என் மலர்tooltip icon

    மதுரை

    • ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலைய ஏட்டு ஹரிகரபாபுவுடன் பழகிய மணிகண்டன், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார்.
    • மனைவியுடன் மணிகண்டன் தொடர்பு வைத்திருப்பதாக ஹரிகரபாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    மதுரை:

    மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இந்து மக்கள் கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட துணை செயலாளராக இருந்து வரும் இவர், மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தில் நகை கடை நடத்தி வந்தார்.

    நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற மணிகண்டனை, சிறிது தூரத்தில் 5-க்கும் மேற்பட்டோர் அடங்கிய முகமூடி அணிந்த ஒரு கும்பல் வழிமறித்து, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

    பின்பு அவர்கள் அனைவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவ இடத்திலிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இந்து மக்கள் கட்சி நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்த போலீஸ் உதவி கமிஷனர் சண்முகம், ஜெய்ஹிந்த்புரம் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மணிகண்டனை கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து துப்பு துலக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் அந்த பகுதியில் பலரிடம் விசாரணை நடத்தினர். அதில் மணிகண்டனை கொன்ற கொலையாளிகள் சிலர் அடையாளம் காணப்பட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் 8 பேர் சிக்கினர்.

    மதுரை ஜெய்ஹிந்து புரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஏட்டு ஹரிகரபாபு, ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த அஜித்குமார் (25), பாரதியார் ரோடு நேதாஜி நகர் அய்யப்பன் (26), தேவர் நகர் முதல் தெரு கார்த்திக்(26), தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடைக்கலபுரத்தை சேர்ந்த தினேஷ் (27), பாண்டி உள்ளிட்ட 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலையுண்ட மணிகண்டன் அந்த பகுதியில் நகைக்கடை மற்றும் பழைய நகைகளை அடகு பிடிக்கும் தொழில் செய்து வந்தார். அப்போது அவர் பழைய நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி பலரிடம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும் ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலைய ஏட்டு ஹரிகரபாபுவுடன் பழகிய மணிகண்டன், அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். அப்போது அவரது மனைவியுடன் மணிகண்டன் தொடர்பு வைத்திருப்பதாக ஹரிகரபாபுவுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் அவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் தான், நேற்றிரவு மணிகண்டன் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது.

    அதே வேளையில் பழைய நகைகளை அடகு பிடிப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் மணிகண்டன் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சோலையழகுபுரம் 3-வது தெருவில் சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கிய ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார்.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் ரோந்து சென்றார். அவர் சோலையழகுபுரம் 3-வது தெருவில் சென்றபோது சந்தேகப்படும்படியாக பதுங்கிய ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார்.

    இதில் அவர் குற்ற செயல் செய்யும் திட்டத்துடன் வாளுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்த போது அவர் சோலையழகுபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த பூமிநாதன் மகன் சேதுபதி கார்த்திக் என்பது தெரியவந்தது. அவரை இன்ஸ்பெக்டர் கைது செய்து அவரிடம் இருந்து வாளை பறிமுதல் செய்தார்.

    இதேபோல் தெற்கு வாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த் காஜா தெருவில் ரோந்து சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தார். இதில் அவர் தெற்குவாசல் காஜா தெருவை சேர்ந்த ராம மூர்த்தி (வயது51) என்று தெரியவந்தது.

    அவரை சோதனை செய்தபோது அவரிடம் பட்டாகத்தி மற்றும் கத்தி இருந்தது தெரியவந்தது. அவற்றை இன்ஸ் பெக்டர் முத்துபிரேம்சந்த் பறிமுதல் செய்ததுடன், ராம மூர்த்தியை கைது செய்தார்.

    • அலங்காநல்லூர் அருகே காளியம்மன்-மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை விட்டங்குளம் மேற்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வைரவநத்தம் ஊராட்சி விட்டங்குளம் மேற்கு தெருவில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கடந்த 2 நாட்களாக 3 கால யாக பூஜையுடன் மங்கள இசை முழங்க கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாவதி தீபாராதனை நடைபெற்றது. இன்று காலையில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்தது.

