என் மலர்
கிருஷ்ணகிரி
உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1 கோடியே 52 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி திறந்து வைத்தார்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் வட்டாரம் நமிலேரி ஊராட்சி உனிசெட்டியில் டைட்டான் நிறுவனம் மூலம் சமூக பொருளாதார மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1 கோடியே 52 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிதாக கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதற்கு டைட்டான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-
உனிசெட்டி கிராமத்தில் ஏற்கனவே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. மலை கிராமங்களில் உள்ள ஏராளமான மக்கள் இந்த சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உனிசெட்டி சுற்று வட்டார கிராமத்தில் 29,586 மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இருந்த ஆரம்ப சுகாதார நிலையம் குறைவான பரப்பளவு கொண்டது.
கூடுதல் கட்டிடம் தேவைப்பட்ட நிலையில் ரூ.1.52 கோடி மதிப்பில் சமூக பொருளதார மேம்பாட்டு நிதியில் தனியார் மருத்துவமனைக்கு ஈடாக கட்டிடம் இங்கு கட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பாக 2 படுக்கைகள் மற்றும் டைட்டன் நிறுவனத்தின் சார்பில் 10 படுக்கைகள் மேலும் ஒரு நாளைக்கு 100 முதல் 150 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாதத்திற்கு 20 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 டாக்டர்கள், ஒரு சுகாதார ஆய்வாளர், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என 13 பேர் பணிபுரிவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், நிறுவன பொது மேலாளர் விவேகாந்தன், சி.எஸ்.ஆர். திட்ட இயக்குனர் சங்கர், வெங்கடேஷ், சண்முகம், சுக்லா, வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தட்ரஹள்ளியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்த சிறுமியை தட்ரஹள்ளி அருகே உள்ள சோப்பனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதப்பன் (வயது 47) என்பவர், அருகில் உள்ள மாந்தோப்புக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த சம்பவம் கடந்த 25.8.2018 அன்று நடந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அப்போதைய இன்ஸ்பெக்டர் அமுதவள்ளி வழக்குப்பதிவு செய்து மாதப்பனை கைது செய்தார். கைதான மாதப்பன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட மாதப்பனுக்கு, போக்சோ பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும், மிரட்டிய குற்றத்திற்காக ஒரு ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.
குந்தாரப்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
குருபரப்பள்ளி:
குந்தாரப்பள்ளி அருகே முன்னாள் ராணுவ வீரரின் மனைவி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 50). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி நாகலட்சுமி (45). இவர்களுக்கு பிரதீப் (25) என்ற மகன் உள்ளார். இவர் என்ஜினீயரிங் முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். நாராயணன் தற்போது செங்கல்பட்டில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இதனால் வீட்டில் அவரது மனைவி நாகலட்சுமியும், மகன் பிரதீப்பும் இருந்து வந்தனர். இவர்களது வீடு ராமாபுரத்தில் வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. நாகலட்சுமி தனது வீட்டின் மாடியில் உள்ள 2 அறைகளில் ஒன்றை வாடகைக்கு விட்டுள்ளார். மற்றொரு அறை காலியாக இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை நாகலட்சுமி காலியாக உள்ள அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அதேபோல கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட நாகலட்சுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது நாகலட்சுமியின் உடல் கிடந்த இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
மேலும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகைகள், தடயங்களை சேகரித்தனர். இதற்கிடையே கொலை குறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினார்கள். இதைத்தொடர்ந்து நாகலட்சுமியின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கீழ்தளத்தில் குடியிருந்து வரும் நாகலட்சுமி இரவு நேரத்தில் எதற்காக மாடியில் உள்ள காலி அறைக்கு சென்றார்?, அந்த நேரத்தில் அவரை கொலை செய்தது யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூளகிரி பகுதியில் 15-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மின் வாரிய செயற்பொறியாளர் சுதாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சூளகிரி சுற்று வட்டார மின் பாதைகளில் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே 15-ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சின்னார், சென்னேப்பள்ளி, சாமல்பள்ளம், மேலுமலை, பருவீதி, அஞ்சாளம், பீர்ப்பள்ளி, எர்ரண்டப்பள்ளி, சிம்பல்திராடி, காளிங்காவரம், பத்தலப்பள்ளி, சூளகிரி டவுன், காமராஜ் நகர், பேரிகை சாலை, அரசு ஆஸ்பத்திரி, மில்லத் நகர், கீழ்பேட்டை, போகிபுரம், சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை அருகே விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை கிட்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில். கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி புனிதா (வயது 27) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். புனிதா குழந்தைகளுடன் தன் தாய் வீடான தஞ்சாவூர் மாவட்டம் கடையார்கோவிலுக்கு தீபாவளிக்கு சென்றார்.
