என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமங்கலம் அருகே லாரி டிரைவர், கிளீனரை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு
- டிரைவர் சிவபாபுவின் மண்டை உடைந்தது.
- திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
திருமங்கலம்:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவ பாபு(வயது26). லாரி டிரைவர். இவரது லாரியின் கிளீனர் சூரஜ்(20). இருவரும் டெல்லியில் இருந்து இன்வெர்ட்டர் பேட்டரி லோடுகளை ஏற்றிக் கொண்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டைக்கு கடந்த 25-ந் தேதி லாரியில் புறப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு கப்பலூர் சிட்கோவுக்கு லாரி வந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிட்கோவில் உள்ள இன்வெர்ட்டர் பேட்டரி நிறுவனத்திற்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையடுத்து லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு கிளீனர் சூரஜூடன் சாப்பிடுவதற்காக கூத்தியார்குண்டுக்கு சென்றார்.
சாப்பிட்டு விட்டு இருவரும் மதுரை-திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் சா்வீஸ்ரோடு அருகே நடந்து வந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கும்பல் திடீரென்று இருவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் டிரைவர் சிவபாபுவின் மண்டை உடைந்தது.
பின்னர் இருவரிடமும் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை கொள்ளை கும்பல் பறித்து கொண்டு மர்மகும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பியது.
காயமடைந்த சிவ பாபு திருமங்கலம் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம்-செல்போன்களை பறித்து சென்றவர்கள் யார்? என்பதை கண்டறிய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.






