search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்தி வரதரை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள்
    X
    அத்தி வரதரை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள்

    அத்தி வரதரை தரிசிக்க 10 மணி நேரம் ஆகிறது

    அத்தி வரதரை வழிபட பொது தரிசன பாதையில் சென்று தரிசனம் செய்ய 10 மணி நேரமும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் 3 மணி நேரமும் ஆகிறது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    கடந்த 31-ந் தேதி வரை சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

    அத்திவரதரை வழிபட தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதனால் காஞ்சிபுரம் நகரமே திக்குமுக்காடி வருகிறது.

    கடந்த சில நாட்களாக அத்திவரதரை வழிபட வரும் பக்கர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் சுமார் 3½ லட்சம் பக்தர்கள் திரளுவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

    இதுவரை கடந்த 39 நாட்களில் 73 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டு சென்று உள்ளனர்.

    அத்திவரதர் தரிசனம் வருகிற 17-ந் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது எதிர்பார்த்ததை விட தினந்தோறும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வருவதால் 17-ந் தேதி தரிசனம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று அறிவித்தார்.

    16-ந் தேதி எவ்வளவு பக்தர்கள் வருகிறார்களோ அனைவரும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். 16-ந் தேதி இரவு கூட்டத்தை பொருத்து 2 மணி நேரம் கூடுதலாக தரிசனத்துக்கு அதிகப்படுத்தலாமா? என்று முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் 16-ந் தேதி வி.ஐ.பி. தரிசனம் முழுவதும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. அன்று பொது தரிசன வரிசையில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இதனால் தற்போது வி.ஐ.பி. தரிசன வரிசையில் கடும் கூட்டம் காணப்படுகிறது. இதையடுத்து நெரிசலை சமாளிக்க வி.ஐ.பி. தரிசன பாதையில் நேற்று முதல் தற்காலிக பாலம் அமைத்து வருகிறார்கள். இதனால் அங்கு நெரிசல் ஓரளவு குறைந்து உள்ளது.

    நேற்று மட்டும் சுமார் 3½ லட்சம் பக்தர்கள் அத்திவரதரை வழிபட்டனர். இன்று காலையும் பக்தர்கள் வருகை வழக்கம் போல் அதிகமாக காணப்பட்டது.

    மாட வீதிகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை வழிபட்டு வருகிறார்கள்.

    அத்திவரதரை வழிபட பொது தரிசன பாதையில் சென்று தரிசனம் செய்ய 10 மணி நேரமும், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் 3 மணி நேரமும் ஆகிறது.

    விழாவின் 40-வது நாளான இன்று அத்தி வரதர் கனகாம்பரம் வண்ண பட்டாடையில் அருள்பாலித்தார். வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சோர்வடையாமல் இருக்க அவர்களுக்கு குடிநீர் மற்றும் அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    அத்திவரதரை சயன கோலத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் தரிசனம் செய்து இருந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று நின்ற கோலத்தில் அருள் பாலித்து வரும் அத்தி வரதரை மீண்டும் வழிபட்டார்.

    தொடர் விடுமுறை வருவதால் வரும் நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும். இதனை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×