என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.
    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 36 வயதுடைய ஆண் உள்பட மாவட்டத்தில் நேற்று 148 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 957 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 754 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 353 ஆக உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 207 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரையில் மாவட்டம் முழுவதும் 35 ஆயிரத்து 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 ஆயிரத்து 284 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 595 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 272 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆயிரத்து 148 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 37 ஆயிரத்து 504 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 612 ஆக உயர்ந்தது.
    தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள் பலரும் பா.ஜனதாவில் இணைய ஆர்வமாக உள்ளனர் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் மாற்று கட்சியினர் சுமார் ஆயிரம் பேர் பாரதீய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ஜனதா மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

    பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா கட்சியில் தொழிலதிபர்கள், கலைத்துறையினர், மருத்துவர்கள், தணிக்கையாளர்கள் என தமிழகத்தில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் பலரும் ஆர்வமுடன் இணையவுள்ளனர்.

    இதற்கு காரணம் என்னவெனில் மத்திய அரசை சிறப்பாக வழிநடத்தும் மோடியின் தலைமையே காரணமாகும். ஆற்றல் மிக்க தலைவராக பிரதமர் மோடியை கருதுகிறார்கள். கடந்த 6 மாதங்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுமே பல ஆயிரக்கணக்கானோர் கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள், இளைஞர் பட்டாளம் பா.ஜ.க.வை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறது. வர இருக்கும் தேர்தலில் பா.ஜ.க. அதிகமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே பலரின் கனவாகவும் இருக்கிறது. இது நிச்சயம் நடக்கும்.

    பிரதமர் மோடியின் செயல்பாடுகளை,மக்கள் நலத்திட்டங்களை பார்த்து அத்தனை நாடுகளுமே பாராட்டி வருகின்றன. மக்களின் நீண்ட நாள் கனவான அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கி இருக்கிறது. இனி வரும் 5 மாத காலமும் கடுமையாக உழைத்து, சட்டபேரவைத் தேர்தலில் அதிகமான உறுப்பினர்களை தாமரைச் சின்னத்தில் போட்டியிட வைத்து, சட்டசபையை பா.ஜ.க.அலங்கரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக எல்.முருகனுக்கு ஐம்பொன்னால் செய்யப்பட்ட முருகன் சிலை மற்றும் வேல் ஆகியவற்றை கட்சித் தொண்டர்கள் பரிசாக வழங்கினர்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ். பாபு, அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் டி.கணேஷ், கைத்தறி சங்க மாநில துணைத் தலைவர் வி.சுபாஷ், காஞ்சிபுரம் மாவட்ட துணைத் தலைவர் ஓம்.சக்தி. பெருமாள், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆஸ்திரேலியாவிற்கு மசாலா பவுடர் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து கடத்த முயன்ற ரூ.30 லட்சம் போதை பவுடர் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டது.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்ப தயாராக இருந்த பார்சல்களில் பெரும் அளவு போதை மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் சரக்ககப்பிரிவுக்கு சென்று அங்கு அனுப்புவதற்கு தயாராக இருந்த பார்சல்களை தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது அதில், ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள அன்பர்ன் நியூ சவுத் வேல்ஸ் என்ற நகரின் முகவரிக்கு பிரபல நிறுவனத்தை சேர்ந்த சாம்பார், மிளகாய் உள்ளிட்ட மசாலா பவுடர்கள் இருப்பதாக பார்சல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அவற்றை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் ஒவ்வொன்றாக பிரித்து பார்த்தனர். அதில் மசாலா பவுடர் பாக்கெட்டுகளுக்குள் வெள்ள நிற கிரிஸ்டல் பவுடர் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை வெளியே எடுத்து அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது, ‘சூடோபீட்ரின்’ என்ற போதை பவுடர் மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.

    சுமார் 3 கிலோ எடை கொண்ட போதைப்பவுடரை பறிமுதல் செய்த அதிகாரிகள், கூரியர் அலுவலகத்தில் தேனி மாவட்டத்தில் இருந்து போதைப்பொருட்களை அனுப்பியதை கண்டறிந்தனர்.

