என் மலர்
மதுரை
- பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. குடவரை கோவிலான இங்கு விநாயகப்பெருமான் மற்ற இடங்களில் காணப்படுவதைப்போல நான்கு கைகளுடன் இல்லாமல் இரு கைகளுடன் காணப்படுகிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி விழா கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினசரி பகல் மற்றும் இரவில் உற்சவர் கற்பக விநாயகர் திருநாள் மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இரண்டாம் நாள் விழாவில் இருந்து இரவில் மூஷிக வாகனம், சிம்ம வாகனம், பூத வாகனம், கமல வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனங்களில் உற்சவர் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குறிப்பாக ஆறாம் நாள் கஜமுக சூரசம்காரத்தில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், 9-ம் நாளான நேற்று மாலை விநாயகரும், சண்டிகேஸ்வரரும் வெவ்வேறு இருதேர்களில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி ரத வீதியில் உலா வந்தனர். அப்போது திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். இதில் சண்டிகேசுவரர் தேரை பெண்கள் மட்டுமே இழுத்து வந்தனர்.
தொடர்ந்து இரவு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக் காப்பு அலங்காரம் மூலவருக்கு நடத்தப்பட்டது. இரவில் யானை வாகனத்தில் விநாயகர் வீதியுலா வந்தார். பத்தாம் நாளான இன்று சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீப ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும் தீப ஆராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தங்க மூஷிஷ வாகனத்தில் நாதஸ்வரம் முழங்க விநாயகப் பெருமானும், வெள்ளி பல்லக்கில்அங்குச தேவரும், சிவனின் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள திருக்குளப்படித்துறையில் எழுந்தருளினர். அங்கு காலை 10 மணிக்கு பஞ்சாங்க முறைப்படி 11 வகையான திரவியங்களுடன் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. மதியம் முக்குறுணி மோதகம் படையலும் நடைபெறுகிறது.
சதுர்த்தி விழாவையொட்டி கைகளில் அருகம்புலுடன் விநாயகரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்துள்ளனர்.
சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மாவட்ட சூப்பிரண்டு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்பட்டுள்ளது. 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள், பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கான வழிகள், குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் செய்து தரப்பட்டுள்ளது.
- தி.மு.க. ஒருமுறை ஆட்சி அமைத்தால் மறுமுறை மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற வரலாறு உள்ளது.
- அ.தி.மு.க. ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறு கொண்டு எழுந்து மாபெரும் வெற்றி பெறும்.
மதுரை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி திருமங்கலம் வருவதை முன்னிட்டு திருமங்கலம் தொகுதியில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார். முன்னதாக அவர் அங்கு ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், டாக்டர் சரவணன், மாணிக்கம், தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வேலுமணி பேசும்போது:-
எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் பயணத்தை மேற்கொண்டு சரித்திரம் படைத்து வருகிறார். ஒவ்வொரு தொகுதிகளும் எழுச்சி பயணத்தின் மூலம் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தி.மு.க. ஒருமுறை ஆட்சி அமைத்தால் மறுமுறை மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற வரலாறு உள்ளது. நடிகர் விஜய் மதுரை மாநாட்டில் அ.தி.மு.க. தலைமை யாரிடம் உள்ளது என்ற வார்த்தையை பேசியுள்ளார். அ.தி.மு.க.வின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். ஆனால் அவருக்கு தெரியவில்லை. இதை விட பெரிய கூட்டத்துடன் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி பிரஜாராஜியம் என்ற கட்சியை தொடங்கினார். பிரமாண்டமான கூட்டத்தை காண்பித்தார். ஆனால் கட்சியை கலைத்து விட்டார். எடப்பாடி பழனிசாமி பற்றி பேச இவருக்கோ, வேறு யாருக்கும் உரிமை கிடையாது.
அ.தி.மு.க. ஒருமுறை தோற்றால் மறுமுறை வீறு கொண்டு எழுந்து மாபெரும் வெற்றி பெறும். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி வாகை சூடும். மீண்டும் 2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர். இதை விஜய் மட்டுமல்ல. யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இடைத்தரகர்கள், சிறுநீரத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை ஒப்புக்கொள்ள செய்கின்றனர்.
- தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மதுரை:
பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் மதுரை ஐகோர்ட்டு அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ள சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி மிகவும் தீவிரமானது.
பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சாய ஆலைகளில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களை தரகர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பால் சுரண்டப்பட்டு, சிறுநீரக தானம் செய்பவர்களாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தி உள்ளனர்.
இடைத்தரகர்கள், சிறுநீரத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை ஒப்புக்கொள்ள செய்கின்றனர். இது 1994 மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்திற்கு எதிரானது. ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரணை செய்தால் விசாரணை நேர்மையாக இருக்காது, எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ஏன் இதுவரை குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வில்லை? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், "இது போன்ற வழக்குகளில் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "இந்த வழக்கில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அது தெரியவந்த பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வழக்கு பதிவு செய்வதில் உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டனர்.
தொடர்ந்து, "பள்ளிப்பாளையம் கிட்னி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து, ஐ.பி.எஸ். அலுவலர் தலைமையில், சிறப்பு விசாரணை குழுவை அமைப்பது தொடர்பாக டி.ஜி.பி.யிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தனர்.
- மதுரை நகர் பகுதி முழுவதும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
- ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் அச்சிடப்பட்டு இருந்தன.
மதுரை:
மதுரையில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது. மாநாட்டில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என்று கூறியதுடன், தமிழ்நாட்டில் பெண்கள் யாருக்கும் பாதுகாப்பில்லை, சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அத்துடன் அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடம் சரிதானே என்று கேள்வி எழுப்பிய விஜய், அந்த சத்தம் கேட்கிறதா? என்றும் அதிர வைத்தார். அவரது பேச்சுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்தநிலையில் விஜய்க்கு எதிராக பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் கண்டன சுவரொட்டிகளை ஒட்டினர். மதுரை நகர் பகுதி முழுவதும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.
அதில் ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் அச்சிடப்பட்டு இருந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று த.வெ.க.வினர் மீண்டும் போஸ்டர் யுத்தத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களில் கதறல் சத்தம் கேக்குதா அங்கிள், சிங்கத்தின் கர்ஜனை தொடரும், அது உங்கள் உடன் பிறப்புகளை தூங்க விடாது என்ற வாசகத்துடன் அது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மதுரை என்றாலே எதற்கெடுத்தாலும் போஸ்டர் ஒட்டும் பழக்கம் இருந்து வருகிறது. அதிலும் பல மீட்டர் தூரத்திற்கு ஒரே போஸ்டர் ஒட்டினாலும் அது பேசும் பொருளாகி வருவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில் தற்போது தி.மு.க.வினரும், த.வெ.க.வினரும் மாறி மாறி போஸ்டர் போரில் இறங்கியுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அ.தி.மு.க. நிலைப்பாடு பற்றியும், அக்கட்சி தொண்டர்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
- மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை பாரபத்தியில் த.வெ.க.வின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21-ந்தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. சுமார் 5 லட்சத்திற்கும் மேல் திரண்ட தொண்டர்கள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார். மோடி தலைமையிலான மத்திய அரசையும், 'அங்கிள்' என்று கூறி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
அதேபோல் அ.தி.மு.க. நிலைப்பாடு பற்றியும், அக்கட்சி தொண்டர்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அவரது இந்த பேச்சுக்கு தி.மு.க., அ.தி.மு.க. தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர். த.வெ.க. மாநாட்டில் விஜய்யின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
விஜய்க்கு எதிராக பல்வேறு இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று மதுரை நகர் பகுதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் ஆங்கிலத்தில் வாட் புரோ, ஓவர் புரோ, அடக்கி வாசிங்க புரோ என்ற வசனங்கள் உள்ளவாறு மதுரை முழுவதும் காணப்படுகிறது.
விஜய் பேச்சுக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் தி.மு.க.வினர் தொடர்ச்சியாக ஒட்டப்பட்டு வரும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- எதிரிக்குக் கூட நாங்களோ முதலமைச்சரோ இடையூறு வேலைகளை பார்ப்பதில்லை.
- யாரோ சொல்லச் சொல்லி த.வெ.க.வினர் சொல்கிறார்கள்.
