என் மலர்tooltip icon

    மதுரை

    • அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கதவை ஆயுதங்களால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
    • நாகமலை புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ளது ராம்கோ நகர் பகுதி. வளர்ந்து வரும் இப்பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம், திருமண மண்டபம், தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது.

    திண்டுக்கல்-விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியாக உள்ள ராம்கோ நகரில் 100-க்கும் மேற்பட்ட தனித்தனி வீடுகள் கட்டப்பட்டு பொது மக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள் தனித்தனியே இருப்பதால் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு நேரத்தில் ராம்கோ நகர் பகுதியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 2 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தனியாக உள்ள வீடுகளை நோட்ட மிட்டனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டின் கதவை ஆயுதங்களால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து மற்றொரு வீட்டின் கதவை அரிவாளால் வெட்டி திறக்க முயற்சித்தனர். சத்தம் கேட்டு எழுந்த அந்த வீட்டின் உரிமையாளர் வாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் பார்த்தபோது முகமூடி அணிந்த 2 பேர் கதவை உடைப்பது தெரியவந்தது.

    உடனே அவர் நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார். போலீசார் சிறிதும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் வருவதை அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது டவுசர் அணிந்த 2 மர்ம நபர்கள் தலையில் குரங்கு குல்லாவுடன் கதவை ஆயுதங்களால் உடைப்பது பதிவாகி இருந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் கைது செய்தனர். குற்றப்பிரிவு போலீசார் துணையுடன் சம்பவம் நடந்தபோது அப்பகுதியில் பதிவான செல்போன் அழைப்பு உள்ளிட்ட விவரங்களை வைத்து கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து இதில் தொடர்புடையதாக ஈரோடு மாவட்டம் பனையம்பள்ளியை சேர்ந்த மாரியப்பன் மகன் சிவா (வயது 39), சிவகங்கை மாவட்டம் சக்கந்தியை சேர்ந்த முனியன் மகன் மருதுபாண்டி (35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பல கோவில்களில் கால்நடைகளை பலியிடுதல் வழக்கம் உள்ளது
    • அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமையை பேணவே தமிழக அரசு விரும்புகிறது.

    மதுரையை சேர்ந்த கண்ணன், முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவில், "திருப்பரங்குன்றம் கோவில் பாண்டிய மன்னனின் காலகட்டத்தில் கட்டப்பட்டது. திருப்பரங்குன்றம் கோவிலின் தென் பகுதியில் உமையாண்டாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பகுதியில் எந்த உயிர் பலியிடுதல் கூடாது. திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடப்பட்டு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இது சுப்ரமணிய சுவாமி கோவில் பக்தர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

    ஆகவே திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும் சமைத்து பரிமாறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசன் தொல்லியல் துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் திருப்பரங்குன்றனம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்கவேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதேபோல் திருப்பரங்குன்றம் மலை தொடடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை இன்று நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் அமர்வு விசாரித்தது.

    மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள பல கோவில்களில் கால்நடைகளை பலியிடுதல் வழக்கம் உள்ளது. அனைத்து மதத்தினரிடையே ஒற்றுமையை பேணவே தமிழக அரசு விரும்புகிறது. அதன் அடிப்படையில் ஜனவரி 30 ஆம் தேதி இரு சமூகத்தினரிடையே கூட்டம் நடைபெற்றது. அதில், ஏற்கனவே இருக்கும் வழிபாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து, "கடவுள்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள்தான் சரியாக இல்லை. திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது. தொல்லியல் துறைக்கு சொந்தம் என்ற வாதத்தை ஏற்க முடியாது" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    • பணத்துக்காக நடந்த கொடூர சம்பவம்.
    • அரிவாள் வெட்டில் சப்-இன்ஸ்பெக்டரும் படுகாயம்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை அடுத்த அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் மலையரசன் (வயது 36). இவருக்கு திருமணமாகி பாண்டிச்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருந்தனர். மலையரசன் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    இதற்கிடையே அவரது மனைவி கடந்த 1-ந்தேதி நடந்த சாலை விபத்தில் பலத்த காயம் அடைந்து மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனது உறவினர்கள் அரவணைப்பில் குழந்தைகளை விட்டு விட்டு, மனைவி அனுமதிக்கப்பட்டு இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களை வாங்குவதற்காக கடந்த 18-ந்தேதி சென்றிருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்ற விபரம் எதுவும் தெரியாமல் இருந்தது.