    பின்னர் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். இதில் நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பா பிஷேத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கப் பட்டது.

    விழா ஏற்பாடுகளை விட்டங்குளம் மேற்கு தெரு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • திருமங்கலம் அருகே லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.

    திருமங்கலம்

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சிவபாபு(வயது26). லாரி டிரைவரான இவர் கடந்த 25-ந் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டைக்கு இன்வெர்ட்டர் பேட்டரிகளை ஏற்றி வந்தார்.

    அப்ேபாது நிறுவனம் மூடப்பட்டிருந்ததால் லாரி தொழிற்பேட்டை பகுதியில் நிறுத்தினார். பின்னர் சிவபாபு, கிளீனர் சூரஜூடன் சாப்பிடுவதற்காக கூத்தியார்குண்டு சென்றார்.சர்வீஸ் ரோடு பகுதியில் நடந்து சென்றபோது 2 பேரையும் வழிமறித்த கும்பல் சரமாரியாக தாக்கிவிட்டு ரூ.5 ஆயிரம் ெராக்கம், 2 செல்போன்களை பறித்து சென்றது. இந்த தாக்குதலில் சிவபாபு, சூரஜ் ஆகியோர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தினர். வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்தனர்.

    அதில் லாரி டிரைவர்-கிளீனரை தாக்கி பணம் பறித்தது கூத்தியார்குண்டை சேர்ந்த கண்ணன் மகன் ராஜலிங்கம்(21), ராஜேந்திரன் மகன் விஜயராஜா(27), முருகன் மகன் ராஜவேலு(27), கணேசன் மகன் பிரபாகரன்(27) என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த உசிலம்பட்டி தாசில்தார் அலுவலக உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
    • தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் நபர்களிடம் நான் கையெழுத்து வாங்கித் தருகிறேன் என்று கூறி இடைத்தரகர் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும், தாசில்தாரின் கார் ஒட்டுநராகவும் பணியாற்றி வருபவர் நவநீதன்.

    இவர் பட்டா மாறுதலுக்காக தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் நபர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு நான் கையெழுத்து வாங்கித் தருகிறேன் என்று கூறி இடைத்தரகர் பணி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இவ்வாறு பட்டாமாறு தலுக்காக கொடுக்கப்பட்ட மனுவில் கையொப்பமிட சீமானூத்து கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவிடம் நவநீதன் அளித்துள்ளார்.

    முறையான விசாரணை செய்யாமல் கையெழுத்திட முடியாது என கிராம நிர்வாக அலுவலர் சுப்பையா காலம் தாழ்த்தி வந்துள்ளார். மேலும் தொலைபேசி அழைப்பை எடுக்காமல் இருந்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நவநீதன் தொலைபேசி மூலம் கிராம நிர்வாக அலுவலர் சுப்பையாவை தொடர்பு கொண்ட போது அவரது மனைவி தொலைபேசியை எடுத்து பேசியுள்ளார். அவரிடம் கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொலை செய்து விடுவேன் என்று நவநீதன் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் உசிலம்பட்டி கோட்டாச்சியர் சங்கரலி ங்கத்திடம் புகார் செய்யப் பட்டது. அதன் பேரில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவின் பேரிலும், உசிலம்பட்டி கோட்டாச்சியர் சங்கர லிங்கம் பரிந்து ரைப்படியும், உசிலம்பட்டி தாசில்தார் அலுவலக உதவியாளரும், தாசில்தார் வாகன ஓட்டுநருமான நவநீதனை பணியிடை நீக்கம் செய்து உசிலம்பட்டி தாசில்தார் கருப் பையா உத்தரவிட்டுள்ளார்.

    • தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • தை தெப்பத்திருவிழா 4-ந்தேதி நடக்கிறது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த ஆண்டு தை மாத தெப்பத்திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் நாட்களில் காலை, இரவு என இருவேளையும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

    இந்த திருவிழாவில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதில் வலைவீசி அருளிய லீலை ஆகும். இந்த விழாவையொட்டி சுவாமியும், அம்மனும் மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து கிளம்பி மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ் நகர் பாலத்திற்கு கீழே உள்ள வலைவீசி தெப்பக்குளம் பகுதிக்கு செல்வர். அங்கு லீலை முடிந்து மீண்டும் கோவிலை வந்தடைவது வழக்கம்.

    ஆனால் கடந்த கொரோனா காலக்கட்டமான 2021, 2022-ம் ஆண்டு சுவாமி அங்கு செல்லவில்லை. தற்போது அந்த இடத்தில் வேறு ஒரு நிகழ்வு நடப்பதால் சுவாமி அங்கு செல்லாமல் கோவிலில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வலைவீசி அருளிய திருவிளையாடல் லீலை நேற்று காலை நடந்தது. அப்போது பெரிய தாம்பூலத்தில் 2 வெள்ளி மீன்களை வலைவீசி பிடிப்பது போன்று பிடித்து அதனை சுந்தரேசுவரர் சுவாமிக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் சுவாமி-பார்வதி தேவியை திருமணம் செய்து கொள்ளும் மச்சகந்தி விவாகம் நிகழ்வு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மீனாட்சி, சுந்தரேசுவரரை வணங்கி சென்றனர்.

    விழாவில் தை தெப்பத்திருவிழா வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதற்காக காமராஜர் சாலை மாரியம்மன் கோவில் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்பம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இந்த தெப்பத்திருவிழாவிற்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நாளை (வியாழக் கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா நடைபெறுகிறது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 4-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியும் அதிகாலை மீனாட்சி அம்மன் கோவிலிலிருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலையில் எழுந்தருளி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. காலை 2 முறையும், இரவு ஒரு முறையும் சுவாமி தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன், துணை கமிஷனர் அருணாசலம் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத்திருவிழா நடந்தது.
    • ஆண்டுக்கு 3 முறை சூரசம்ஹார லீலை நடைபெற்று வருகிறது.

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 22-ந்தேதி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.

    சிகர நிகழ்ச்சியாக நேற்று தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

    திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டின் வடக்கு பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் சுமார் 6½ அடி உயரத்துக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு தயார்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 24 அடி நீளமும், 24 அடி அகலமும், 28 அடி உயரமும் கொண்ட தெப்பம் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது.

    தங்கம், பவளம், வைடூரியம் போன்ற நகை அணிகலன்களாலும், புத்தம் புதிய வஸ்திரத்தாலும், வாசனை கமழும் வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு முருகப்பெருமான், அம்பாளுடன் கோவிலில் இருந்து புறப்பட்டு மேளதாளங்கள் முழங்க நகர் வீதிகளில் வலம் வந்து தெப்பக்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர்.

    காலை 10.57 மணிக்கு மண்டபத்தில் இருந்து அம்பாளுடன் சுவாமி புறப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளினார்.

    இதனை தொடர்ந்து அங்கு குவிந்து இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பரவசத்துடன் தெப்பத்துடன் இணைக்கப்பட்ட வடத்தினை பிடித்து இழுத்ததை ெதாடர்ந்து, தெப்ப உற்சவம் தொடங்கியது.

    இதே போல இரவில் மின்னொளியில் வாணவேடிக்கைகள் முழங்க தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார்.

    இரவிலும் தெப்பத்தில் வீற்றிருந்து தெப்பக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பத் திருவிழா நடந்ததால் ஏராளமாக பக்தர்கள் குவிந்து, சாமி தரிசனம் செய்தனர். .

    நேற்று தெப்பத் திருவிழா முடிந்ததும் தங்கக்குதிரை வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் வாசல் முன்பு சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இந்த கோவிலை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு 3 முறை சூரசம்ஹார லீலை நடைபெற்று வருகிறது.

    ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி திருவிழாவின்போது பிரமாண்டமாக சூரசம்ஹாரம் நடக்கிறது. தெப்பத்திருவிழா, பங்குனி பெருவிழாவிலும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

    • போலி இணையதளங்களை இயக்குவோர் மீது வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
    • அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

    மதுரை:

    கோயில்கள் பெயரிலான போலி இணையதளங்களை முடக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பான மனு, இன்று நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணன் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அதில், தமிழகம் முழுவதும் கோயில் பெயரில் உள்ள அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான, போலி இணையதளங்களை முடக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். கோயிலின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • எம்.கே.ஆர். அய்யநாடார் ஜெயலட்சுமி அம்மாள் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    மதுரை

    பாரத பெருந்தலைவர் காமராஜர் அறநிலையம் எம்.கே.ஆர்.அய்ய நாடார் ஜெயலட்சுமி அம்மாள் ஆங்கில பள்ளியின்

    23-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளிதலைவர்ஜெமினிஎஸ்.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி வரவேற்றார். விழாவிற்கு வந்த வாழ்த்து செய்திகளை துணைத்தலைவர் எம். எஸ்.சோமசுந்தரம் வாசித்தார்.

    பொருளாளர் டி.பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் ஆர்.கவுதமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    விழாவில் பள்ளி புரவலர் ஜெயலட்சுமி அம்மாள், தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கியின் சிந்தாமணி கிளை மேலாளர் ஆர்.கண்ணன், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், இணைசெயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் பள்ளி செயலாளர் கே.ஆனந்த் மற்றும் ஆட்சி அவை உறுப்பினர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் எச்.ஆயிஷா நன்றி கூறினார்.

    • திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத்தில் 3 முறை வலம் வந்து முருகப்பெருமான்-தெய்வானை அருள்பாலித்தனர்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தெப்ப திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமி-அம்பாள் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், பச்சைக் குதிரை, வெள்ளி பூதம், அன்னம், சேஷ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தெப்பம் முட்டு தள்ளுதல் மற்றும் வைர தேரோட்டம் நடைபெற்றது.


    சிறப்பு அலங்காரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான்.

     


    விழாவின் சிகர நிகழ்ச்சி யாக தெப்பத் திருவிழா இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு உற்சவர் சன்னதி யில் சுப்பிர மணியசுவாமி, தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருள்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடை பெற்றது.

    தொடர்ந்து சிறப்பு அலங் காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிம்மாசனத்தில் எழுந்தருளி னார். பின்னர் சன்னதி தெரு வழியாக ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பக் குளத்தில் எழுந்தருளினர்.

    அங்கு அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்த தெப்பத் தேரில்(மிதவை)தெய்வானை யுடன், சுப்பிரமணியசுவாமி பக்தர் களுக்கு அருள் பாலித்தார். காலை 11 மணியளவில் அங்கு கூடியிருந்த பக்தர்கள் தெப்பத்தேரில் இணைக்கப்பட்டிருந்த வடத்தை பிடித்து இழுத்து தெப்பக்குளத்தின் வெளிப் பிரகாரத்தைச் சுற்றி 3 முறை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் இன்று இரவு மின் ஒளியில் தெப்பத்தில் எழுந்தருளும் சுப்பிரமணிய சுவாமி தெப்பத்தை மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    அப்போது வான வேடி க்கைகளும் இசை கச்சேரி களும் நடை பெறும். பின்னர் மேளதாளங்கள் முழங்க தங்கக் குதிரை வாகனத்தில் சுப்பிரமணியிசுவாமி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வலம் வருவார். அப்போது சன்னதி தெருவில் உள்ள சொக்க நாதர் கோயில் முன்பு சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் சுரேஷ் மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    • திருப்பரங்குன்றத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • 95-வது வார்டு சவுபாக்கியா நகர், முல்லை நகர், அமைதிச்சோலை பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல குறைதீர்க்கும் கூட்டம் திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்தது. மண்டல தலைவர் சுவிதா விமல் தலைமை தாங்கினார். மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    கவுன்சிலர் உசிலை சிவா, 99-வது வார்டு பகுதியில் உள்ள அடிப்படை வசதி களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

