என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் நலத்திற்காகச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு உலக மக்கள் மற்றும் அனைத்து உயிரினங்களின் நலத்திற்காகச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மன்றப் பொருளாளர் ராம.முத்துக்கருப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் கோ.முருகன், அனைத்து வியாபரிகள் சங்கத் தலைவர் சேகர், செயலர் குசேலன், அரிமா மாவட்டத் தலைவர் வேலு முன்னிலை வகித்தார்கள்.

    அனைத்து வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் நெடுஞ்செழியன் வரவேற்றார். ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்றத் தலைவர் விஜயகுமார் முன்னிலையில் முழு அகவல் படித்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. தமிழ்ப்படைப்பாளர்கள் சங்கத் தலைவர் இளையாப்பிள்ளை சன்மார்க்கக் கொடியினை ஏற்றி வைத்தார். ரோட்டரி முன்னாள் தலைவர் ஆறுமுகம், பிரகாசம் சன்மார்க்க இளைஞர் அணி நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், சந்திர சேகரன், தணிக்கையாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.

    • ஜெயராமன் (வயது 31). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி லட்சுமி (29). பொறியியல் பட்டம் படித்தவர்.
    • தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சத்தை உனது பெற்றோர் வீட்டில் வாங்கி வரச் சொல்லி லட்சுமியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே உள்ள புது பலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயராமன் (வயது 31). இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி லட்சுமி (29). பொறியியல் பட்டம் படித்தவர். இவர்களுக்கு 3 வயதில் லத்தீஸ்வரன் என்கிற ஆண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்து 6 மாதங்கள் நல்ல நிலையில் குடும்பம் நடத்திய ஜெயராமன், அதன் பின்னர் லட்சுமியிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். இதன் உச்சகட்டமாக சம்பவத்தன்று ஜெயராமனும் அவரது தாயார் பழனியம்மாளும் சேர்ந்து கொண்டு தொழில் தொடங்குவதற்காக ரூ.5 லட்சத்தை உனது பெற்றோர் வீட்டில் வாங்கி வரச் சொல்லி லட்சுமியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர்.

    தாக்குதல்அப்போது வாக்குவாதம் முற்றி தேங்காய் உரிக்க பயன்படுத்தும் இரும்பு பைப்பால் தலையில் அடித்து, இதோடு நீ செத்து போடி, நீ செத்தால் நான் 2-வது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி லட்சுமி மீது ஜெயராமன் கொலை வெறி தாக்குதல் நடத்தினார். ஜெயராமனின் தாயார் பழனியம்மாள் லட்சுமியை திட்டி தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமி சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்இஸ்பெக்டர் ராதிகா, ஏட்டு சங்கீதா ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லட்சுமியை தாக்கியதாக அவரது கணவர் ஜெயராமன் மற்றும் மாமியார் பழனியம்மாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்டமாக கணவர் ஜெயராமனை கைது செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட பழனியம்மாளை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இளங்கோவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென்று தீ பிடித்து எரிந்தது.
    • இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர், சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டுவன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் இளங்கோவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இளங்கோவன் மற்றும் குடும்பத்தினர், சங்கராபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் வீடு மற்றும் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.

    தீவிபத்துக்கான காரணம் குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவியை சங்காரபுரம் தாசில்தார் சரவணன் வழங்கினார்.

    • 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3பேரல்களில் இருந்த சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனர்.
    • பாலு (வயது 45) ராஜேந்திரன் (வயது 33) என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் வீரபாண்டி கிராமத்தில் உள்ள எக்கா மலையில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலை ஒட்டி விரைந்து சென்ற அரகண்டநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் அதிரடி சாராயவேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3பேரல்களில் இருந்த சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வீரபாண்டி கிராமம் பள்ளத் தெருவை சேர்ந்த பாலு (வயது 45) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    அதேபோல் ஒட்டம்பட்டு கிராமத்தில் 200 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றிய போலீசார் இது தொடர்பாக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜேந்திரன் (வயது 33) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரேஷ்குமார் (63) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வசித்து வருகிறார்
    • திடீரென அங்கிருந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்தன

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் கடைவீதி பஸ் நிறுத்தம் அருகே சுரேஷ்குமார் (63) ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் வசித்து வருகிறார். இவர் தனது மெத்தை வீட்டில் மாடியில் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்த செய்தித்தாள்கள் மற்றும் புத்தகம் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்தன. அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி ஓடி வந்தார். தகவல் அறிந்த தியாகதுருகம் தீயணைப்பு நிலை அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இளையராஜா (வயது 45) குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது
    • குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த இளையராஜாவை கைது செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் காத்திருப்பு வளாகம் உள்ளது. இங்கு மணலூர்பேட்டை போலீஸ் சரகம் செம்படை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா (வயது 45) குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து நீதிமன்ற எழுத்தர் சேவியர் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த இளையராஜாவை கைது செய்தார். 

    • இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்
    • பள்ளியின் கழிவறையை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் கூறியதாகவும் தெரிகிறது

