search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேபி முனுசாமி
    X
    கேபி முனுசாமி

    யாருடைய ஆட்சியில் அதிக திட்டங்கள் வந்தது என விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? கேபி முனுசாமி கேள்வி

    தமிழ்நாட்டிற்கு யாருடைய ஆட்சியில் அதிக திட்டங்கள் வந்தது என விவாதிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? என கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பாக ஏற்கனவே எங்கள் கட்சியின் தலைவர்கள் கருத்து கூறி விட்டார்கள். அவர்கள் கூறும் கருத்தையே நானும் கூறுகிறேன். ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்குவதாக ஒரு தேதியை அறிவித்துள்ளார். அவர் கட்சியை அறிவிக்கட்டும். அதன்பிறகு அவர் கட்சியின் கொள்கைகளை அறிவிக்கட்டும். அந்த கொள்கைகள் எங்கள் திராவிட இயக்கத்துடன் வருவதாக இருக்கிறதா? என பார்ப்போம். அதன்பிறகு தேர்தல் நடைமுறைகளுக்கு ஏற்ப எங்களின் செயல்பாடுகள் இருக்கும்.

    ஆ.ராசா கூறிய கருத்துக்கள் ஏற்புடையது அல்ல. அரசியல் நாகரிகத்துடன் பேச தெரியாத முன்னாள் மத்திய மந்திரி, அவருடைய கருத்துக்களுக்கு எங்களை போன்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

    ஸ்பெக்ட்ரம் வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆ.ராசா. அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் நாங்கள் அவருடன் சேர்ந்து விவாதம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் செய்த நற்பணிகள், திட்டங்கள் அதேபோல தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தார். அவர் என்ன திட்டங்களை கொண்டு வந்தார் என விவாதிக்க மு.க.ஸ்டாலினோ அல்லது ஆ.ராசாவோ தயாரா?.

    ஆ.ராசா சம்பந்தப்பட்ட ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதா? தி.மு.க. ஆட்சியில் அதிக திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா என விவாதிக்க அவர்கள் தயாரா?. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு விவாதம் நடத்த நாங்கள் தயார். இதே இடத்தில் தி.மு.க. சார்பில் அவர்களின் பிரதிநிதிகள் கூற முடியுமா?

    அடுத்த 25 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும். இதை சொல்ல ஒரு தைரியம் இருக்க வேண்டும். அந்த தைரியத்தை அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் எங்களுக்கு கொடுத்துள்ளார்கள். சசிகலா பற்றி எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

    புயல் பாதித்த பகுதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். மத்திய அரசின் ஆய்வுக்கு முன்பாகவே அவர் ஆய்வு செய்து, எவ்வளவு நிதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து வருகிறார்.

    வேளாண்மை சட்டங்களை தமிழ்நாட்டில் எந்த விவசாயிகளாவது எதிர்க்கிறார்களா?. மத்திய அரசின் மூலம் தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கிறது. விவசாயிகள் பயிரிட்டுள்ள காய்கறிகளை பதப்படுத்த குளிர்பதன கிடங்கு வசதி செய்து தந்துள்ளார்கள். வேளாண் சட்டத்தை மு.க.ஸ்டாலின் அரசியலுக்காக எதிர்க்கிறார்.

    எங்களுக்கும், பா.ஜனதாவுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. கொள்கை ரீதியாக கூட கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனாலும் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மாவட்டத்திற்கு கூட அரசு மருத்துவ கல்லூரி தந்துள்ளார்கள். காங்கிரஸ் கட்சி வேளாண் சட்டத்தை எதிர்க்கிறார்கள். அதை தி.மு.க. ஆதரித்து அவர்களுடன் சேர்ந்து வேளாண் சட்டத்தை எதிர்க்கிறார்கள். ஆட்சி, கட்சி, முதல்-அமைச்சரை எதிர்க்க வேண்டும் என்பதே மு.க.ஸ்டாலினின் விருப்பம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×