    அதேபோன்று கவுன்சிலர் சிவ சக்தி ரமேஷ், திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை சேதம டைந்துள்ளதாகவும் அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அந்த பகுதியை சீரமைத்து விரைவில் நடைபெற உள்ள பங்குனி திருவிழாவிற்கு தேரோட்டம் நடைபெற ஏதுவாக பணிகள் செய்யும்படி அதிகாரிகளுக்கு மேயர், கமிஷனர் உத்தரவிட்டனர்.

    94-வது வார்டு திருநகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். குப்பைகள் சரிவர அள்ளப்படாததால் சுகாதார சீர்கேடு ஏற்படு கிறது என்று கவுன்சிலர் சுவேதா சத்யன் புகார் செய்தார்.அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அலுவலரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் சரிவர பணியாற்றுவதை உறுதிப்படுத்துமாறு தெரிவித்தார்.

    கவுன்சிலர் இந்திரா காந்தி 95-வது வார்டு சவுபாக்கியா நகர், முல்லை நகர், அமைதிச்சோலை பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை சீர மைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    இந்த முகாமில் துணை மேயர் நாகராஜன், உதவி ஆணையாளர் முகமது கமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று மதுரையில் தொடங்கியது.
    • ஆதார் கார்டு, ஆன்லைன் பதிவு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

    மதுரை

    தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள், மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதனை கலெக்டர் அனீஷ் சேகர் தொடங்கி வைத்தார். இதில் மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், துணை மேயர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

    முதல்நாளான இன்று காலை 12 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்ட இரு பாலருக்கான கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து, கால்பந்து ஆகிய போட்டிகள் நடந்தன.

    திருப்பாலை பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள், பிப்ரவரி 1,2-ம் தேதி நடைபெறுகிறது. கல்லூரி மாணவ- மாணவி களுக்கான கிரிக்கெட் போட்டி, நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் 2,3-ம் தேதிகளில் நடக்க உள்ளது.

    கபடி, சிலம்பம், கூடைப் பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கைப்பந்து ஆகிய போட்டிகள் 4,5-ந் தேதி களிலும், கால்பந்து 5,6-ந் தேதிகளிலும், தடகளம் 7-ந் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ - மாணவி களுக்கான இறகு பந்து, மேசைப்பந்து ஆகியவை 6,7-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

    மாற்றுத்திறனாளி களுக்கான தடகளப்போட்டி 6-ம் தேதியும், இறகுப்பந்து, கபடி எறிபந்து, கைப்பந்து ஆகியவை 7-ம் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது.அரசு ஊழியர் களுக்கான கைப்பந்து, இறகுப்பந்து, கபடி, செஸ் போட்டிகள் 8,9-ந் தேதிகளிலும், தடகளம் 11-ந் தேதியும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடத்தப்பட உள்ளது. 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினருக்கான கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கைப்பந்து ஆகிய போட்டிகள் 11,12-ந் தேதிகளில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்க உள்ளது. அதே தேதிகளில் திருப்பாலை பள்ளிக்கூட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும்.

    தமிழக முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டி களில் ஆன்லைன் பதிவு பெற்றவர்கள் மட்டுமே பங்கேற்க இயலும் என தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி விளை யாட்டு வீரர் வீராங்கனை கள் இன்று காலை முதலே ஆதார் கார்டு, ஆன்லைன் பதிவு சான்றிதழ் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு வந்திருந்தனர்.

    மதுரை மாவட்ட விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவருக்கு 3 ஆயிரம் ரூபாயும், 2-ம் இடம் பெற்றவருக்கு, ரூ. 2 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பெற்றவருக்கு ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்படுகிறது. இந்த தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    மதுரை மாவட்ட விளை யாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மாநில விளையாட்டு போட்டிகளில் அரசு சார்பில் பங்கேற்பார்கள்.

    ×