என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    அத்தி வரதர் வைபவத்தின் போது, காவல் ஆய்வாளரை திட்டியது குறித்து பதிலளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    அத்திவரதர் தரிசன விழாவில் வி.ஐ.பி.க்கள் வரிசையில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் முறையான ‘பாஸ்’ இல்லாமல் சிலரை உள்ளே செல்ல அனுமதித்து இருந்தார். அந்த நேரத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பொன்னையா இதனை கண்டு பிடித்தார்.

    இதனால் ஆவேசமான கலெக்டர், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை கண்டித்து கடுமையாக பேசினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் பற்றி விமர்சனமும் எழுந்தது.

    இந்நிலையில் காவல் ஆய்வாளரை திட்டியது குறித்து பதிலளிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

     பொதுமக்கள், காவலர்கள் முன் ஆய்வாளரை திட்டியது மனித உரிமை மீறல் ஆகாதா? என நோட்டீசில் மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன எனவும் கேட்டுள்ளது. அத்துடன் கலெக்டர் மீதான நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  
    பா.ஜனதாவின் இன்னொரு ‘கை’ ஆக அ.தி.மு.க. செயல்படுகிறது என்று சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. அது குறித்து அவர் தனது கருத்தை தெளிவாக கூறி இருக்கிறார். தமிழக மக்கள் நன்றாக அறிந்த ஒரு தலைவர் மு.க.ஸ்டாலின், நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லாதது ஏன்? அவரை யார் தடுத்தது.

    அங்கு மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அரசாங்கம் சரியான எந்த நிவாரண உதவிகளும் செய்யவில்லை.

    மு.க.ஸ்டாலின் பாதிப்புகளை பார்த்துவிட்டு வந்து இருக்கிறார். இனியாவது அரசு நிவாரண பணிகளை துரிதமாக செய்யட்டும்.

    தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல், வெள்ளம் மற்றும் வறட்சி பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டு தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    பாஜக

    பா.ஜனதாவின் இன்னொரு ‘கை’ ஆக அ.தி.மு.க. செயல்படுகிறது. மழையால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற தனது மாநிலத்துக்கு வேண்டிய நிதிகளை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு எந்த மசோதா கொண்டு வந்தாலும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கின்ற அ.தி.மு.க. தமிழகத்துக்கு வேண்டிய நியாயமான நிதியை பெற்றுத் தர வேண்டும்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கீழ்தரமாக பேசி இருக்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாது.

    காஷ்மீர் மாநிலத்தின் முக்கியமான தலைவர்களை கைது செய்துவிட்டு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என அவர்களது குடும்பத்தினருக்கு கூட தெரியாத அளவுக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

    காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு யாரும் வெளியில் வர முடியாத நிலை உள்ளது. காஷ்மீரை பற்றி பேசுபவர்கள். முதலில் இதை புரிந்து கொண்டு பேச வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர் விடுமுறை என்பதால் அத்தி வரதரை தரிசிக்க இன்றும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இதனால் காஞ்சிபுரம் எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் தரிசனவிழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடபெற்று வருகிறது.

    தினந்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடுகிறது.

    இதுவரை அத்தி வரதரை சுமார் 85 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வழிபட்டு உள்ளனர். அத்தி வரதர் விழா வருகிற 16-ந் தேதியுடன் நிறைவுபெற உள்ளது.

    இன்னும் 4 நாட்கள் மட்டுமே அத்திவரதரை வழிபட முடியும் என்பதால் காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

    தற்போது தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. நேற்று ஏகாதசி மற்றும் விடுமுறை நாள் என்பதால் சுமார் 4½ லட்சம் பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்துக்காக திரண்டனர்.

    இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் 10 மணி நேரம் காத்திருந்து அவர்கள் வழிபட்டு சென்றனர். இதேபோல் இன்றும் பக்தர்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. பெரியார் நகர், செட்டித்தெரு, டி.கே. நம்பித்தெரு வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    கூட்ட நெரிசலை தடுக்க பல இடங்களில் பக்தர்களை நிறுத்தி போலீசார் அனுப்பி வருகிறார்கள். தொடர்ந்து கூட்டம் அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    இன்று அதிகாலை முதல் காஞ்சிபுரம் நோக்கி ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் காஞ்சிபுரம் எல்லையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    வாலாஜாபாத் ரவுண்டானாவில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. போலீசார் வாகன போக்குவரத்தை சரிசெய்து வருகிறார்கள்.