மதுரையில் அமைச்சர் மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதிய பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. 25 வணிக வளாக கடைகள் அமைக்கப்பட்டு ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் இந்த பேருந்து நிலையம் அமைய பெற்றுள்ளது.
த.வெ.க. மாநாட்டுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தவில்லை. எதிரிக்குக் கூட நாங்களோ முதலமைச்சரோ இடையூறு வேலைகளை பார்ப்பதில்லை. இந்த சில்லித்தனமான வேலைகளை எந்த காலத்திலும் தி.மு.க. ஒருபோதும் செய்யாது. ஷேர் கொடுக்கக் கூடாது, வாய்க்கால் தோண்டுவது, இடையூறு செய்வது போன்ற பணிகளை தி.மு.க. தொண்டன் ஒருவன் கூட செய்ய மாட்டான். உண்மைக்கு மாறான செய்தியை சொல்லுகிறார்கள். யாரோ சொல்லச் சொல்லி த.வெ.க.வினர் சொல்கிறார்கள். தி.மு.க. இதுபோன்ற இடையூறுகளை ஒருபோதும் செய்யாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க. மாநாட்டு பந்தலில் இருந்து உள்ளூர் மக்கள் பல பொருட்களை அள்ளி சென்றனர்.
- 2, 3 வாட்டர் டேங்குகளை தலையில் வைத்து தூக்கி சென்றனர்.
மதுரையில் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு நேற்று நடந்தது. திரளான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டு திடல் இன்று அலங்கோலமாக காட்சியளித்தது.
மாநாட்டில் போடப்பட்டிருந்த நாற்காலிகள், தடுப்புகளை உடைத்து த.வெ.க. தொண்டர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
மாநாட்டிற்கு கேரளாவில் இருந்த கொண்டுவரப்பட்ட ஏராளமான நாற்காலிகள் இனி பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தன. உடையாத நாற்காலிகளை மட்டும் மீண்டும் ஒப்பந்ததாரர்கள் எடுத்து சென்றனர். ஏராளமான தடுப்புகளும் சேதமடைந்துள்ளன.
இது தொடர்பாக ஒப்பந்ததாரர் ஒருவர் கூறுகையில்,
த.வெ.க. மாநாட்டு பந்தலில் இருந்து உள்ளூர் மக்கள் பல பொருட்களை அள்ளி சென்றனர். மாநாடு நடைபெற்று முடிந்த இடத்தில் இருந்த 200 இரும்பு ராடுகளை காணவில்லை. பாதுகாப்புக்காக போட்டிருந்த தகர சீட்டுகளை அள்ளி சென்றுள்ளனர்.
எங்கள் பொருட்கள் எங்கள் கண்முன்னாலே களவு போனது. 2, 3 வாட்டர் டேங்குகளை தலையில் வைத்து தூக்கி சென்றனர். ஏன் எடுத்துச் செல்கிறீர்கள் என கேள்வி கேட்டால் அடிக்க பாய்ந்தனர் என்று கூறினார்.
காணாமல் போன பொருட்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் கையில் தான் உள்ளது.
- தி.மு.க. ஆட்சி வரக்கூடாது, இதுதான் மக்கள் எண்ணமாகும்.
மதுரை:
ஆவணி அமாவாசை முன்னிட்டு மதுரை முக்தீஸ்வரர் கோவிலில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்த மாதம் முதல் வாரத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டத்திற்கு எழுச்சிப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கட்சி தொடங்கியவர்கள் மாநாடு நடத்தலாம், ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்ற வரைமுறை உள்ளது. அ.தி.மு.க. மக்களுக்காக சேவை செய்யும் இயக்கமாகும்.
மாநாட்டில் விஜய், தி.மு.க.வை பாய்சன் என்று கூறுகிறார், போன மாநாட்டில் பாயசம் என்று கூறினார், அடுத்த மாநாட்டில் அமுது என்று கூட பேசுவார். தி.மு.க. தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும் என்று அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார்.
அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமியின் கையில் தான் உள்ளது. இதில் விஜய்க்கு சந்தேகம் வேண்டாம். கடந்த சட்டமன்றத் தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை வைத்து தான் தேர்தலை சந்தித்தோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர். இன்றைக்கு தேசியக் கட்சியில் உள்ள அமித்ஷாவே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார். இதுதான் கள நிலவரம், இதில் விஜய்க்கு எந்த சந்தேகம் வேண்டாம்.
