யர்தேவர், அந்தோணி மற்றும் ஜனதா தளம் நிர்வாகிகள் செல்லப்பாண்டி, ஜெயபிரகாசம், ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொண்டனர்.
- 150 ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டன.
மதுரை :
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் முனியாண்டிசுவாமி கோவில் உள்ளது. முனியாண்டி சுவாமிக்கு முழு உருவசிலை உள்ள கோவில்களில் இதுவும் ஒன்று.
ஆண்டுதோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இக்கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் பக்தர்களுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பிரியாணி தயார் செய்து வழங்குவது வழக்கம்.
அதன்படி 88-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
தங்களது வீடுகளில் இருந்து தேங்காய், பழம், பூத்தட்டுகளை தலையில் சுமந்தபடி பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டன. பின்னர் அவற்றை கொண்டு கோவிலில் அசைவ பிரியாணி தயார் செய்தனர். அந்த பிரியாணியை கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமாக பார்சல்களில் வழங்கினர்.
இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
- சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையும்.
- மதுரையில் நடந்த மாநாட்டில் தலைவர்கள் பேசினார்கள்.
மதுரை
மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம் சார்பில் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி திறந்தவெளி மாநாடு நடந்தது.
இதில் தி.க. தலைவர் வீரமணி, தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் அழகிரி, அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ. கோ.தளபதி, பூமிநாதன் மற்றும் தி.மு.க. மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கணேசன், அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீ.வீரமணி பேசியதாவது:-
சேது சமுத்திர திட்டம் நிறைவேறி இருந்தால் தமிழகம் வளம் மிக்க மாநிலமாக மாறி இருக்கும். இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல் பா.ஜ.க. பிடிவாதம் பிடிக்கிறது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்ப ட்டிருப்பதால் சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தை வலியுறுத்தி வருகிற 3-ந் தேதி ஈரோட்டில் பிரசாரம் தொடங்கப்படும்.
அதனைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.பாலு எம்.பி. பேசுகையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். குழந்தையை பெற்றெடுத்து ஊனமாக்கியது போல் இந்த திட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு பா.ஜ.க. துரோகம் செய்கிறது.
2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாது. சேது சமுத்திர திட்டத்திற்கு மத சாயம் பூசக்கூடாது என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் அனைத்துக்கட்சி தலைவர்களும் பேசினர்.
- மதுரை நாடார் வித்தியாசாலை பள்ளிகளில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
- 2 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
மதுரை
மதுரை தெற்குவாசல் நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். தெற்குவாசல் நாடார் சங்கத்தலைவர் கணபதி, செயலாளர் மயில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாடார் பள்ளிகள் செயலா ளர் குணசேகரன் வர வேற்றார். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி செயற்குழு உறுப்பினர் அன்பரசன், தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கவுரவ தலைவர்கள் ராஜன், முனிராஜன், பொருளாளர் என்.எல்.ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதேபோல் நாடார் வித்யாசாலை நடுநிலைப்பள்ளியிலும் குடியரசு தினவிழா கொண்டாடப் பட்டது. தலைமை யாசிரியர் நாகநாதன் தொடக்கவுரை யாற்றினார்.
நாடார் வித்யாபிவிருத்தி சங்க அறப்பணிக்குழு தலைவர் உத்தண்டன் தேசியக்கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினர்களாக துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணைச் செயலாளர் அருஞ்சுனைராஜன் ஆகியோர் கலந்து கொண்ட னர். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை காந்திபாய் சுவாமி அடியார் நன்றி கூறினார்.
2 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
- தொழிலதிபரை ஏமாற்றி ரூ.13.5 லட்சம் மோசடி செய்த பெண் ஜிம் பயிற்சியாளர் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம்,
மதுரை
மதுரை ஜரிகைக்கார தெருவை சேர்ந்தவர் அமீர்முகமது (வயது 37). தொழில் அதிபரான இவர் திடீர் நகர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது மனைவி உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கு ஜிம் பயிற்சியாளர் ஸ்வேதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ஸ்வேதா, அவரது அத்தை, அத்தை மகள் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய 4 பேர் என்னை தேடி வந்து ஜிம் ஒன்றை நடத்தலாம், இதில் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.
இதனை நம்பிய நான் அவர்களிடம் 11 லட்சம் ரூபாயை கொடுத்தேன். இது தவிர 2.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளையும் கொடுத்தேன்.
ஆனால் ஸ்வேதா குழுவினர் ஜிம் நடத்துவ தற்கான பணிகளில் ஈடுபட வில்லை. எனவே நான் அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்வேதா, பிரியதர்ஷினி, ஸ்வேதா அத்தை, மற்றும் அவரது மகள் ஆகிய 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






