என் மலர்
கன்னியாகுமரி
- முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- மீன் பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் அமாவாசையையொட்டி இன்று 5-வது நாளாக சூறாவளி காற்றுடன் கடல் சீற்றம் நீடித்தது. இதனால் வங்கக்கடல், இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 3 கடல்களும் சீற்றமாக காணப்படுகிறது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்குவதற்கும், குளிப்பதற்கும் இன்று 5-வது நாளாக தடை விதிக்கப்பட்டது.
மேலும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடல் பகுதியில் சுற்றுலா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் தடையை மீறி கடலில் இறங்குபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்கக்கடல் பகுதி மற்ற கடல் பகுதியை விட அதிகமான அளவில் சீற்றமாக இருந்தது. இதனால் இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். கடல் சகஜ நிலைக்கு திரும்பியபிறகு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதனால் படகு குழாமில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதே போல திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. அங்கு அமைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகள் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் இன்று கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீன் பிடி தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வட்டக்கோட்டைக்கும் உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.
- சலீம் வீட்டிலிருந்து வெளியே சென்று இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்து திருடமுயன்றோம்.
- தலைமறைவாகியுள்ள சேர்மதுரையை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் ரஹ்மத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 58). இவரது மகன் மஸ்கட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். மகனை பார்ப்பதற்காக கடந்த வாரம் சலீம் தனது குடும்பத்தினருடன் மஸ்கட்டுக்கு சென்றார்.
சலீம் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வைத்திருந்தார். கடந்த 31-ந்தேதி நள்ளிரவு வெளிநாட்டில் இருந்தபடியே தனது செல்போனில் உள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை சலீம் ஆய்வு செய்தார்.
அப்போது மர்மநபர்கள் 2 பேர் வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று திருடி கொண்டிருந்தனர். இதை பார்த்த சலீம் இது குறித்து பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் திருடன்... திருடன்... என கூச்சலிடவே அங்கிருந்து அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அதில் 2 பேரின் உருவங்கள் தெளிவாக பதிவாகி இருந்தது.
அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதில் இருந்த ஒருவர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பிரபல கொள்ளையன் சேர்மத்துரை என்பது தெரியவந்தது. இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ஜெயலில் இருந்து வெளியே வந்து ஒரு மாதம் தான் ஆகிறது. மற்றொருவர் பணகுடியை சேர்ந்த முத்து (37) என்பது தெரியவந்தது.
இவர் மீது 5 திருட்டு வழக்குகள் உள்ளது. மேலும் கொள்ளை நடந்த வீட்டிலும் வெளியே ஒருவரும் நின்று கொண்டிருந்தது சி.சி.டி.வி.யில் தெரியவந்ததையடுத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவர் பணகுடியை சேர்ந்த வெட்டும் பெருமாள் (45) என்பதும் தெரியவந்தது. இவர் மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது.
போலீசார் 3 பேரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று இரவு தனிப்படை போலீசார் முத்து, வெட்டும் பெருமாள் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாங்கள் ஜெயிலில் இருந்தபோது பாவூர்சத்திரத்தை சேர்ந்த சேர்மதுரையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சேர்மதுரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளார். 3 பேரும் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் திட்டி நாகர்கோவிலுக்கு வந்தோம். நாகர்கோவிலில் ஆளில்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்க முடிவு செய்தோம். சலீம் வீட்டிலிருந்து வெளியே சென்று இருப்பதை அறிந்து அவரது வீட்டிற்குள் நள்ளிரவு புகுந்து திருடமுயன்றோம்.
இதேபோல் பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் திருட முயன்றோம் என்று கூறினார்கள். கைது செய்யப்பட்ட முத்து, வெட்டும் பெருமாள் இருவரையும் ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தலைமறைவாகியுள்ள சேர்மதுரையை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
- போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தபடகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதன் மூலம் கடந்த ஒரே ஆண்டில் 20 லட்சத்து 13 ஆயிரத்து 211 பேர் படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அதேவேளையில் கடந்த 2023-ம் ஆண்டு 19 லட்சத்து 4 ஆயிரத்து 221 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் பயணம் செய்துள்ளனர். இதனை ஒப்பிட்டு பார்க்கும் போது 2024-ம் ஆண்டு 1 லட்சத்து 8 ஆயிரத்து 990 பேர் அதிகமாகும்.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை கடந்த ஆண்டு மாதம் வாரியாக பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
ஜனவரி 2 லட்சத்து 34 ஆயிரத்து 106 பேர், பிப்ரவரி 1 லட்சத்து 58 ஆயிரத்து 802 பேர், மார்ச் 1 லட்சத்து 61 ஆயிரத்து 80 பேர், ஏப்ரல் 1 லட்சத்து 42 ஆயிரத்து 867 பேர், மே 1 லட்சத்து 80 ஆயிரத்து 318 பேர், ஜூன் 1 லட்சத்து 49 ஆயிரத்து 472 பேர் படகில் பயணம் செய்து பார்வையிட்டுள்ளனர்.