    இது தொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த சாதிக் (37) என்பவர், கர்நாடகா மாநிலம் பெங்களூரூவில் இருந்து வாங்கி வந்த போதைப்பவுடரை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப முயன்றது தெரியவந்தது. அங்கிருந்து நேரடியாக அனுப்பினால் சிக்கிவிடுவோம் என்று பயந்து, தன்னுடைய நண்பர்களான சென்னையை சேர்ந்த கான் (30), புதுக்கோட்டையை சேர்ந்த அந்தோணி (41) ஆகியோர் உதவியுடன் பிரபல நிறுவன மசாலா பாக்கெட்டுகளில் போதைப்பவுடரை மறைத்து வைத்து தேனியை சேர்ந்த செல்வம் என்பவர் மூலமாக கூரியரில் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், சாதிக் அவனது கூட்டாளிகளான கான், அந்தோணி, செல்வம் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    காஞ்சிபுரம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 204 பயனாளிகளுக்கு ரூ.1½ கோடி மதிப்பீட்டில் உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா காஞ்சீபுரம் கோட்டத்திற்குட்பட்ட பகுதியை சேர்ந்த பலியான மற்றும் காயமடைந்தவர்களுக்கு முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதியாக 129 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் வழங்கினார். இதில், முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதியாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 414 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 81 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    அதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள 10 பயனாளிகளுக்கும், வாலாஜாபாத் வட்டத்தில் 13 பயனாளிகளுக்கும் ரூ.18 லட்சத்து 6 ஆயிரத்து 90 மதிப்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது.

    மேலும், கடந்த ஓராண்டில் மட்டும் 914 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 96 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காஞ்சீபுரம் கோட்டத்தைச் சேர்ந்த 33 இருளர்களுக்கு சாதிசான்றிதழ்கள் நேற்று வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 616 பயனாளிகளுக்கு இனச்சான்று வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் இறுதியாக காஞ்சீபுரம் கோட்டத்தைச் சார்ந்த 19 முதியோர் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகையாக ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.19 ஆயிரத்தையும் கலெக்டர் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சப்-கலெக்டர் செ.சரவணன், காஞ்சிபுரம் வருவாய் வட்டாட்சியர் பவானி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
    காஞ்சீபுரம்: 

    காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் அமைந்துள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2020 சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கோ-ஆப்டெக்ஸ் என்று அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கம் 1935-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு தொடார்ந்து 85 ஆண்டுகளாக வாடிக்கையாளர்்களுக்கு சேவை புரிந்து வருகிறது. மேலும் வாடிக்கையாளார்களின் மாறிவரும் ரசனை மற்றும் அவார்களின் தேவைகளை அறிந்து கைத்தறி ரகங்களை உருவாக்க நிறுவனம் புத்தம் புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து 2019-2020-ம் ஆண்டில் ரூ.300 கோடி அளவுக்கு சில்லரை விற்பனை செய்யப்பட்டு அதன் மூலம் கைத்தறி நெசவாளார்களுக்கு தொடர்்ந்து வேலைவாய்ப்பும் அளித்து வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.9.47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2020 பண்டிகை விற்பனை இலக்காக ரூ.11 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் காமாட்சி கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையம் கடந்த ஆண்டு ரூ.1.14 கோடி விற்பனை செய்துள்ளது. இந்த ரூ.1.30 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய பெருநாட்டின் மிக முக்கிய பண்டிகையான தீபாவளி 2020 சிறப்பு விற்பனை அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் கோலகலமாக தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் கோ-ஆப் டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளார் சண்முகம், காஞ்சீபுரம் கோ-ஆப் டெக்ஸ் மேலாளர்் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) காங்கேய வேலு, காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் தணிகைவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட பட்டதாரிகள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் பகுதியை சேர்ந்தவர் காமாட்சி சுந்தரம். இவர் தனது மோட்டார் சைக்கிளை இரவு வீட்டின் வெளியே நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

    இது குறித்து காமாட்சி சுந்தரம் பாலுசெட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் மற்றும் போலீசார் கீழம்பி ஜங்ஷனில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் மடக்கி நிறுத்தினர். அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் காமாட்சி சுந்தரத்தின் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டனர்.

    இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 22) மற்றும் அவரது நண்பரான திருவண்ணாமலை மாவட்டம் வெண் பாகம் அடுத்த புத்தனூர் பகுதியை சேர்ந்த துரைபாண்டி (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் சுந்தர் ராஜன் பி.ஏ. பட்டதாரி. துரைபாண்டி பி.பி.ஏ. பட்டதாரி ஆவார். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றினர்.
    மாமல்லபுரம் அருகே விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    பாண்டிச்சேரியை சேர்ந்தவர்கள் செந்தில் (வயது 40), முருகன்(53), ஜெயராமன் (70). இவர்கள் உறவினர்கள் திலகம் என்கிற சுபா,மூர்த்தி, சுந்தரவரதன் ஆகியோருடன் ஒரே காரில் இன்று காலை சென்னை தி.நகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டனர்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் கார், மாமல்லபுரம் அருகே உள்ள குன்னத்தூர் கிழக்கு கடற்கரை, சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே வந்த மினி கண்டெய்னர் லாரி திடீரென கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் நசுங்கியது.

    காரில் இருந்த செந்தில், முருகன், ஜெயராமன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் திலகம், மூர்த்தி, சுந்தரவரதன் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

    தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரும் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியான 3 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டு உள்ளது.

    விபத்து நடந்ததும் கண்டெய்னர் லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருமண நிகழ்ச்சிக்கு வந்த போது விபத்தில் சிக்கி 3 பேர் பலியான சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உத்திரமேரூர் அருகே மூடி கிடந்த தொழிற்சாலையில் தங்கம் திருட முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    உத்திரமேரூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த நடராஜபுரத்தில் தங்க நகைகள் செய்யும் தனியார் தொழிற்சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு வந்தது. அப்போது அந்த தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் அங்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தனியார் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் அந்த தொழிற்சாலையில் ஒரு காவலாளி பணிக்கு அமர்த்தப்பட்டார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் அந்த தொழிற்சாலைக்குள் இருந்து சத்தம் வந்தவுடன் காவலாளி சாலவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆயுதங்களுடன் இருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.அவர்களை சாலவாக்கம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் இந்த தொழிற்சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்த மும்பையை சேர்ந்த குலாம் கவுஸ் (வயது 25), சுனில் ராம் சால் பிரஜாபதி (25), ஆகாஷ் குப்தா (20) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்களுடன் 3 பேர் வந்ததாகவும் அவர்கள் போலீசார் வந்தது தெரிந்தவுடன் சென்னை விமான நிலையத்துக்கு தப்பிச்சென்று விட்டதாக தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சென்னை விமான நிலையத்துக்கு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு விமானம் செல்ல இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய 79 பயணிகள் பாதுகாப்பு சோதனைகள் முடித்துவிட்டு விமானத்தில் ஏற தயாராக இருந்தனர்.

    மகாராஷ்டிர மாநிலத்தை சோ்ந்த 3 பேரை முக்கிய வழக்கில் விசாரிக்க வேண்டி உள்ளது. அவர்கள் மும்பைக்கு விமானத்தில் தப்பி செல்ல வந்து இருப்பதாகவும் அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனர். விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மும்பை செல்லும் விமானத்தில் பயணம் செய்ய இருந்தவர்களின் பட்டியலை ஆய்வு செய்தனர்.

    அப்போது சாலவாக்கம் போலீசார் கூறிய 3 பேர் விமானத்தில் ஏற பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருப்பது தெரியவந்தது. விமானத்தில் ஏற சென்ற மும்பையை சேர்ந்த லட்சுமண் (30), அயூப்கான் (33) , அமீர்முகமது (35) ஆகியோரை பாதுகாப்பு படையினர் கீழே அழைத்து வந்தனர். 3 பேரையும் சாலவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியிடம் ஒப்படைத்தனர்.

