என் மலர்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே கருணாபுரம் புதுகாலனியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 65). இவர் க.மாமனந்தலில் உள்ள வெடிமருந்து கிடங்கில் வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று அந்த கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் ஏழுமலை உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி பத்மினி கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து வெடிபொருள் கிடங்கின் உரிமையாளர்கள் ஷபியுல்லா, இஸ்மாயில் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டை பகுதியில் தாசில்தார் காதர்அலி தலைமையிலான வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிளியூர் பகுதியிலிருந்து நரிப்பாளையம் வழியாக டாரஸ் லாரி ஒன்று சந்தேகத்திற்கிடமாக வந்தது. அந்த லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் 22 டன் ரேசன் அரிசி மூட்டை கடத்தப்பட்டது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் லாரியும் லாரியை ஓட்டி வந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 33) என்பவரை பிடித்து எலவனசூர் கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
எலவனாசூர்கோட்டை போலீசார் லாரியையும் சதீஷ் குமாரையும் விழுப்புரம் மாவட்டம் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந்தேதி கோவில் மடாதிபதி ஜீயர் சாமிகள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (புதன்கிழமை) காலை தங்க பல்லக்கு, மாலை திருக்கல்யாணம் இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந் தேதி காலை தங்கப் பல்லக்கு, மாலை குதிரை வாகனம் மற்றும் வேடுபறி உற்சவம் நடக்கிறது. 18-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை தேர்த்திருவிழா நடக்கிறது. மாலை தீர்த்த வாரி சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் உபயதாரர்கள் முன்னின்று செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
அதன்படி, தனியாரால் நடத்தப்படும், பணிபுரியும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெறும் முறை, அதற்கான நிபந்தனைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, தனியார் இல்லங்கள் மற்றும் விடுதிகளின் தரத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, முறையாக உரிமம் பெறாமல் இயங்கிவரும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் உடனடியாக உரிமம் பெறுவதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், உரிமம் பெறாமல் இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற் கொள்ளப்படும். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும் dswokallakurichi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளகுறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சு.பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் அன்புதுரை (வயது 40) கொத்தனார்.
இவருடைய நிலத்தை இதே கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் (40) என்பவர் ஆக்கிரமித்து வீடு கட்டி கொண்டதாக முன் விரோதம் உள்ளது. மேலும் இது சம்பந்தமாக சங்கராபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று அருணாச்சலம், அன்புதுரை வீட்டிற்குசென்று வீட்டின் கதவை உடைத்து, அன்புதுரை அவரது மனைவி மற்றும் தாய் ஆகியோரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதில் காயம் அடைந்த அன்புதுரையை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருணாச்சலத்தை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். அவரது மகன் அரவிந்தன் (வயது 20). சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
தற்போது ஊருக்கு வந்த அவர் திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த கோவிந்தன் தனது மகனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர் பகண்டை கூட்டுரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அரவிந்தனை தேடி வந்தனர்.
இன்று காலை அத்தியூர் ஏரியில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான மாணவன் அரவிந்தன் என தெரியவந்தது.
இவர் ஏரியில் மீன் பிடிப்பதற்காக வந்தபோது தவறி விழுந்து இறந்துள்ளார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே குப்பிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்கிற பைனான்ஸ் ராஜா (வயது 45) இவர் கரூர் மாவட்டம் வெள்ளியனை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மற்றும் திருட்டு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடலூர் மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
நேற்று கடலூர் மத்திய சிறையில் இருந்து ராஜாவை கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஆம்ஸ்ட்ராங், உதயகுமார், நேதாஜி ஆகியோர் மற்றொரு வழக்கு சம்பந்தமாக கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்சென்றனர்.
அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு ஆயுதப்படை போலீசார் 3 பேரும் ராஜாவை மீண்டும் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து வந்தனர். அப்போது அரவக்குறிச்சியில் இருந்து சேலத்திற்கு வந்த அவர்கள் மீண்டும் சேலத்தில் இருந்து கடலூர் நோக்கி அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
தியாகதுருகம் புறவழிச்சாலையில் வந்தபோது கைதி ராஜாவை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து தியாகதுருகம் மற்றும் கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராமதாஸ் மற்றும் முருகேசன் தலைமையிலான போலீசார் கைதி ராஜா வீரசோழபுரம் சுங்கச்சாவடி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி தப்பியிருக்கலாமா? வேறு எந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இருப்பார்? எப்படி இறங்கி இருப்பார்? என தேடி வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ராஜா தப்பிச்சென்ற படம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணை செய்து, தப்பி ஓடிய கைதி ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ஜெகன் (வயது 20). இவரும் இவரது நண்பர் பூங்காவனம் மகன் ஹரி வயது 24 ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் திருவண்ணாமலை சாலையில் கெடார் கிராமத்தி லிருந்து ஒதியத்தூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.
ஒதியத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்று கொண்டி ருந்த போது அவ்வழியே வேகமாக வந்துகொண் டிருந்த தனியார் ஆம்பு லன்ஸ் வேன் ஒன்று எதிர்பாராத வகையில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ஜெகன் மோட்டார் சைக்கிளில் வந்த ஹரி மற்றும் ஆம்புலன்ஸ் வேன் டிரைவர் அப்துல்லா மற்றும் ஆம்புலன்சில் வந்த ராஜதுரை ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனர்.
காயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஜெகன் பரிதாபமாக இறந்து போனார்.
காயமடைந்த ஹரி, ராஜதுரை மற்றும் அப்துல்லா ஆகிய 3 பேரும் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று ஜெகன் பிரேதத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