பின்னர் கடந்த 2-ந் தேதி தன் கணவர் வீட்டிற்கு வந்தார். அப்போது மனவேதனையில் இருந்த புனிதா வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை (விஷம்) எடுத்து தின்றதாக தெரிகிறது. இதனால் புனிதா வாந்தி எடுத்ததை பார்த்த கணவர் அவரை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புனிதா இறந்தார்.
இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசில் புனிதாவின் தந்தை ராஜாங்கம் புகார் அளித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புனிதா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கட்டிட தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். திட்டம் போட்டு தீர்த்து கட்டிய மனைவி மற்றும் கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள சீங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் தனபால் (வயது 27). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சத்யா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டு ஆகிறது. குழந்தை இல்லை. இவர்கள் ஓசூரில் ஜூஜூவாடியில் எழில்நகரில் குடியிருந்து வந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் நேற்று காலை தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் தனபால் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசார் கொலை நடந்த இடத்திற்கு சென்றனர். அவர்கள், கொலையுண்ட தனபாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட தனபாலின் மனைவி சத்யாவிற்கும், மணிகண்டன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த தனபால் தனது மனைவியை கண்டித்தார். ஆனாலும் சத்யா அடிக்கடி தனது கள்ளக்காதலனுடன் போனில் பேசி வந்தார்.
இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சத்யா, தனது கள்ளக்காதலனிடம் தனது கணவர் இருக்கும் வரையில் தன்னால் கள்ளக்காதலை தொடர முடியாது, என கூறியுள்ளார்.
இதனால் தனது கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்த சத்யா, கள்ளக்காதலன் மணிகண்டனுக்கு திட்டம் வகுத்து கொடுத்தார். இரவில் கணவர் வீட்டுக்கு தூங்க வந்ததும், வீட்டு கதவை பூட்டாமல் விட்டு விடுவேன், அப்போது வந்து கொலை செய்து விடும்படி கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கூறியுளளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு தனபால் வந்தார். பின்னர் அவர் தூங்கி விட்டார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் கத்தியால் தனபால் தலையில் வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கொலையுண்ட தனபாலின் மனைவி சத்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரிடமும் ஓசூர் சிப்காட் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவனை கள்ளக்காதலன் உதவியுடன் மனைவியே தீர்த்து கட்டிய பயங்கர சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேன்கனிக்கோட்டை அருகே சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மஞ்சளகிரி பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஜோதிபுரம் கிராமத்தை சேர்ந்த எல்லப்பா என்பவரது மகன் லாளியப்பா (வயது 23) என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தற்போது அந்த மாணவியின் உடல் சோர்வை கண்டு அச்சமடைந்த தாய் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது அந்த சிறுமி 7 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியிடம் தாய் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை சூப்பிரண்டு சங்கீதா உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி லாளியப்பாவை தேடி வருகின்றனர்.
ராயக்கோட்டை அருகே மாட்டு வியாபாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் ஜீபியை சேர்ந்தவர் லோகேஷ் (வயது 32). மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அப்பையன் (28). சம்பவத்தன்று லோகேஷ் மாட்டுடன் அப்பையன் நிலம் வழியாக சென்றார். அப்போது ஏறபட்ட வாக்குவாதத்தில் அப்பையன் தரப்பினர் லோகேசை தாக்கினார்கள்.
