என் மலர்tooltip icon

    மதுரை

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்று ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடந்தது. அ.தி.மு.க. பகுதி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன் தாஸ் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வுமான ராஜன் செல்லப்பா பூமி பூஜைக்கு தலைமை தாங்கி கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரையில் தமிழக முதல்வரின் கள ஆய்வு குறித்து முறையான முடிவுகள் வெளி வரவில்லை. கள ஆய்வுக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் அழைக்கவில்லை. குறைந்தபட்சம் உள்ளாட்சி பிரதிநிதிகளையாவது அழைத்து மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்திருக்க வேண்டும்.

    திருப்பரங்குன்றம் தொகுதியில் ரூ.540 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டது. அது தற்போது எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை. இதேபோல மதுரை டைட்டல் பார்க், மதுரைக்கு முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம் எந்த நிலையில் உள்ளது என்றும் தெரியவில்லை.

    வருகிற கோடை காலத்தில் மதுரை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை வர வாய்ப்புள்ளது. அது தொடர்பாகவும் ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாக தெரியவில்லை. மொத்தமாக முதல்வரின் கள ஆய்வு கூட்டம் என்பது அவரது சுற்றுப்பயணமாக அமைந்ததே தவிர மதுரை மக்களுக்கு எந்தவித திட்டப் பணிகளும் நடைபெற்றதாக தெரியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை 2026-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்றுஅறிவித்த நிலையில் நிதி உதவி செய்யும் ஜப்பான் நிறுவனத்திடம் சுகாதாரத்துறை அமைச்சர் இது தொடர்பாக ஏதேனும் முயற்சி செய்தார்களா? என்பது தெரியவில்லை.

    இவர்கள் மத்திய அரசை குறை கூறுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் கல்லூரி, பள்ளிகள் அருகிலேயே மாணவர்களை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கும் இடத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழடி அருங்காட்சி யகத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்த பணி 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்தது அ.தி.மு.க. தான். மதுரைக்கு ஆய்வுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே.சந்திரன், பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணைச் செயலாளர் செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் நாகரத்தினம், பாலா, பொன்.முருகன், எம்.ஆர்.குமார், பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • காட்டுப்பகுதியிலும், வயல்வெளியிலும் மயில்கள் கொத்துக்கொத்தாக செத்து கிடந்தன.
    • 2 நாட்களில் மொத்தம் 40 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் 100 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் அருகே நீரோடை, தென்னந்தோப்பு, புதர்களுடன் காட்டுப்பகுதி உள்ளன. அந்த பகுதியில் தேசிய பறவையான மயில் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன.

    நேற்று முன்தினம் மாலை அந்த காட்டுப்பகுதியிலும், வயல்வெளியிலும் மயில்கள் கொத்துக்கொத்தாக செத்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து கருப்பாயூரணி போலீசார் விரைந்து வந்தனர்.

    மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மர்மமான முறையில் இறந்து கிடந்த 18 மயில்களை மீட்டனர். பின்னர் அவற்றை பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிதறி கிடந்த நெல்மணிகளை சேகரித்து, அதில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய அவற்றையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் அடுத்தடுத்து மீண்டும் மயில்கள் செத்து கிடந்தன. இந்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து சேகரித்தபோது, 22 மயில்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த மயில்களையும் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    2 நாட்களில் மொத்தம் 40 மயில்கள் ஒரே இடத்தில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே மயில்கள் செத்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் அங்குள்ள விவசாயிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் பற்றி கருப்பாயூரணி போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.

    • பாஜக வளர்ந்து வருகிறது, தலைவர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றோம்.
    • தமிழகத்தில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் இல்லை என அண்ணாமலை தெரிவித்தார்.

    மதுரை:

    பா.ஜ.க தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலத் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல் குமார், இரு தினங்களுக்கு முன்னர் அந்தக் கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். நிர்மல் குமாரை தொடர்ந்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணனும் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

    இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க மதுரை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்திருக்கிறேன். தமிழகத்தில் ஒரு காலத்தில் அரசியல் களம் திராவிட கட்சிகளில் இருந்து யாராவது வந்து பாஜகவை காப்பாற்ற மாட்டார்களா என இருந்தது. ஆனால் தற்போது சில திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கு பாஜக தான் கண் முன் தெரிகிறது.

