search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kancheepuram varadharaja perumal temple"

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பாசுரம் பாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் 2 பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் காலையும் மாலையும் எம்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்.

    உலகப்பிரசித்தி பெற்ற கருடசேவை உற்சவம் கடந்த 19-ம் தேதியும், திருத்தேர் உற்சவம் 23-ம் தேதியும் நடந்து முடிந்த நிலையில் நேற்று மாலை எம்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.

    இந்நிலையில் பாரம்பரிய முறைப்படி எம்பெருமான் காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பித் தெருவினில் உள்ள மண்டபத்தில் வேடுபறி என்ற நிகழ்ச்சிக்காக எழுந்தருளினார். அங்கு தென்கலை பிரிவினர் பாசுரம் பாட முயற்சி செய்தனர். அங்கிருந்த வடகலை பிரிவினர் அவர்கள் பாசுரம் பாட எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இரு பிரிவினருக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் திடீரென அவர்கள் கைகலப்பிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பிற்காக வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    பின்னர் இரு பிரிவினரும் பிரிந்து சென்ற நிலையில் இன்று காலை இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்று காலை முதல் இருதரப்பினரிடையே போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடந்து வரும் நிலையில் வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருக்குளத்தில் இருந்து வெளிவந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அத்தி வரதர் 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோயிலில் இரு பிரிவினரிடையே கைகலப்பு ஏற்பட்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×