ஜூலை 1 லட்சத்து 22 ஆயிரத்து 974 பேர், ஆகஸ்ட் 1 லட்சத்து 40 ஆயிரத்து 710 பேர், செப்டம்பர் 1 லட்சத்து 51 ஆயிரத்து 803 பேர், அக்டோபர் 1 லட்சத்து 69 ஆயிரத்து 489 பேர், நவம்பர் 2 லட்சத்து 9 ஆயிரம் பேர், கடந்த டிசம்பர் 1 லட்சத்து 93 ஆயிரத்து 942 பேர் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்துள்ளனர்.
இதில் கடந்த ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் அதிக அளவு அதாவது 2 லட்சத்து 34 ஆயிரத்து 106 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை படகில் பயணம் செய்து பார்வையிட்டு வந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 1½ வருடங்களாக திருவள்ளுவர் சிலையில் கண்ணாடி பாலப்பணிகள் நடைபெற்று வந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
- கன்னியாகுமரியில் இன்று காலை பாலசுப்பிரமணியம் என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
- சுற்றுலா வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு பாலசுப்பிரமணியத்திடம் கேட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 வழிச்சாலையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பாலசுப்பிரமணியம் (50) என்பவர் கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை பாலசுப்பிரமணியம் நடைப்பயிற்சி செல்லும் போது சுற்றுலா வாகனத்தில் வந்தவர்கள் தங்களை குழுப் புகைப்படம் எடுத்து தருமாறு அவரிடம் கேட்டுள்ளனர்.
அவரும் சாலையின் நடுவே நின்று அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அவ்வழியே வந்த கார் அவர் மீது வேகமாக மோதியுள்ளது. இதனால் நிகழ்விடத்திலேயே பாலசுப்பிரமணியம் பரிதாபமாக உயிரிழந்தார்.
- கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
- சுற்றுலா பயணிகள் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
கன்னியாகுமரி:
ஆங்கில வருடமான 2024-ம் ஆண்டு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்து 2025-ம் ஆண்டு மலர்ந்தது. இந்தப் புத்தாண்டையொட்டி சுற்றுலா தலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கன்னியாகுமரியிலும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடந்தது. ஆனால் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறவில்லை. இதனால் ஓட்டல்களில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு சென்று புத்தாண்டு கொண்டாடினர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் இரவு விடுதிகளில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை இந்த புத்தாண்டின் முதல் சூரிய உதயத்தை காண்பதற்காக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருந்தது. மேக மூட்டத்தினால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் காலை 7 மணி வரை காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதற்கிடையில் காலை 7.30 மணிக்கு சூரியன் மேகக் கூட்டத்திற்கு இடையில் இருந்து வெளியே தெரிந்தது. கடலுக்கு அடியில் இருந்து சூரியன் உதயமான காட்சியை புத்தாண்டில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
- கண்காட்சியை ஒரு வார காலம் இலவசமாக பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி விழா நடந்த மைதானத்தில் திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு மற்றும் திருக்குறள் பற்றிய கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில் திருவள்ளுவர் சிலையின் மர சிற்பத்திலான மாதிரி தோற்றம், திருக்குறள் ஓலைச் சுவடிகள், திருக்குறள் எழுதப்பட்ட பட்டு சேலை, புத்தகங்கள், மின்நூல்கள், திருவள்ளுவர் சிலை உருவான வரலாறு பற்றிய புகைப்படங்கள், திருவள்ளுவர் பற்றிய குறிப்புகள், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையின் அரிய புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை ஒரு வார காலம் இலவசமாக பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.
- பிரதமர் மோடி அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
- விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகை ரசித்தார்.
இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதற்கிடையே, தேர்தல் முடிவுற்ற நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் 2 நாட்கள் தியானத்தில் ஈடுபட்டார்.
இதற்காக, கடந்த மே மாதம் 30ம் தேதி கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி அங்குள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு, படகில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றார்.