    பாஜக வளர்ந்து வருகிறது. தலைவர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றோம். பாஜகவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவேன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே நான் இருப்பேன். சில முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி அளிக்கத் தான் செய்யும். கட்சி அதிர்வுகளை சந்தித்து கொண்டு தான் இருக்கும். அரசியலில் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. இப்போது பார்த்த வினையின் எதிர்வினை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நடக்கலாம். அரசியல் கட்சி அப்படித்தான் வளர முடியும். கட்சியில் இருந்து யார் விலகினாலும், பாஜகவின் பலம் குறையாது.

    தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை, ஜெயலலிதா, கருணாநிதி எப்படி முடிவு எடுப்பார்களோ அதுபோல் தான் என் முடிவும் இருக்கும். தமிழகத்தில் என்னை போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் இல்லை. பா.ஜ.க.வை தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமர்த்துவதே என் நோக்கம். தமிழக அரசியலில் புதிய மாற்றம் தேவை, அதை பாஜக கொண்டு வரும். இடைத்தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது. தனித்து போட்டியிட நேரம் வரும்போது அது பற்றி அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மதுரை விமான நிலையத்தில் அண்ணாமலை முன்னிலையில், அதிமுகவைச் சேர்ந்த சுமார் 50 பேர் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து. 

    • அழகர்கோவிலில் மாசி திருவிழா நடந்தது.
    • பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்தில் அன்னப்பறவை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அலங்காநல்லூர்

    தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்ப டுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் நடை பெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் முக்கியமானது. இந்த விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று காலை நடந்தது. ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பட்டார்.

    மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு வழி நெடுகிலும் நின்று சேவை சாதித்தார். பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் காலை 10.50 மணிக்கு தெப்பத்தின் கிழக்கு புறமுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அன்னப்பறவை வாகனத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பகல் முழுவதும் தெப்பத்தில் இருக்கும் கள்ளழகர் இன்று மாலை பூஜை முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளுவார். தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபாடு செய்தனர்.

    இன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு இருப்பிடம் சேருகிறார்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
    • கல்லூரி மாணவர் படுகாயமடைந்தார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய ஒச்சான். இவரது மகன் லோகநாதன் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் உசிலம்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு மதுரை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் நக்கலப்பட்டி அருகே உள்ள நல்லமாபட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (58) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    நல்லமாபட்டி அருகே எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலமாக மோதிக்கொண்டன. இதனால் இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உசிலம்பட்டி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்து மயக்க நிலையில் இருந்த லோகநாதனுக்கு உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ மீது வேன் மோதி 2 பெண்கள் பலியானார்கள்.
    • திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை எஸ்.எஸ்.காலனி பாரதியார் 3-வது தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வடிவுக்கரசி(வயது33). சம்பவத்தன்று தோப்பூரில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கணவன்-மனைவி ஆட்டோவில் சென்றனர். அவர்களுடன் அதே பகுதியை சேர்ந்த மகமாயி(63), கனிமொழி(40) ஆகியோரும் சென்றனர்.

    திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் தங்க பாண்டி தோப்பூர் பிரிவு சாலையில் திரும்பாமல் தொடர்ந்து சென்றார். கூத்தியார்குண்டு அருகே சென்றபோது வழிதவறி வந்ததை உணர்ந்த தங்கபாண்டி உடனே ஆட்டோவை நான்கு வழிச்சாலையில் நிறுத்தியதாக தெரிகிறது.

    அப்போது திண்டுக்கல்லில் இருந்து விருதுநகருக்கு வந்து கொண்டிருந்த மினிவேன் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ முழுவதுமாக சேத மடைந்தது. ஆட்டோவில் இருந்த 3 பெண்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.

    உடனே அப்பகுதியினர் காயமடைந்தவர்களை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வடிவுக்கரசி, மகமாயி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். தங்கபாண்டி, கனிமொழி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருமங்கலம் நகர் போலீசார் வேன் டிரைவர் அருப்புக்கோட்டையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.