    இந்தநிலையில் மதுரை அவனியாபுரம் சுற்றுச் சாலை ஈச்சனோடையை அடுத்த புதுக்குளம் கண்மாய் அருகே பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக பெருங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    தொடர் விசாரணையில் பிணமாக கிடந்தவர் மாயமான போலீஸ்காரர் மலையரசன் என்பது தெரிய வந்தது. அதனை அவரது உறவினர்களும் உறுதிப்படுத்தினர்.

    மனைவியின் சிசிச்சை ஆவணங்களை வாங்க சென்றவர் எப்படி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய நபர் ஒருவரை தேடினர். இந்த நிலையில்தான் நேற்று நள்ளிரவில் போலீஸ்காரர் மலையரசனை எரித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் மூவேந்திரன் என்பவரை போலீசார் சுற்றிவளைத்தனர்.

    மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோடு பகுதியில் வைத்து மூவேந்திரனை கைது செய்ய முயன்ற போது சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண்ணன் என்பவரை கையில் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதையடுத்து மூவேந்திரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.

    இதனையடுத்து மூவேந்திரனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேபோல் கையில் வெட்டுக்காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரிக்கண்ணனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மூவேந்திரனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 18-ந்தேதி மனைவியின் சிகிச்சை ஆவணங்களை வாங்குவதற்காக அழகாபுரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் போலீஸ்காரர் மலையரசன் வந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே வந்தபோது அவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து அவரால் வாகனத்தை ஓட்ட முடியாததால் மாட்டுத்தாவணி இருசக்கர வாகன காப்பகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆட்டோவை பிடித்துள்ளார். அந்த ஆட்டோ டிரைவரான அவனியாபுரத்தை சேர்ந்த மூவேந்திரன் என்பவருடன் அவரது நண்பர் ஒருவரும் வந்துள்ளார்.

    பின்னர் அவர்கள் பாண்டிகோவில் அருகிலுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மீண்டும் மதுவாங்கி ஆட்டோவில் அமர்ந்தவாறு அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் போலீஸ்காரர் மலையரசன், ஆட்டோ டிரைவரான மூவேந்திரனிடம் தனது குடும்ப விஷயம் குறித்து கூறியுள்ளார். தனது மனைவி விபத்தில் இறந்து விட்ட தகவலையும் அவரிடம் தெரிவித்து உள்ளார்.

    அப்போது தன்னுடை வங்கிக்கணக்கில் ரூ.80 ஆயிரம் பணம் இருப்பதாகவும், அதன் பாஸ்வேர்டையும் மூவேந்திரனிடம் பகிர்ந்துள்ளார். அந்த சமயம் மூவேந்திரன், தான் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமான பணத்தை இழந்து தவிப்பதாகவும், குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாகவும் தெரிவித்ததையடுத்து இருவரும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்தனர்.

    சற்றே நிதானம் இழந்த நிலையில் போலீஸ்காரர் மலையரசின் செல்போனை வாங்கிய மூவேந்திரன், அவரது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.80 ஆயிரம் பணத்தை அவருக்கே தெரியாமல் தனது நண்பர் ஒருவரின் வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

    இதனை கண்டுபிடித்தால் சிக்கலாகி விடும் என்பதால் போலீஸ்காரரை தீர்த்துக்கட்ட மூவேந்திரன் முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த மூவேந்திரனின் நண்பர் பாதியிலேயே ஆட்டோவில் இருந்து இறங்கிக்கொண்டார்.

    பின்னர் வழியில் ஒரு பங்க்கில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு சம்பவம் நடந்த ஈச்சனோடை புதுக்குளம் கண்மாய் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இரும்பு கம்பியால் போலீஸ்காரர் மலையரசனை தலையில் பலமாக தாக்கியதில் அவர் சுருண்டு விழுந்தார்.

    குற்றுயிரும், கொலையுயிருமாக உயிருக்கு போராடிய போலீஸ் காரரை ஈவு இரக்கமின்றி உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொடூரமாக கொலை செய்த மூவேந்திரன் அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள வீட்டிற்கு தப்பிச்சென்றுள் ளார்.

    மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்ப வத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் சரித்திர குற்றப்பதிவேடு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளி களை சுட்டுப்பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் தற்போது மதுரையில் போலீஸ்காரரை எரித்துக்கொன்ற ஆட்டோ டிரைவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
    • 20 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வீ.கே.குருசாமி. மதுரை மாநகராட்சி தி.மு.க. முன்னாள் மண்டல தலைவரான இவருக்கும், அவரது உறவினரும் அ.தி.மு.க. பிரமுகருமான ராஜபாண்டி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட விரோதம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

    இந்த பிரச்சினையில் தற்போதுவரை இருதரப்பை சேர்ந்த 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அரசியிலில் உச்சத்தில் இருந்த வீ.கே.குருசாமி தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு அங்கும் அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தார்.

    இந்தநிலையில் வீ.கே.குருசாமியின் ஆதரவாளரும், பிரபல ரவுடியுமான காளீஸ்வரன் என்பவர் இன்று அதிகாலை மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அதுபற்றிய விபரம் வரு மாறு:-

    மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 37). இவர் மதுரை தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் உள்ள வெண்கலமூர்த்தி தெருவில் தனது இரண்டா வது மனைவி மீனாட்சி என்பவரது வீட்டில் ஒரு மாதமாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே வந்தவர் இன்று அதிகாலை சுமார் 12.40 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் தனியாக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் தனக்கன்குளம் பகுதியில் வைத்து காளீஸ்வரனை வழிமறித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத காளீஸ்வரன் அவர்களது பிடியில் இருந்து தப்ப முயன்ற அவரை அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இருள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அந்த கும்பல் யார் என்று தெரியவில்லை.

    இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் அடைந்த காளீஸ்வரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இறந்த காளீஸ்வரன் மீது ஏற்கனவே தெப்பக்குளம், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    வி.கே.குருசாமி தரப்பினருக்கும், வெள்ளைக்காளி தரப்பினருக்கும் ஏற்கனவே பழிவாங்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரனை வெள்ளைக்காளி தரப்பினர் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் உடலை கைப்பற்றிய போலீசார் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றினர். அப்போது அங்கு திரண்டு வந்த அவரது ஆதரவாளர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை அடித்து உடைக்க முயன்றனர்.

    பின்னர் வேகமாக சென்ற அந்த வாகனம் அரசு ஆஸ்பத்திரியை அடைந்தது. அங்கு காளீஸ்வரன் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து அங்கு பதட்ட மான சூழல் நிலவுவதால் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து குற்றவாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் இரு பிரிவுகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குருசாமி தரப்பில் 10 பேர், ராஜபாண்டி தரப்பில் 7 பேர் என 20 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். வி.கே.குருசாமி, ராஜ பாண்டி, வெள்ளைக்காளி ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்றது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    வெள்ளைக்காளி ஒரு வருடத்திற்கு முன்பாக கரிமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார். சிறையில் இருந்து கொண்டே அவர் இந்த சதித்திட்டத்தை தீட்டியதாக தெரிகிறது.

    வெள்ளைக்காளி தனது அண்ணனை வீ.கே.குருசாமியின் ஆட்கள் கொலை செய்ததால் அவரது குடும்பம் முழுவதையும் அழிக்கப்போவதாக சபதம் செய்து, அதன் தொடர்ச்சியாக குருசாமி ஆதரவாளர்களை கொலை செய்து வந்தார்.

    வெள்ளைக் காளியைப் பொறுத்தவரை 40-க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை வைத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொலை, கஞ்சா விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    வி.கே. குருசாமி தற்போது தி.மு.க.வில் இருந்து விலகி தனியாகச் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜபாண்டி இறந்து விட்டார். இதனால், வீ.கே.குருசாமியை பழிவாங்கும் நோக்கில் வெள்ளைக்காளி செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது.
    • துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

    தமிழகத்தில் 32 ஆண்டு காலம் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் ஆட்சியில் அமர்ந்து முத்தான பல்வேறு திட்டங்களை, வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை தந்தது அ.தி.மு.க.தான். ஆனால் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. 4 ஆண்டுகள் முடியும் தருவாயில் கூட மக்களுக்கு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாறாக சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிச்சுமைகளை மக்கள் மீது திணித்து வருகிறார்கள். அமைதி பூங்காவான தமிழகம் இன்றைக்கு அமளிக்காடாக மாறி இருக்கிறது. இதனை மாற்றும் சக்தி வாக்காளர்களாகிய மக்களிடம் உள்ளது.

