என் மலர்tooltip icon

    மதுரை

    • வாடிப்பட்டி அருகே பாலிஷ் செய்து தருவதாக கூறி பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்தனர்.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை வாடிப்பட்டி போலீசார் தேடிவருகின்றனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கூழாண்டிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அன்ன மயில் (வயது 70). இவர் தனது மகன் வீரமணியுடன் வசித்து வருகிறார்.

    நேற்று காலை அன்னமயில் தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க 2 நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் அன்னமயிலிடம் தாங்கள் நகையை பாலிஷ் செய்து கொடுக்கும் தொழில் செய்து வருவதாகவும், உங்கள் நகையை கொடுத்தால் பாலிஷ் செய்து கொடுப்போம் என கூறியுள்ளனர்.

    இதை நம்பிய அன்னமயில் தன் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பாலிஷ் போட அவர்களிடம் கொடுத்துள்ளார். மர்ம நபர்களும் சிறிது நேரம் பாலீஷ் போடுவதுபோல் நடித்து அன்னமயிலிடம் கவரிங் நகையை கொடுத்து 5 பவுன் செயினை அபேஸ் செய்து தப்பினர். நகை மினுமினுப்பதை பார்த்து அன்னமயிலும் நம்பிவிட்டார்.

    சிறிது நேரம் கழித்து பார்த்தபோது 2 பேரும் கவரிங் நகையை கொடுத்துவிட்டு தங்க செயினை திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அன்னமயில் இதுகுறித்து வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் நித்யபிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சிங்கப்பூரில் சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பிடித்த திருமங்கலம் மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • இந்த போட்டிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான 8 பேர்களில் மதுரை மாவட்டத்தில் இவரும் ஒருவர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் சியோன் நகரை சேர்ந்த ராஜசேகரன் மகன் கேரிகிப்ட்சன் சாம்(வயது10). மறவன்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். சிலம்பாட்டத்தில் ஆர்வமுடைய இவர், சிங்கப்பூரில் நடந்த சர்வதேச போட்டிக்கு தேர்வானார். இந்த போட்டிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வான 8 பேர்களில் மதுரை மாவட்டத்தில் இவரும் ஒருவர். தாயார் ரூபி, சிலம்ப மாஸ்டர் பொன்னுசாமி ஆகியோருடன் சிங்கப்பூர் சென்ற கேரி கிப்ட்சன் சாம் 10 வயதுக்குட்பட்டோருக்கான சிலம்பாட்ட போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்தார்.

    இவருக்கு உலக சிலம்பாட்ட தலைவர் டென்னிசன், சிங்கப்பூர் சிலம்பாட்ட தலைவர் சந்திரபிரபு ஆகியோர் பதக்கமும், சான்றிதழும் வழங்கினர். திருமங்கலம் திரும்பிய மாணவர் கேரிகிப்ட்சனை பொதுமக்கள் பாராட்டினர்.

    • ராமேசுவரம் -மதுரை ெரயில் நேரம் நாளை முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    ராமநாதபுரத்தில் ெரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் ெரயில் போக்குவரத்தில் நாளை (1-ம் தேதி) முதல் 28-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி ராமேசுவரத்தில் இருந்து வியாழன் தவிர மற்ற நாட்களில் காலை 11 மணிக்கு கிளம்ப வேண்டிய மதுரை சிறப்பு ரயில் (06654) ராமநாதபுரத்தில் இருந்து 2 மணி நேரம் தாமதமாக மதியம் 1.05 மணிக்கு புறப்படும்" என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மதுரை அருகே கட்டிட காண்டிராக்டரிடம் பணம், செல்போன்கள் திருடப்பட்டன.
    • இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மதுரை

    சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்தி சிவராஜ் (வயது 36). கட்டிட கான்ட்ராக்டரான இவர் மதுரை துவரிமான் மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் தங்கி, நாகமலை புதுக்கோட்டையில் திருமண மண்டபம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி தங்க வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் சக்தி சிவராஜ் சம்பவத்தன்று இரவு அறையில் படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அவர் வைத்திருந்த 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 செல்போன்களை காணவில்லை. இது தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் அறைக்குள் புகுந்து பணம் மற்றும் செல்போன்களை திருடியது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி மேற்கண்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வாடிக்கையாளர்கள் பணத்தை திருப்பித்தருமாறு உமாசங்கருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
    • பங்குச்சந்தை நஷ்டத்தில் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை கரிமேடு நடராஜ்நகர் மல்லிகை தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 72). இவரது மகன் உமாசங்கர் (46). இவர் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார்.

    இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அனிதா பிரிந்து சென்று விட்டார். இதனால் உமாசங்கர் தேனியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரும் கணவருடன் பிரச்சினை செய்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உமாசங்கரை நம்பி அவரது நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் லட்சக்கணக்கில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தனர்.

    உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தது. இதில் உமாசங்கர் முதலீடு செய்த பங்குகள் சரிவை கண்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டன. வாடிக்கையாளர்கள் பணத்தை திருப்பித்தருமாறு உமாசங்கருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.

    இதனால் கடந்த சில மாதங்களாக உமாசங்கர் மன வேதனையில் இருந்து வந்தார். இதுகுறித்து தனது தாய் விஜயலட்சுமியிடம் கூறி வந்துள்ளார். முதலீடு செய்தவர்கள் பணத்தை திருப்பித்தருமாறு வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    குடும்ப பிரச்சினை, தொழில் நஷ்டம் காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த உமாசங்கர், அவரது தாய் விஜயலட்சுமி ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு வீட்டில் 2 பேரும் விஷம் குடித்து இறந்தனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கரிமேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தாய்-மகன் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பங்குச்சந்தை நஷ்டத்தில் தாய்-மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • டிரைவர் சிவபாபுவின் மண்டை உடைந்தது.
    • திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவ பாபு(வயது26). லாரி டிரைவர். இவரது லாரியின் கிளீனர் சூரஜ்(20). இருவரும் டெல்லியில் இருந்து இன்வெர்ட்டர் பேட்டரி லோடுகளை ஏற்றிக் கொண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டைக்கு கடந்த 25-ந் தேதி லாரியில் புறப்பட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு கப்பலூர் சிட்கோவுக்கு லாரி வந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிட்கோவில் உள்ள இன்வெர்ட்டர் பேட்டரி நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு கிளீனர் சூரஜூடன் சாப்பிடுவதற்காக கூத்தியார்குண்டுக்கு சென்றார்.

    சாப்பிட்டு விட்டு இருவரும் மதுரை-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சா்வீஸ்ரோடு அருகே நடந்து வந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென்று இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் டிரைவர் சிவபாபுவின் மண்டை உடைந்தது.

    பின்னர் இருவரிடமும் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளை கும்பல் பறித்து கொண்டு மர்மகும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பியது.

    காயமடைந்த சிவ பாபு திருமங்கலம் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம்-செல்போன்களை பறித்து சென்றவர்கள் யார்? என்பதை கண்டறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பி.பி.சி. ஆவணப்படம் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • ஜெய்ஹிந்துபுரத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மதுரை

    குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, பி.பி.சி. நிறுவனம், ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில் கலவரத்துக்கு சூத்திரதாரி யார்? என்பது தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

    இந்த ஆவண படத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தப் படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பி.பி.சி. ஆவணப்படம் தடையை மீறி திரையிடப்பட்டு வருகிறது.

    மதுரை ஜெய்ஹிந்துபுரம், வீரகாளியம்மன் கோவில் தெருவில் பி.பி.சி. ஆவணப்படம் திரையிடப்படும் என்று அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தி ருந்தது. நேற்று அந்தப் படத்தை திரையிடுவதற்கான முயற்சி நடந்தது.

    அப்போது பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகள், பி.பி.சி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்தப் படத்தை திரையிடக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பி.பி.சி. ஆவண படத்தை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திரையிடுவது என்று நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    படம் பார்க்க வரும் பொது மக்களுக்கு இலவசமாக பாப்கார்ன் வழங்கவும் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் பி.பி.சி. ஆவண பட வெளியீட்டை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளன.

    இதையடுத்து ஜெய்ஹிந்து புரம் ஜீவா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

    • காந்தி மியூசியத்தில் அஸ்திக்கு மலர்தூவி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    • ஜப்பான் மொழியில் காந்தியின் புகழை கூறும் பாடலை இசைக்கருவி மூலம் வாசித்தார்.

    மதுரை

    மதுரையில் மகாத்மா காந்தியின் நினைவை போற்றும் வகையில் காந்தி மியூசியம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காந்தியின் வரலாற்று தகவல்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது.

    காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த ஆடை, அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு காந்தியின் அஸ்தி பீடம், காந்தியின் சிலை உள்ளது. காந்தியின் வாழ்க்கையில் மதுரை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இங்குள்ள மக்களை பார்த்ததும் அவர் தனது ஆடைகளை குறைத்து கொண்டார். இங்குள்ள விவ சாயிகள் போல் ஆடைகளை அணிய தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மகாத்மா காந்தி யின் 75-வது நினைவு நாளையொட்டி இன்று காந்தி மியூசியத்தில் அவரது சிலைக்கு அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ், இத்தாலி நாட்டி லிருந்து வந்த மாசிலோனா, லோரா உள்ளிட்ட வெளி நாட்டு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

    ஜப்பான் நாட்டு புத்த பிட்சு மஸ்தாவோ இஸ்தானி காந்தி சிலையின் காலில் விழுந்து வணங்கி மரியாதை செய்தார். அதன் பிறகு ஜப்பான் மொழியில் காந்தியின் புகழை கூறும் பாடலை இசைக்கருவி மூலம் வாசித்தார்.

    • புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அரசு செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே கப்பலூர் மற்றும் தோப்பூர் பகுதிகளில் உள்ள அரசு நெல் சேமிப்பு கிடங்கில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு வரை திறந்தவெளியில் தார்பாய்கள் மூடப்பட்ட நெல் சேமிப்பு கிடங்குகள் பரவலாக காணப்பட்டது. இதுபோன்று நிலைமை இருக்கக்கூடாது என்ப தற்காக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    அதன்படி, 18 மாதங்களில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 213 இடங்களில் சுமார் 2.86 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவிற்கு ரூ. 238 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு அமைக்க ஆணை வெளியிட்டது. மேலும் தற்போது உள்ள 18000 மெட்ரிக் டன் கொள்ளளவு கப்பலூர் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 213 இடங்களில் 106 பகுதிகளில் 105 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிவு பெற்று தயார் நிலையில் உள்ளது.

    நியாய விலைக் கடை ரேஷன் கார்டுகளை பொறுத்தவரை 3 வகையான கார்டுகள் உள்ளன. இதில் ஒரு கோடியே 14 லட்சம் அட்டைகள் முன்னுரிமையாக அந்தியோதயா திட்டத்தை உள்ளடக்கிய அட்டைகள், 1.04 லட்சம் முன்னுரிமையற்ற அட்டைதாரர்களும் அரிசி கேட்கிறார்கள்.

    சர்க்கரை அட்டை தாரர்கள் 3.82 லட்சம் பேர் உள்ளனர். பொருட்கள் எதையும் வாங்காமல் 60,000 அட்டைதாரர்கள் உள்ளனர். மொத்தத்தில் 2.23 கோடி ரேசன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளது. இதில் முன்னுரிமை அட்டைகளில் மாற்றுத்திறனாளிகள் 6.6 லட்சம் பேர் சேர்த்துள்ளோம்.

    இதேபோல் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு 2 வாரத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் ரேசன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக மே-2021 முதல் தற்போது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 132 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பொங்கல் பரிசு 1000 ரூபாயை 39 ஆயிரம் பேர் வாங்கவில்லை.
    • இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    மதுரை-விருதுநகர்

    மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 28 ஆயிரத்து 422 குடும்ப அட்டைகளுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 98 ஆயிரத்து 956 குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 பணம் வழங்க ரேஷன் கடைகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருந்தது.

    ஆனால் மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 983 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 90 ஆயிரத்து 29 பேர் மட்டுமே ரூ.1000 வாங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 439 குடும்ப அட்டை தாரர்களும், விருதுநகர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 927 குடும்ப அட்டை தாரர்களும் 1000 ரூபாய் வாங்கவில்லை.

    ராமநாதபுரம்-சிவகங்கை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 742 குடும்ப அட்டைகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 316 குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 பணம் வழங்க ரேஷன் கடைகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருந்தது.

    ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 349 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ரூ.1000 வாங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 393 குடும்ப அட்டை தாரர்களும், சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 332 குடும்ப அட்டை தாரர்களும் 1000 ரூபாய் வாங்கவில்லை.

    மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களிலும் 39 ஆயிரத்து 91 பேர் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வாங்கவில்லை.

    • மின் வாரிய அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    மதுரை

    உசிலம்பட்டி கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உசிலம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் நாளை (31-ந்தேதி) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது.

    இதில் செயற்பொறியாளர் மங்களநாதன் கலந்து கொண்டு மின் நுகர்வோர்களின் குறைகளை கேட்கிறார்.

    இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    • மதுரையில் திடீரென்று வேன் தீப்பற்றி எரிந்தது.
    • அதில் இருந்து திடீரென குபுகுபுவன கரும்புகை வெளிவந்தது.

    மதுரை 

    மதுரை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் நிஷாந்த். இவர் தாயார் ஜெயாவுடன் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ஆம்னி வேனில் புறப்பட்டு சென்றார்.

    அவர்கள் நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். 3 மாவடி அய்யர் பங்களா அருகே, வேன் வந்தபோது அதில் இருந்து திடீரென குபுகுபுவன கரும்புகை வெளிவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷாந்த், தாய் ஜெயாவுடன் வேனில் இருந்து கீழே இறங்கி விட்டார். இதைத்தொடர்ந்து வேன் தீப்பற்றி எரிந்தது.

    இதுபற்றி நிஷாந்த் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் வேன் முற்றிலும் எரிந்து சேதமாகிவிட்டது.

    இது தொடர்பாக கே.புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×