விஜய் வாய்க்கு வந்ததை வந்ததை பேசி வருகிறார். இதனால் அவருக்கு தான் பின்னடைவே தவிர எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. இன்றைக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் வேதனையாக உள்ளார்கள் என்று கூறுகிறார். விஜய்க்கு எப்படி தெரியும், உங்களிடத்தில் எந்த தொண்டர்களாவது கூறினார்களா? அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை யாரும் சிதைக்க முடியாது, ராணுவ கட்டுப்பாட்டுடன் உள்ளது. அ.தி.மு.க. பற்றி விஜய் கவலைப்பட வேண்டாம், தனது தொண்டர்கள் பற்றி கவலைப்பட வேண்டும்.
அ.தி.மு.க., பா.ஜ.க. பொருந்தாத கூட்டணி என்று கூறுகிறார். மக்கள் ஏற்றுக்கொண்ட கூட்டணியாக அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி உள்ளது. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.
பா.ஜ.க., சீமான், விஜய், பா.ம.க., தே.மு.தி.க., போன்ற கட்சிகள் எல்லாம் தி.மு.க.வை எதிர்த்து வருகிறது. இன்றைக்கு தி.மு.க.விற்கு 65 சதவீதம் எதிர்ப்பு உள்ளது, ஆதரவு 35 சதவீதம் தான் உள்ளது. தி.மு.க. ஆட்சி வரக்கூடாது, இதுதான் மக்கள் எண்ணமாகும்
தொண்டர்கள் பேச்சைக் கேட்டால் தான் தலைவராக நிலைத்து நிற்க முடியும், அப்போது தான் தொண்டர்கள் ஆதரவு அளிப்பார்கள். விஜய் தொண்டர்களின் உழைப்பை சிதைக்க வேண்டாம். தமிழகத்தில் தி.மு.க.விற்கும், அ.தி.மு.க.விற்கும் தான் போட்டி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் தவிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது.
- விஜயின் விமர்சன பேச்சுக்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
மதுரையில் த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு நேற்று நடந்தது. திரளான தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் கட்சி தலைவர் விஜய் பேசும்போது, '2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி' என்று தெரிவித்தார்.
நாமும் பா.ஜ.க.வுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதற்கு கூட்டணி வைக்க வேண்டும்?. அவர்களுடன் கூட்டணி வைக்க நம்ம என்ன மிகப்பெரிய ஊழல் கட்சியா?.
த.வெ.க. என்பது மகத்தான வெகுஜன மக்கள் படை. நமது தலைமையில் அமைக்கப்போகிற மக்கள் ஆட்சிக்காக, இந்த அடிமை கூட்டணியில் நாம் ஏன் சேர வேண்டும்?.
ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். இடம் அடிபணிந்து கொண்டும், இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணியாக நம் கூட்டணி இருக்காது.
என்னை நம்பி வருகிற அனைவருக்கும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிய பங்களிப்பு வழங்கப்படும். 2026 தேர்தலில் இரண்டு கட்சிகளுக்குத்தான் போட்டி. ஒன்று த.வெ.க. மற்றொன்று தி.மு.க. என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் விஜய் மாநாட்டில் பேசியது தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,
தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல் விஜய் தன்னை நினைத்துக்கொள்கிறார். யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம். ஆனால் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது.
அண்ணாவையும், எம்.ஜி.ஆரையும் தவிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதால் அவர்களை குறிப்பிடுகிறார். ஆனால் விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது தெரியவில்லை.
அ.தி.மு.க. குறித்த விஜயின் விமர்சன பேச்சுக்களை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். த.வெ.க. தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக கை குழந்தையாக உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது.
- மதுரை சக்கிமங்கலம் அருகே நேற்று காலை சென்றபோது அவர் மயங்கி விழுந்து கிடந்தார்.
