என் மலர்
மதுரை
- தென்கரை கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள தென்கரை கிராம வைகைக்கரையில் அமைந்துள்ள ஆதிகாலத்து உச்சி மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தென்கரை அகிலாண்ட ஈஸ்வரி சமேத மூலநாதர் ேகாவில் நாகேசுவரசிவம், செந்தில் ஆகியோர் தலைமையில் யாகபூஜை நடந்தது. மேளதாளத்துடன் புனித நீர் குடங்கள் எடுத்து கோவிலை வலம் வந்தனர். மகா கும்பாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அர்ச்சனை, பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழ வந்தானில் ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2016-ம் ஆண்டில் ரூ.45கோடி நிதி ஓதுக்கீடு செய்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். பின்னர் மதுரை கோட்ட நெடுஞ்சாலைதுறை கட்டுமான பிரிவு மூலம் பணிகள் தொடங்கியது.
தொடர்ந்து சர்வீஸ் சாலை நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளுக்காக பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனால் காலக்கெடு முடிந்ததால் பாலம் வேலை கள் பாதியிலே நின்று போனது.
இதன் பின்னர் பாலம் பணிகளை தொடங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு கட்ட போராட்டங் களை நடத்தினர்.
இதையடுத்து 2020-ம் ஆண்டு தமிழக நெடுஞ் சாலைத்துறை ரூ.17கோடி மதிப்பீட்டில் மறுடெண்டர் விட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து மேம்பால பணிகள் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. நெடுஞ்லை துறை அதிகாரிகள் முன்னி லையில் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வந்தது.
இதுபற்றி புகார் எழுந்ததால் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் உள்ளிட்டோர் பாலம் கட்டும் பணிகளை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மேம்பாலம் மற்றும் அணுகு சாலை பணிகளுக்கு இடையூராக இருந்து வந்த டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பங்கள், பேரூராட்சி குடிநீர் குழாய் உள்ளிட்ட வைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய ஆலோசனைகள் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக மேம்பாலம் வேலைகள் நடந்து வருகிறது. இந்த மாதம் முதல் பாலப்பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. மேலும் பாலம் மேல் பகுதி மற்றும் அணுகுசாலை ஆகிய பகுதிகளில் தற்போது தார்ச்சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் பிரசன்ன வெங்கடேஷ், கட்டுமான பிரிவு செயற்பொறியாளர் சாருமதி ஆகியோர் பார்வையிட்டனர்.
வரும் மார்ச் மாதம் பாலம் வேலைகள் முடிந்து அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
- தேஜஸ் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மதுரை வரும் போதும், மதுரையில் இருந்து சென்னை செல்லும் போதும் தாம்பரத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
- நேற்று சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
மதுரை:
தேசிய அளவில் 4 தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை-சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் 2-வதாக அறிமுகமான ரெயில் ஆகும். இதனை பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
இந்த தேஜஸ் ரெயில் சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் உள்ளூர் தொழில் நுட்பத்துடன் தயாரானது. முற்றிலும் குளிர்சாதன பெட்டிகள் அடங்கிய இந்த ரெயில் கட்டணம் மிகவும் அதிகம் ஆகும். அதில் பயணிக்கும் பயணிகளுக்கு டீ, காபி, சிற்றுண்டி, படிப்பதற்கு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் வழங்கப்படும்.
அதிநவீன வசதிகளுடன் இயக்கப்படும் இந்த ரெயில் திருச்சி மற்றும் திண்டுக்கல் ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று சென்றது. சென்னையில் இருந்து மதுரைக்கு 6 மணி நேரத்தில் செல்லக்கூடிய இந்த ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.
இதையடுத்து தேஜஸ் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மதுரை வரும் போதும், மதுரையில் இருந்து சென்னை செல்லும் போதும் தாம்பரத்தில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி நேற்று சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டு வந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.
