search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மு.க.அழகிரியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    மு.க.அழகிரியிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • மு.க.அழகிரி வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றது அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    • அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    மதுரை:

    தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி 2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியின் வீட்டிற்கு சென்றார். அவரை மு.க.அழகிரியும், அவரது மனைவி காந்தி அழகிரியும் உச்சி முகர்ந்து வரவேற்றனர்.

    இந்த சந்திப்பு குறித்து கேட்டதற்கு தனது பெரியப்பா வீட்டிற்கு வந்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல் தம்பி முதலமைச்சராகவும், தம்பி மகன் அமைச்சராகவும் இருப்பது பெருமையாக இருப்பதாக மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.

    மு.க.அழகிரி வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றது அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

    உதயநிதி ஸ்டாலினை போன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மதுரை வரும்போது மு.க.அழகிரியை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வினர் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் மு.க.அழகிரியின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக மு.க.அழகிரி வீடு உள்ள பகுதியில் ரோடு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மு.க.அழகிரியின் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை.

    மதுரையில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த அவர், நேற்று மாலை நாகர்கோவிலுக்கு புறப்பட தயாரானார். அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    அப்போது அவர் மு.க.அழகிரியின் நலம் குறித்து விசாரித்துள்ளார். மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். அவர்கள் இருவரும் 5 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் மு.க.அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியுடன் போனில் பேசி நலம் விசாரித்திருப்பது மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×