இதில் காயம் அடைந்த லோகேஷ் இது குறித்து கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அப்பையன், பெத்தகானப்பள்ளி அஸ்வத் (32) , கெலமங்கலம் அண்ணா நகர் முகமது சலீம் (22) , கணேசா காலனி சையத் ஜபீர் (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தமிழ்நாட்டிற்கு யாருடைய ஆட்சியில் அதிக திட்டங்கள் வந்தது என விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பாக ஏற்கனவே எங்கள் கட்சியின் தலைவர்கள் கருத்து கூறி விட்டார்கள். அவர்கள் கூறும் கருத்தையே நானும் கூறுகிறேன். ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்குவதாக ஒரு தேதியை அறிவித்துள்ளார். அவர் கட்சியை அறிவிக்கட்டும். அதன்பிறகு அவர் கட்சியின் கொள்கைகளை அறிவிக்கட்டும். அந்த கொள்கைகள் எங்கள் திராவிட இயக்கத்துடன் வருவதாக இருக்கிறதா? என பார்ப்போம். அதன்பிறகு தேர்தல் நடைமுறைகளுக்கு ஏற்ப எங்களின் செயல்பாடுகள் இருக்கும்.
ஆ.ராசா கூறிய கருத்துக்கள் ஏற்புடையது அல்ல. அரசியல் நாகரிகத்துடன் பேச தெரியாத முன்னாள் மத்திய மந்திரி, அவருடைய கருத்துக்களுக்கு எங்களை போன்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆ.ராசா. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் நாங்கள் அவருடன் சேர்ந்து விவாதம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த நற்பணிகள், திட்டங்கள் அதேபோல தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார். அவர் என்ன திட்டங்களை கொண்டு வந்தார் என விவாதிக்க மு.க.ஸ்டாலினோ அல்லது ஆ.ராசாவோ தயாரா?.
ஆ.ராசா சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா? தி.மு.க. ஆட்சியில் அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா என விவாதிக்க அவர்கள் தயாரா?. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு விவாதம் நடத்த நாங்கள் தயார். இதே இடத்தில் தி.மு.க. சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கூற முடியுமா?
அடுத்த 25 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும். இதை சொல்ல ஒரு தைரியம் இருக்க வேண்டும். அந்த தைரியத்தை அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு கொடுத்துள்ளார்கள். சசிகலா பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
புயல் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மத்திய அரசின் ஆய்வுக்கு முன்பாகவே அவர் ஆய்வு செய்து, எவ்வளவு நிதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து வருகிறார்.
வேளாண்மை சட்டங்களை தமிழ்நாட்டில் எந்த விவசாயிகளாவது எதிர்க்கிறார்களா?. மத்திய அரசின் மூலம் தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கிறது. விவசாயிகள் பயிரிட்டுள்ள காய்கறிகளை பதப்படுத்த குளிர்பதன கிடங்கு வசதி செய்து தந்துள்ளார்கள். வேளாண் சட்டத்தை மு.க.ஸ்டாலின் அரசியலுக்காக எதிர்க்கிறார்.
எங்களுக்கும், பா.ஜனதாவுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. கொள்கை ரீதியாக கூட கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மாவட்டத்திற்கு கூட அரசு மருத்துவ கல்லூரி தந்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சி வேளாண் சட்டத்தை எதிர்க்கிறார்கள். அதை தி.மு.க. ஆதரித்து அவர்களுடன் சேர்ந்து வேளாண் சட்டத்தை எதிர்க்கிறார்கள். ஆட்சி, கட்சி, முதல்-அமைச்சரை எதிர்க்க வேண்டும் என்பதே மு.க.ஸ்டாலினின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார். இதையடுத்து, பலியானோரின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு, நாள் குறைந்து வருகிறது. இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 62 வயதுடைய மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் கடந்த 6-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் அந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த மூதாட்டிக்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த மூதாட்டி பலியானார். இவரையும் சேர்த்து மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. அவர்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 554 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆயிரத்து 278 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 162 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
தேன்கனிக்கோட்டை அருகே விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா அகலகோட்டை அருகே உள்ள குடிமந்தை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 31). விவசாயி. உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர் ராகவன் (23). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காவேரிப்பட்டணம் அருகே சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் போத்தாபுரம்-ஜெகதாப் சாலையில் ரோந்து சென்றனர். அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகில் பணம் வைத்து சூதாடி கொண்டு இருந்த பென்னேஸ்வரமடத்தைச் சேர்ந்த முனியப்பன் (வயது 38), சந்தாபுரம் பூபாலன் (36) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