சென்னையில் இருந்து புறப்படும் மதுரை தேஜஸ் விரைவு ரெயில் (22671) தாம்பரத்துக்கு காலை 6.25 மணிக்கு வந்து, 6.27 மணிக்கு புறப்படுகிறது. அதேபோல் மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் (22672) தாம்பரத்துக்கு இரவு 8.38 மணிக்கு சென்று, 8.40 மணிக்கு புறப்படுகிறது.
இந்தநிலையில் மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வது டிரெண்டிங் ஆகி உள்ளது. மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், வசதியான இருக்கைகளுடன் கூடிய தேஜஸ் விரைவு ரெயிலின் உட்புற தோற்றத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை நேற்று மாலை வரை 1.70 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
49 ஆயிரத்து 700 லைக்குகள், 3 ஆயிரத்து 840 மறுபதிவுகளுடன் இது டிரெண்டிங் ஆகி வருகிறது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலின் தாம்பரம் நிறுத்தத்தின் மூலம் தென் மாவட்ட பயணிகள் அதிகாலை நேரத்தில் எழும்பூர் சென்று மீண்டும் தாம்பரம் வரும் சிரமம் குறையும். மேலும் இந்த ரெயிலை பயணிகள் முழுமையாக பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
- அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும் என தொழில் முனைவோர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
- அகில இந்திய மருந்து முற்போக்கு தொழில் முனைவோர் சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது.
மதுரை
அகில இந்திய மருந்து முற்போக்கு தொழில் முனைவோர் சங்க செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பிரபு, மாநில தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் சுந்தர், பொதுச்செயலாளர் ராமசாமி, இணைச் செயலாளர் சஞ்சீவ், பொருளாளர் பாஸ்கர், அவைத்தலைவர் நாகராஜன் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அனைத்து அத்தியாவசிய மருந்துகளுக்கும் ஜி.எஸ்.டி. வரிவிலக்கு அளிக்க வேண்டும். புதிய மருந்து வரைவு சட்டப்படி மருந்துகள் மீதான தரக்குறைவுக்கு, சந்தைப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
- மதுரை ஆவின் நிறுவனத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- இதன் காரணமாக ஆவின் பாலை முகவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை.
மதுரை
மதுரை அண்ணாநகரில் ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஏஜெண்டுகள் மூலம் பொது மக்களுக்கு பால் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் இருந்து வழக்கமாக பால் வாகனங்கள் அதிகாலை 3 மணிக்கு கிளம்பி விடும். கடந்த 10 நாட்களாக, காலை 8 மணிக்கு செல்வதாக தெரிகிறது. பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ஆவின் பால் கிடைக்கவில்லை. முகவர்கள் கால தாமதமாக வந்த ஆவின் பால் வாகனங்களை திருப்பி அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மதுரை மாவட்டத்தில் தினமும் சுமார் 1 லட்சம் லிட்டர் பால் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திற்கு 1.60 லட்சம் லிட்டர் பால் தேவை. ஆனால் 1.35 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கிடைக்கிறது. ஆவின் பால் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. ஆவின் நிறுவனத்தில் பால்களை அடுக்கி வைப்பது, பிரித்து வைப்பது உள்ளிட்ட பணிகளில் நிரந்தர ஊழியர்களுடன் தற்காலிக பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. இதன் காரணமாக ஆவின் பாலை முகவர்களுக்கு உரிய நேரத்தில் அனுப்ப முடியவில்லை. மதுரை ஆவின் பால் நிறுவனத்தில் ஏற்பட்டு உள்ள பால் தட்டுப்பாடு, ஊழியர் பற்றாக்குறை மற்றும் குளறுபடிகள் மாநில அளவில் பிரதிபலித்தது.
இந்த நிலையில் அமைச்சர் நாசர் இன்று மதுரை வந்தார். அண்ணாநகர் ஆவின் நிறுவனத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அமைச்சருடன் கலெக்டர் அனீஷ்சேகர், மேலாண் இயக்குநர் சுப்பையன் ஆகியோரும் உடனிருந்தனர்.