    விழாவின் 43-வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள்-பச்சை நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பொது தரிசன வழியைப் போல் வி.ஐ.பி.க்கள் பாதையிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வி.ஐ.பி. வரிசையில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து அத்திவரதரை வழிபட்டு வருகிறார்கள்.

    இன்றும் பக்தர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
    அத்திவரதரை தரிசிக்க உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்தது தொடர்பாக இன்ஸ்பெக்டரிடம் கோபப்பட்டதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
    காஞ்சிபுரம்:

    அத்திவரதர் தரிசன விழாவில் வி.ஐ.பி.க்கள் வரிசையில் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் முறையான ‘பாஸ்’ இல்லாமல் சிலரை உள்ளே செல்ல அனுமதித்து இருந்தார். அந்த நேரத்தில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பொன்னையா இதனை கண்டு பிடித்தார்.

    இதனால் ஆவேசமான கலெக்டர், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை கண்டித்து கடுமையாக பேசினார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. கலெக்டர் பற்றி விமர்சனமும் எழுந்தது.

    இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவலர்கள் மிகச் சிறப்பாக பணிபுரிகின்றனர். நாங்கள் ஒரே குடும்பமாக செயல்படுகிறோம். பணிகள் சரியாக நடக்க வேண்டும் என்பதால் சில வி‌ஷயங்களில் கண்டிக்கக்கக் கூடிய சூழல் உள்ளது.

    இது தொடர்பாக மீம்ஸ்களை பரப்ப வேண்டாம். முறையாக எல்லாம் நடைபெற வேண்டும் என்பதற்காக உணர்வுப்பூர்வமாக பேசப்பட்ட வார்த்தைகள். இதனைப் பெரிதுப்படுத்த வேண்டாம். அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது பேச்சு தனிப்பட்ட நபருக்கு எதிரானது கிடையாது. மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து செயல்படுகிறது. போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர். இதில் சந்தேகம் இல்லை.

    பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களை தங்க வைத்து அனுப்புவதற்காக கிழம்பி, பிஏ.வி. பள்ளி அருகேயும், பச்சையப்பன் பள்ளி மைதானத்தில் இளைப்பாறும் கூடங்கள் அமைத்துள்ளோம். 25 மினி பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உடன் இருந்தார். அவர் கூறும்போது, ‘வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் காவலர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 500 உயர்த்தப்படும். காவல்துறைக்கு உதவிகளை மாவட்ட கலெக்டர் செய்து வருகிறார்கள். மற்ற துறைகளும் காவல் துறையினருடன் இணைந்து சிறப்பாக செயல்படுகின்றனர்’ என்றார்.
    காஞ்சிபுரத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையங்களுக்கு வரும் பக்தர்களை கோவில் அருகில் கொண்டு விடுவதற்காக 70 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    காஞ்சிபுரம்:

    அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ஓரிகை, முத்தியால்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில், ஒளிமுகமது பேட்டை ஆஞ்சநேயர் கோவில், ஒளிமுகமது பேட்டை மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள ரங்கராஜபுரம் ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனை போக்குவரத்து துறையின் முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

    பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வரதராஜர் கோவிலுக்கு செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசிக்க போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என அவர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    அத்திவரதரை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பஸ்களில் வருவதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் விழுப்புரம் போக்குவரத்து கழக பஸ்கள் 861 நடைகள் சென்று வருகின்றன. இது 1,261 நடைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, தாம்பரம், ஆற்காடு, திருவண்ணாமலை, பூந்தமல்லி, திருவள்ளூர், வந்தவாசி, திண்டிவனம், செய்யாறு, திருப்பதி, திருத்தணி, வேலூர், செங்கல்பட்டு, ஆரணி ஆகிய பகுதிகளில் இருந்து பயணிகள் செல்ல தேவையான அளவிற்கு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையங்களுக்கு வரும் பக்தர்களை கோவில் அருகில் கொண்டு விடுவதற்காக 70 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் நடந்து செல்லாமல் பஸ் மூலம் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

    தினமும் 70 ஆயிரம் பயணிகள் அரசு பஸ்களில் அத்திவரதரை தரிசிக்க வந்து செல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சிபுரத்தில் அத்திவரதரை 10 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் காட்சி அளிக்கிறார். 42-வது நாளான நேற்று அத்திவரதர் நீல நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதாலும் பெருமாளுக்கு உகந்த ஏகாதசி என்பதாலும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர்.

    முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி மூலம் அத்திவரதரை தரிசிக்க அழைத்து செல்லப்பட்டனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

    அத்திவரதரை தரிசிக்க உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளிமாவட்ட பக்தர்கள், வெளிமாநில பக்தர்களும் காஞ்சிபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். வாகனங்களில் இருந்து இறக்கிவிடப்படும் பக்தர்கள் 5 கிலோமீட்டர் தூரம் வரை நடந்துவந்து அத்திவரதரை தரிசித்தனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். நேற்று பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர்.

    நேற்று இரவு 7 மணிவரை 2½ லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். மேலும் 1½ லட்சம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். காத்திருக்கும் பக்தர்கள் நள்ளிரவு வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.


    அத்திவரதரை தரிசிக்க உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்த பணியில் இருந்த இன்ஸ்பெக்டரை மாவட்ட கலெக்டர் பொன்னையா திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவம் முக்கிய பிரமுகர்கள் வரும் வரிசையில் உரிய பாஸ் இல்லாமல் அனுமதித்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் அனைவர் முன்னிலையிலும் கடிந்து கொண்டார்.

    காவல்துறையினர் உரிய பாஸ் இல்லாமல் உள்ளே அனுமதித்து வருவதால், விஐபி வரிசை தினந்தோறும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது. பொதுமக்கள், பக்தர்கள் மாவட்ட ஆட்சியரிடம் இதைப்பற்றி புகாராக கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கலெக்டர்  பொன்னையா


    இந்நிலையில் நேற்றிரவு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பொன்னையா, பலரிடமும் விஐபி பாஸ் இல்லாதது தெரிய வந்ததும் அவர்களை அனுமதித்த காவல் ஆய்வாளரை கடிந்து கொண்டார். ஆய்வாளரை பற்றி வாய்மொழியாக புகார் அளித்து அவரை பணியிடை நீக்கம் செய்யக்கோரி ஆட்சியர் முறையிட்டார்.
    அத்திவரதரை தரிசிக்க அடையாள அட்டையுடன் சென்ற அரசு டாக்டர் ஒருவரின் அடையாள அட்டையை போலீசார் கிழித்ததால் பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்க வந்த டாக்டர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க லட்சகணக்கான மக்கள் கூடுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    முதியவர்கள் அதிக அளவில் வருவதால் திடீரென்று அவர்களுக்கு மயக்கம், மூச்சு திணறல் ஆகியவை ஏற்பட்டன.

    இதையடுத்து பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து அரசு டாக்டர்கள் காஞ்சிபுரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பக்தர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் அரசு டாக்டர் ஒருவர் அத்திவரதரை தரிசிக்க அடையாள அட்டையுடன் சென்றார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அடையாள அட்டையை கிழித்ததாக தெரிகிறது. இதை அறிந்த டாக்டர்கள் இன்று காலை சிகிச்சை அளிக்க மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து அரசு டாக்டர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கூவத்தூரில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கூவத்தூர் நாவக்கால் காலனி பகுதியில் சாராயம் விற்கப்படுவதாக கூவத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை போலீசார் சோதனையிட்டபோது வேலு, ராமச் சந்திரன் ஆகியோர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

    போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 105 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    அத்தி வரதரை தரிசிக்க இன்று காலை மற்ற நாட்களை விட பக்தர்கள் கூட்டம் அதிக அளவு இருந்தது. சுமார் 5 லட்சம் பேர் வரை திரண்டு இருப்பதால் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்து கிடக்கிறார்கள்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த மாதம் 1-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

    முதல் 31 நாட்கள் அத்திவரதர் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து சராசரியாக தினமும் 3 லட்சம் பேர் வரை தரிசனம் செய்கிறார்கள். இதனால் காஞ்சிபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கி வருகிறது.

    தரிசன நேரம் முடிந்ததும் வரிசையில் நிற்கும் பக்தர்கள் அங்கேயே படுத்து தூங்குகிறார்கள். மறுநாள் தரிசனம் செய்வதற்காக காத்து கிடக்கிறார்கள். இதனால் பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சிபுரம் நிரம்பி வழிகிறது. அத்திவரதரை தரிசிக்க 7 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. ஆனாலும் பக்தர்கள் காத்து இருந்து தரிசித்து வருகிறார்கள். 41-வது நாளான இன்று அத்திவரதர் வெள்ளை, ரோஜா நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அத்திவரதரை தரிசிக்க வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றுடன் சேர்த்து இன்னும் 7 நாட்களே உள்ளது.