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை சரிவர போடவில்லை என மாணவர்கள் தெரிவித்த புகாரின் பேரில், ஆசிரியர்கள் சத்துணவு பொறுப்பாளரை கேட்டுள்ளனர். இது தவிர பள்ளியின் கழிவறையை மாணவர்களைக் கொண்டு சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் கூறியதாகவும் தெரிகிறது. இந்த பள்ளியில் பணி புரியும் தலைமை ஆசிரியர் பள்ளி மாணவர்களின் ஒரு பிரிவினரை சமுதாய ரீதியாக அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தலைமை ஆசிரியருக்கும், ஒரு சில ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இந்த கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் நடைபெற்று முடிவில் காரசாரமான சண்டையும் பள்ளி மாணவர்கள் மத்தியி லேயே நடைபெற்றுள்ளது இது பற்றி தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோ ர்கள் மற்றும் பொதுமக்கள் கள்ளக்குறிச்சியில் உள்ள முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அதிகாரிகள் விசாரணையில், தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு சில ஆசிரியர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டை குறித்து விரிவான விசாரணை அறிக்கையை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.  அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 3 ஆசிரியர்களை தற்காலிகமாக மாற்றுப் பணிக்காக முதன்மை கல்வி அலுவலர் இடமாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளார். பள்ளி தலைமையாசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரங்கள் சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பிரிவு மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி மாணவர்களிடையே சமுதாய ரீதியில் வேறுபாட்டை உருவாக்கும் வகையில் பேசிய தலைமை ஆசிரியருக்கு தண்டனை வழங்கப்படவில்லை. இதனை தட்டி கேட்ட ஆசிரியர்களுக்கு தண்டனை என்பது மாணவர்களை அவமதிக்கும் செயலாகும்  எனவே இதில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநில மற்றும் தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையத்தை அணுக உள்ளதாகவும் மற்ற ஆசிரியர்களுக்கான மாற்றுப் பணிக்கான உத்தரவை ரத்து செய்து வன்கொடுமை பேசிய பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை வலியுறுத்தி புகார் கொடுக்க உள்ளோம்      

    மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து முதல் கட்டமாக புகார் தெரிவிப்பது எனவும், இதில் நடவடிக்கை இல்லை எனில் மாணவர்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்  இதுகுறித்து முதன்மை கல்வி அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது முதல் கட்ட விசாரணையில் 3 ஆசிரியர்களுக்கு மாற்று பணிக்கு உத்தரவிட்டிருக்கிறோம். வன்கொடுமை பேச்சு குறித்து உரிய ஆதாரங்கள் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவத்தால் திருக்கோவிலூர் பகுதி மாணவர்கள், ஆசிரிய ர்களிடையே பரபரப்பு நிலுவுகிறது.

    • மோகன்ராஜ் (வயது 31). இவர் திருக்கோவிலூர் பஸ் கண்ணாடியை உடைக்க போவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்தார்.
    • கைது செய்யப்பட்ட மோகன்ராஜிடம் விசாரணை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன்ராஜ் (வயது 31).

    இவர் திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டில் செங்கனான்கொள்ளை கிராம பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பஸ் கண்ணாடியை உடைக்க போவதாகவும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பேசி தகராறு செய்து கொண்டிருந்தார். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற திருக்கோவிலூர் போலீசார் மோகன்ராஜை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்ராஜிடம் விசாரணை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்தார். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதேபோல் ஜி .அரியூர்அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் எதிரே மெயின் ரோட்டில் நின்று கொண்டு தகராறு செய்து கொண்டு இருந்த சோழபாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகன் சூர்யாவை( வயது 23 )போலீசார் கைது செய்து சோதனை நடத்திய போது 50 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலம் வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மோகன்ராஜ் மற்றும் சூர்யா ஆகியோர் மீது திருக்கோவிலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து கஞ்சா எங்கிருந்து கடத்தப்பட்டது பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

    • 56 வயது பெண் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது
    • திருக்கோவிலூர் அருகே கொரேனா பாதித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே கொரேனா பாதித்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக சற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.  இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவரது ரத்த மாதிரி, சளியை பரிசோதித்த போது அவருக்கு ெகாரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அப் பெண் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 27-ந் தேதி அனுமதிக்கப்பட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்த நிலையில் நேற்று இரவு9.20 மணிக்கு அப் பெண் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து அக் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • யுவராஜ் (வயது29). இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார்.
    • 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் யுவராஜ் (வயது29). கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காராக பணிபுரிந்து வந்த இவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது மனைவி கல்கியிடம் விவாகரத்து கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதை தட்டிக் கேட்ட கல்கியின் அண்ணன் யுவராஜ் சர்மா, அதே பகுதியை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரையும் யுவராஜ் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் யுவராஜ் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி அருகே உள்ள ரோடுமாமாந்தூரில் பேருந்து ஏற முயன்ற யுவராஜை போலீசார் கைது செய்தனர்.

    • இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
    • இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மூக்கனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி அவாஸ் யோஜனா வீடுகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட இதர திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தொிவித்தனர்.

    இது குறித்த விசாரணைக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டதை அடுத்து ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்தினமாலா மற்றும் உதவி திட்ட அலுவலர் (வீடுகள் மற்றும் சுகாதாரம்) ராஜசேகர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில் வீடு கட்டும் திட்டம், தெரு மின்விளக்குகளை பராமரித்தல் ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மற்றும் துணை தலைவர் சாந்தா ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி கணக்கு, வழக்குகளை சரியாக பராமரிக்காத ஊராட்சி செயலாளர் செல்லதுரையை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் ஷ்ரவன்குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மூக்கனூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே பாதிக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து 108 தேங்காய் உடைத்தனர். பின்னர், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க சார்பில் சமூக நீதி வாரம் நிகழ்ச்சி கச்சேரி சாலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஓ.பி.சி. அணி மாநில செயலாளர் வக்கீல் செல்வநாயகம், பட்டியல் அணி மாநில செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் ஹரி, மாநில செயற்குழு உறுப்பினர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து இரட்டைமலை சீனிவாசன், பண்டிதர் அயோத்திதாசர், கக்கன், சகஜானந்தா, வீரன் சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், வீரதமிழச்சி குயிலி ஆகியோரின் உருவபடங்களுக்கு கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தியாகராஜன், துணை தலைவர் சர்தார்சிங், பொருளாளர் குமரவேல், மாநில சிறுபான்மை அணி பொருளாளர் ஸ்ரீசந்த், ஒன்றிய தலைவர் முத்து, பட்டியல் அணி மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×