- மதுரை தெற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.
அதன்படி வருகிற 28-ந் தேதி(செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவல கத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் தலைமை தாங்குகிறார்கள்.இதில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவதநல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழவெளிவீதி, கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய வார்டு பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை மதுரை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
- மாசித்திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- பொதுமக்கள் முன்னிலையில் பூக்குழி இறங்கி கரகம் ஜோடித்து விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
மதுரை
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே அகரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் மற்றும் ஓந்தாய் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியையொட்டி 3 நாட்கள் மாசி திருவிழா திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழாவில், அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக பூக்குழி இறங்குதல், கரகம் ஜோடித்து முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கரகம் ஜோடித்து, முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபட்டனர். திருவிழாவுக்கான ஏற்பாடு களை கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் சண்முகமூர்த்தி, செயலாளர்கள் தர்ம லிங்கம், பழனிக்குமார், முருகேசன், ஜெயபாண்டி மற்றும் பிள்ளைமார் சமூக பங்காளிகள், விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, குடகனாற்றில் மிதந்து வந்த பெட்டியில் இருந்த தெய்வ சிலையை ஒரு சமூகத்தை சேர்ந்த பங்காளிகள் இணைந்து ஆற்றின் மேற்கே பிரதிஷ்டை செய்து சிறு கோவிலாக கட்டி குலதெய்வ வழிபாடாக மாசி சிவராத்திரியில் பேரூராட்சி தலைவர், காவல் துறை மற்றும் அனைத்து ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பூக்குழி இறங்கி கரகம் ஜோடித்து விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
2015-ம் ஆண்டு கோவிலை சீரமைத்து பெரிய அளவில் கோவில் அமைத்து தற்போது வருடாவருடம் மாசி சிவராத்திரி அன்று பெரிய திருவிழாவாகவும், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி, அமாவாசை அன்று பூஜை செய்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கி கொண்டாடி வருவதாக தெரிவித்தனர்.
- மேலூரில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்க கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் கண்மாய் அருகில் சிவன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இதை மீட்க வலியுறுத்தி மேலூரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் தர்மலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் கண்ணன், நகர தலைவர் சேவுகமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் தசரதன், ராஜகோபால், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் பற்றி தகவல் கிடைத்ததும் மேலூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சிவன் கோவிலுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- 6 மாவட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கும் முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை தொடங்குகிறது.
- இந்த தகவல் மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மதுரை
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்வர் கேப்பைக்கான மதுரை மண்டல அளவிலான பூப்பந்து, பளுதூக்குதல் போட்டிகள் மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் விளையா ட்டரங்கத்தில் நாளை(27-ந்தேதி) தொடங்குகிறது. மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி விளை யாட்டு வீரர்-வீராங்க னைகள் பங்கேற்கும் வகையில் இந்த போட்டிகள் நடைபெறும்.
பள்ளிகளுக்கான பூப்பந்தாட்ட போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய 2 நாட்களும், கல்லூரி களுக்கான போட்டிகள் மார்ச் 1,2 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். பள்ளிகளுக்கான பளு தூக்குதல் போட்டிகள் மார்ச் 11-ந்தேதியும், கல்லூரிகளுக்கான போட்டிகள் மார்ச் 12-ந்தேதியும் நடைபெறும்.பள்ளிகளுக்கான கடற்கரை கையுந்துபந்து போட்டி நாளை மறுநாள்(28-ந்தேதி) மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளிலும், கல்லூரி களுக்கான போட்டி மார்ச் 2, 3 ஆகிய தேதிகளிலும் ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் நடைபெறும்.
