search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பஸ் போக்குவரத்து வசதிகளை ஆய்வு செய்தார்
    X
    போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பஸ் போக்குவரத்து வசதிகளை ஆய்வு செய்தார்

    காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பக்தர்களுக்காக 70 சிறிய பஸ்கள்

    காஞ்சிபுரத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையங்களுக்கு வரும் பக்தர்களை கோவில் அருகில் கொண்டு விடுவதற்காக 70 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    காஞ்சிபுரம்:

    அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    ஓரிகை, முத்தியால்பேட்டை, ஆஞ்சநேயர் கோவில், ஒளிமுகமது பேட்டை ஆஞ்சநேயர் கோவில், ஒளிமுகமது பேட்டை மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள ரங்கராஜபுரம் ஆகிய இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனை போக்குவரத்து துறையின் முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

    பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வரதராஜர் கோவிலுக்கு செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் சிரமமின்றி அத்திவரதரை தரிசிக்க போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர வேண்டும் என அவர் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    அத்திவரதரை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் பஸ்களில் வருவதற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் விழுப்புரம் போக்குவரத்து கழக பஸ்கள் 861 நடைகள் சென்று வருகின்றன. இது 1,261 நடைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, தாம்பரம், ஆற்காடு, திருவண்ணாமலை, பூந்தமல்லி, திருவள்ளூர், வந்தவாசி, திண்டிவனம், செய்யாறு, திருப்பதி, திருத்தணி, வேலூர், செங்கல்பட்டு, ஆரணி ஆகிய பகுதிகளில் இருந்து பயணிகள் செல்ல தேவையான அளவிற்கு பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரத்தில் உள்ள தற்காலிக பஸ் நிலையங்களுக்கு வரும் பக்தர்களை கோவில் அருகில் கொண்டு விடுவதற்காக 70 சிறிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் நடந்து செல்லாமல் பஸ் மூலம் பயணம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

    தினமும் 70 ஆயிரம் பயணிகள் அரசு பஸ்களில் அத்திவரதரை தரிசிக்க வந்து செல்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×