பின்னர், மண்டபத்தின் ஒரு பகுதியில் உள்ள பகவதி அம்மனின் பாதம் பதித்த மண்டபத்துக்கு சென்று தரிசனம் செய்த பிரதமர் மோடி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி வணங்கி மரியாதை செய்தார். ராமகிருஷ்ணா பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் படங்களையும் வணங்கினார்.
இதைதொடர்ந்து, பிரதமர் மோடி தியான மண்டபத்துக்கு சென்று தனது தியானத்தை தொடங்கி இரவு வரை ஈடுபட்டனார். பிறகு, அன்று இரவு தனக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த தனது தனி அறையில் ஓய்வு எடுத்தார்.
பிறகு மே 31ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் எழுந்த பிரதமர் மோடி குளித்து முடித்துவிட்டு காவி உடைகளை உடுத்தினார். தனது 3 விரல்களால் விபூதியை தொட்டு நெற்றியில் பெரிய பட்டையை போட்டுக் கொண்டு அதன் நடுவில் குங்குமத்தையும் வைத்துக் கொண்டார்.
பின்னர் காலை 5 மணி அளவில் தனது அறையை விட்டு வெளியே வந்த அவர் காவி சட்டை, வேட்டி, காவி துண்டு, கையில்
கையில் ருத்ராட்ச மாலை ஒன்றையும் வைத்திருந்த அவர் அதனை விரல்களால் உருட்டிக் கொண்டே விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி வந்தார்.
மண்டபத்தின் கிழக்கு பகுதிக்கு சென்று காலை 5.55 மணி அளவில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபாடு நடத்தினார். அப்போது தனது 2 கைகளையும் மேலே தூக்கி சூரிய பகவானை மனமுருக வணங்கி வழிபட்டார்.
பின்னர் சிறிய சொம்பை எடுத்து அதில் இருந்த தீர்த்தத்தை கடலில் ஊற்றினார். இது கங்கை நதியில் இருந்து எடுத்து வந்த புனித தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.
சுமார் 10 நிமிடங்கள் வரையில் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிவந்த பிரதமர் மோடி கடல் அழகையும் ரசித்து பார்த்தார்.

பின்னர் விவேகானந்தரின் முழு உருவ சிலையுடன் கூடிய மண்டபத்துக்கு சென்ற மோடி சிலை எதிரே சம்மணமிட்டு தரையில் அமர்ந்து தியானம் செய்தார்.
விவேகானந்தரின் சிலையை பார்த்து முதலில் வணங்கிய அவர் பின்னர் கண்களை மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அப்போதும் ருத்ராட்ச மாலையை விரல்களால் வருடியபடியே மந்திரங்களையும் அவர் சொன்னார்.
இதன்பிறகு தியான மண்டபத்துக்கு சென்ற பிரதமர் மோடி அங்கேயும் துறவி கோலத்தில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தார்.
அப்போது தியான மண்டபத்தில் மனதுக்கு இதமான... மனதை சாந்தப்படுத்தும் ஓம்-பிரணவ மந்திரம் ஒலித்துக்கொண்டே இருந்தது.

இந்திய அளவில் சக்தி வாய்ந்த தலைவராகவும், சர்வதேச அளவில் மதிப்புமிக்கவராகவும் திகழ்ந்து வரும் பிரதமர் மோடி இங்கு தியானம் செய்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபம் சர்வதேச அளவிலான கவனத்தை பெற்றது.
- நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன.
- படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவிடம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை படகில் சென்று சுற்றுலா பயணிகள் தினமும் பார்வையிட்டு வருகின்றனர். இதற்காக 3 படகுகள் காலை 8 மணி முதல் இடைவிடாது இயக்கப்பட்டு வருகின்றன.
சுனாமிக்கு பிறகு அமாவாசை மற்றும் பவுர்ணமியின்போது கடலில் அடிக்கடி சீற்றம் ஏற்பட்டு வருவதால் படகு போக்குவரத்து தொடங்குவதில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று அமாவாசை என்பதால் கடலில் மாற்றங்கள் காணப்பட்டன. இன்று காலையும் கடல் சீற்றமாக இருந்தது. அவ்வப்போது காற்றுடன் கூடிய மழையும் நீடித்தது. இதனால் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.
தற்போது பள்ளி விடுமுறை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் போன்ற காரணங்களால் ஏராளமான வடமாநில சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி வந்து உள்ளனர். மேலும் விவேகானந்தர் நினைவிடம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி இழை கூண்டு பாலம் நேற்று திறக்கப்பட்டு உள்ளது. அதனை பார்ப்பதற்காகவும் ஏராளமானோர் கன்னியாகுமரி வந்திருந்தனர்.