    எனவே தான் கடந்த கால அ.தி.மு.க. அரசின் சாதனைகளையும், தி.மு.க. ஆட்சியில் தொடரும் வேதனைகளையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் எடப்பாடியாரின் வழிகாட்டுதலோடு அம்மா பேரவை சார்பில் வீதிவீதியாக, வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் என்ற பெயரில் துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வருகிறோம். அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் திண்ணைப் பிரசாரம் நடந்து வருகிறது.

    இதுவரை 5 வாரங்கள் நடத்தப்பட்டுள்ளது. அடுத்த வெள்ளிக்கிழமை 6-வது வாரமாக 82 பகுதியிலும் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் சுமார் ஒரு லட்சம் மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். இதில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமாக பங்கேற்கிறார்கள். வியாபாரிகள் பொதுமக்களும் எங்களின் துண்டு பிரசுரங்களை ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கிறார்கள்.

    இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு மீது எந்த அளவுக்கு வெறுப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது. எனவே இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி தி.மு.க. என்ற மன்னர் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை தொடர்ந்து நடைபெறும்.

    வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் வரை தொடர்ந்து இந்த திண்ணை பிரசாரம் நடக்கும். ஒவ்வொரு வாரமும் வேறு மாதிரியான துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. வருகிற 2026 பொது தேர்தலில் மக்கள் அ.தி.மு.கவை மீண்டும் தமிழக ஆட்சி அரியணையில் ஏற்றுவார்கள். பொதுச் செயலாளர் எடப்பாடியார் மக்களின் முதலமைச்சராக பதவியேற்பார். அப்போது தி.மு.க. அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்கள் அனைத்தும் மீண்டும் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்.

    வரிச்சுமையும் மக்களிடம் இருந்து இறக்கி வைக்கப்படும். எனவே இந்த மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட அம்மா பேரவை நடத்தி வரும் திண்ணை பிரசாரம் ஒரு முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை.
    • நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.

    மதுரை:

    மதுரையில் நெல் கொள்முதல் செய்ய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் விவசாயிகள் புகார் அளித்தனர்.

    15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாததால் முளைத்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்த விவசாயிகள், கொள்முதல் செய்ய ஒரு மூட்டைக்கு 70 ரூபாய் லஞ்சம் வேண்டுமென அதிகாரிகள் கேட்பதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.

    முளைத்த நெல்லுடன் மாவட்ட ஆட்சியரிடம், நெல் கொள்முதல் அதிகாரி முத்துவேல் என்பவர் மீது விவசாயிகள் புகார் அளித்தனர்.

    • போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மனோ தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
    • விடாமல் துரத்திய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் மனோவை சுற்றி வளைத்தனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள சேர்வாவூரணி பகுதியைச் சேர்ந்தவர் மனோ. பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே ஒரு வழக்கு தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.

    காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் தினந்தோறும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மனோ தனது நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

    காரைக்குடி 100 அடி சாலையில் வந்தபோது காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவர்கள் மீது பாய்ந்தது. இதில் தப்பித்த அவர்கள் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் தலைதெறிக்க ஓடினர்.

    ஆனாலும் விடாமல் துரத்திய அந்த கும்பலை சேர்ந்தவர்கள் ஒரு கட்டத்தில் மனோவை சுற்றி வளைத்தனர். வசமாக சிக்கிக்கொண்ட அவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். இதில் மனோ சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் அவர்களை தடுக்க வந்த நண்பர்கள் 2 பேருக்கும் அரிவாள் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்தனர்.

    மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த துணிகர சம்பவம் காரைக்குடியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையுண்ட மனோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சரலபள்ளியில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
    • ஜூன் மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.

    மதுரை:

    தென்மத்திய ரெயில்வே மண்டலம் சார்பில், கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகில் உள்ள சரலபள்ளியில் இருந்து மதுரை வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.07230) சரலபள்ளியில் இருந்து அடுத்த மாதம் 2-ந் தேதி, 9, 16, 23, 30-ந் தேதி, மே மாதம் 7-ந் தேதி, 14, 21, 28-ந் தேதி, ஜூன் மாதம் 4, 11, 18, 25-ந் தேதிகளில் புதன்கிழமை தோறும் இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை இரவு 9.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வருகிறது.