    • ஆடுகளை விற்று மது குடித்ததால் குடிபோதையில் அடித்து துன்புறுத்தியதால் இரும்பு கம்பியால் தாக்கினோம் என்று பெற்றோர் உள்பட 3 பேர் வாக்குமூலம் அளித்தனர்.
    • கிராம நிர்வாக அலுவலர் சோணை கொடுத்த தகவலின்பேரில் வில்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி தாலுகா உவரி கிராமத்தை சேர்ந்தவர் சப்பாணி என்ற தவிடன் (வயது 55). இவருக்கு காளியம்மாள் (50) என்ற மனைவியும், 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மூத்த மகன் சங்கன் (30) என்பவருக்கு திருமணம் நடந்தது. 2-வது மகன் சரவணன் (27). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். பெற்றோருடன் வசித்து வந்த சரவணன் மது பழக்கத்துக்கு அடிமையா னதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சரவணனை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் சங்கன் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கியதில் இறந்தார். இதையடுத்து தவிடன், காளியம்மாள், சங்கன் ஆகிய 3 பேரும் மறவப்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் சரண் அடைந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சோணை கொடுத்த தகவலின்பேரில் வில்லூர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மூத்த மகனுக்கு 3 மாதங்களுக்கு முன்பு திருமணமாகி தனிக்குடித் தனம் சென்று விட்டார். நான், எனது மனைவி மற்றும் 2-வது மகன் சரவணனுடன் வசித்து வந்தோம். போதைக்கு அடிமையான சரவணன் அடிக்கடி வீட்டில் வந்து தகராறு செய்து வந்தார். ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லாமல் மது குடித்தார். இதனை கண்டித்ததால் சரவணன் கம்பால் எங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தான். மேலும் பணம் கேட்டும் தொந்தரவு செய்தான். பணம் தராத நேரத்தில் செம்மறி ஆடுகளை விற்று மது குடித்து வந்தான். இதனால் குடும்பத்தில் நாள்தோறும் பிரச்சினை ஏற்பட்டது.

    கடந்த 5-ந்தேதி இரவு வழக்கம்போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சரவணன், தரக்குறைவாக பேசியதோடு எங்களை சரமாரியாக தாக்கினான். அப்போது அங்கு வந்த சங்கனையும் தரக்குறைவான வார்த்தை களால் பேசினான்.

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் இரும்பு கம்பியால் சரவணனை தாக்கினோம். இதில் அவன் மயங்கி விழுந்தான். குடிபோதையில் சரவணன் தூங்கி இருக்கலாம் என்று சென்று விட்டோம். காலையில் பார்த்தபோது சரவணன் இறந்தது தெரிய வந்தது.

    இவ்வாறு அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

    • மு.க.அழகிரி வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றது அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    • அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    மதுரை:

    தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி 2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியின் வீட்டிற்கு சென்றார். அவரை மு.க.அழகிரியும், அவரது மனைவி காந்தி அழகிரியும் உச்சி முகர்ந்து வரவேற்றனர்.

    இந்த சந்திப்பு குறித்து கேட்டதற்கு தனது பெரியப்பா வீட்டிற்கு வந்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல் தம்பி முதலமைச்சராகவும், தம்பி மகன் அமைச்சராகவும் இருப்பது பெருமையாக இருப்பதாக மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.

    மு.க.அழகிரி வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றது அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

    உதயநிதி ஸ்டாலினை போன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மதுரை வரும்போது மு.க.அழகிரியை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வினர் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் மு.க.அழகிரியின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக மு.க.அழகிரி வீடு உள்ள பகுதியில் ரோடு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மு.க.அழகிரியின் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை.

    மதுரையில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த அவர், நேற்று மாலை நாகர்கோவிலுக்கு புறப்பட தயாரானார். அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    அப்போது அவர் மு.க.அழகிரியின் நலம் குறித்து விசாரித்துள்ளார். மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். அவர்கள் இருவரும் 5 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் மு.க.அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியுடன் போனில் பேசி நலம் விசாரித்திருப்பது மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வழுக்குப்பாறை கடந்து சிறிது தூரம் சென்ற போது வடிவேலுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
    • சோர்வடைந்த வடிவேல் திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருச்சி சிந்தாமணி தெருவை சேர்ந்தவர் வடிவேல் (வயது 50). பழ வியாபாரியான இவர் தனது நண்பர்களுடன் நேற்று சதுரகிரிக்கு வந்தார். காலையில் தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து வடிவேல் மலையேறி சென்று கொண்டிருந்தார்.