போட்டியில் பங்கேற் பவர்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்படும். முதலிடம் பெறுவோருக்கு தலா ரூ.3ஆயிரமும், 2-ம், 3-ம் இடம் பெறுவோருக்கு முறையே ரூ. 2 ஆயிரம், ரூ. 1,000 வழங்கப்படும். மாணவ-மாணவிகள் பள்ளிகளிலிருந்து பெற்ற சான்று, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இந்த தகவல் மதுரை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலக செய்திக்கு றிப்பில் கூறப்பட்டுள்ளது.
- காரை நிறுத்தியதில் தகராறில் போலீஸ் நிலையத்தை சூறையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அதில் இருந்தவர் போலீஸ் நிலையம் முன்பு காரை நிறுத்திவிட்டு சென்றார்.
மதுரை
மதுரை கொட்டாம் பட்டியில் சப்-இன்ஸ்பெக்ட ராக வேலை பார்த்து வருபவர் சிவகுருநாதன். சம்பவத்தன்று மாலை அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. அதில் இருந்தவர் போலீஸ் நிலையம் முன்பு காரை நிறுத்திவிட்டு சென்றார்.
உடனே சிவகுருநாதன், "காரை ரோட்டு ஓரத்தில் நிறுத்த வேண்டியதுதானே?" என்று கூறியுள்ளார். இது ெதாடர்பாக அவர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து அங்கு இருந்த பொருட்களை சூறையாடினார்.
இது தொடர்பாக சிவகுருநாதன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கொட்டாம்பட்டி போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவர் மேலூர் கச்சிராயன் பட்டியை சேர்ந்த துரை என்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் புகுந்து பொருட்களை சூறையாடிய குற்றத்துக்காக துரையை போலீசார் கைது செய்தனர்.
- தோட்டத்தில் மாடு மேய்ந்ததில் தகராறில் கணவன்-மனைவி மீது தாக்கப்பட்டது.
- உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர்.
மதுரை
மதுரை கே.பெருமாள் பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி நந்தினி(வயது28). இவர்களுக்கு கல்லூத்தில் தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று மாலை நந்தினி, ரஞ்சித்குமார் ஆகிய 2 பேரும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு மாடு தோட்டத்துக்குள் சென்றது.
இது தொடர்பாக நந்தினி மாட்டின் உரிமையாளரை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மாட்டின் உரிமையாளர் உருட்டு கட்டையால் கணவன்- மனைவி இருவரையும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக உத்தப்பநாயக்கனூர் போலீசில் நந்தினி புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூத்து பால்பாண்டி(45) என்பவரை கைது செய்தனர். இது தவிர வரகீஷ் என்ற மாயி, பால்பாண்டி மனைவி பேச்சி, மகள் சுபாஷினி என்ற ஜெயலட்சுமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதே வழக்கில் பால்பாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர். இது தவிர நந்தினியிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஓராண்டுக்கு முன்பு பாண்டியராஜா மகளையும், மருமகனையும் தனது வீட்டு மாடியில் குடிவைத்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:
திருமங்கலம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜா. சமையல் வேலை செய்கிறார். இவரது மகள் பாண்டீஸ்வரி(21). 2 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஜி.ஓ.நகரை சேர்ந்த நவீன்பிரகாஷ் என்பவரை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.
இரண்டு குடும்பத்தாரும் இந்த திருமணத்தை ஏற்கவில்லை.ஓராண்டுக்கு முன்பு பாண்டியராஜா மகளையும், மருமகனையும் தனது வீட்டு மாடியில் குடிவைத்தார். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்ற நவீன் பிரகாஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
மேலும் பாண்டீஸ்வரி தன்னை துன்புறுத்துவதாக திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரித்தபோது நீதிமன்றம் சென்று பிரச்சினையை தீர்த்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பாண்டீஸ்வரி விரக்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பாண்டீஸ்வரி, கணவர் நவீன்பிரகாஷ் வீட்டு முன்பு விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பாண்டீஸ்வரியின் தந்தை பாண்டியராஜா அளித்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