அவர்கள் இன்று காலை 6 மணியில் இருந்தே படகு குழாமில் காத்திருந்தனர். ஆனால் 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படாததால் அவர்கள் படகு குழாமில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.
இதன் காரணமாக அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடுப்பு வேலி அமைத்து கூட்டத்தை சீர்படுத்தினர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- குமரியில் படகு சவாரியை மேம்படுத்த 3 புதிய படகுகள் வாங்கப்படும்.
- மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதன் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
* குமரி முனையில் முப்பால் புலவர் வள்ளுவருக்கு முத்தமிழறிஞர் வைத்த சிலைக்கு வெள்ளி விழா. தமிழின் பெருமையை குறளின் அருமையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் மகிழ்ச்சியை அடைந்த நாள் இன்று.
* வான் புகழ் வள்ளுவருக்கு வானுயர சிலை வைத்த மகிழ்ச்சி கலைஞருக்கு இருந்தது. வெள்ளிவிழா கொண்டாடிய பெருமை எனக்கு. அப்பா என்ன வைத்துவிட்டு போனார் எனக்கேட்போருக்கு தமிழகத்தின் குமரிமுனையில் உள்ள வள்ளுவர் சிலை பதில் சொல்லும்.
* வள்ளுவர் சிலை வைத்து 25 ஆண்டுகள் ஆனதற்கு பெரிய விழா எடுக்க வேண்டும் என்பதை சொன்னதற்கு விமர்சனம் எழுந்தது. அமைத்ததற்கு எதற்கு விழா என சில அதிமேதாவிகள் கேள்வி எழுப்பினர்.
* திருவள்ளுவர் தமிழகத்திற்கும், திருக்குறள் தமிழரின் பண்பாட்டுக்கும் அடையாளம் என்பதால் கொண்டாடுகிறோம். வள்ளுவரை கொண்டாடுவோம், கொண்டாடி கொண்டே இருப்போம்.
* அய்யன் வள்ளுவர் சிலை வெள்ளி விழா, விவேகானந்தர் மண்டபத்துடன் இணைக்கும் கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழுக்கும் உழைத்து கொண்டே இருப்பது வாழ்நாள் கடமை.
* ஆட்சிக்கு வரும் முன்னரே சட்டமன்றத்தில் வள்ளுவர் படம் திறக்க வைத்தவர் கலைஞர் கருணாநிதி. திருக்குறளாகவே வாழ்ந்தார் கலைஞர் கருணாநிதி.
* நமது மதம் குறள் மதம் என்றும் நமது நெறி குறள் நெறி என்றும் பெரியார் சொன்னார்.
*காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு.போப் பெயரில் படகுகள் வாங்கப்படும்.
* குமரியில் படகு சவாரியை மேம்படுத்த 3 புதிய படகுகள் வாங்கப்படும்.
*மாவட்டம் தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
*கன்னியாகுமரி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
* இனி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத கடைசி வாரம் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும் என்றார்.
- நேற்று கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள பாறைகளில் விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
இதில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
வருகிற 1-ந்தேதி இந்த சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி நகர் முழுவதும் கொடி, தோரணங்கள் மற்றும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருவள்ளுவர் சில வெள்ளி விழாவை முன்னிட்டு நேற்று கன்னியாகுமரியில் கண்ணாடி இழை பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, சேகர் பாபு, எம்பி டி.ஆர்.பாலு, எம்.பி கனிமொழி உள்ளிட்டோரும் இருந்தனர்.
இதையடுத்து திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் இன்று 2-வது நாள் நிகழ்ச்சியில் திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் தோரண வாயிலுக்கும் அடிக்கல் நாட்டினார். திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பரிசு வழங்கி வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிட்டார்.
- முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.
- கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை.
நாகர்கோவில்:
புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு வரட்டது. அப்போது ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் பார்சல் ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது காக்கி கவரில் 8 பார்சல் இருந்தது. இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் செரியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.
அந்த பார்சல்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் என்பதும், அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
மதுவிலக்கு போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
- வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிடுகிறார்.
கன்னியாகுமரி:
முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-வது நாள் நிகழ்ச்சியில் திருக்குறள் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் தோரண வாயிலுக்கும் அடிக்கல் நாடுகிறார். திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் பரிசு வழங்க உள்ளார். மேலும் வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிடுகிறார்.