மதுரை:
த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த பிரபாகரன் (33) தனது நண்பர்களுடன் வேனில் மதுரை த.வெ.க. மாநாட்டுக்குச் சென்றார். மதுரை சக்கிமங்கலம் அருகே நேற்று காலை சென்றபோது அவர் மயங்கி விழுந்து கிடந்தார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதேபோல, நீலகிரி மாவட்டம் கேம்ப் லையன் பகுதியைச் சேர்ந்த ரித்திக் ரோஷன் (18) என்ற வாலிபர் மாநாடு முடிந்து காரில் நண்பர்களுடன் ஊருக்கு திரும்பியபோது திடீரென மயக்கம் அடைந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.
அதே காரில் பயணம் செய்த ரவி (18) என்பவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ரவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
- ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம் பிடித்த பிறகே நான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்.
- பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் நலன்கருதி தவெக ஆட்சி செயல்படும் என்றார்.
மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.
அப்போது அவர் கொள்கை எதிரி , அரசியல் எதிரி என நேரடியாக திமு.க மற்றும் பா.ஜ.க வை விமர்சித்து பேசினார். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் நலன்கருதி அவரது ஆட்சி செயல்படும் என கூறினார்.
மேலும்," அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரே வரவில்லை. இவர் எங்கு வரப்போகிறார் என ஜோசியம் சொன்னார்கள். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம் பிடித்த பிறகே நான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்" என கூறினார்.
இந்த வாக்கியம் அரசியலுக்கு வருவேன் என வராமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த், மார்கெட் இல்லாமல் அடைக்களம் தேடி வந்தவர் என கூறியது நடிகர் கமல்ஹாசனை குறிப்பிட்டு பேசினாரா? என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடிகரும், எம்.பி.,யுமான கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல்," அவர் என் பெயரை சொன்னாரா? அல்லது வேறு யார் பெயரையாவது சொன்னாரா? அட்ரெஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா?" என்றார்.
- பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம்.
- சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் மாநில மாநாட்டில் விஜய் தலைமையில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் விவரம் பின்வருமாறு:-
தீர்மானம் 1: பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவைக் கண்டித்துத் தீர்மானம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, 5 ஆயிரத்து 746 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளில் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு இறங்கியுள்ளது .இதில் பெரும்பான்மையான நிலங்கள் விவசாயிகளுக்குச் சொந்தமானவை.
முப்போகமும் விளையக்கூடியவை. தங்களின் வாழ்வாதாரம் பறிபோவதை தடுக்க, வருடக்கணக்கில் போராடி வரும் எளிய மக்களின் போராட்டத்தை நசுக்கவும், பலவந்தமாய் அவர்களின் நிலங்களைப் பறிக்கவும் பலவழிகளிலும் தொடர்ந்து தி.மு.க. அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.
மேலும், அரசு கையகப்படுத்த முயலும் நிலப்பரப்பில் 13 வற்றா நீர்நிலைகள் உள்ளன. விவசாயத்திற்கு மட்டுமல்லாமல் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கும். சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் இந்த நீர்நிலைகளே உள்ளன. இந்த நீர்நிலைகள் அழிக்கப்பட்டால் சென்னை. காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதோடு,இங்குள்ள நீர் தேங்கும் பகுதிகள் சிதைக்கப்பட்டால் பருவமழைக் காலங்களில் சென்னையே வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும் உள்ளது.
பரந்தூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவேண்டும். இதற்குப் பதிலாக, விவசாயமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாத வகையில் மாற்று இடத்தை விமான நிலையத்திற்காகத் தேர்வு செய்ய வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் இதில் தவறும்பட்சத்தில் தமிழக வெற்றிக் கழகம் தன் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும். அதோடு எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கை வைக்கும் எந்த அரசும் அதே எளிய மக்களால் ஆட்சி.அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும் என்பதையும் இந்த தீர்மானத்தின் வழியே எச்சரிக்கையாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தீர்மானம் 2: சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. அம்மாநிலத்தின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் இது 8.3 சதவீதமாகும். 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற வாக்காளர் சரிபார்ப்புப் பட்டியலில் இவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்படவில்லையா? இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் மட்டும் லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியிருப்பது ஜனநாயக விரோதமில்லையா? என்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்?
போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள் என எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இது போன்ற நடவடிக்கைகளால் மக்கள் மத்தியிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில் சிறப்புத் தீவிர திருத்தத்தை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மேற்கொள்ளக் கூடாது என தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது. ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மட்டுமே. அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 3: தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கத் தவறி வரும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம்
மத்திய மற்றும் மாநில அரசுகள், மீனவர்களையும் அவர்களது பிரச்சினைகளையும் எப்போதும் அரசியல் ஆதாயமாக மட்டுமே பார்க்கின்றன. ஆனால் தமிழக வெற்றிக் கழகம், எப்போதும் உண்மையான மீனவ நண்பனாக அவர்களுடன் நிற்கும்.
நம் நாட்டிற்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததால் கடலில் தத்தளிக்கும் படகு போலவே தமிழக மீனவர்களின் வாழ்வும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இலங்கை அரசு தமிழக மீனவர்களைக் கைது செய்வதைத் தடுக்க, அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்வதை நிறுத்த, மீன்பிடி தொழிலையும் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க, அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க, தமிழக வெற்றிக் கழகம் ஏற்கனவே கூறியது போல கச்சத்தீவை மீட்க வேண்டும் அல்லது 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு மீண்டும் வலியுறுத்துகிறது.
மேலும், இதுவரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள அவர்களின் படகுகளை இலங்கை அரசுத் திருப்பித் தரவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனவும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 4: ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும்
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவச் சமூக நீதிக்கான அறநெறியை உலகிற்கே கற்றுக் கொடுத்த தமிழகம், இன்றைய திறனற்ற ஆட்சியாளர்களால் வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் அதிகரித்திருப்பதாக உயர்நீதிமன்றமே வேதனை தெரிவித்துள்ளது. சாமானிய மனிதர்கள் சராசரி வாழ்க்கை நடத்தக்கூட அஞ்ச வேண்டிய சூழல், தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.
ஆணவக் கொலைகளைத் தனிச் சட்டமியற்றித் தடுக்கத் தவறிய வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு. எப்படிச் சமூக நீதி அரசாகும்? ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் தனிச்சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கும்போது, அதை இந்தத் தி.மு.க. அரசு உள்நோக்கத்துடன் நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது. அனைத்துச் சமூகங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டத்தைத் தமிழக அரசு கொண்டு வர வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் 5: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதற்கும், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து இருப்பதற்கும் காரணமான நிர்வாகத் திறனற்ற கபட நாடகத் தி.மு.க. அரசுக்குக் கண்டனம்
தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணம் முதல் காவலர் படுகொலைகள் வரை பல்வேறு காரணங்களுக்காக, சர்வ சாதாரணமாகக் கொலைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. நெஞ்சைப் பதற வைக்கும் இந்தச் சம்பவங்கள். மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. இதனால், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்க. எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இளைய சமுதாயம் பாதுகாப்பற்ற சூழலைச் சந்தித்து வருகிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்காமல், பொதுமக்களின் பாதுகாப்பு மீது அக்கறையில்லாமல் செயல்பட்டு வரும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசுக்கு இம்மாநாடு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 6: அவுட்சோர்சிங் முறையில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல், TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நேர்மையான முறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
அரசுப் பணியில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால் லட்சக்கணக்கான இளைஞர்கள் போதிய வேலை வாய்ப்பின்றிப் பரிதவித்து வரும் சூழல், தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்நிலையில், அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல.
இந்த நடவடிக்கையால். போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வரும் இளைஞர்கள், மாணவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரசுப் பணிகளுக்கான நேரடிப் பணியிடங்கள் பெருமளவு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசு ஊழியர் சங்கங்கள் கருத்து தெரிவிக்கின்றன. மேலும் அவுட்சோர்சிங் முறை நடைமுறைப்படுத்தப்படுவதால். TNPSC உள்ளிட்ட தேர்வு வாரியங்கள் வாயிலாக நிரப்பப்படும் பணியிடங்கள் குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இது லட்சக்கணக்கான இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவையே தகர்த்துவிடும் பேராபத்து ஆகும்.
எனவே, இந்த அவுட்சோர்சிங் முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும், TNPSC உள்ளிட்டத் தேர்வு வாரியங்கள் வாயிலாகத் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து நேர்மையான முறையில் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை தமிழக வெற்றிக் கழகத்தின் இம்மாநில மாநாடு வலியுறுத்துகிறது.