    நள்ளிரவு 2.30 மணிக்கு கன்னியாகுமரி சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில் (வ.எண்.07229) கன்னியாகுமரியில் இருந்து அடுத்த மாதம் 4, 11, 18, 25-ந் தேதி, மே மாதம் 2, 9, 16, 23, 30-ந் தேதி, ஜூன் மாதம் 6, 13, 20, 27-ந் தேதிகளில் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு காலை 9.50 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. சனிக்கிழமை பகல் 11.40 மணிக்கு சரலப்பள்ளி சென்றடைகிறது.

    இந்த ரெயில்கள் நளகொண்டா, மிரியால்குடா, நடிக்குடே, சட்டெனபள்ளி, குண்டூர், தெனாலி, சிராலா, ஓங்கோல், நெல்லூர், ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 5 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும்.

    • பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை தனியாக கொண்டு சென்று சோதனையிட்டனர்.
    • கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

    மதுரை:

    தாய்லாந்து தலைநகர் பேங்க்காக்கில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. 100-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்த அந்த விமானத்தில் வழக்கம்போல் சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் கொண்டு வந்த உடமைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

    அப்போது வேலூரை சேர்ந்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை தனியாக கொண்டு சென்று சோதனையிட்டனர். இதில் அவர் கொண்டு வந்த ஒரு சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரியவகை ஆமைகள் 52, பல்லிகள் 4, குட்டி பாம்புகள் 8 என மொத்தம் 64 உயிரினங்கள் கொண்டு வரப்பட்டதை அறிந்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து சுங்க அதிகாரிகள் வேலூர் பயணியிடம் விசாரித்த போது, இலங்கையில் இருந்து புறப்படும் சமயத்தில் ஒரு நபர் என்னிடம் வந்து இந்த பெட்டியில் சாக்லேட் இருப்பதாகவும், அதை மதுரை விமான நிலைய வாயிலில் இருக்கும் நபரிடம் கொடுக்குமாறும் கூறியதாக தெரிவித்துள்ளார். யார் அந்த நபர் என்றும், எதற்காக, யாருக்காக இந்த வன உயிரினங்கள் கடத்தி வரப்பட்டன என்றும் அதிகாரிகள் தரப்பில் மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    அதனைத் தொடர்ந்து மதுரை விமானநிலைய சுங்க இலாகாவினர் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயரினங்களை கோர்ட்டில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மனுதாரரும், அவரது மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2-வது திருமணமாகும்.
    • திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும்.

    மதுரை:

    கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருந்ததாவது:-

    எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 2018-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. எங்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து நாங்கள் தனித்தனியாக வசிக்கிறோம். எங்களை சேர்த்து வைக்கக்கோரி என் மனைவி கரூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் நான் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கு தொடர்ந்தேன். இவற்றை விசாரித்த கரூர் கோர்ட்டு, என் மனைவியின் கோரிக்கையை அனுமதித்தும், என்னுடைய விவாகரத்து வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது. இது ஏற்புடையதல்ல. என் வழக்கை தள்ளுபடி செய்ததை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    மனுதாரரும், அவரது மனைவிக்கும் நடந்த திருமணம் இருவருக்குமே 2-வது திருமணமாகும். அவர்களின் முதல் திருமணம் சட்டப்படி ரத்தாகி உள்ளது. இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணத்துக்கு பின்பு 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து உள்ளனர். அதன்பின்பு மனுதாரர் தன் மனைவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார்.

    அதாவது, அவரது மனைவிக்கு பாலியல் நோய் இருந்ததாகவும், வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை. சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ளது. தனிமையில் ஆபாச படங்களை பார்ப்பார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஆனால் அவரது மனைவியோ இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உண்மையில்லை என்கிறார்.

    பாலியல் நோயால் பாதிக்கப்பட்டவருடன் குடும்பம் நடத்தியதால் தனக்கும் நோய் பரவியதாக மனுதாரர் கூறியதற்கு எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் ஆபாச படத்தைப் பார்ப்பதில் மனுதாரரின் மனைவியின் செயல் மனுதாரருக்கு எதிரான கொடுமையாக எடுத்துக்கொள்ள முடியாது.