    அவர்களும் அதே தொழிற்சாலையில் வேலை செய்தவர்கள் என்பதும், தொழிற்சாலை மூடி இருப்பதால் அதில் தங்கம் இருக்கலாம் அதை கொள்ளையடித்து செல்லலாம் என்று 6 பேரும் திட்டம் தீட்டி அங்குவந்ததாகவும் தங்கத்தை தேடி கொண்டிருக்கும் நேரத்தில் மாட்டி கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் 6 பேரையும் கைது செய்த இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை செய்தார். வேறு எங்காவது அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று விசாரணை செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    காஞ்சிபுரம் அருகே ரூ.4 லட்சம் குட்கா சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின் பேரில், காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் நேற்று காலை போலீசாருடன் காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

    அப்போது பெங்களூருவில் இருந்து திம்மசமுத்திரத்திற்கு ஒரு மினி வேன் மின்னல் வேகத்தில் வந்தது. அதை இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் சைகை காட்டி மடக்கி பிடித்தார். அந்த வேனை சோதனை செய்ததில் 20 மூட்டைகளில் 210 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 4 லட்சம் ஆகும். உடனடியாக பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் போலீசாருடன் குட்கா கடத்தி வந்த அந்த வேனை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துசென்றனர்.

    பெங்களூருவில் இருந்து குட்காவை எடுத்து வந்து திம்மசமுத்திரம் பகுதியில் வைத்து பிரித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அனுப்ப தயாராக இருந்தது தெரிந்தது. இதையொட்டி ஒரு கார், 2 மினி வேன், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னை திருவேற்காடு செந்தமிழ் நகர், பாரதியார் நகரை சேர்ந்த வீரமணி (37, அவரது நண்பர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த சிவா (37) ஆகியோரை கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட வீரமணி சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் மீன்பாடி வண்டி ஓட்டும்போது பெங்களூருவை சேர்ந்த குட்கா வியாபாரி ஹரிஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதையொட்டி பல ஆண்டுகளாக இவர்கள் ஹரிசிடம் தொடர்புகொண்டு குட்கா மூட்டைகள் வாங்கியது தெரியவந்தது. வீரமணி மீது திருவேற்காடு, மணவாளநகர் போலீஸ் நிலையத்திலும் குட்கா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. வீரமணி திருவேற்காடு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
    உத்திரமேரூர் அருகே பம்ப் ஆப்ரேட்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்திரமேரூர்:

    உத்திரமேரூர் ஒன்றியம் சாலவாக்கத்தை அடுத்த காவணிப்பாக்கம் மேட்டு காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). இவர் காவணிப்பாக்கம் பம்ப் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை இவர் குடிநீர் வினியோகம் செய்ய சென்றபோது மின்சாரம் இல்லாமல் இருந்தது. இதனால் அங்கு இருந்த டிரான்ஸ்பார்மரில் ஏறி சரி செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

    உடனடியாக அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    காஞ்சிபுரம் அருகே மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கம் வேகவதி ஆற்றுப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் கடத்தியதாக முசரவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 44) என்பவரை பாலுசெட்டி சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு கைது செய்தார். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டுவண்டியை போலீசார் கைப்பற்றினர்.
    காஞ்சீபுரம் அருகே செல்போன் கடையில் உதிரிபாகங்கள் மற்றும் செல்போன் திருடிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைகேட் என்ற இடத்தில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் விற்கும் கடையில் உரிமையாளர் ஐயப்பன், அவரது மனைவியுடன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 ரவுடிகள் செல்போன் உதிரிபாகங்கள் வாங்குவது போல் நோட்டமிட்டு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐயப்பனை தாக்கினர்.

    உடனடியாக அவர்கள் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் அந்த 2 ரவுடிகளும் கடையில் இருந்த செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு எஸ்.மணிமேகலை மேற்பார்வையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர் சாமி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு பதுங்கியிருந்த ரவுடிகளை சுமார் 1 மணி நேரத்தில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சென்னை பட்டாபிராமை சேர்ந்த குமார் (வயது 22) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது,

    இவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து செல்போன்கள், பட்டாக்கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ×