என் மலர்
கன்னியாகுமரி
- பிரேத பரிசோதனையில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அருகே கீழப்பெருவிளை இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் (வயது 64), ஜோதிடர். இவரது மனைவி விஜயகுமாரி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கோவையில் தங்கி படித்து வருகிறார். இதனால் ஜான் ஸ்டீபனும் விஜயகுமாரியும் இங்கு வசித்து வந்தனர்.
வீட்டு வேலைகள் செய்து வரும் விஜயகுமாரி சம்பவத்தன்று வழக்கம் போல் வீட்டு வேலை செய்வதற்காக வெளியே சென்று இருந்தார். மாலை 5 மணிக்கு அவர் வீட்டிற்கு வந்தபோது ஜான் ஸ்டீபன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆசாரிபள்ளம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜான் ஸ்டீபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயகுமாரி புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் ஜான் ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை தொடர்பாக இரணியல் அருகே உள்ள கட்டி மாங்கோடு பகுதியை சேர்ந்த கலையரசி (43), நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தைச் சேர்ந்த நம்பிராஜன் (25) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட கலையரசி கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்காக ஜோதிடம் பார்ப்பதற்காக ஜான் ஸ்டீபனிடம் வந்து உள்ளார். அப்போது சில பரிகாரங்களை செய்தால் கணவருடன் சேர்ந்து வாழலாம் என்று ஜான் ஸ்டீபன் கூறியதுடன் பணமும் வாங்கியுள்ளார்.
ஆனால் ஜோதிடம் பார்த்த பிறகு கணவன்- மனைவி இடையேயான தகராறு தான் அதிகரித்தது. இதனை ஜான் ஸ்டீபனிடம் தெரிவித்த கலையரசி, தான் கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த விரோதத்தில் தான் ஜான் ஸ்டீபனை தீர்த்து கட்ட கலையரசி முடிவு செய்தார்.
கூலிப்படையை ஏவி கொலை செய்ய அவர் திட்டம் திட்டினார். இதற்காக நெல்லை மாவட்டம் கருவேலங்குளத்தைச் சேர்ந்த நம்பி ராஜனை தொடர்பு கொண்டு பேசினார். அதற்காக அவருக்கு பணமும் கொடுத்து உள்ளார். ஜான் ஸ்டீபனை தீர்த்து கட்டுவதற்காக அவரது வீட்டிற்கு நம்பிராஜன் வந்துள்ளார்.
வீட்டில் தனியாக இருந்த ஜான் ஸ்டீபனை துண்டால் கழுத்தை இறுக்கியும், தரையில் அடித்தும் கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்து உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள கலையரசி மற்றும் நம்பி ராஜனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் இருவரையும் போலீசார் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர் படுத்துகிறார்கள்.
- காலை 8 மணிக்கு பதில் 2 மணி நேரம் முன்னதாக இன்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
- காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி:
சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசனும் தொடங்கி உள்ளது. இதனால் தினமும் கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர். இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை மற்றும் பொங்கல் பண்டிகை, உழவர் திருநாள், மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம் காணும் பொங்கல் போன்ற தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இதனால் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமானோர் திரண்டனர். ஆனால் மழைமேகம் திரண்டு இருந்ததன் காரணமாக சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரியவில்லை. தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.
கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட அதிகாலை 5 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத் துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி காலை 8 மணிக்கு பதில் 2 மணி நேரம் முன்னதாக இன்று காலை 6 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் சுமார் 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, கலங்கரை விளக்கம், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் போன்றவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தொடர் விடுமுறையயொட்டி இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
- தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த 7 மீனவர்களும் இடம்பெற்று இருந்தனர்.
- விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் பலர் ஆழ்கடல் மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாதக்கணக்கில் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்து திரும்புவது வழக்கம்.
அப்போது கடல் எல்லையை தாண்டி வந்ததாக வெளிநாடுகளால் கைது செய்யப்படுவதும் உண்டு. இதுபோல தற்போது 15 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
குமரி மாவட்டம் தூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷார்ஜின். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி 15 மீனவர்கள் தேங்காய்பட்டணம் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றனர்.
தூத்தூரை சேர்ந்த 8 மீனவர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த 7 மீனவர்களும் இடம்பெற்று இருந்தனர். அவர்கள் டிக்கோகார்சியா தீவு அருகே ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்தனர். அப்போது அங்கு வந்த வெளிநாட்டு கடற்படையினர், மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்து 15 மீனவர்களையும் கைது செய்தனர். அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் குமரி மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் முன்னிலை வகித்தார்.
- சிறப்பு விருந்தினராக நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார்.
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் குமரி கடற்கரையில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தார்.
இயக்கத்தின் தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பூஜித குரு பாலபிரஜாதிபதி அடிகளார் முன்னிலை வகித்தார். காணிமடம் தபஸ்வி பொன். காமராஜ், வள்ளலார் பேரவை தலைவர் பத்மனேந்திர சுவாமிகள் வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் வி. நாராயணனை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து தெரிவித்தார்.
- பெற்றோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
- வருகிற 14-ந்தேதி இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார்.
நாகர்கோவில்:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் மற்றும் விண்வெளித் துறை செயலா ளராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானி டாக்டர் நாராயணன் குமரிமாவட்டம் நாகர்கோவில் அருகே மேல காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
அவர் வருகிற 14-ந்தேதி இஸ்ரோ தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளார். இவரது பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். இஸ்ரோ தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள விஞ்ஞானி நாராயணன் இன்று குமரி மாவட்டம் வந்தார்.
சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் அவர் சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து சொந்த ஊரான மேலக்காட்டு விளைக்கு வந்தார். இன்று மாலை அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுடன் அவரது பெற்றோரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
மாலை 6.30 மணிக்கு அவரது சொந்த ஊரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
- 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
நாகர்கோவில்:
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் திருவிழா அன்று மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5-ம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவையொட்டி தினமும் காலை, மாலை சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது. 9-ம் திருவிழாவான இன்று காலையில் கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து கோவிலில் தட்டு வாகனத்தில் சுவாமியும், அம்பாளும், அறம் வளர்த்தநாயகியும், விநாயகரும் எடுத்து வரப்பட்டனர்.
பின்னர் பெரிய தேரான சுவாமி தேரில் சுவாமியும், அம்பாளும் அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகி அம்மனும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளினார்கள். இதைத்தொடர்ந்து தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் 3 தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. விழாவில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசியா, சுவாமி பத்மேந்திரா, காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அம்மன் தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக இழுத்து வரப்பட்டது. 'ஓம் காளி ஜெய் காளி' என்ற பக்தி கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தேரோட்ட விழாவில் புதுமண தம்பதியினர் பலரும் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் குடும்பத்தோடு வந்து தேரோட்ட விழாவில் பலரும் கலந்து கொண்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோரும் தேரோட்ட விழாவில் பங்கேற்றனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருந்தனர். 4 ரத வீதிகளிலும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. இதையடுத்து கோவில் 4 ரத வீதிகளிலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. சாலை ஓரங்களில் பக்தர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தேரேட்டத்தை காண வந்திருந்தனர். சுசீந்திரம் புறவழிச்சாலையிலும் ஏராளமான வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
நாகர்கோவிலில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு குளிர்பானங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று இரவு 12 மணிக்கு கோட்டார் வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணியசாமி, வேளிமலை குமாரசுவாமி ஆகியோர் விடைபெறும் சப்த வர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் திருவிழாவான நாளை (13-ந்தேதி) காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. மாலையில் நடராஜர் வீதி உலாவும், இரவில் ஆராட்டும் நடக்கிறது.
- கடந்த 4-ந்தேதி முதல் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.
- இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இன்று இந்த கண்ணாடி பாலத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள கைப்பிடி சுவரில் "திடீர்" என்று சேதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகும் கண்ணாடி பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலத்தை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்.
- ஓட்டுநர், கிளீனர் இருவரும் கைதான நிலையில் லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு.
கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய பசுமை தீர்ப்பாயம் இதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது.
கேரளாவில் இருந்து தமிழக எல்லையில் கொட்டப்படும் கழிவுகள் தொடர்பாக தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியில் கேரளாவில் இருந்து காய்கறிக் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஓட்டுநர், கிளீனர் இருவரும் கைதான நிலையில் லாரி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
- நேவிகேஷன் செயற்கைக்கோள் இந்த மாத இறுதியில் செலுத்தப்பட உள்ளது.
இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள வி.நாராயணன் கூறியிருப்பதாவது:-
முக்கியமான பொறுப்பை பிரதமர் கொடுத்திருக்கிறார். இஸ்ரோவிற்கு அடுத்த கட்டமாக முக்கியமான சில திட்டங்கள் உள்ளன. இஸ்ரோவை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வேன். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக என்னென்ன செய்ய முடியுமோ அதை செயல்படுத்துவேன்.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. நேவிகேஷன் செயற்கைக்கோள் இந்த மாத இறுதியில் செலுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இருந்த தலைவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டுள்ளார்கள். அதே போல் நானும் பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
- விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார்கள்.
- திருவள்ளூர் சிலைக்கு படகில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.
இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்து நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடல் சீற்றம், கடல் நீர்மட்டம் தாழ்வு மற்றும் கடல் நீர்மட்டம் உயர்வு போன்ற இயற்கை மாற்றங்களின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரில் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலைமை இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு நெடுஞ்சாலை துறை மூலம் விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே ரூ.37கோடி செலவில் கண்ணாடி இழை கூண்டு பாலத்தை அமைத்துள்ளது. இந்த கண்ணாடி பாலத்தை கடந்த மாதம் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் இந்த பாலம் வழியாக சுற்றுலா பயணிகள் நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு தற்போது படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிச்செல்லும் படகு விவேகானந்தர் பாறையில் சுற்றுலா பயணிகளை இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கரைக்கு திரும்பி வந்து விடுகிறது. விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்ட பிறகு சுற்றுலா பயணிகள் கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார்கள். அதன்பிறகு அவர்கள் அதே பாலம் வழியாக விவேகானந்தர் பாறைக்கு வந்து அங்கிருந்து படகு மூலம் கரைக்கு திரும்புகிறார்கள்.
கண்ணாடி பாலம் திறக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து திருவள்ளூர் சிலைக்கு படகில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு தற்காலிகமாக படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
- கண்ணாடி பாலம் வழியாகவும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு நடந்து சென்று பார்வையிட்டு வந்தனர்.
- சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதேபோல ஏப்ரல், மே கோடை விடுமுறை சீசன் காலங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு படையெடுப்பார்கள்.
இந்த ஆண்டு சபரிமலை சீசன் கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களுக்கு மக்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது. சூரியன் உதயமான இந்த அற்புதகாட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு திரும்பினர். கண்ணாடி பாலம் வழியாகவும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு நடந்து சென்று பார்வையிட்டு வந்தனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிவதால் சுற்றுலா தலங்கள் களை கட்டியது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- காசியின் தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- இடைத்தரகர் நாராயணன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் காசி மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியன் ஆகிய இருவர் மீது கந்துவட்டி புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அவரது தந்தை தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும் இந்த வழக்கில் இடைத்தரகர் நாராயணன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 1 லட்சத்து அபராதமும் விதித்து மகளிர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.






