search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    41-வது நாளான இன்று அத்திவரதர் வெள்ளை, ரோஜா நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    X
    41-வது நாளான இன்று அத்திவரதர் வெள்ளை, ரோஜா நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விடுமுறை நாட்களால் கட்டுக்கடங்காத கூட்டம்- அத்தி வரதரை தரிசிக்க 4 கிலோ மீட்டர் கியூவில் நிற்கும் பக்தர்கள்

    அத்தி வரதரை தரிசிக்க இன்று காலை மற்ற நாட்களை விட பக்தர்கள் கூட்டம் அதிக அளவு இருந்தது. சுமார் 5 லட்சம் பேர் வரை திரண்டு இருப்பதால் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்து கிடக்கிறார்கள்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த மாதம் 1-ந்தேதி முதல் நடந்து வருகிறது.

    முதல் 31 நாட்கள் அத்திவரதர் சயனகோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து சராசரியாக தினமும் 3 லட்சம் பேர் வரை தரிசனம் செய்கிறார்கள். இதனால் காஞ்சிபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கி வருகிறது.

    தரிசன நேரம் முடிந்ததும் வரிசையில் நிற்கும் பக்தர்கள் அங்கேயே படுத்து தூங்குகிறார்கள். மறுநாள் தரிசனம் செய்வதற்காக காத்து கிடக்கிறார்கள். இதனால் பக்தர்கள் கூட்டத்தால் காஞ்சிபுரம் நிரம்பி வழிகிறது. அத்திவரதரை தரிசிக்க 7 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. ஆனாலும் பக்தர்கள் காத்து இருந்து தரிசித்து வருகிறார்கள். 41-வது நாளான இன்று அத்திவரதர் வெள்ளை, ரோஜா நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அத்திவரதரை தரிசிக்க வருகிற 16-ந்தேதி கடைசி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றுடன் சேர்த்து இன்னும் 7 நாட்களே உள்ளது.

    அத்திவரதரை தரிசிக்க குறைவான நாட்களே உள்ளதால் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். மேலும் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாட்கள். 12-ந்தேதி பக்ரீத் பண்டிகை விடுமுறை நாளாகும். எனவே இன்று முதல் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் அத்திவரதரை தரிசித்து விட வேண்டும் என்று பக்தர்கள் காஞ்சிபுரத்துக்கு படையெடுத்து வருகிறார்கள்.

    பக்தர்கள் கூட்டம்

    இதனால் நேற்று இரவு முதல் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த படி இருந்தது. இன்று காலை மற்ற நாட்களை விட பக்தர்கள் கூட்டம் அதிக அளவு இருந்தது. ஏற்கனவே காத்து இருந்த பக்தர்களையும் சேர்த்து இன்று சுமார் 5 லட்சம் பேர் வரை திரண்டு இருக்கிறார்கள். அவர்கள் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு காத்து கிடக்கிறார்கள். இதனால் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று ஒரே நாளில் 3.70 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று வரை 80 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்து இருக்கிறார்கள். இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வருகிற 17-ந்தேதி அத்தி வரதர் சிலை கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படும். அன்று அந்த குளத்தில் ஆகம விதிகளின்படி தண்ணீர் நிரப்பப்படும்.
    Next Story
    ×