என் மலர்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி பழைய சப்-ஜெயில் சாலையில் முதல் மாடியில் ஒரு தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நேற்று காலை திடீரென புகை வந்துள்ளது. அதை பார்த்த அங்கிருந்தவர்கள் கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் மாவட்ட அலுவலர் மகாலிங்கமூர்த்தி, நிலைய அலுவலர் மோகன்குமார் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அந்த மருத்துவமனையின் வரவேற்பு அறையில் இருந்த குளிர்சாதன பெட்டி, நாற்காலிகள், சோபா போன்றவை எரிந்து சேதமானது. அதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும்.
தீயணைப்புத்துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். பல் மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வகணேஷ் (வயது 21). இவருக்கும், வத்திராயிருப்பு புதுப்பட்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வத்திராயிருப்புக்கு சென்ற செல்வகணேஷ் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் எரிச்சநத்தம் -விருதுநகர் சாலையில் கோட்டையம்மன் கோவில் அருகே செல்வகணேஷ் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் கருகி கிடந்தது.
எம்.புதுப்பட்டி போலீசார், செல்வகணேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் வத்திராயிருப்பைச் சேர்ந்த 4 பேரை பிடித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
கனமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. அணையின் நீர் மட்டம் 139 அடியை நெருங்கியபோது கடந்த மாதம் 29-ந் தேதி அணையை ஒட்டியுள்ள 6 ஷட்டர்கள் திறக்கப்பட்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட பகுதிக்கு 3800 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 142 அடி உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேரள அரசின் இந்த செயல் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 9 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேற்றப்பட்ட நிலையில் தமிழக அமைச்சர்கள் அணையை பார்வையிட்டு திரும்பிய பிறகு கேரள அரசு தனது கெடுபிடிகளை தளர்த்தி வருகிறது.
தற்போது கேரள பகுதிக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 138.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2906 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு மின் உற்பத்திக்காக 1867 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6748 மி.கன அடியாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அணையின் நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. நவம்பர் 10-ந் தேதி வரை 142 அடிக்குள் தேக்கி அதன் பின்னர் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். மீண்டும் இது குறித்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளதால் அதற்கு முன்பாக இதனை நடைமுறைபடுத்த வேண்டும். இல்லையெனில் கேரள அரசின் கெடுபிடிகள் குறித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.






