என் மலர்
உள்ளூர் செய்திகள்

நகை கொள்ளை
தூங்கி கொண்டிருந்த பெண்ணை தலையணையால் அமுக்கி நகை பறிப்பு- முகமூடி கொள்ளையர் அட்டூழியம்
உளுந்தூர்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை போலீசார் தீவிர தேடி வருகின்றனர்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் மாரனோடை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. ரேஷன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி தேவகி. நேற்று இரவு செல்லத்துரை தனது மனைவி மற்றும் மருமகள் சவுந்தர்யா ஆகியோருடன் வீட்டை பூட்டி விட்டு தூங்கி கொண்டிருந்தார்.
நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். அவர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
சத்தம் கேட்டு சவுந்தர்யா எழுந்தார். உஷாரான மர்ம நபர்கள் சவுந்தர்யாவை தலையணையால் அமுக்கினர். பின்னர் அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்தனர்.
கொள்ளையர்களின் பிடியில் இருந்து தப்பிய சவுந்தர்யா கூச்சலிட்டார். சத்தம் கேட்டு மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த செல்லத்துரை எழுந்து வந்தார்.
இதனையறிந்த அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர். ஆட்கள் வருவதையறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து நகையுடன் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து திருநாவலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சீனுவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, விநாயகம், தனிப்பிரிவு போலீஸ் மனோகர் அங்கு சென்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
Next Story