    திருமணத்துக்கு பின்பு ஒரு பெண், கணவனை தவிர மற்றவருடன் பாலியல் உறவு கொண்டால், அது விவாகரத்துக்கான காரணமாகும். இருப்பினும், சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக்கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது. கற்பனையில் கூட, அது கணவருக்கு கொடுமையை விளைவிப்பதாகக் கூற முடியாது.

    இந்த வழக்கில் மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை அல்லது உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே மனுதாரர் வழக்கில் கீழ்கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம். மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
    • மறு மார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு நேரடி உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் மதுரையிலிருந்து விஜயவாடாவிற்கு பெங்களூரு, ஐதராபாத், சென்னை வழியாக விமானங்களை இயக்கி வரும் தனியார் விமான நிறுவனம், மேற்கண்ட இடங்களில் இறங்கி பின்னர் வேறு விமானத்திற்கு மாறி விஜயவாடா செல்ல வேண்டும். தற்பொழுது வரும் 30-ந் தேதி முதல் மதுரையிலிருந்து பெங்களூரு வழியாக அதே விமானத்தில் இறங்காமல் பெங்களூருவில் 30 நிமிடம் காத்திருந்த பின்னர் விஜயவாடாவிற்கு குறைந்த நேரத்தில் பயணம் செய்ய அந்த தனியார் விமான சேவை வழங்க இருக்கிறது.

    அதன்படி மதுரையிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் விமானம் காலை 9.45 மணிக்கு பெங்களூரு செல்லும். அங்கு அரை மணி நேரத்திற்கு பின்னர் 10.15 மணிக்கு புறப்பட்டு காலை 11.55 மணிக்கு விஜயவாடா சென்றடையும்.

    மறு மார்க்கமாக மாலை 5.40 மணிக்கு விஜயவாடாவிலிருந்து புறப்பட்டு இரவு 7.25 மணிக்கு பெங்களூரு வந்தடையும். அங்கு அரை மணி நேரம் (30 நிமிடம்) கழித்து இரவு 7.55 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தனது செல்போன் ஆடியோவை லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.
    • ஆளுங்கட்சியுடன் இணைந்து திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்து செயல்படுவதாக சாட்டை துரைமுருகன் ஐகோர்ட் கிளையில் முறையீடு

    திருச்சி டிஐஜி வருண் குமார் மீது சாட்டை துரைமுருகன் கொடுத்த புகாரை பெற்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை உத்தரவிட்டுள்ளது.

    பொய் வழக்கு பதிந்து கைது செய்ததுடன் தனது 2 செல்போன்களை பறித்ததாக திருச்சி டிஐஜி மீது சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.

    திருச்சி டிஐஜி வருண் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது செல்போன் ஆடியோவை லீக் செய்ததாக சாட்டை துரைமுருகன் புகார் அளித்துள்ளார்.

    ஜாமினில் வெளியான பின்னும் செல்போனை ஒப்படைக்காததால் வழக்கு தொடர்ந்த போது என் செல்போன் ஆடியோ லீக் ஆனது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    திருச்சி டிஐஜி வருண் தனது பள்ளித்தோழரான திருச்சி சூர்யாவின் எக்ஸ் தளத்தில் ஆடியோவை பதிவேற்றம் செய்தார் என்றும் சாட்டை துரைமுருகன் கூறினார்.

    மேலும் மனுவில், "நாதகவை சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் 20 பெண் காவலர்களை கொண்டு தாக்கி சீமானுக்கு எதிராக வாக்குமூலம் பெற துன்புறுத்தல்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆளுங்கட்சியுடன் இணைந்து திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்து செயல்படுவதாக சாட்டை துரைமுருகன் ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்துள்ளார்.

    திருச்சி டிஐஜி மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை தலைவர், திருச்சி ஆணையருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், சாட்டை துரைமுருகனின் மனுவை விசாரித்த ஐகோர்ட் கிளை, திருச்சி டிஐஜி வருண் மீதான புகாரை விசாரித்து ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    நாம்தமிழர் கட்சியின் மீதும் ,என் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு செயல்பட்டு சட்டவிரோத கைது நடவடிக்கை எடுத்து தொடர்ந்து பொதுவெளியில் நாம்தமிழர் கட்சி குறித்து அவதூறு பரப்பும் திருச்சி டிஐஜி வருண்குமார் மீது நான் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்டு ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க தமிழக டி.ஜி.பிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு !

    நீதி வெல்லும் !

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×