    அத்திவரதரை தரிசிக்க குறைவான நாட்களே உள்ளதால் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். மேலும் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாட்கள். 12-ந்தேதி பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளாகும். எனவே இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் அத்திவரதரை தரிசித்து விட வேண்டும் என்று பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    பக்தர்கள் கூட்டம்

    இதனால் நேற்று இரவு முதல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த படி இருந்தது. இன்று காலை மற்ற நாட்களை விட பக்தர்கள் கூட்டம் அதிக அளவு இருந்தது. ஏற்கனவே காத்து இருந்த பக்தர்களையும் சேர்த்து இன்று சுமார் 5 லட்சம் பேர் வரை திரண்டு இருக்கிறார்கள். அவர்கள் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்து கிடக்கிறார்கள். இதனால் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் 3.70 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று வரை 80 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்து இருக்கிறார்கள். இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 17-ந்தேதி அத்தி வரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படும். அன்று அந்த குளத்தில் ஆகம விதிகளின்படி தண்ணீர் நிரப்பப்படும்.
    அத்தி வரதரை வழிபட பொது தரிசன பாதையில் சென்று தரிசனம் செய்ய 10 மணி நேரமும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் 3 மணி நேரமும் ஆகிறது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    கடந்த 31-ந் தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    அத்திவரதரை வழிபட தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடி வருகிறது.

    கடந்த சில நாட்களாக அத்திவரதரை வழிபட வரும் பக்கர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் சுமார் 3½ லட்சம் பக்தர்கள் திரளுவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

    இதுவரை கடந்த 39 நாட்களில் 73 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டு சென்று உள்ளனர்.

    அத்திவரதர் தரிசனம் வருகிற 17-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது எதிர்பார்த்ததை விட தினந்தோறும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வருவதால் 17-ந் தேதி தரிசனம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று அறிவித்தார்.

    16-ந் தேதி எவ்வளவு பக்தர்கள் வருகிறார்களோ அனைவரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 16-ந் தேதி இரவு கூட்டத்தை பொருத்து 2 மணி நேரம் கூடுதலாக தரிசனத்துக்கு அதிகப்படுத்தலாமா? என்று முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் 16-ந் தேதி வி.ஐ.பி. தரிசனம் முழுவதும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அன்று பொது தரிசன வரிசையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இதனால் தற்போது வி.ஐ.பி. தரிசன வரிசையில் கடும் கூட்டம் காணப்படுகிறது. இதையடுத்து நெரிசலை சமாளிக்க வி.ஐ.பி. தரிசன பாதையில் நேற்று முதல் தற்காலிக பாலம் அமைத்து வருகிறார்கள். இதனால் அங்கு நெரிசல் ஓரளவு குறைந்து உள்ளது.

    நேற்று மட்டும் சுமார் 3½ லட்சம் பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டனர். இன்று காலையும் பக்தர்கள் வருகை வழக்கம் போல் அதிகமாக காணப்பட்டது.

    மாட வீதிகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டு வருகிறார்கள்.

    அத்திவரதரை வழிபட பொது தரிசன பாதையில் சென்று தரிசனம் செய்ய 10 மணி நேரமும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் 3 மணி நேரமும் ஆகிறது.

    விழாவின் 40-வது நாளான இன்று அத்தி வரதர் கனகாம்பரம் வண்ண பட்டாடையில் அருள்பாலித்தார். வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க அவர்களுக்கு குடிநீர் மற்றும் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    அத்திவரதரை சயன கோலத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்து இருந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று நின்ற கோலத்தில் அருள் பாலித்து வரும் அத்தி வரதரை மீண்டும் வழிபட்டார்.

    தொடர் விடுமுறை வருவதால் வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். இதனை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
    சவுதி அரேபியா செல்லும் சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு பெண் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அவர், “தனது பெயர் நஸ்ருதீன் என்றும், சேலம், ஓமலூரை சேர்ந்த சபீனா என்பவர் பயணம் செய்யும் சென்னையில் இருந்து டெல்லி வழியாக சவுதி அரேபியா செல்லும் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு வெடிக்கும்” என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதுபற்றி டெல்லி போலீசார் உடனடியாக சென்னை போலீசுக்கும், சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் சவுதி அரேபியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளிடம் அதிரடி சோதனை நடத்தினர். பாதுகாப்பு வீரர்களும் உஷார்படுத்தப்பட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது புரளி என்பது தெரிந்தது.

    இதேபோல் மர்ம பெண் குறிப்பிட்ட ஓமலூர் முகவரியில் சபீனா என்று யாரும் இல்லை. அதுவும் போலியானது என்பது தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண் யார்? என்பது குறித்து அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்கனவே 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×