    வழுக்குப்பாறை கடந்து சிறிது தூரம் சென்ற போது வடிவேலுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து மலையேற முடியவில்லை. சோர்வடைந்த அவர் திடீரென மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அவரது உடலை மீட்டு டோலி மூலம் மலைஅடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • வாகனம் மோதியதில் குதிரை உடலில் வெட்டுக்காயத்துடன் சுற்றித்திரிந்தது.
    • கால்நடை மருத்துவர்கள் மீட்டு சிகிச்சை அளித்தனர்.

    மதுரை

    மதுரை விளாங்குடி பகுதி யில் ஒரு குதிரை விபத்தில் அடிபட்டு கழுத்தில் தோல் கிழிந்து ரத்தக்காயத்துடன் சுற்றித்திரிந்தது. இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் கால்நடைதுறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து மண்டல இணை இயக்குநர் நடராஜ குமார், உதவி இயக்குநர் சரவணன் உத்தரவின் பேரில், செல்லுர் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சத்யபிரியா, கால்நடை ஆய்வாளர் செல்வி மற்றும் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    தத்தனேரி மருத்துவ மனை அருகில் அடிபட்ட குதிரையை பிடித்து ஆம்புலன்ஸ் மூலம் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டது. பின்னர் டாக்டர் கிருஷ்ணராஜ் தலைமையிலான குழுவினர் குதிரைக்கு காயம் பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளித்தனர்.காயத்துடன் திரிந்த அந்த குதிரை யாருடையது? என்பது தொடர்பாக விசாரணை நடத்தியதில், கீரைத்துறை பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவரை வரவழைத்து குதிரை ஒப்படைக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மதுரை விலங்குகள் நல ஆர்வலர் ஹசீஜா கூறுகையில், மதுரை ரிசர்வ் லைன், செல்லூர் ஆகிய பகுதிகளில் எண்ணற்ற குதிரைகள் நடுரோட்டில் திரிகின்றன. சாலையில் செல்லும் அவை வாகனங்களில் அடிபட்டு படுகாயம் அடைகின்றன.

    • ரெயில் நிலையத்தில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • இந்த குழுவினர் நாளை விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.

    மதுரை

    நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்களில் பயணிகள் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் 6 பேர் அடங்கிய தேசிய ரெயில்வே பயணிகள் வசதி கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரவிச்சந்திரன், மதுசூதனா, கோட்டோலா உமா ராணி, அபிஜித் தாஸ், ராம்குமார் பஹான் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். இந்த குழுவினர் 3 நாட்கள் பயணமாக மதுரை வந்துள்ளனர். அவர்கள் இன்று காலை தீவிர ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த குழுவினர் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்துடன் ஆலோசனை நடத்தினர். அப்போது முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் ரதிப்பிரியா, மூத்த கோட்ட என்ஜினீயர் பிரவீனா(தெற்கு), கோட்ட வர்த்தக மேலாளர் பிரபு பிரேம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த குழுவினர் நாளை விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோவில் ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். நாளை மறுநாள் (8-ந் தேதி) கோவில்பட்டி, சாத்தூர், திருமங்கலம் ரெயில் நிலையங்களுக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.

    • கள்ளழகர் கோவில் மாசி தெப்ப உற்சவம் நாளை நடக்கிறது.
    • நாளை இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார்.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி புகழப்படுவது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். இக்கோவிலில் மாசி மாதம் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு விழா இன்று (6-ந்தேதி) மாலை 6.20 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கு கிறது. இதைதொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நாளை (செவ்வாய் கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி நாளை காலை 7.02 மணிக்கு மேல் 7.50 மணிக்குள் தேவி பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பாடாகி செல்கிறார்.

    மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு செல்லும் வழி நெடுகிலும் நின்ற சேவை சாதித்து தொடர்ந்து பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் சுவாமி- அம்பாள் எழுந்தருளு கிறார்கள். அங்கு பகல் 10.30 மணிக்கு மேல் 11.45 மணிக்குள் தெப்பத்தின் கிழக்குபுறம் உள்ள மண்ட பத்தில் எழுந்தருளி பகல், மாலையில் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளுகிறார்.

    தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். தொடர்ந்து நாளை இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு போய் இருப்பிடம் சேருகிறார். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×